சனி, 23 ஏப்ரல், 2016

அழுகிறேன்.... - சோலச்சி

இன்று வரும் வழியில் ....

புல்வயல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு.மீனாட்சி அவர்களை சந்தித்தேன்...

அப்போது நடந்த உரையாடல்...

"யாருப்பா அந்த கீதாம்மா...

அன்னைக்கி பேசிக்கிட்டு இருக்கும்போது... அக்கா நீங்க கீதாம்மா மாறியே பேசுறீங்க...னு சொன்னாப்ள அப்ப நா சொன்னே.. நீயும் (சோலச்சி) கனகராசு ம்தான் என் பிள்ளைங்க. ரெண்டு பேரும் ரெண்டு கண்ணு மாதிரினு..

அதுக்கு சொன்னாப்ள... நா கீதாம்மாவோட பிள்ளை. ஒங்க மனசுலயும் எடம் பிடிக்கிறத பாக்கத்தாக்க போறீக. அந்த கண்ணுல எனக்கும் எடம் கொடுக்கத்தான் போறீக.."

அதுவும் (கவிஞர் வைகறை) எம்பிள்ளைதானு யாருக்கிட்ட போயி இப்ப சொல்லுவேனு...

சொல்லிக்கொண்டே  அழுது விட்டார். 

இப்படி எல்லோர் இதயத்திலும் இடம்பிடித்த என் மைத்துனர் கவிஞர் வைகறை இப்ப எல்லாரையும் அழ வச்சுட்டு போயிட்டாரே.......

சமூக போராளி குத்தூசி குருசாமி அவர்கள்

எழுத்து வேந்தர் தோழர் குத்தூசி குருசாமி
அவர்களின் 111 ஆவது பிறந்தநாள் இன்று..!

சுயமரியாதைச் சுடர், பெரியாரின் போர்வாள்
தோழர் குத்தூசி குருசாமி அவர்களின் ஈகை வரலாறு
'***********************************************************************
தோழர் குத்தூசி அவர்கள் தஞ்சைமாவட்டத்தில், புதுக்கோட்டை வட்டம், குருவிக்கரம்பை கிராமத்தில்
1906 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 23 ஆம் நாள் பிறந்தார். திருவாரூரில் பள்ளிக் கல்வியை முடித்துத் திருச்சி தேசியக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

பழுத்த வைதீகராக, கதர் அணியும் தேசிய இளைஞராகக் கல்லூரி மாணவப் பருவத்தைத் தொடங்கிய குருசாமி கல்லூரியை விட்டு வெளியேறும்போது தீவிர புரட்சிக் கருத்துகளை உடையவராகத் திகழ்ந்தார்.

1925 ஆம்ஆண்டு தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்த காந்தியைச் தேசிய கல்லூரிக்கு அழைத்துச் சிறப்பிக்கவும் பண முடிப்பு ஒன்று தரவும் குருசாமி விரும்பி அதற்கான ஏற்பாடுகளையும் செய்து காந்தியாரும் அழைக்கப்பட்டார்.

காந்தியாருக்குக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு ஒன்று வாசித்து அளித்தனர். கல்லூரி நிர்வாகம் உயர் சாதி என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்களால் நடத்தப்பட்டதால் வரவேற்புரை சமற்கிருதத்தில் இருந்தது. காந்தியார் உரையாற்றும் போது தனக்குச் சமற்கிருதத்தில் வரவேற்புரை வாசித்ததை வன்மையாகக் கண்டித்தார். அதோடு “எனக்குப் படித்த வரவேற்புரையை உங்களில் எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள்? கை தூக்குங்கள் பார்க்கலாம்.'' என்றார். ஒருவர் மட்டுமே கை தூக்கினார். அந்த ஒருவர் அந்த வரவேற்புரையை எழுதி வாசித்த சமற்கிருதப் பண்டிதரே. இதைக்கண்டு காந்தியார் உங்களுக்கு வெட்கம் இல்லையா? உங்கள் தாய்மொழியான தமிழில் ஏன் வரவேற்புரையை அளித்திருக்கக்கூடாதா? என்று கேட்டவுடனேயே அருகில் நின்ற குருசாமி கேளுங்கள், கேளுங்கள் என்று ஆங்கிலத்தில் உரக்கக் கத்தினார். காந்தியார் குருசாமியை முறைத்துப்பார்த்து "இது அதைவிட மோசமானது'' என்றார். குருசாமி தனது தாய்மொழிப் பற்றைத் தயக்கமின்றி வெளிப்படுத்தியதை இதன் மூலம் அறியமுடிகிறது.

கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்ட குருசாமி குடிஅரசு பத்திரிகையைத் தொடர்ந்து படித்து வந்தார். சுயமரியாதை கட்சியில் ஈடுபாடுகொண்டு 1927 ஆம் ஆண்டு தந்தை பெரியாரைச் சந்தித்தார். பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க ஈரோட்டிலேயே தங்கி இயக்கப் பணியில் ஈடுபட்டார். படித்துப் பட்டம் பெற்று நல்ல வேலையில் அமர்ந்து கை நிறைய காசு பார்த்து நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கனவு காண்கின்ற இளைஞர்கள் மத்தியில், குருசாமி பெரியாரின் குடிஅரசு பத்திரிகை அலுவலகத்தில் "குடிஅரசு' இதழ் சந்தாதாரர்களுக்கு இதழ்களைத் தபாலில் அனுப்பும் பணியை மேற்கொண்டார் என்பது அவர் சுயமரியாதை இயக்கத்தின் மீது வைத்திருந்த பற்றைக் காட்டுகிறது. நாளடைவில் குடிஅரசு மற்றும் ரிவோல்ட் ஆங்கில இதழ்களில் கட்டுரை மற்றும் தலையங்கங்கள் எழுதினார். பெரியாருடன் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

“படித்த அழகான கலப்பு மணம் செய்த கொள்ள விரும்பும் பெண் தேவை. விதவையாக இருந்தால் சிறப்பு'' என்று குடிஅரசு இதழில் விளம்பரம் தந்தார். இருப்பினும் பெரியாரின் விருப்பப்படி 1929 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 8 ஆம் நாள் ஞாயிறு மாலை ஈரோட்டில் பெரியார் மாளிகையில் பெரியார் தலைமையில் தொண்டை மண்டல முதலியார் என்னும் உயர்ந்த குலத்தவர் என்று கருதப்பட்ட குருசாமி அவர்களுக்கும், தாழ்ந்த குலம் என்று கருதப்பட்ட, இசை வேளாளர் வகுப்பில் பிறந்த குஞ்சிதம் அம்மையாருக்கும் கலப்புத் திருமணம் மட்டுமின்றி வைதீகச் சடங்குகள் இல்லாத சீர்த்திருத்தத் திருமணம் நடைபெற்றது. 83 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதல் கலப்புத் திருமணம் இதுவே. இத்திருமணத்திற்குப்பின் பல கலப்புத் திருமணங்கள் தமிழகத்தில் நடைபெறத் தொடங்கின.

அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் நினைப்பது ஒன்று, சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக இருப்பர். ஆனால் குத்தூசி குருசாமி நினைத்ததைச் சொல்வார், சொல்வதை செய்வார், எக்காரணம் கொண்டும் சமரசம் என்பது அவர் வாழ்வில் இல்லை. அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்.

அவர் எழுதும் கட்டுரைகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் பலருக்கு ஏற்படும். குறிப்பாக காந்தி, நேரு, இராசாசி, சத்தியமூர்த்தி எனச் சிலரைக் குறிப்பிடலாம்.

ஒருமுறை "வருணாசிரமத்தில் நான் நம்பிக்கையுள்ளவன்' என்று காந்தியார் "யங் இந்தியாவில்' எழுதி இருந்ததைக் கண்டித்து குருசாமி 1931 சூலைத் திங்கள் 27 ஆம் நாள் “புதுவைமுரசு' இதழில்

“காந்தியார் கக்கும் நஞ்சு'' என்ற தலைப்பில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

“காந்தி சாதி வித்தியாசம் ஒழிய வேண்டுமென்பார்

ஆனால் வருணாசிரமம் இருக்க வேண்டுமென்பார்''

