ஞாயிறு, 29 ஜனவரி, 2017

கல்பாக்கம் புதுச்சேரியில் .....

  மிகவும் மகிழ்வான தருணம்....

   ஞாயிற்றுக் கிழமை (29.01.2017)  காலை கல்பாக்கம் புதுப்பட்டிணம் சாலோம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் நானும் என் அண்ணன் கவிஞர் புதுகை தீ.இர வும் கலந்து கொண்டோம். புதுப்பட்டிணம் என்றாலே நண்பர் கவிஞர் லெட்சுமணன் தான் நினைவுக்கு வருவார். நண்பர் லெட்சுமணன் அன்போடு வரவேற்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அடுத்து கல்பாக்கம் என்றாலே தோழர் கவிஞர் முத்து விஜயன் தான்.   எங்களோடு அவரும் கலந்து கொள்ள இலக்கியம் குறித்த கலந்துரையாடல் தொடங்கியது.  தோழர் முத்துவிஜயன் இலக்கிய ஆளுமை நிறைந்தவர். தோழர்கள் இருவரையும் பத்தாண்டுகளுக்கு முன்னால் கவிஞர் சேலம் சுமதி அவர்கள் சேலத்தில் ஏற்பாடு செய்திருந்த கவிஞர்கள் சந்திப்பு நிகழ்வில் சந்தித்தது.  மீண்டும் இப்போதுதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நிகழ்கால இலக்கிய நகர்வு குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். தோழர் கவிஞர் முத்துவிஜயன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றுகிறார். வேறு ஒரு இலக்கிய நிகழ்வுக்கு தோழர் முத்துவிஜயன் செல்ல வேண்டி இருந்ததால் தோழர் லெட்சுமணனுடன் மதியம் சுவையான பிரியாணி சாப்பிட்டோம்.
     தோழர் லெட்சுமணனின் அன்பில் நனைந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், அப்படி ஒரு அன்பான உபசரிப்பு.  மீண்டும் மூவரும் சமகால நிகழ்வுகள் குறித்து பேசிக்கொண்டோம். பிறகு தோழர் லெட்சுமணனிடமிருந்து விடைபெற்று எங்கள் பயணம் புதுச்சேரிக்கு சென்றது.
      கடற்கரை வாசலில் தலைமை செயலகம்.  தூய்மையான நகரை நோக்கி சென்று கொண்டு இருப்பதை காண முடிந்தது. அண்ணல் அம்பேத்கார் மணிமண்டபத்தை சுற்றிப் பார்த்தோம். கடற்கரையும் கடல் அலையும் நம் கைகளை குலுக்கி விட்டுச் செல்வது போன்ற உணர்வு.

    எங்களின் ரசிக்கும் திறனை பார்த்த காவலர் ஒருவர் புதுச்சேரி தமிழ்நாட்டிலிருந்து எப்படி மாறுபட்டு இருக்கிறது என்றார். எல்லாமே சிறப்புதான்... என்ன ஒரு வித்தியாசம்னா.... தமிழ்நாட்டுல அரசாங்கம்  வாங்கி விக்கிது (டாஸ்மார்க்). புதுச்சேரி அரசு காய்ச்சி விக்கிதுனு சொல்லவும் மனுசன் சிரிச்சுக்கிட்டே போய்ட்டாரு. ஆமாங்க அங்க சாராயக்கடைனு பெயர் பலகையோடு வியாபாரம் படுசோரா நடக்குது.
   புதுச்சேரி அரசிடம் மிகவும் பிடித்த நிகழ்வு ஒன்று.  கடற்கரை சாலையில் ஓட்டுப்பெட்டி ஆங்காங்கே வைத்துள்ளார்கள். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அந்த விண்ணப்பம் உள்ளது.  அதில் புதுச்சேரி அரசை தூய்மை நகரமாக மாற்றவும் மிகச் சிறந்த சுற்றுலாத்துறையாக மாற்ற என்ன செய்ய வேண்டும், எந்தெந்த பகுதியை மேம்படுத்த வேண்டும் என்று விண்ணப்ப படிவத்தில் கேட்டிருக்கிறார்கள்.  புதுச்சேரி அரசுக்கு வாழ்த்துகள்.
   அடுத்த முறை ஒருநாள் பயணமாக சென்று புதுச்சேரி முழுவதையும் சுற்றிப்பார்க்க வேண்டும் (இந்திய விடுதலையில் மிக முக்கியமான இடம் அல்லவா) என்ற ஆசையோடு  இரவுக்கு வழிவிட்டு விடைபெற்றோம்.

வெள்ளி, 27 ஜனவரி, 2017

தமிழ் நெஞ்சம் இதழ்

தமிழ் நெஞ்சம் இதழில் எனது "காட்டு நெறிஞ்சி " கவிதை நூல் குறித்து தோழர் கவிஞர் ஈழபாரதி அவர்கள்  விமர்சனம் எழுதியுள்ளார்கள். தோழர் ஈழபாரதி அவர்களுக்கும் ஆசிரியர் குழுவுக்கும் தோழர் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளி, 20 ஜனவரி, 2017

மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக...

