வியாழன், 16 டிசம்பர், 2021

சியூக்கியின் பயணம் - சோலச்சி


  ''சியூக்கியின் பயணம்''

                               - சோலச்சி


   "நம்மல மாதிரியே ஆளுங்க இன்னொரு கிரகத்துல இருந்ததற்கான அடையாளங்கள் இருக்கதா சொல்றாங்களே உண்மையா....அப்பா''  கேட்டுக்கொண்டிருந்தான் சியூக்கி. 


   ''அப்படிதாம்பா சொல்றாங்க. ஆனா எந்தளவுக்கு உண்மைனு தெரியல. நம்ம இருக்க இந்த எடம் செவப்பா எவ்ளோ அழகா இருக்கு. ஆனா அவுங்க கண்டுபிடிச்சுருக்க எடம் ஒரே புழுதிமூட்டம் இருப்பதாகவும் அவுங்க வாழ்வதற்காக எதையோ பெருசு பெருசா கட்டி வச்சுருக்க மாதிரியும் நம்ம சைன்டிஸ்ட்க ரொம்ப வருசமா சொல்றாங்க. அதப்பத்தின கதைகள் நெறையவே இருக்கு'' சொல்லிக்கொண்டே வெள்ளை நிறத்தில் ஒரு மாத்திரையை எடுத்து தன் வாயில் போட்டுச் சப்பிக் கொண்டார் கியூராக். அவர் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது.

   "நெறைய கதையா.... அப்பா.....அப்பா.... கொஞ்சம் சொல்லுங்களே'' அடம்பிடித்தான் சியூக்கி.

    ''ஏங்க அவனுக்கு கத சொல்ற வயசா. ஒன்னும் தெரியாத புள்ள மாதிரு நீங்களும் சொல்லிட்டே இருக்கீங்க. ஏழு வயசு ஆம்பள மாதிரியா இருக்கான். அவனாட்டம் புள்ளைங்க கல்யாணம் காச்சி முடிஞ்சு புள்ள பெத்துட்டானுக. காலகாலத்துல அவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வைக்கப் பாருங்க. நம்ம என்ன சின்னஞ்சிறுசுகளா. வயசு எனக்கே பதினொன்னு முடியப்போது. இன்னும் எத்தன வருசத்துக்கு நா இருக்கப் போறேனோ. இப்பவே ஒருவேலை செய்ய முடியல'' சத்தம் போட்டாள் லியூரா.

    மனிதர்களின் அதிகபட்ச ஆயுட்காலம் இருபத்தைந்து ஆண்டுகள்தான். இருபத்தைந்து வயதை தொட்டது இலட்சத்தில் ஒருவர்தான். சென்ற ஆண்டு கால்மாகாணத்தைச் சேர்ந்த பெப்சிகான் என்பவர்தான்  இருபத்திரண்டு வயதை தொட்ட சாதனை மனிதர்.

   உலக ரகசியங்களை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தான் சியூக்கி. பத்து வயது வரை திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற முடிவில் இருந்தான் சியூக்கி. அவன் லியூராவிடம் சொன்னபோது அவள் குதிகுதியென்று குதித்துவிட்டாள். 

   ''இப்பவே ஒனக்கு வயசாயிருச்சு. இன்னும் மூனு வருசம்னா. ஒருபய பொண்ணு கொடுக்க மாட்டான். நீ கெழவனாயிடுவ புரிஞ்சுக்க. பேரன் பேத்திய பாத்துட்டு சாவனுங்குற ஆசை எங்களுக்கில்லையா. அந்த மனுசனுக்கு இப்பவே அங்க வலிக்குது, இங்க வலிக்குதுனு புலம்புறாரு. ஏங்க எடுத்துச் சொல்லுங்க'' சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் போனாள் லியூரா.

  "கல்யாணத்த பண்ணிட்டே அதப்பத்தின ரகசியங்களை தேடுப்பா. எங்களுக்கும் வயசாயிருச்சுல்ல. கை நிறைய சம்பாதிக்கிற இந்த நேரத்துலயே கல்யாணத்த செஞ்சுறனும். ஒனக்கு ஒரு உண்மைய சொல்றேன் கேளு. இந்த உலகத்துலயே மார்ட் லுக் ங்கிற ஆராய்ச்சியாளர் எழுதுன புத்தகம்தான் சிறந்த புத்தகமா எல்லாரும் கருதுறாங்க. அது மேலோட் மாகாணத்துல இருக்க நூலகத்துல இருக்குது. அத யாரும் அவ்வளவா படிக்கிறதுல்ல. ஏன்னா அது அவ்ளோ பெரிய புத்தகம். அதுலருந்து எனக்கு தெரிஞ்ச சேதி ஒன்னு சொல்றேன்.''

   ''நமக்கு தவிச்சுச்சுனா வெள்ள மாத்திரைய போட்டுக்குறோமா. ஆனா அங்க வாழ்ந்தவங்க திரவம் மாதிரி  ஒன்னு இருந்ததாவும் அதக் குடிச்சதாவும் சொல்றாங்க. அந்த திரவம் நாலாபக்கமும் பெருகிக் கெடந்துச்சாம். பல எடங்கள்ல நிக்காம ஓடிக்கிட்டே இருந்துச்சாம். அதத்தான் அந்த மக்கள் குடிச்சதாவும் குளிச்சதாவும் சொல்றாங்க''

       ''அது எப்படி அவருக்கு தெரியும்" ஆவலாக கேட்டான்.

   ''நமக்கு முன்னாடி வாழ்ந்தவங்க வழிவழியா சொல்லிருக்காங்க அத கேட்டு எழுதிருக்காரு. அந்த மாதிரி ஆய்வு பண்றதுக்கு அவரோட புத்தகம்தான் பலருக்கு தொணையா இருக்கு. ஆனா அங்க நீ இப்ப போகக் கூடாது. கல்யாணம் பண்ணிட்டு ரெண்டு வருசம் கழிச்சுதான் போகனும். அதுக்குள்ள உனக்கு பொறக்குற புள்ளைங்களும் பெரிய ஆளா வந்து சம்பாதிக்க ஆரம்பிச்சுருவானுக. நாங்க உசுரோட இருக்க வரைக்கும் பாத்துக்குறோம்'' அவன் அப்பா கியூராக்கின் பேச்சால் மகிழ்ந்து போனான்.

   ''விட்டாக்க விடிய விடிய பேசிக்கிட்டு இருப்பீங்களே. வூடமாட சமக்க ஒத்தாச பண்ண ஒரு ஆளு இல்ல'' சொல்லிக்கொண்டே பீங்கான் தட்டு ஒன்றில் சமைத்த அய்ந்தாறு மாத்திரைகளை ஆவி பறக்க கொண்டு வந்தாள் லியூரா. 