“வருணாசிரமம் என்றால் இப்போது இருக்கும் வருணாசிரமம் அல்ல; என்னுடைய வருணாசிரமம் வேறு என்பார்''

“கலப்பு மணம், சமபந்தி போஜனம் செய்யலாம் என்பார்

ஆனால் ஜாதியை ஒழிப்பதற்கு இரண்டுமே அவசியமில்லை என்பார்''

“ராமாயணம் ஒரு கட்டுக்கதை என்பார்

ஆனால் என்னுடைய ராமன் வேறு என்பார்''

“இந்து முஸ்லிம் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பார்

ஆனால் இரண்டு மதக்காரர்களும் அவரவர் மதத்தை காப்பாற்ற வேண்டுமென்பார்''

என்று எழுதிக் காந்தியின் பித்தலாட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

பெரியாருடன் ஏற்பட்ட மனவருத்தத்தால் வெளியேறிய குருசாமி, அமைச்சர் பி.டி.ராசன் அவர்களின் உதவியால் 1931 ஏப்ரல் 20 அன்று செம்பியம் சார் பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். மாத ஊதியம் ரூ.35/- அரசுப் பணியில் இருந்தாலும் தனது கட்டுரைகளைக் குடிஅரசு, குத்தூசி, புதுவை முரசு, அறிவுப்பாதை ஆகிய இதழில்களில் வெளியிட்டு வந்தார்.

1932 இல் குடிஅரசு இதழில் சுயமரியாதை இயக்கத்தைக் கடுமையாகப் பேசித் தாக்கிவந்த சத்தியமூர்த்தியைக் கண்டித்து ஒரு கட்டுரை எழுதினார். “அழுகிய முட்டை அரை அணாவுக்கு ஆறு''

“முட்டையால் அடிப்பதால் மனிதன் செத்துவிடமாட்டான். அதற்காக இயக்கத்தவர்கள் எவரையும் முட்டையால் அடித்துப் பார்க்க வேண்டாம். நல்ல முட்கைளை வீணாக்கக் கூடாது. அப்படியானால் அழுகிய முட்டையில் அடிக்கலாம் என்று எண்ணி அடித்து விடாதீர்கள். நான் சொன்னால் நீங்கள் கேட்கவா செய்வீர்கள்? நீங்கள் செய்வீர்களாச்சே? எப்படி இருந்த போதிலும் சத்திய மூர்த்தியை அடித்துவிடாதீர்கள். இயக்க வளர்ச்சியைக் கண்டு பயத்தில் ஏதோ உளறுகிறார்'' என்று எழுதினார்.

அடுத்த இரண்டு நாட்களிலேயே புதுக்கோட்டையில் சத்தியமூர்த்தி பேசும்போது இயக்கத்தவர்கள் அழுகிய முட்டையால் அடித்தேவிட்டார்கள் அய்யரை. செய்தி அறிந்த குருசாமி “அண்ணா முதுகு எப்படி இருக்கிறது?'' என்று மீண்டும் கிண்டலாக ஒரு கட்டுரையை வெளியிட்டார்.