வென்று தலை நிமிர்வோம்....!!!

        2009 ஆம் ஆண்டில்  நம் தொப்புள் கொடி உறவுகள் ஈழத்தில் கொத்துக்கொத்தாய் படுகொலை செய்யப்பட்டபோது போர் நிறுத்தப்பட்டது என்ற வஞ்சக சூழ்ச்சியால் தமிழகத்தில் நடைபெற்ற எழுச்சி மிகுந்த போராட்டம் மழுங்கடிக்கப்பட்டது... அதன் விளைவு பல இலட்சம் உறவுகளை இழந்ததுதான் மிச்சம். அப்போது ஆண்ட தமிழக அரசு பதவியை தக்க வைத்துக்கொள்வதில்தான் குறியாக இருந்தது...

     அதேநிலைதான் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற போராட்டத்தையும் மழுங்கடிப்பதற்கான வேளையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது என்பது தெளிவாகத் தெரிகின்றது. தற்போதைய தமிழக அரசும் பதவியை தக்க வைத்துக்கொள்வதில்தான் குறியாக இருக்கிறது. அவசர சட்டம் என்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறக்கும் செயல். நிரந்தர சட்டம் ஒன்றே நிரந்தர தீர்வாகும்.

      நிரந்தர சட்டம் இயற்றும் வரை போராட்டம் எந்தச் சூழ்நிலையிலும் பின்வாங்கக்கூடாது. தொடர் போராட்டத்தின் மூலம் காவிரி,  முல்லைப் பெரியாறு. கிருஸ்ணா நதி பிரச்சினை,  மீத்தேன் உள்பட அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படுவதாக அமைய வேண்டும்.

      தமிழ்நாடு சுரண்டப்படுவதை தடுத்து, மாநில வளங்கள் பாதுகாக்கப்பட்டு தமிழக கலாச்சாரம் பண்பாடு நிலைநிறுத்தப்பட வேண்டும். இழந்ததை மீட்டெடுப்போம்... மாணவர்களின் போராட்டம் வெல்லும். மாணவர்களால் தமிழக துயர் தீரும். வென்று தலை நிமிர்வோம் உறவுகளே....

    (இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தோழர்களுடன் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தியபோது....)

வியாழன், 19 ஜனவரி, 2017

போராட்ட களத்தில்....

அன்புமிக்க உறவுகளே....
         பால் அதிகம் தருகின்றது என்ற வணிக நோக்கத்தில் நாட்டு மாடுகளை அடிமாட்டுக்கு அனுப்பிவிட்டு கலப்பின பசுக்களை கைகளில் ஏந்திக்கொண்டதன்  விளைவுகளில் ஒன்றுதான் இன்று வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கலாச்சாரம் பாரம்பரியம் என்ற பேசுகின்ற நாம் சில அடிப்படைகளை மறந்து போகிறோம். கலப்பின பசுக்கள் பிராய்லர் கோழிகளைப் போன்றவை. போராடுவதோடு நின்றுவிடாமல் நாம் இனி செய்ய வேண்டியது கலப்பின பசுக்களை கசாப்புக்கடைக்கு அனுப்பிவிட்டு நாட்டு மாடுகளை வளர்ப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவோம்.
    அப்படியே வெளிநாட்டு குளிர்ப்பான நிறுவனங்களை விரட்டி அடித்துவிட்டு நீர் வளமும் காப்போம் உறவுகளே.....
       - சோலச்சி புதுக்கோட்டை
   (சிவப்பு நிற பதாகையை ஏந்தியபடி நேற்றைய 19.01.2017 போராட்டக்களத்தில் சோலச்சியும்...)

அவிழ்த்து விடச் சொல்.... - சோலச்சி

மாய
வலைகளில்
சிக்கித் தவிக்கிறது
தமிழ் தேசம்...!
நீயா நானா போட்டியில்
செத்து மடிகிறது
தமிழ் உறவு...!
ஆணவத்தை சுமந்துகொண்டு
வடக்கு நோக்கி
போகும் போதெல்லாம்
அவமானப்பட்டே
திரும்புகிறோம் ....!
கரங்கள் யாவும்
ஒன்று சேர்ந்தால்
காவு வாங்க
வாய்ப்பேது.....!
கரம் கொடுக்காமல்
கர்வத்தையே
பிடித்துக்கொண்டு
அலைந்தால்
இல்லாமல்
ஆக்கிவிடும்
இளைஞர் தமிழ்....!
கனவு காண்கிறாயா
தெற்கு வாசலை
திறந்து விடலாம் என்று...!
வாடைக்காற்றுதான்
வசதி உமக்கு ....!
எச்சரிக்கை....!!!
ஆணவ அரசியலும்
ஆதிக்க அரசியலும்
அவதிப்பட்டுத்தான்
அழியப்போகிறது
அன்னைத் தமிழிடம்....!
துரோகிகளின்
தோலுரிப்போம்
தோலை
தவிலாக்குவோம்...!
அவிழ்த்து விடச் சொல்
மாட்டை...
அன்றேல்...
உடைத்தெறிவோம்
உந்தன் பூட்டை....!
      - சோலச்சி புதுக்கோட்டை

வியாழன், 12 ஜனவரி, 2017

பொங்காதிரு......!!! - சோலச்சி

   பொங்காதிரு.......!!!