   ''எங்க அம்மா கைப்பக்குவத்த இந்த உலகத்துலயே யாரும் மிஞ்ச முடியாது. வாசனை தூக்குதும்மா''

   ''ம்... இந்தன வருசமா அவரு ஏமாத்துனாரு. இப்ப அப்பாவுக்குள்ள புத்தி ஒனக்கும் ஒட்டிக்கிருச்சா'' செல்லமாய் கோபித்துக் கொண்டாள் லியூரா.

   சியூக்கிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. அவனை விட இரண்டு வயது குறைவான லயா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள்.

    ''வயசு அஞ்சு ஆகுது. இத்தன வருசமா படிப்பு படிப்புனு காலத்த கடத்திட்டா. இவள எவன் வந்து கட்டிக்கப் போறானோனு நெனச்சுக்கிட்டு இருந்தேன். சூரிய கடவுளா பாத்து நல்ல வரன கண்ணுல காமிச்சுருச்சு'' நிம்மதி பெரு மூச்சு விட்டாள் லயாவின் தாய் சலீயான்.

   சூரியன்தான் அனைவருக்குமான கடவுள். ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் ஊரே கூடி நின்று வரவேற்பதும் மாலை நேரத்தில் மணற்பரப்பில் அமர்ந்து கதைகள் பேசியும் விளையாடியும் மகிழ்ந்து வந்தனர். பகல் பொழுது இதமான வெளிச்சம் நிறைந்த இளம் சிவப்பு நிறமாகவும் இரவுப் பொழுது முழு சிவப்பு நிறமாகவும் இருந்தது. தெருக்கள் எங்கும் நீல நிற விளக்குகள் வெளிச்சத்தை வழங்கிக் கொண்டு இருக்கும். 

   ''லயா.... நிலா ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்கள்.  நாம் இதுவரை பார்த்ததில்லை. இப்பெருவெளியின் பேரழகு என்று நம் முன்னோர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.  எனக்கென்னமோ அப்பெருவெளியின் பேரழகு நீதான் என்று எண்ணுகின்றேன். உண்மைதானே'' சியூக்கியின் பேச்சில் அவள் மயங்கிக் கிடந்தாள். அந்த மேகமலைகள் நகர்ந்து கொண்டிருந்தன.

   ''உங்களின் பொல்லாத பேச்சில் மயங்கிய அந்த மேக மலைகள் நாணத்துடன் நகர்ந்து செல்லும் அழகினை மெல்ல ரசித்துக் கொண்டிருக்கின்றேன். அந்த மேக மலைகளுக்குள் நான் நம்மைக் காண்கின்றேன்'' என்றாள் லயா.

   கைகோர்த்து பேசிக் கொண்டே பெரும் மணல் திட்டுகளுக்கு பின்புறம் சென்றார்கள்.  அங்கு இவர்களைப் போன்று தன்னிலை மறந்த தம்பதியினர் பலர் வான வெளியை வசீகரித்துக் கொண்டிருந்தனர்.

   நாட்களில் மூழ்கி திளைத்து நட்சத்திரத்தை ஒத்த இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தனர். நீண்ட நாள் ஆசையான பூமி ஆராய்ச்சியில் இறங்க நினைத்து மேலோட் மாகாணம் செல்ல திட்டமிட்டான். மேலோட் மாகாணம் செல்ல வேண்டும் என்று சொன்னால் லயா விடமாட்டாள் என்பது சியூக்கிக்கு தெரியும். அதனால் வேலை சம்பந்தமாக வெளியூர் செல்கிறேன். வர நான்கு நாள் ஆகும் என்று கூறி ஐநூறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மேலோட் மாகாணத்திற்கு பயணமானான் சியூக்கி.

   நூலகத்தைக் கண்டு பிடித்து தன்னை அங்கு உள்ள பணியாளர்களிடம் அறிமுகம் செய்து தனது பயண நோக்கத்தையும் எடுத்துக் கூறினான். அவர்கள் சியூக்கிக்கு உதவுவதாக உறுதியளித்தனர். பணியாளர் ஒருவர் அந்த நூலினை தூக்கிக் கொண்டு வந்தார். ''இதுவரைக்கும் யாருமே படிக்க ஆசப்படாத இந்தப் புத்தகத்தையா வாசிக்கப் போறீங்க'' என்பது போல பார்த்தார் அந்தப் பணியாளர்.  தனியறையில் அமர்ந்து மார்ட் லுக்கின் நூலினை திறந்து வாசித்த சியூக்கிக்கு பேரதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. 

   ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமி என்கிற கோளிலிருந்து ஊசி வடிவ வாகனம் ஒன்றில் பலர் இங்கு வந்ததாகவும் அங்கு தற்போது உயிர்கள் வாழ்வதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் நாடுகள் சில பூமி பற்றிய ஆராய்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பல நாடுகள் முயற்சியை கைவிட்டுவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. உயிர்கள் அனைத்தும் அழிந்ததற்கு மிக முக்கிய காரணம் பூமியின் வளத்தை சுரண்டியதுதான். பூமியில் உயிரினங்கள் பல வாழ்ந்ததாகவும் அதில் சிலவற்றின் படங்களும் வரையப்பட்டிருந்தன. காடுகள் செழித்து வளர நீர் என்ற ஒன்று அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக இருந்தது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

   இங்கு மனிதர்களைத் தவிர வேறு யாருமே இல்லையே. அப்படியானால் நம்மைத் தவிர வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான உயிர்கள் தற்போது அழிந்துவிட்டனவா. படங்களைப் பார்க்கும் போதே வியப்பாக இருக்கிறதே. பூமியில் வாழ்ந்தவர்கள் அவ்வளவு கொடுமைக்காரர்களா. நாம் பூமியிலிருந்து எப்படி இங்கு குடியேறினோம். நாம் ஒவ்வொருவரும் ஏழடி பத்தடி என்று இருக்கின்றோமே. அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்ற நினைப்பில் புத்தகத்திற்குள் மூழ்கினான் சியூக்கி.

   பூமி பற்றிய ஆராய்ச்சிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்ள எண்ணி அந்நாட்டு விஞ்ஞான குழுமத்திற்கு கடிதம் எழுதினான் சியூக்கி.

   ''என்னங்க நீங்க போயிதான் ஆகனுமா. பூமிய ஆராய்ச்சி பண்ண போனவங்க பல பேர இன்னும் திரும்பி வரலனு சொல்றாங்க. அங்க உயிர்வாழ எந்த அறிகுறியும் இல்லனு சொல்லித்தான் பல நாடுகள் அந்த ஆராய்ச்சிய ஒதுக்கி வச்சுட்டாங்க. இப்ப நீங்களும் போயி ஒங்களுக்கு ஒன்னுனா நா என்ன பண்ணுவேன்'' லயா சோகமாய் நின்றிருந்தாள்.

   ''என் தனிமைப் பொழுதை எண்ணும் போதெல்லாம் அந்த மேக மலைகளில் நம்மைக் காண்கின்றேன் என்று சொன்னாயே மறந்துவிட்டாயா. என் நினைவுகள் உன் உறக்கத்திற்கு தடையாக இருந்தால் அந்த மேக மலைகளிடம் தூது அனுப்பு. ஓடோடி வந்துவிடுகிறேன்'' சியூக்கியின் ஆறுதலான பேச்சுகளில் லயா அமைதியாகவில்லை. 