1933 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் நாள் சென்னை செயிண்ட் மேரிஸ் அரங்கில் கத்தோலிக்கர்களின் மாநாடு ஒன்று நடைபெற்றது. சென்னை ஆர்ச் பிசப் தலைமை தாங்கினார். இந்த மாநாடு சுயமரியாதை இயக்கத்தைத் தாக்குவதற்கென்றே கூட்டப்பட்டது. பெரியாரையும் குடிஅரசு பத்திரிகையையும் கடுமையாகத் தாக்கியதோடு மட்டுமல்லாமல் கண்டனத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இதனைக் கண்டித்து 1933 ஏப்ரல் 30 ஆம் நாள் குடிஅரசு இதழில் “கத்தோலிக்கர்களின் ஆவேசம்'' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில், சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட மதத்திடமோ அல்லது ஒரு தனி நபரிடமோ எவ்விதமான விரோதமும் கிடையாது. கத்தோலிக்கர்களிடமும் எவ்விதமான சச்சரவும் கிடையாது. ஆனால் சமீபகாலமாகக் கத்தோலிக்கர்கள் மாத்திரம் எங்கு பார்த்தாலும் ஆவேசம் கொண்டு கிளம்புகிறார்களே! அதற்குக் காரணம் என்னவென்றால் அவர்களுடைய மதத்திலுள்ள ஊழல்கள் வெளிப்பட்டு விடும் என்ற பயம்தான். சரக்கு நல்ல சரக்கா இருந்தால் செட்டியாருக்குக் கோபம் வரக்காரணமில்லை''. என்றும் மேலும் தோழர் பெட்ரண்ட் ரஸ்ஸல் “நான் ஏன் கிருத்துவனல்ல'' என்று ஒரு சிறு புத்தகம் எழுதி இருக்கிறார். நமது கிறித்துவ தோழர்கள் முக்கியமாக கத்தோலிக்க தோழர்கள், தாங்களே மேதாவிகள் என்பதை மறந்து இந்த நூலைச் “சயித்தான்'' என்று அசட்டுத்தனமாகச் சொல்லிவிடாமல் ஒரு தரமாவது புரட்டிப் பார்க்கும்படி விரும்புகிறேன். அதில் ஒரு இடத்தில் அவர் கூறுகிறார்.

“அறிவியலிலாகட்டும், ஒழுக்கத்திலாகட்டும் கிறிஸ்துவைவிட புத்தரும், சாக்ரடீசும் எத்தனையோ மடங்கு மேம்பட்டவர்கள் என்பது என் அபிப்பிராயம். சரித்திர சம்பந்தமாகப் பார்க்கப் போனால், கிறிஸ்து என்ற ஒருவர் இருந்தாரா? என்பது முழுச் சந்தேகமாக இருக்கிறது. உலக முன்னேற்றத்திற்கு முக்கிய தடையாக இருப்பது கிறிஸ்து மதம்தான் என்பதை நிச்சயமாகக் கூறுவேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடைமுறையில் இருக்கும் கத்தோலிக்க மதம் எத்தகையது என்று சுருங்கக் கூற வேண்டுமானால்
“இந்து மதத்திலுள்ள ஊழல்களும் கிறித்து மதத்திலுள்ள ஊழல்களும் சேர்த்துத் திரட்டிய பிண்டமே கத்தோலிக்க மதம் என்று சொல்லலாம்'' என்றார்.

மேலும் 1953 ஆம் ஆண்டு சென்னை செயிண்ட் மேரிஸ் அரங்கில் “சாதி ஒழிப்பு மாநாடு'' நடத்திட ஏற்பாடு செய்து, அந்த மாநாட்டில் கலந்து கொள்ளுகிறவர்கள் சாதி ஒழிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று கருதினர். தனது மகளைக் காந்தியார் மகனுக்குக் கலப்பு மணம் செய்து கொடுத்த இராசாசி அவர்களை மாநாட்டுக்குத் தலைமை தாங்கக்கோரிக் கடிதம் எழுதினார். குருசாமியின் அரசியல் சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட ஆச்சாரியார் “மாநாட்டில் கலந்துகொள்ள இயலவில்லை'' என்று பதில் அனுப்பினார். தோழர் குருசாமி உடனே காமராசர் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாநாட்டுக்குத் தலைமை தாங்கக் கோரினார். காமராசரும் ஒப்புதல் தந்தார், மாநாட்டைத் தலைமை தாங்கி நடத்தித் தந்தார். அந்த மாநாட்டிற்குப் பிறகு குருசாமி காமராசர் இடையே நட்பு தொடர்ந்ததோடு குருசாமியின் கருத்துக்களைக் காமராசர் முழுக்க முழுக்க ஆதரித்தார். ஆச்சாரியரின் குலக் கல்வித் திட்டத்தைக் காமராசர் எதிர்த்து அதன் மூலம் முதலமைச்சர் ஆனதற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் தோழர் குருசாமி அவர்களே.