நெல்லை விளைவித்த
வயல்காடு
சாவையும்
சாவியையும்
அறுவடை செய்தபடி ....!

கழனியில்
கால் வைக்காதவர்கள்
கொண்டாடி மகிழ்கின்றனர்
பொங்கி ...!

எல்லோருக்கும்
சோறு போட்டவன்
கண்கள் நீரின்றி
அழுகின்றன
வீங்கி ..!

பாழடைந்த
பங்களாவைப் போல்
குடல் வெடித்து
கிடக்கிறது
வயல்காடு...!

எங்கோ
ஓர் விவசாயி
விளைவித்த
கரும்புக்கும் அரிசிக்கும்
முண்டியடிக்கிறது
ரேசன் கடை கூட்டம்....!

இலவச கரும்பும்
உப்பு கரிக்கிறது
வரிசையில் நின்ற
விவசாயிக்கு....!

இப்போதெல்லாம்
சாதிய அரசியலைவிட
விவசாய சாவு
அரசியலே
பிரபலமாகிறது....!

சோறு வேணுமாம்
உழவர்
உசுரும் மசுரும்
வெறும் தூசாம்....!

முட்டை அரிசி
தின்பவர்கள்
கூமுட்டைகளாகின்றனர்...!

உழவர்
ஏர் கலப்பை தூக்கி
ஆள்வோர்
நெத்தியில்
அடிக்கும் நாள்
எந்நாளோ.........?...!

பொங்கலே
பொங்காதிரு...
உழவர்
பொங்கி எழட்டும்......!!!

      - சோலச்சி புதுக்கோட்டை

  


புதன், 11 ஜனவரி, 2017

இனிய நந்தவனத்தில் .....

2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இனிய நந்தவனம் மாத இதழில் "என் புத்தகம் " என்ற எனது கவிதை வெளியாகியுள்ளது.  இனிய நந்தவனம் ஆசிரியர் தோழர் கவிஞர் சந்திரசேகரன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.

திங்கள், 2 ஜனவரி, 2017

ஊரு உலகம் ...... - சோலச்சி

               பாடல்....!!!
ஊரு உலகம் மெச்ச நானும்
ஊட்டி வளர்த்த செல்ல மகள
ஒத்தையடி பாதையிலே தவிக்க வச்சேனே
நான் தவிக்க வச்சேனே.....
நான் போட்டோ பார்த்தேன்
பொருத்தம் பார்த்தேன் - இது
பொருந்துமானு குணத்த பார்க்கலையே........
      
                                                  (நான்...)

சிட்டா திரிஞ்ச ஏம் பொண்ண
சிங்கபூரு மாப்பிள்ளைனு கட்டி வச்சேனே...
சீர் வரிசையோடு சீதனமா
மாடி வீடும் கட்டிக் கொடுத்தேனே ...
இப்ப மாடிவீடும் காலியாச்சு
மார்வாடி கடைக்கு போயிருச்சு...
நகையெல்லாம் கொடுத்துப்புட்டு
அழுகையோடு தவிக்கிறா....
மாப்பிள்ளை தண்ணியிலே மிதக்கிறார்.....
                                                    (நான்....)





காடு கரையெல்லாம் வித்துப்புட்டேன் - அந்த
காசுக்கு பைக்கும் வாங்கித் தந்தேன்....
காரு ஓட்டும் நெனப்புலதான்
காத்தா பறக்கிறார்....
எம் மக தினமும் பதறுறா...
சிங்கப்பூர் செண்ட்டும் தீர்ந்துருச்சாம்
முக்கால் டவுசர் பேண்ட்ட போட்டு
நல்லா மினுக்குறார்...
எத்தன நாளைக்கு இந்த கூத்து
மகளோட கண்ணீர பார்த்து
நாளுபூரா நானும் ஏங்குறேன்.... 
                                                          (நான்...)

வெளிநாட்டு மோகத்திலே
வேலைக்கு போறத நிறுத்திட்டார்...
"எப்ப விசா வந்து நீங்க கிளம்பி போவீகளோ
கூலி வேலை செய்யத்தானே
கடல் கடந்த போற மச்சான்....
இங்கே நாமும் வேலை செஞ்சு
நாள கடத்தாலாம் "
எம்மக சொல்லி முடிக்கயிலே
சோத்துப்பானை உடைஞ்சு சிதறுது...
பொண்ண பெத்த எம்மனசு புலம்பி தவிக்குது.....!
                                    (நான் போட்டோ..)

          - சோலச்சி புதுக்கோட்டை