   நாட்கள் நகர்ந்தன. விண்கலத்தின் மூலமாக சியூக்கியுடன் சேர்ந்து மூன்று பேர் பூமி பற்றிய ஆராய்சிக்கு அந்நாட்டு அரசால் அனுப்பி வைக்கப்பட்டனர். விண்கலம் வேகமாக பூமியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

        

                 -----------******------------



                  சோலச்சி அகரப்பட்டி



                      பேச: 9788210863


குறிப்பு :  சோலச்சியின் அட்டணக்கால் சிறுகதை நூலிலிருந்து 
               
---------*****------

   

   



திங்கள், 22 நவம்பர், 2021

விளம்பரம் அல்ல ; வியப்பு ...!!! ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜ் - சோலச்சி

 

விளம்பரம் அல்ல ; வியப்பு....!!!

    '' ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜ் ''
 



நான் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களை வியப்பாக பார்த்ததுண்டு. ஏனென்றால் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள்.  சிலர் புத்தகத்தை பார்த்து நடத்துவார்கள் ; சிலர் புத்தகத்தைப் பார்க்காமல் நடத்துவார்கள் ; சிலர் நகைச்சுவையாக நடத்துவார்கள் ; சிலர் பாடத்தை தவிர வேறு எந்த பகுதிகளுக்கும் சென்றுவிடமாட்டார்கள். நான் விடுதியில் தங்கி படித்த நேரத்தில் ஏதாவது ஒரு பாடத்தை ஆசிரியர்களைப் போல் பேசிப் பார்த்ததுண்டு. மேல்நிலைக்கல்வி பயின்றபோது வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் நண்பர்களுக்கு பாடம் நடத்திக் காண்பித்த தருணங்களை எண்ணி மகிழ்ச்சி அடைவதுண்டு.

      

இப்போதும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணியை ஆர்வமுடன் கவனிப்பதுண்டு. யாரிடமாவது கற்பித்தலில் புதிய வழிமுறைகள கற்றுக்கொள்ள மாட்டோமா என்ற ஏக்கம்தான். அவர்களிடம் கற்றுக்கொள்வதற்கு ஏதாவது ஒன்று இருக்கும் என்று நம்புவதுண்டு.

 

 கல்லூரி மாணவர்களிடம் பேராசிரியர்கள் எவ்வாறு கற்பித்தல் பணியில் ஈடுபடுகின்றார்கள் என்பதை காண்பதற்கு ஆவலோடு இருக்கின்றேன். ஏனெனில் கற்பித்தல் எல்லோராலும் செய்துவிட முடியாது. கற்றவர்கள் அனைவராலும் கற்பித்தல் பணியில் ஈடுபட முடியாது.

  

நீண்ட நாட்களாக எனக்குள்ளும் ஓர் ஆசை. கேட்டரிங் மாணவர்களுக்கு எப்படி கற்பித்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதைக் காண வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.


எனது ஆசை 2021 அக்டோபர் 26 தேதியன்று நிறைவேறியது. புதுக்கோட்டையில் நான் பார்த்து வியக்கும் தோழர்களில் ஒருவர்தான் தோழர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்கள்.

    


எனது சொந்த வேலை காரணமாக அக்டோபர் 26 ஆம் தேதி புதுக்கோட்டை சிவபுரம், வலது புறம் வெள்ளாற்றின் கரையில் இயற்கை எழில் சூழ செயல்பட்டு வரும் தோழரின் ஆக்ஸ்போர்டு கல்லூரிக்குச் சென்றிருந்தேன். நான் சென்றிருந்த நேரம் தோழர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்கள் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். வகுப்பு முடிந்ததும் பார்த்துவிட்டு செல்லுவோம் என்ற நினைப்பில் வரவேற்பறையில் நின்றிருந்த சகோதரியிடம் எனது பெயரைச் சொல்லிவிட்டு இருக்கையில் அமர்வதற்குள் தோழர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்கள் ஓடோடி என்னருகே வந்தார். நீங்கள் வந்ததை சன்னல் வழியே பார்த்துவிட்டேன். நீண்ட நேரம் காத்திருக்க வைக்கக்கூடாது என்பதற்காக வந்தேன் என்ற அவரது பதில் அவருக்கே உரித்தான பெருந்தன்மையையும் பேரன்பையும் காட்டியது. 

   


வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டு இருப்பதை நிறுத்திவிட்டு என்னைப் பார்க்க வந்ததால் மாணவர்கள் நலன் கருதி இரண்டு நிமிடங்கள் கூட என்னால் இருக்க மனமில்லாமல் நான் பார்க்க வந்த விபரத்தை தெரிவித்துவிட்டு கிளம்பும்போது தோழரிடம் "தோழர் நீங்கள் பாடம் நடத்துவதைப் பார்க்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை '' என்று சொன்னேன். உடனே மறுப்பேதும் சொல்லாமல் இப்போதே உள்ளே வாங்களேன் என்று அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

   

மாணவர்களோடு மாணவனாக இருக்கையில் அமர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். ஆரம்பக்கல்வி பயிலும் குழந்தைகளிடம் அங்கன்வாடி குழந்தைகளிடம் எவ்வாறு இனிமையாக அவர்களது ஆர்வத்தை தூண்டும் விதமாக நடக்க வேண்டுமோ அதைவிட மென்மையாக அவர் கற்பித்தல் பணியில் ஈடுபட்ட விதம் என்னை வெகுவாக வியப்பில் ஆழ்த்தியது.

   

 நான் சென்றிருந்த நேரம் அசைவ உணவு பற்றிய பாடத்தை நடத்திக்கொண்டிருந்தார். நானோ... ஏற்கனவே அசைவ பிரியர். அசைவம் சமைப்பதென்றால் அப்படியொரு பேரானந்தம்.  சில குறிப்புகளை கரும்பலகையில் அவ்வப்போது எழுதுகின்றார். அவரது வெறும் கைகளை சமையலறையாக காட்சிப்படுத்துகிறார். ''வெறும் கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும் மூலதனம் '' என்று தோழர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் போன்றவர்களைப் பார்த்துதான் கவிஞர் தாராபாரதி சொல்லியிருப்பார் என்று நம்புகின்றேன்.

  


தோழர் அவர்கள் பாடம் நடத்தும்போது என் கண்கள் முன்னால் சமையல் காட்சி படமாக ஓடிக்கொண்டிருந்தது. மாணவர்கள் அனைவரும் திரைப்படத்தின் இறுதிக்காட்சிக்காக காத்திருப்பவர்களைப்போல் சமையல் காட்சிப்படுத்துதலில் மூழ்கி இருந்தனர். நாற்பது நிமிடம் எப்படி போனது என்றே தெரியவில்லை.  பாடம் நடத்தும் திறனில் காட்சிப்படுத்துதலில் நம்மை வசியம் செய்துவிடுகிறார் என்றே சொல்ல வேண்டும். 