1963 ஆம்ஆண்டு சூன் 28 ஆம் நாள் மதுரை கோயில் குடமுழுக்கு விழாவில் குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன் கலந்து கொள்ள இருந்தார். இதனைக் கண்டித்து “குடியரசுத் தலைவர் நாட்டின் முதல் குடிமகன். நாட்டின் அத்தனை கோடி மக்களுக்கும் பொதுவானதொரு பெருந்தலைவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் குடமுழக்குத் திருப்பணிக்காக வருவதால் இந்து மத நம்பிக்கை இல்லாத முஸ்லிம்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள் போன்ற சரிபாதி மக்கள் மனம் புண்படும்'' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்தார். அதோடு அதனை மீறிக் குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் சுயமரியாதை இயக்கம் மறியலில் ஈடுபடும் என்று குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதினார். இக்கடிதம் கண்டவுடன் குடியரசுத்தலைவர் மதுரைக்கு வருவதை ரத்து செய்தார்.

சமீபத்தில் சென்னை வந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திருப்பதி கோயிலுக்குச் சென்று பூர்ண கும்ப மரியாதை பெற்று வெங்கடேசப் பெருமாளை வணங்கிச் சென்றதை நாம் அறிவோம். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குக் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனை வரவிடாமல் தடுத்திட அன்று ஒரு குத்தூசி குருசாமி நமக்கு இருந்தார். இன்று பிரணாப் முகர்ஜியைத் தடுத்திட நம்மில் ஒரு குருசாமியும் இல்லையே!

இப்படி வாழ்ந்த குருசாமியிடம் அவர் மகன் கவுதமன் “ஏனப்பா! நீங்கள் அதிகப் பணம் பெருக்கும் வழிகளைக் கொள்கை இலட்சியத்திற்காக ஒதுக்கித் தள்ளி விடுகிறீர்களே, இக்காலத்தில் அறிவிலிகள், அக்கிரமக்காரர்கள் எல்லோரும் பணபலத்தால் எல்லா வசதிகளையும் அடைந்து விடுகிறார்களே, நீங்கள் மட்டும் இப்படி இருக்கிறீர்களே?'' என்று கேட்டபோது, “பணம் ஒன்றுதான் வாழ்க்கையின் குறிக்கோள் என்றால் பன்றிக்கும், பகுத்தறிவுமிக்க நமக்கும் என்ன பாகுபாடு? பெரும் பணம் அவசியம் என்றால் நான் இன்று கூடத் திரட்ட எத்தனையோ வழிகள் தெரியும். அதை எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அது எனக்குத் தேவையில்லை என்று கருதியே இருக்கிறேன்'' என்றார்.

ஒரு முறை மகள் ரஷியா “ஏனப்பா நீங்கள் ஏன் இப்படி உண்மையைக் கூறி எல்லோரையும் பகைத்துக் கொள்கிறீர்கள். ஏன் நீங்களும் அப்படி நடக்கக்கூடாது'' என்று கேட்டபோது “அப்படி நடப்பதற்குத்தான் பலர் இருக்கிறார்களே, யாரும் வாழ்க்கையில் செய்யத் துணியாத வேலையை நான் செய்கிறேன். உண்மையைக் சொல்வதென்றாலே பகைமை ஏற்படத்தான் செய்யும். அன்றைய சாக்ரடீசிலிருந்து இன்றைய பெரியார் வரையில் பலர் இதற்காகவே பாடுபடவில்லையா?'' என்றார்.

குத்தூசி குருசாமி குஞ்சிதம் இணையர் இப்படியே உண்மை, நீதி, நியாயம் எனக் கடைசி மூச்சு இருக்கும்வரை பேசிப் பேசியே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர்.

பொதுவாழ்வில் ஈடுபடும் தலைவர்கள் எல்லாம் சொத்து சுகங்களோடு தங்கள் குழந்தைகளின் திருமணம் மட்டுமின்றிப் பேரக் குழந்தைகளின் திருமணங்களையும் முன் நின்று ஆடம்பரமாக நடத்தி அழகு பார்க்கும் இக்காலத்தில் குத்தூசி இணையர் பெற்ற குழந்தைகளின் திருமணத்தைக் கூட நடத்திப் பார்க்க முடியாத ஈகையர்களாக மறைந்தனர்.

நன்றி: கீற்று

periyarkuthoosigurusamy.blogspot.in

(வாட்ஸ்அப்பில் வந்தது. மிக்க நன்றி)

திங்கள், 18 ஏப்ரல், 2016

களப்பணியாற்றுங்கள் தோழர்களே...

