செவ்வாய், 14 ஏப்ரல், 2020

என்னுயிரே ஆருயிரே - சோலச்சி


        ஆறுகடந்து கோட்டை.....


என்னுயிரே ஆருயிரே
உன்னைத்தான் நானும் இங்கே
மானே.!  தான் இழந்து வாடுறேனே
தன்னந்தனியே உன்னை சுமந்து
நானும் ஏதேதோ பாடுறேனே
அந்த காலங்கள் இன்று வருமா
மானே சோகங்கள் தான் தீருமா.....



அந்தக் கண்மாய் நடுவினிலே
நீர் கொட்டைதான் முளைச்சிருக்கு
நீயும் நானும் தாவணியில்
அயிரை மீனும்தான் பிடிச்சு வந்தோம்  - அன்று
அயிரை குழம்பாச்சு இன்று
என் கண்கள் குளமாச்சு....


பஸ் ஸ்டாண்டில் பைக்கினிலே
நான் உனக்காக காத்திருக்க
பை தூக்கி நடந்து வந்த நானும்
பலாச்சுளை வாங்கி தந்தேன் - அன்று
பாலாச்சுளை இனிப்பாச்சு இன்று
பாதையெல்லாம் முள்ளாச்சு.....


பரபரப்பாய் சாலையிலே
யாரும் பாராமல் பயணிக்க
என் மார்போடு கட்டியணைச்ச
கோடை மார்கழி ஆனதென்ன - அன்று
சூரியன் குளிர்ந்ததடி மானே
உன் நினைவு வாட்டுதடி.....


ஆறு கடந்து கோட்டை போனோம்
அழகே அதை ரசிக்க
மலை மீது ஏறிப்போயி அங்கே
மாறிமாறி கொஞ்சிக்கிட்டோம் - இன்றும்
கோட்டை என்னை தழுவுதடி நாளும்
என் உசுரு நழுவுதடி.....


அந்த சாலையோரம் இளநீரு
வாங்கித் தர நீ ருசிச்ச
உதட்டில் தேன் வழிய நான் ருசிச்சேன்
விழியோடு ஒத்தடம்தான் மானே
வேண்டும்படி கொடுத்துக்கிட்டோம்
அந்த காலங்கள் என்று வருமோ
இழந்த இன்பங்கள் தான் தருமோ......

                     - சோலச்சி புதுக்கோட்டை
                        பேச : 9788210863



சனி, 11 ஏப்ரல், 2020

நந்தவனமும் சோலச்சியும்




நந்தவனத்தோடு சோலச்சி.......



   தனது மிதிவண்டியில் இளைஞர் ஒருவர் பயணித்துக் கொண்டிருக்கிறார். உச்சி வெயில், நெற்றியிலிருந்து குற்றால அருவியாக கொட்டிக்கொண்டிருக்கிறது வியர்வை. அப்போது அந்த இளைஞரின் அலைபேசிக்கு ஓர் அழைப்பு வருகிறது.  வாகனத்தை ஓர் ஓரமாய் நிறுத்தியபடி இணைப்பைத் தொடர்கிறார்.


   வணக்கம்...

   வணக்கம் ...

யார் பேசுவது...

எல்லாம் உங்களுக்கு வேண்டியவர்தான்...

ஏற்கனவே பழக்கப்பட்ட குரலாக இருக்கிறதே....

குரல் பழக்கப்பட்டது அல்ல. ஆனால் எழுத்துகள் பழக்கப்பட்டது. நான் திருச்சியிலிருந்து பேசுகிறேன்.


                 நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுடன் சோலச்சி

திருச்சியிலிருந்து என்றால் எழுத்தாளர் கிரிஜாமணாளன், எழுத்தாளர் சரஸ்வதி பஞ்சு இவர்களிடம் குரல்வழியாகவும் பழக்கப்பட்டிருக்கின்றேன். நந்தவனம் இதழோடு தொடர்பு உண்டு. ஆனால் நந்தவனம் இதழ்...எழுத்துகளோடு மட்டும் பழக்கம்.

ஆமாம் நண்பரே, நான் நந்தவனம் சந்திரசேகரன் பேசுகின்றேன்.

மகிழ்ச்சி நண்பரே.... என்ற இளைஞரின் முகத்தில் பெரும் மகிழ்ச்சி பொங்குகின்றது.

மிதிவண்டியில் சென்ற இளைஞர் உங்கள்  சோலச்சிதான்.

வருடம் 2005  சனவரி மாதம்.