   


பார்ப்பதற்கு மிகமிக எளிமையாக எவ்வித ஆடம்பரமும் இல்லாமல், தன்னை நாடி வந்த மாணவர்களுக்கு மிகச்சிறப்பான சமையல் கலையை கற்றுத்தருவதில் தோழருக்கு நிகர் தோழர்தான் என்று உரக்கச் சொல்வேன். பொன்னமராவதி அருகில் ஆரணிப்பட்டியைச் சேர்ந்த சமையற்கலைஞர் கதிர் அவர்கள் ''நான் வணங்கும் சாமி ஆக்ஸ்போர்டு சுரேஷ் சார்தான்'' என்பார். அப்படியென்றால் தன் மாணவர்களிடம் தோழர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்கள் எந்தளவுக்கு ஒன்றிப்போயுள்ளார் என்பதை உணர முடிகிறது. எனது பார்வையில் ஆக்ஸ்போர்டு கேட்டரிங் கல்லூரியில் படித்த மாணவர்கள் பலர் அயல்நாடுகளிலும் தாய்நாட்டிலும் நல்ல வருமானத்துடனும் நல்லவர்களாகவும் சிறந்து விளங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.


   தோழர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்கள் மாணவர்களிடம் அணுகுமுறை வியப்பில் ஆழ்த்துகிறது. நான் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் என்கிற வகையில், தோழர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்களைக் கொண்டு ''குழந்தைகளிடம் எவ்வாறு கற்றலை ஊக்குவிக்க இனிமையாக நடந்து கொள்வது'' என்பது குறித்த கருத்தரங்கினை கல்வித்துறை ஏற்பாடு செய்து நடத்துமானால்  கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்களுக்குள் புதிய சக்தி பிறக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ''எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே'' என்றார் முண்டாசு கவிஞர் பாரதி. தோழர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்களின் வகுப்பறை அணுமுறையால் சமையற்கலையில் புதிய புரட்சி பிறக்குது பாருங்களேன்....


வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று எண்ணுபவர்களும் வாழ்த்த வேண்டும் என்று மனசார நினைப்பவர்களும் தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.

ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்கள்
ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜ்
மாலையீடு,  புதுக்கோட்டை
பேச: +919942411110
         :  ‪+919443112006

                 


அன்பு பண்பு பாசம்
   நட்பின் வழியில்
 

        எந்நாளும்

  சோலச்சி :9788210863

வெள்ளி, 5 நவம்பர், 2021

முதுகலைத் தமிழ், பாடத்திட்டத்தில் கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் - சோலச்சி

''அலங்காரம் அல்ல;  அங்கீகாரம்''

    

திருச்சிராப்பள்ளி இனிய நந்தவனம் வெளியீடாக 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த எனது "கருப்புச் சட்டையும் கத்திக்கம்புகளும்'' என்கிற சிறுகதை  நூல் புதுக்கோட்டை அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)  முதுகலைத் தமிழ் (M.A) பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது.

[நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் ராசி பன்னீர்செல்வன், கவிஞர் நா.முத்துநிலவன், இனிய நந்தவனம் சந்திரசேகரன், கவிஞர் மு.கீதா, கவிஞர் தென்றல், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆசிரியப்பெருமக்கள்]

  இனிய நந்தவனம் பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்ட  என்னுடைய  "கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்" சிறுகதை நூலுக்கு நீங்கள் அளித்த அங்கீகாரம் ......


13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி.

23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி.

17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. என மூன்று விருதுகள் கிடைத்துள்ளது.

இளங்கலை முனைவர் (M.phil) பட்ட ஆய்வு செய்யப்பட்ட நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நூல் பதினொன்று சிறுகதைகளைக் கொண்டது.

  '' சமூகப் பிரச்சினைகளையும் தனிமனித உணர்வுகளையும் அது சார்ந்த குடும்பங்களின் பிரச்சினைகளையும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வைத்திருக்கிறார்.

     அமைப்பு ரீதியான சமூகப்பார்வையை தொகுப்பு முழுவதும் பரவலாக்கியிருக்கிறார். சோலச்சியின் சமூக அக்கறை கவனத்தில் கொள்ளத்தக்கது.'' என்று கல்வெட்டு பேசுகிறது இதழின் ஆசிரியர் தோழர் எழுத்தாளர் சொர்ணபாரதி அவர்களும்

''கவிஞர் சோலச்சியின் இலக்கியப் பதிவுகள் அனைத்தும் எளிய மக்களின் எதார்த்த வாழ்வியலின் பதிவுகளாகவே இருக்கும். மிகைப்படுத்துதல் இல்லாத கதையோட்டத்தில் உண்மைச் சம்பவங்களின் புனைவாக இவர் எழுதும் ஒவ்வொரு கதையும் தனித்துவமானவை'' என்று தோழர் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களும் நூலில் பதிவு செய்திருக்கிறார்கள்.

[இடமிருந்து கவிஞர் முத்துப்பாண்டியன் அவர்கள் மற்றும்  தேசியக்கவிஞர் புதுகைப்புதல்வன் அவர்களுடன் சோலச்சி]

புதுக்கோட்டை அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்களுக்கும் , கல்லூரியின்முதல்வர் அவர்களுக்கும், நூலை சிறப்பாக வெளியீடு செய்த தோழர் இனிய நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுக்கும், புதுக்கோட்டை பாண்டியன் புத்த- அகம் நிறுவனர் அய்யா கவிஞர் முத்துப்பாண்டியன் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை வரலாற்று பேராசிரியர் அய்யா விஸ்வநாதன் அவர்களுக்கும் இவ்வேளையில் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.

[பேராசிரியர் விஸ்வநாதன் அவர்களுடன் சோலச்சி மற்றும் என் மகன் ஆரியா]

     அன்பு பண்பு பாசம்
      நட்பின் வழியில்
            சோலச்சி

திங்கள், 25 அக்டோபர், 2021

அகரப்பட்டியில் பனைவிதைகள் நடும் விழா - சோலச்சி

17.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலையில் ..
அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் 
தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ்
புதுக்கோட்டை மாவட்டம்,
அன்னவாசல் ஒன்றியம்
வயலோகம் ஊராட்சியில்,
அகரப்பட்டி பெரிய குளக்கரையில்
2000 பனை விதைகள் நடும்
விழா நடைபெற்றது,
இதில் இந்திய குடியரசு தலைவர் விருது
பெற்ற புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கல்லூரி பேராசிரியர் முனைவர் சு.மாதவன் அவர்கள்
தலைமை ஏற்று துவக்கி வைத்தார்,
சிறப்பு அழைப்பளாராக
திரு.பெனட் அந்தோணிராஜ்
காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர்
அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார், 
 K.S.சந்திரன் திமுக
ஒன்றியசெயலாளர்,
தலைமைசெயற்குழு
உறுப்பினர்
முன்னிலை வகித்தார், 
மற்றும் புன்னகை அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர்.
ஆ.சே.கலைபிரபு,
திரு.கு.ஜெகன் கெளரவத்தலைவர்
விராலிமலைதொகுதி பொறுப்பாளர்
எழுத்தாளர்
சோலச்சி,
மாநில ஒருங்கிணைப்பளர்
ராஜ்கமல்
வாராப்பூர் மகேந்திரன்,
வயலோகம்
ஊராட்சிமன்றத்தலைவர் திருமதி.
செண்பகவள்ளி சேவுகன்,
குறும்படஇயக்குநர்தங்கவேலு
ஆசிரியர் பாலசுப்பிரமணியன், நெறிகிப்பட்டி மாணிக்கம், க.தீத்தான், குடுமியான்மலை ஸ்டுடியோ குணசேகரன், 

