ஞாயிறு, 21 ஜூலை, 2019

வளர்ச்சியும் வீழ்ச்சியும் - சோலச்சி





இலைகள் பழுத்த
மரம் ஒன்றில் அமர்ந்து
எச்சமிட்டு பறக்கிறது
பறவை ஒன்று....

காய்த்துக் குலுங்கும் மரங்களில்
கச்சேரி நடத்துகின்றன
பறவைகள்....

பட்டுப்போன பெரும்மரங்களை
பயன்படுத்திக்கொள்கின்றன
பச்சைக்கிளிகளும் ஆந்தைகளும்
தனக்கான வீடுகளாக....

பல நேரங்களில்
பட்ட மரங்களை
வெட்டி வீழ்த்தி விடுகிறது
காற்று....

அடி மண்ணை
வெள்ளம் அடியோடு
அடித்துச் சென்றாலும்
எங்கோ ஓரிடத்தில்
முளைத்து விடுகின்றன
அதன் விதைகள்.....






விதைகள் இடம் மாறி முளைத்தாலும்
பெயர் மாறி முளைப்பதில்லை...

ஆலம் விதை ஆலமரம்தான்
பனை விதை  பனை மரம் தான்...

விதைகள் பக்குவமானதாய்
இருக்கும் வரை
வீரியத்தோடுதான் எழும்...

உறிஞ்சும் நீரை பொறுத்தே
உறுதி செய்யப்படுகிறது
வளர்ச்சியும் வீழ்ச்சியும்....!!!

        - சோலச்சி புதுக்கோட்டை
           

கருங்காலிகளை கண்டு தெளிவோம் - சோலச்சி




பொதுச் சொத்தை திங்கவில்லை
பொறுப்பான மனிதன்
என்னைப் போல் வேறு எவருமில்லை
நாணயமான மனிதரென்று
நயமாகப் பேசிடுவார் - என்
வேட்டியில் கறை பட வைக்கலாமா என்றே
வேகமாய் மடித்துக் கட்டி வம்பிழுப்பார்....

வயதில் மூத்தவன் என்பார்
வாய்க்கு வாய் தன்னை நல்லவனென்பார்
என்னிடமும் ஒரு வார்த்தை கேளென்பார்
பெரியோன் எனச் சொல்லி
சிறுமை தனம் கொள்வார்....

அயோத்திதாசர் ரெட்டைமலையார் அம்பேத்கார் செய்த பணிதனை
எண்ணிப் பார்த்தால் இவ்வாறு செய்வாரா
இழிகுணம் கொள்வாரா.....




மாமன் என்பார் மச்சான் என்பார்
அண்ணன் என்பார் தம்பி என்பார்
கூடவே இருந்து குழியும் பறிப்பார்...

வல்லுப் பொறுக்கிகளுக்கு எலும்புறுக்கி நோய் வந்து செத்தாலும் கவலையில்லை...

ஊரார் சொத்தை உண்டு பெருத்தோர்
உருப்படியாய் வாழ்ந்ததில்லை
ஊரும் உலகம் ஒருநாளும் வாழ்த்துவதில்லை....

கருங்காலிகளை கண்டு தெளிவோம்
கடமையாற்ற கணம் துணிவோம்....

கயவர்களின் வேரறுப்போம் - களத்தில்
கண்ணியமாய் கரம் கோர்ப்போம்...!!
                                 
                                                 - சோலச்சி




சனி, 6 ஜூலை, 2019

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நான்காவது கூட்டம் - சோலச்சி

   முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா













சூலை4. அன்னவாசலில் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிகள் இருவரை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பாராட்டு விழா நடத்தி பெருமைபடுத்தியது.






புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றக் கிளையின் நான்காவது கூட்டம் கோகிலா பள்ளியில்  நடைபெற்றது.  கூட்டத்திற்கு தோழர் கே.ஆர்.தர்மராஜன் தலைமை வகித்தார். எழுத்தாளர் சோலச்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரவேற்புரை ஆற்றினார். அன்னவாசலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிகள் எம் ரோஜா மற்றும் பி.கவிபிரபா ஆகிய இருவருக்கும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் திரு.என்.ஆர்.ஜீவானந்தம் நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார். அவர் பேசும்போது




   ''மாணவர்களின் வெற்றிக்கு பெரிதும் உழைத்த ஆசிரியர் பெருமக்களுக்கும் பெற்றோருக்கும் முதலில் மனம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் இன்றைய சூழலில் கல்வியோடு நடைமுறை அரசியலையும் உற்று நோக்க வேண்டும். வெறுமென பாடத்தை மட்டும் கற்றுக்கொள்வது சிறந்த கல்வியாக அமையாது. மாணவர்கள் சமூக சிந்தனை உடையவர்களாகவும் மனித நேயமிக்கவர்களாகவும் வளர வேண்டும்.  பாடப் புத்தகத்தை கடந்து மற்ற இலக்கிய நூல்களையும் அறிவியல் சார்ந்த செய்திகளை வாசிப்பதிலும் கற்றுக்கொள்வதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.  வெற்றி மேல் வெற்றி வர விருது வர பெருமை வர மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேண்டும். பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல்  உம்மோடு வளர்ந்திட வேண்டும் என்று மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வைர வரிகளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மாணவர்கள் திகழ வேண்டும் '' இவ்வாறு அவர் பேசினார்.






மாணவி பி.கவிபிரபா அவர்களுக்கு தோழர் மு.மாதவன் மற்றும் சோலச்சி நினைவு பரிசு வழங்குகின்றனர்.



மாணவிகளின் பெற்றோர் மற்றும் சோலச்சி, தோழர் மாதவன்,தோழர் ஜீவானந்தம்,  தோழர் மீரான்மொய்தீன், தோழர் தர்மராஜன், தோழர் சோமையா இவர்களுடன் பாராட்டு பெறும் மாணவிகள் 


     விவசாய தொழிலாளர் சங்கத்தின் தேசிக்குழு உறுப்பினர் தோழர் மு.மாதவன், தோழர் சோமையா, தோழர் ராஜேந்திரன், தோழர் விஜயரெங்கன் போன்றோர் மாணவர்களைப் பாராட்டிப் பேசினர். நிகழ்ச்சியில்  ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நினைவுப் பரிசுகளைப் பெற்றுக்கொண்ட மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் கலை இலக்கியப் பெருமன்றத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.  நிகழ்ச்சியில் இயன்முறை மருத்துவர் எழுத்தாளர் கோவிந்தசாமி சமூக சிந்தனை மிக்கப் பாடலைப் பாடினார். கலை இலக்கியப் பெருமன்றத்தின் புரவலர்  தோழர் மீரான்மொய்தீன் நன்றி கூறினார்.






06.07.2019 மாலை மலர் நாளிதழில் நிகழ்ச்சி குறித்த செய்தி 

நாள்: 04.07.2019
வியாழன் மாலை 4.30 மணி