களப்பணியாற்றுங்கள் தோழர்களே....

   சாதியக் கொடுமைகளிலிருந்து குறைந்தபட்சமாவது விடுபட வேண்டுமென்றால் ஆசிரியர்களால் மட்டும்தான் சாத்தியமாகும்.  எனது சொந்த ஊரில்தான் ஆரம்பக்கல்வியை முடித்தேன். அந்த ஊர் சாதிய வன்கொடுமைகள் நிறைந்த ஊர். பள்ளியிலும் சாதிய வன்கொடுமைகள் அரங்கேறியது. ஆசிரியர்களாலேயே ஏதும் செய்ய இயலாத நிலை. அங்கு பணியாற்றிய ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் நால்வர். செல்வி பழனியாயி (பணி நிறைவு),   திருமிகு கந்தப்பன் ( தற்போது வேறு பள்ளியில் தலைமையாசிரியர்),     திருமிகு இக்னேசியஸ் (பணிநிறைவு) ,   திருமிகு தவ.சாலைவேலம்மா (தற்போது வேறுபள்ளியில் தலைமையாசிரியர் ). முதல் மூவரிடம் நான் ஆரம்பக்கல்வி கற்றேன்.

   முதலில் ஆசிரியர் பழனியாயி அவர்கள்.  "கள் " இறக்கும் தொழில் அமோகமாக நடைபெற்ற காலம் அது.  உயர்சாதியாக கருதப்பட்ட மாணவர்களில் சிலர்  "கள்" குடித்துவிட்டுதான் பள்ளுக்கு வருவார்கள். அவர்களை திருத்த எடுத்துக்கொண்ட முயற்சி அதிகம். சேரியில் பிறந்த மாணவர்களில் நானும் ஒருவன். சேரி மாணவர்கள் மற்றவர்களோடு கைகோர்த்து திரியமுடியாது. ஒன்றாக அமரக்கூட முடியாது. அப்படி அமர்வதை உயர்சாதி என்று தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் எவரேனும் பார்த்துவிட்டால் அவ்வளவுதான்...........

      சாதிப்பாகுபாடுகளை களையவும் சேரிக்குழந்தைகளையும் மடியில் அமர வைத்து களப்பணி ஆற்றியவர் ஆசிரியர் செல்வி பழனியாயி அவர்கள். அவர் எடுத்துகொண்ட முயற்சிக்கு கிடைத்த பாராட்டுக்கள் எது தெரியுமா........? அவமானங்களும் அருவருக்கத்தக்க வார்த்தைகளும்தான். எதிர்ப்புகளை எதிர் கொண்டார். சிந்தா மூக்கோடும் சீவாத்தலையோடும் வந்த மாணவர்களை சாதி பார்க்காமல் அரவணைத்து அழகுபடுத்தினார்.  ஊர் மக்களின் பழக்கவழக்கங்களையும் நெறிப்படுத்தினார். அவரிடம் படித்த மாணவர்கள் இன்று பலரும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். இன்றும் ஊரில் நடைபெறும் குடும்ப விழாக்களில் இவருக்கு முதல்மரியாதை கொடுக்க இவரிடம் படித்த மாணவர்கள்  தவறுவதில்லை.

   அடுத்து  தலைமை ஆசிரியர் இக்னேசியஸ் அவர்கள்.  வகுப்பில் உயர்சாதி குழந்தைகள் மட்டுமே பெஞ்சிலும் தரைப்பலகையிலும் உட்காரக்கூடிய அவலநிலை. அதை உடைத்தெறிந்து ,என் போன்ற மாணவர்களையும் சமமாக உட்கார வைத்தார். எதிர்ப்புகள் கிளம்பியபோதும் துளியும் அச்சப்படவில்லை. மாணவர் தேர்தலை முதல்முறையாக நடத்தினார். நான் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இன்றும் என் மாணவர்களிடம் நான் மாணவர் தேர்தலை நடத்தி வருகிறேன். சாதியப்பாகுபாடுகள் களைய இவரது பணியும் துணை நின்றது.