ஜேசிபி சந்திரன், பேக்கரி பழனியப்பன், மாணவர்கள் மு.ராமநாதன், ஆரியா, ஆதவன், அ.மணிகண்டன்,  தே.இராமன், த.சபரிவாசன், பிளமிங் வெள்ளைச்சாமி 
இளைஞர்கள் மற்றும் 
பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு
பனை விதைகள் நடவு செய்தனர்.
குறிப்பு : என் மகன்களான ஏழாம்வகுப்பு படிக்கும் ஆரியா, ஐந்தாம் வகுப்ப படிக்கும் ஆதவன் இருவரும் புல்வயல் ஊராட்சி நெறிகிப்பட்டி மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதிகளில் பனை விதைகளை சேகரித்தனர்.

சனி, 11 செப்டம்பர், 2021

மாதா பிதா குரு இவர்கள்தான் தெய்வம் - சோலச்சி

மனம் திறந்த சிறிய மடல்,

     அனைத்துக்கும் மூல காரணமாக இருக்கும் ஆசிரியர்களை அவமரியாதையுடன் நடத்துவது கண்டனத்துக்குரியது. எவ்வளவு பெரிய உயர் பதவிக்கு சென்றாலும் அந்த பதவிக்கு உரியவர்களை எண்ணி பொறாமைப்படாமல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் இவர் என்னுடைய மாணவர் என்று பெருமைப்பட கூடியவர்கள் ஆசிரியர்கள். அவர்களை அதிகார போதையில் அமர்ந்துகொண்டு தரம் தாழ்த்திப் பேசுவது ,தான் ஒரு அதிகாரி என்கிற மமதையில் கீழ்த்தரமான சொற்களை உபயோகப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. 
    
    மாதா பிதா குரு இந்த மூன்று பேரும்தான் இந்த உலகில் தெய்வம் என்று நம் முன்னோர்கள் காலம் காலமாக சொல்லி வருகிறார்கள். தெய்வம் என்று ஒன்று கிடையாது. அப்படி இருக்கின்ற பொழுது ஆசிரியரை அவமதிப்பது வேதனை அளிக்கிறது. ஆசிரியர்களை தூக்கி கொண்டாட வேண்டும் என்று சொல்லவில்லை குறைந்தபட்சம் அவர்களை தாக்கி பேசாமல் இருப்பதே மேல். உங்களுக்கு கல்வி கற்று கொடுத்த அறிவை வளர்த்த உங்களின் வாழ்க்கையை நெறிப்படுத்திய ஆசிரியர்களை அவமதிக்க எப்படி உங்களுக்கு மனம் வருகிறது. அனைத்தும் சரியாக இருக்கும் என்று நம்மால் சொல்ல முடியாது. ஒன்றிரண்டு சரியில்லாமல் இருக்கத்தான் செய்யும். இது அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். அதற்காக அனைவரையும் தவறாக சொல்லி விட முடியுமா..? 

     ஆசிரியரை அவமதிக்கும் ஒரு சமூகம் வளர்ச்சி அடைந்ததாக சரித்திரம் இல்லை. இனிமேலாவது ஆசிரியரை அவமதிக்காமல் இருங்கள் என்று பேரன்போடு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அந்தப் பதவிக்கு காரணமாக இருந்தவர்கள் ஆசிரியர்கள்தான். உங்களை உச்சத்திற்கு அனுப்பி வைத்து அதே இடத்தில் ஆசிரியராக நின்று கொண்டு உங்களை அழகு பார்க்க கூடியவர்களை எண்ணி பெருமைப்பட வேண்டுமே தவிர அவர்களை சிறுமைப்படுத்த கூடாது.  ஆசிரியர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுங்கள் ; நிச்சயமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதைச் செய்யாமல் சமூக வெளியில் அவர்களை கண்டபடி பேசுவது அழகல்ல. 

     உயர் பொறுப்பில் இருப்பவர்கள் இனிமேலாவது கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும். சிலர் உயர் பதவிக்கு வந்துவிட்டால், தான் வானத்தில் இருந்து குதித்து வந்தது போல் அல்லது பூமிக்குள்ளிருந்து அறிவுச் சுரங்கத்தினால் வெடித்து வந்தவர் போல் நடந்துகொள்வது வெட்கக்கேடு அவமானம். தன்னிடம் படித்த மாணவன் அதாவது தன் போன்ற ஆசிரியரிடம் படித்த ஒரு மாணவன் தனக்கு அதிகாரியாக வந்து ஆலோசனை சொல்லுகிற பொழுது அந்த ஆசிரியரின் மனம் நெகிழும். அதை உணராமல் இறுமாப்புடன் நடந்து கொள்வது அழகல்ல; கண்டிக்கத்தக்கது வன்மையாக கண்டிக்கின்றேன்.

      ஆசிரியர்கள் அவ்வளவு ஊதியம் வாங்குகிறார்கள் இவ்வளவு ஊதியம் வாங்குகிறார்கள் என்று சில சமூக உதவாக்கரைகள் காழ்ப்புணர்ச்சியோடு பொது வெளியில் பேசுவதை காண்கின்றேன். அந்த உதவாக்கரை களால் இந்த சமூகத்திற்கு ஒரு துளி அளவேனும் பயன்படப் போவதில்லை. இனிமேலாவது ஆசிரியர்கள் மீது பொறாமைப் படாமல் காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல் அவரவர் வாழ்வை முன்னேற்றுவதற்கான பணிகளை செய்து மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டுகின்றேன். 

     ஆசிரியர்களிடம் படிக்கும் குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றாலும் பழக்கவழக்கங்கள் சரியில்லை என்றாலும் அதற்கு ஆசிரியர்கள் தான் முழுப் பொறுப்பு. இதில் எவ்வித மறுப்பும் இல்லை. அதை உணர்ந்து ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இந்த சமூகத்தை மிகச் சிறந்த வலிமையான வளமையான சமூகமாக மாற்றி இந்திய ஒன்றியம் உலக வெளியில் மேன்மையுற பாடுபட அனைவரையும் அன்போடு மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். 