ஒருமணிநேரம் தொடர்ந்த அலைபேசி உரையாடலில் தற்கால இலக்கியம் தொடங்கி சங்க இலக்கியம் , தற்கால அரசியல் என நிறைய பேசினோம்.  

இரண்டாயிரம் ஆண்டில் நந்தவனம் இதழை வாசிக்க ஆரம்பித்து 2005 ஆம் ஆண்டில் உரையாடுகின்றோம். ஆசிரியர் பணி நியமனம் பெற்றபிறகே அலைபேசி வாங்கினேன் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை கடிதப் போக்குவரத்துதான்.

நிறைவாக நண்பர் நந்தவனம் சந்திரசேகர் பேசும்பொழுது இப்படியே எழுதிக்கொண்டே சென்றால் நூல் எப்போதுதான் வெளியிடுவது எனக் கேட்டார். 

வெளியிடும் எண்ணம் இருக்கிறது.  பணம் பெரும் சவலாக இருக்கின்றதே என்றேன்.

 பணத்தை விடுங்க. படைப்புகளை கொடுங்கள் நூலாக்குவோம். 

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒரு நூலாவது எழுதி விட வேண்டும் என்றார்.



     நண்பர் நந்தவனம் சந்திரசேகரின் அந்த உந்துதல்தான் அலைபேசி உரையாடல் தொடங்கிய பத்தாம் ஆண்டில் அதாவது 2015 ஆம் ஆண்டில் எனது முதல் சிறுகதை நூலான "முதல் பரிசு'' என்ற நூலினை புதுக்கோட்டை நகர்மன்றத்துல் என் குரு திருமதி. சோலச்சி அவர்கள் கரங்களால் வெளியிட்டு மகிழ்ந்தேன்.

     இரண்டாயிரம் ஆண்டுகளில் நந்தவனம் இதழ் கையடக்க அளவில் வெளி வந்தது.  எனது நிறைய கவிதைகள் தொடர்ந்து வெளியாகின. 


நந்தவனம் இதழ் மூலமாகத்தான் ராசிபுரம் நாணற்காடன் மற்றும் நீங்காதுயரில் என்னை இட்டுச் சென்ற அருமை மைந்துநர் வைகறை போன்றோர் அறிமுகமாகினர்.  ஒரிஜினல் தாஜ்மகால்,  சன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகின்றான் போன்ற கவிதை நூல்களை எழுதியவர் கவிஞர் வைகறை. எனது முதல் பரிசு சிறுகதை நூல் வெளியீட்டு விழாவுக்காக என்னோடு சேர்ந்து உழைத்தவர்.

    நந்தவனம் பதிப்பகம் மூலமாக புதிய படைப்பாளர்களின் எண்ணற்ற நூல்கள் வெளிவந்துள்ளன. நிறைய படைப்பாளர்களை தமிழ் உலகுக்கு அடையாளப்படுத்தியிருக்கிறார். 


வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைக்கிறார். நிகழ்ச்சிகள் பலவற்றில் பலரையும் பங்கெடுக்க வைக்கிறார்.  புதிய படைப்பாளர்களையும் அறமனச்செம்மல்களையும் தனது இதழ்மூலமாக அறிமுகம் செய்து வைத்து நல்லனவற்றை மனதார பாராட்டி விருதுகளையும் வழங்கி வருகின்றார்.

    சிறிய இதழாக தொடங்கிய நந்தவனம் இதழ் மாதந்தோறும் சிறப்பிதழாக வெளிவருகின்றது. உலக நாடுகள் பலவற்றிலும் கால் பதித்து தனது முத்திரையை பதித்து வருகின்றது. உலகப் படைப்பாளிகள் பலரும் நந்தவனத்தை வரவேற்று மகிழ்கின்றார்கள்.

    தாலியை அடமானம் வைத்து இதழ் நடத்துகின்றேன் என்று வருந்துபவர்கள் மத்தியில் அயராத உழைப்பால் எதையும் அலட்டிக்கொள்ளாமல் அகிலத்தில் பவனி வரும் நண்பர் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களின் இலக்கிய பணி சிறக்க நெஞ்சார வாழ்த்தி மகிழ்கின்றேன்.

                                                             பேரன்பின் வழியில்
                                                         சோலச்சி புதுக்கோட்டை
ஆசிரியர்
இனிய நந்தவனம் மாத இதழ்
த.பெ.எண் 214. எண்.17,
பாய்க்காரத் தெரு,
உறையூர்,
திருச்சிராப்பள்ளி - 620003
சந்தா ரூ 240/-
(கவிஞர் த.சந்திரசேகரன் 9443284823)

-------------------------