   அடுத்து ஆசிரியர் கந்தப்பன் அவர்கள். கல்வியில் சேரிக்குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அனைத்து மாணவர்களிடமும் அன்போடு பழகினார். ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த முழுமூச்சாக களப்பணியாற்றினார். இவர் அதே ஊரைச் சேர்ந்தவர் என்பதால் நம் கட்டுப்பாடு உனக்கு தெரியாதா என்று பலரும் முறையிட்டபோதும் எதையும் உள்வாங்கிக்கொள்ளாமல் களப்பணியாற்றினார். இம்மூன்று ஆசிரியரகளும் வெவ்வேறு காலங்களில் பணியாற்றியிருந்தாலும் நல்ல  கல்வியால் சமூக மாற்றத்தை கொண்டு வர முடியும்
என ஆழமாக நம்பினார்கள்.

   அடுத்து ஆசிரியர் தவ.சாலைவேலம்மா. நான் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வந்து போது, என்னை அழைத்து மாதம் ரூபாய் முந்நூறு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியராக பணியமர்த்தி அழகு பார்த்தார். நான் சற்றே தயங்கியபோது, வாங்க தம்பி யார் தடுக்குறானு பாக்குறேன் என்று துணிச்சலோடு செயல்பட்டார். அதுமட்டமல்லாது இந்த ஊரில் படிக்காமல் வேறு ஊரில் படித்து வந்த அனைத்து அடித்தட்டு குழந்தைகளையும் சேர்க்க வைத்து பாதுகாப்பு அரணாக விளங்கினார். இந்த நால்வருமே மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

   இன்று ஓரளவுக்கு சாதிக்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்று நம்புகிறேன். இருந்தபோதும் ஆங்காங்கே பணிபுரியும் ஆசிரியர்கள் தொடர்ந்து களப்பணியாற்ற வேண்டும். ஆசிரியர்களால் மட்டும்தான் முடியும். ஊதியத்தையும் கடந்து உள்ளன்போடு  இவர்களைப்போல் களமாடிக்கொண்டு இருக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு என் வாழ்த்துகள் எப்போதும் உண்டு.
       நட்பின் வழியில்
          சோலச்சி, புதுக்கோட்டை
  

புதன், 13 ஏப்ரல், 2016

ஓட்டுக்கு பணம் ...... - சோலச்சி

ஓட்டுக்கு பணம்.....

"பணம் கொடுப்பான் ஓட்டுக்கு
பாரு புள்ள - இந்த
வேசக்கார பயலுக நாட்டுக்குள்ள....!

நோட்ட எடுத்து நோட்டம் பாத்து கொடுப்பான்...

கோட்டை போனா
கண்டுக்கவே மாட்டான்...

இலவசமா வார்த்தைகளை
அள்ளிவிடுவான்
இருக்கும் வாழ்நாளோ உங்களுக்குனு
சொல்லில் முடிப்பான்....!

நம்ம காலு பட்ட இடத்தத்தானே
தொட்டு வணங்குவான்...
நாயப்போல ஓட்டு வாங்க
சுத்தி வருவான்....!

பணம் காய்க்கும்
தொழிலாக மாறிப்போச்சு...
அரசியல் அருவருக்கும்
சாக்கடையாச்சு...!

இனிமேல் ஈசல் இனம்
இல்லாம போகும் புள்ள
ஏகப்பட்ட கட்சிதானே
பாரு புள்ளே....!

கூட்டம் சேத்து கொடி ஏத்த
ஆட்டம் போடுறான்...
குரல்வளையே சாகுமாறு
கொக்கரிக்கிறான்...!

ஆண்ட வரை உருப்படியா
ஒன்னும் நடக்கல...
ஆக மொத்தம்
தேசம் இப்போ உருப்படல....!

காசுதந்தா கண்டபடி
காரி துப்பு -புள்ள
பொருள் தந்தா
பூகம்பமா மாறி விடு...!

மானத்தையே விலை பேச
துணிஞ்சவனே
மண்டியிட்டு ஓடச்சொல்லு
ஓட்ட பாத்து குத்து....!"

                  - சோலச்சி
                   புதுக்கோட்டை
             செல் : 9788210863