           - சோலச்சி அகரப்பட்டி
            பேச: 9788210863

திங்கள், 6 செப்டம்பர், 2021

நட்சத்திர ஆசிரியர் விருது - சோலச்சி

'நட்சத்திர ஆசிரியர் விருது''


கவிராசன் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் திரு.கவி முருகபாரதி அவர்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் அலைபேசியில் அழைத்தார்கள். பேச்சின் தொடக்கத்திலேயே தங்களுக்கு இந்த ஆண்டுக்கான கவிராசன் அறக்கட்டளை மூலமாக வழங்கும் நட்சத்திர ஆசிரியர் விருது வழங்க இருப்பதாக தகவல் சொன்னார்கள்.   கவிராசன் அறக்கட்டளை பற்றி நன்கு அறிந்தவன் என்கிற முறையில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.



 கவிராசன் அறக்கட்டளை மூலமாக விருது பெறுவதற்கு நாம் விண்ணப்பிக்க முடியாது. கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களுமே விருதுக்குரியவர்களை பரிந்துரை செய்வார்வார்கள். யார் யாருக்கு பரிந்துரை வந்துள்ளது,  யார்  பரிந்துரை செய்தது என்பதெல்லாம் ரகசியம். பரிந்துரை செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் விருது வழங்கப்படாது. பரிந்துரைக்கு வந்தவர்களில் ஐந்து ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும். விருதுக்கு பரிந்துரை செய்த தோழர்களுக்கும் கவிராசன் அறக்கட்டளைக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


     நட்சத்திர ஆசிரியர் விருது மூலமாக மேலும் செழுமைபடுத்திக்கொள்கிறேன்.  நம்முடைய செயல்களை நமக்கே தெரியாமல் பலரால் கண்காணிக்கப்படுகிறோம் என்பதே உண்மை. விருதுக்காகவும் பாராட்டுக்காகவும் நாம் உழைக்கவில்லை. நம்முடைய உழைப்பு மூலம் மேலும் நன்மைகள் உண்டாகுமெனில் அதுவே வெற்றி.

   




நட்சத்திர ஆசிரியர் விருது வழங்கும் விழாவானது 05.09.2021 ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டையின் புகழ்மிக்க நட்சத்திரங்களில் ஒருவரான தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்கள்.



நாம் நமது கடமை எது என்று உணர்ந்து பணி செய்வோம்.


சனி, 21 ஆகஸ்ட், 2021

வெள்ளைத் தீ - பாவலர் அறிவுமதி - சோலச்சி

    வெள்ளைத் தீ - பாவலர் அறிவுமதி - சோலச்சி

   நான் மிகவும் நேசிக்கும் கவிஞர்களில்  திரைப்பட பாடலாசிரியர் அண்ணன் பாவலர் அறிவுமதியும் ஒருவர். அண்ணன் அவர்களை புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் சந்தித்தபோது ''தாங்கள் மீண்டும் ஒரு சிறுகதை தொகுப்பு கொண்டு வர வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டேன். ஏன் என்று ஆவலோடு கேட்ட அண்ணனிடம் ''தங்களின் வெள்ளைத் தீ சிறுகதை தொகுப்பினை வாசித்தேன்'' என்றேன்.


     அப்படியா என்று ஆவலோடு கேட்டுக்கொண்டிருந்தார். என் பேரன்புக்கு சொந்தக்காரர் ராசிபுரம் நாணற்காடன் அவர்கள்தான் இந்த நூலினை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.

    நூலில் பதினோரு சிறுகதைகள் உள்ளன. பதினொன்றும் பதினோரு முத்துக்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

   அண்ணனிடம் 'உயிர்விடும் மூச்சு' என்கிற சிறுகதை குறித்து பேசும்போது அந்த கதை தனக்கு மிகவும் பிடித்த கதை என்றார். பெண்சிசு பேசுவது போல் அவ்வளவு அழகான கவித்துவத்துடன் எழுதியிருப்பார். அந்தக் கதையை வாசிக்கின்ற போது தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என்கிற ஏக்கமும் வரும் ; பெண் குழந்தை இருந்தால் அந்தக் குழந்தையை கொண்டாடி மகிழ வேண்டும் என்கிற எண்ணமும் மேலோங்கும்.

   என்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் '' அண்ணாவின்... கலைஞரின் தமிழ் பிடித்து வளர்ந்ததுதான் என் உரை நடை. வண்ணதாசனைப் போல்.... கலாப்பிரியாவைப் போலத்தான் நானும். நடை... நடை மட்டும்தான்.

   நடையிலும் பல்வேறு நடைகளைத் தேடித்தேடிப் படித்துப் படித்து பாடுபொருள்களுக்குத் தகுந்தபடி நடை உத்திகளை பயன்படுத்தத் தீவிரமாய் முயற்சி செய்தேன்.

   தமிழில் எனக்கென தனித்த அடையாளத்திற்குரிய உரைநடையை உருவாக்க முயற்சித்திருப்பதன் அடையாளங்களே இந்தச் சிறுகதைகள்.

   கையெழுத்துப் பரம்பரைக்கு என்னைக் கைப்பிடித்து அழைத்து வந்தது திராவிட இயக்கம். ''

   சென்னை தணல் பதிப்பகம் மூலமாக 2004 ஆம் ஆண்டில் இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. 70 பக்கங்களை கொண்ட மிகச்சிறிய நூல் என்றாலும் அறிவார்ந்த மிகப்பெரிய நூல்.



விற்பனை உரிமை:
தமிழ் அலை
எண் 1, காவலர் குறுந்தெரு,
ஆலந்தூர் சாலை,
சைதாப்பேட்டை
சென்னை 600015
tamilalai@gmail.com
பேச: 9786218777

பேரன்பின் மகிழ்வில்
சோலச்சி

பேச: 9788210863

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

வட்ட விழி பொட்டழகி - சோலச்சி

வட்ட விழி பொட்டழகி
வாழைப்பூ கொசுவக்காரி
கட்டு மரத்தில் வாரேன்
கட்டிக் கொள்ள சம்மதமா-  இப்ப
நடுக்கடலில் அலையடிக்குது யார் காரணம்
நடு சாமம் ஆகும் நானும் வந்து
கட்டுறேன் தோரணம்....

ஆழ் கடலில் முக்குளித்து
அள்ளிவந்தேன் முத்துசிப்பி
அடுக்கு பானைக்குள்ளே
அதைக் காத்து வச்சிருக்கேன்
முத்துமாலை செய்யும் நாளு சீக்கிரம் வந்துடனும்
உன் கெளுத்தி மீன் கழுத்தில் மாட்டி அழகு பார்த்திடனும்

சுறா மீன் புடிச்சு
சுருட்டிக் கொண்ட போட்டவளே
கட்டு மரத்தை போல -  உன்ன
கட்டி அணைக்க வேணும்
வானவில்லு தரையிறங்கி
கோலம் போடணும் -  நமக்கு
வட்ட நிலவு வசதியான
கோட்டை கட்டணும்.....

துடுப்புப் போடயிலே
உன் இடுப்பு நெனச்சுக்குவேன்
என் இடுப்பு வலி மறந்து
லாவகமாக மீன் பிடிப்பேன்
நீ விரிக்காமலே உன் வலையில்
நானும் விழுந்துட்டேன்
நீ சிரிக்காமலே உன்னில் சேர
நான் நெருங்கிட்டேன்....

உப்புக் கருவாடு
ஊற வச்ச நெல்லுச்சோறு
ஒவ்வொரு நாளும் எனக்கு
ரசிக்க தரவேணும்
தன்னந்தனியாய் இருப்பதாலே தவிக்கிறேன்
தாரமாக்க சீக்கிரமே துடிக்கிறேன்....
                 - சோலச்சி அகரப்பட்டி

செவ்வாய், 29 ஜூன், 2021

கொரணா காலத்து குறிப்புகள் - சோலச்சி

அடடா உலகம் நடுங்குது
ஆழ குழிதோண்டி இறங்குது
அணுகுண்டு இருந்தும் வீணானது
அழிவு தானே செய்தியானது

செத்தால் தானே வாயை கட்டுவோம்
இன்று
வாயை கட்டி அல்லவா
வலம் வருகின்றோம்

இடைவெளி விட்டு பழக முடிகிறது
இல்லை என்றால் உயிர் மடிகிறது

கடவுளின் செயலாளர்கள்
என தம்பட்டம் செய்வோரும்
கருவரைக்குள் செல்லவே
அஞ்சுகின்றனர்

யார் பெரியவர் என்ற போட்டியில்
தோற்றுப் போனார் கடவுள்

மத போதையின் பலர் -மாட்டு
மூத்திரம் குடித்தே மாண்டனர்
அறிவை தீட்டிய பலர்
ஆகாத செயலிலிருந்து மீண்டனர்

நூல்களோடு பழகுவது
ஞானக் குளியல்
நூல் அறிவின்றி செய்கின்றனர் சிலர்
சாணி குளியல்

அருவியில் குளித்தால் போதாதென்று
மாட்டுச் சாணியிலும் குளித்து
மதம் வளர்க்கின்றனர்

கேடு கெட்டு போச்சு வாழ்க்கை
தொடு நீ வாழ்ந்திட வழக்கை

கொராணா கொன்று குவித்தது குறைவு
கொடும் பசியாலும்
வேலை இன்றியும்
நடையாய் நடந்து செத்தது அதன் விளைவு

காப்பான் என்றே ஒன்றிப்போனோம்
கழுத்தை நெரித்து கருக்கலைத்தான்
கணக்கில்லாமல் பொதுச்சொத்தை வித்தான்

விளக்கை ஏற்று
வெறுங்கை தட்டு என
வேடிக்கை காட்டினான்
வெந்த புண்ணில் காய்ச்சிய வேலை நீட்டினான்

அய்யகோ..! என் நாடு
அடிமைப்பட்டுக் கிடந்தது
பல்லிளித்து பாசாங்கு செய்தது
குனிந்த முதுகு நிமிரவே இல்லை
கையில்
அணிந்த கயிறுகளுக்கு அளவே இல்லை

எல்லாம் மோடி வித்தையாய் இருக்கு
எழுந்து வா தோழா
வாலை நறுக்கு...

கொத்துக் கொத்தாய் அவரையைத்தான் பார்த்தோம்
கொத்தாய் மனிதர் செத்ததால்
அதிர்ச்சியில் உதடுகள் வேர்த்தோம்

கொராணா - காக்கிகளுக்குள் புகுந்தும்
கலவரம் செய்தது
ஜெயராஜ் பென்னிக்ஸை கொன்று குவித்தது

டீக்கடை சட்டியும் சாலையில் பறந்தது
பசுமாடும் பால் சுரக்க மறந்தது

ஆண்ட பரம்பரையும்
அடங்கி சென்றது
ஆண்டவன் வாரிசும்
அங்காடியில் நின்றது

கொராணா தீண்ட சிங்கமும் செத்தது
கொடிய சாதி மட்டும்
கொக்கரித்து நிக்குது...

கருப்பு சிவப்பு நீலம்
ஊர்தோறும் பறக்கட்டும்
காவிகளின் கொட்டம்
கண்ணெதிரே நொறுங்கட்டும்

பானையோடு பழகுங்கள் நல்லது-  என
உரக்கச் சொல்லுங்கள்
உதித்தது சூரியன்
நிமிர்ந்து நில்லுங்கள்...!!!
               -சோலச்சி
               பேச: 9788210863

செவ்வாய், 15 ஜூன், 2021

தமிழ் மருத்துவத்தை காப்போம்- சோலச்சி

பாரம்பரிய தமிழ் மருத்துவத்தை மீட்போம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு:

      நமது பாரம்பரியம் மிக்க தமிழ் மருத்துவத்தை மீட்டெடுக்க வேண்டிய தலையாய கடமை நம்மிடம் இருக்கிறது. நாம் நமது தமிழ் கலாச்சாரத்தின் பண்பாட்டையும் மருத்துவ பயன்பாடு வாழ்க்கை முறைகளையும் மறந்து போனதன் விளைவாக பல இன்னல்களுக்கு ஆட்பட்டு இருக்கின்றோம். நம் முன்னோர்கள் அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவத்தை கண்டறிந்து வைத்திருந்தார்கள். மேலும் உணவையே மருந்தாக உட்கொண்டு உயிர் வாழ்ந்தார்கள்.

      இன்று பிறந்த குழந்தைக்கும் சர்க்கரை வியாதி இருக்கிறது. புற்றுநோய் இருக்கிறது. புதிய புதிய நோய்களின் தாக்கத்தால் மானுட சமூகம் பெரும் துயரை சந்தித்து வருகிறது. இன்று பரவலாக குரானா வைரஸ் என்கிற நோய் உலக சமூகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மருத்துவர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. மருந்துகளின் தேவை அளவுக்கு அதிகமாகவே தேவைப்படுகிறது. மருத்துவ கல்வி என்பது பணம் காய்க்கும் தொழிலாக மாறிவிட்டது. பணம் படைத்தவர்களும் சாதியில் உயர்ந்தவர்களும் மட்டுமே மருத்துவக் கல்வியை பெற முடியும் என்கிற அவல நிலையும் தலைதூக்கி நிற்கிறது. இந்த அவல நிலையை போக்க வேண்டிய தலையாய கடமை தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது. தமிழ்மருத்துவக் கல்வி என்பது இலவச கட்டாய கல்வியாக மாற்றப்படவேண்டும். அதற்கு நம் பாரம்பரிய மிக்க தமிழ் மருத்துவத்தை கல்வியில் இணைக்க வேண்டும்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் தமிழ் பாரம்பரியமிக்க தமிழ்மருத்துவம் தெரிந்திருக்க வேண்டும். பாரம்பரியமிக்க தமிழ் மருத்துவத்தை முதல் வகுப்பிலிருந்தே பாடப்பகுதியில் சேர்க்கப்படவேண்டும். முதல் வகுப்பில் பத்து மூலிகைகளின் பெயர்களை படங்களுடன் அறிமுகப்படுத்த வேண்டும். இந்த அறிமுகமானது ஒவ்வொரு வகுப்பிற்கும் கூடிக்கொண்டே செல்லவேண்டும். குறிப்பாக ஐந்தாம் வகுப்பில் ஏதாவது இரண்டு மூலிகையின்  பயன்பாடுகளை செய்முறையின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டும். மூலிகை பயன் பாட்டின் செய்முறை ஒவ்வொரு வகுப்பிற்கும் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக செய்முறை என்பது காய்ச்சல் வந்தால் கசாயம் தயாரிப்பது எப்படி ? என்கின்ற கேள்விகளுக்கு விடையாக அமைய வேண்டும். நோய் கண்டறிவது எப்படி நோயின் அறிகுறிகள் என்னென்ன என்பது போன்ற செய்முறைகள் மருத்துவ கல்வி முறைகள் பாடப்பகுதியில் இணைக்கப்பட வேண்டும். இந்தப் பாடப் பகுதியை கல்லூரி பாட வரைக்கும் நாம் இலவசமாக கட்டாயப்படுத்தி கற்க வைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய பாரம்பரியமிக்க தமிழ் மருத்துவம் காக்கப்படும். மேலும் பணம் காய்க்கும் தொழிலாக மாறிப்போன மருத்துவக் கல்வியும் காக்கப்படும்.

      இன்று பல நோய்களுக்கு பல லட்சம் ரூபாய்கள் செலவு செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவல நிலையை மாற்ற வேண்டுமென்றால் தமிழ்மருத்துவம் காக்கப்படவேண்டும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். சிறிய தலைவலி என்றாலும் அதற்கு பல ஆய்வுகள் பல பரிசோதனைகள் என்ற பெயரில் பல மருத்துவமனைகளில் பல ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

     தமிழ் மருத்துவத்தை மாணவர்களின் பாடப்பகுதியில் சேர்க்கப்படுகின்றபோது எடுத்துக்காட்டாக ஐந்தாம் வகுப்பில் இரண்டு செய்முறை என்று வைத்துக்கொள்வோம். ஆறாம் வகுப்பில் ஆறும்   என்று ஒவ்வொரு வகுப்பும் கூடுதலாக செய்முறைகள் பாடப்பகுதியில் சேர்க்கப்படுகின்றபோது குறைந்தபட்சம் பன்னிரெண்டாம் வகுப்பு முடிகின்ற ஒரு மாணவன் முப்பது நோய்களுக்கான மருந்து தயார் செய்வதற்கும் அந்த நோயை குணப்படுத்துவதற்கான தீர்வையும் அவனால் அடைய முடியும்.

    மண்ணில் முளைக்கின்ற ஒவ்வொரு செடியும் ஒவ்வொரு புல்லும் ஒவ்வொரு கொடியும் ஒவ்வொரு நோய்க்கான மருந்தாக பார்க்கப்படுகிறது. நம் குழந்தைகள் செடி கொடி புல் இவற்றின் பெயர்களை மறந்து விட்டார்கள். அவற்றின் பயன்களை அறியாதவர்களாக மாறிவிட்டார்கள். வயது மூப்பின் காரணமாக இறந்தவர்களை விட நோய் வந்து இறந்தவர்களே அதிகம். துளசி, கொட்டாங்கரண்டி, மூட்டை நாரி, தும்பை, திருநீற்றுப்பச்சை, வேப்பிலை, சிறு பீளைச்செடி, அருகம்புல், சிறியாநங்கை, குறிஞ்சாக்கீரை, அப்பக்கொவ்வா, முருங்கைக்கீரை, அகத்திக் கீரை, ஆரைக்கீரை இப்படி கீரை வகைகள் அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது.

       சில மூலிகைகள் பயன்பாடு தெரிந்தும் அவற்றை எப்படி உட்கொள்வது என்று பலருக்கும் தெரியவில்லை.
ஆகையால் நம் தமிழ்ச் சமூகம் இழந்ததை மீட்க தமிழ் பாரம்பரியமான தமிழ் மருத்துவத்தை பாடப்பகுதிகள் சேர்த்து நோயில்லா தமிழ்நாடாக மாற்றிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு இதை கொண்டு செல்கின்றேன்.

      போற்றுதலுக்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த தகவலை கவனத்தில் கொண்டு பாடப்பகுதியில் சேர்த்து மாணவர்கள் அனைவரையும் தமிழ் மருத்துவம் தெரிந்தவர்களாக மாற்றிட வழிவகை செய்து நோயில்லா தமிழ்நாட்டை உருவாக்கி மகிழ்வீர்கள் என்று நம்பி மகிழ்கின்றேன்.

தங்களின் மேலான பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும்
தமிழ்நாட்டு மக்களில் ஒருவன்

   சோலச்சி புதுக்கோட்டை
     பேச: 9788210863

நாள்: 16.06.2021

ஞாயிறு, 2 மே, 2021

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு - 2மே 2021


முக்கடல் பொங்கி முத்தமிட்டது
இக்கூடல் இனிதென்று அறைகூவல் விடுக்கப்பட்டது

அடடா... சூரியன் எழுந்து நின்றது
அத்தனை பொய்யையும் அடித்துக் கொன்றது

சனி தொலைந்து ஞாயிறு பிறந்தது
இனி எல்லாம் எழுஞாயிறு என்றாகப்போகுது

முப்பால் வேந்தர் குமரியில் சிரிக்கிறார்
முத்தமிழறிஞரோ மெரினாவில் ரசிக்கிறார்

அடடா... இருண்ட பூமி ஒளிருது ஒளிருது பாரீர்
இந்த அதிசயம் நிகழ இத்தனை காலமா கேளிர்

ரத யாத்திரை சுக்கு நூறானது
வேல் யாத்திரை வீணாய் போனது
மதங்களைக் கடந்த பூமி ஒன்றானது
மனசாட்சியே எங்கள் சாமி என்றானது

பயிரை வளர்த்தவன் தலை நிமிர்ந்தான்
மயிரை வளர்த்தவன் தலை கவிழ்ந்தான்

உதிராத இலை என்று எதுவும் உண்டோ
உலகில் அழுகாத பழமென்று இருப்பதுண்டோ

உள்ளடி வேலைகள் இங்கே நடக்காது
உள்ளபடி உலகம் உன்னை ஏற்காது
நல்லபடி வாழ கற்றுக்கொள்
நாளைய தலைமுறை தூற்றும் ஏற்றுக்கொள்

கிழக்கே சூரியன் உதித்தது
மேற்கு வங்கமும் ஜெயித்தது
மலையாள கடற்கரை வாழ்த்து பாடுது
மண்ணில் இந்து மத சாதி பித்து 
தொலைந்து போக ஓடுது

கைகள் உயர்த்தி கொண்டாடு
உதயசூரியன் மலர்ந்தது புதிய தெம்போடு.....
               - சோலச்சி