சனி, 11 செப்டம்பர், 2021

மாதா பிதா குரு இவர்கள்தான் தெய்வம் - சோலச்சி

மனம் திறந்த சிறிய மடல்,

     அனைத்துக்கும் மூல காரணமாக இருக்கும் ஆசிரியர்களை அவமரியாதையுடன் நடத்துவது கண்டனத்துக்குரியது. எவ்வளவு பெரிய உயர் பதவிக்கு சென்றாலும் அந்த பதவிக்கு உரியவர்களை எண்ணி பொறாமைப்படாமல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் இவர் என்னுடைய மாணவர் என்று பெருமைப்பட கூடியவர்கள் ஆசிரியர்கள். அவர்களை அதிகார போதையில் அமர்ந்துகொண்டு தரம் தாழ்த்திப் பேசுவது ,தான் ஒரு அதிகாரி என்கிற மமதையில் கீழ்த்தரமான சொற்களை உபயோகப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. 
    
    மாதா பிதா குரு இந்த மூன்று பேரும்தான் இந்த உலகில் தெய்வம் என்று நம் முன்னோர்கள் காலம் காலமாக சொல்லி வருகிறார்கள். தெய்வம் என்று ஒன்று கிடையாது. அப்படி இருக்கின்ற பொழுது ஆசிரியரை அவமதிப்பது வேதனை அளிக்கிறது. ஆசிரியர்களை தூக்கி கொண்டாட வேண்டும் என்று சொல்லவில்லை குறைந்தபட்சம் அவர்களை தாக்கி பேசாமல் இருப்பதே மேல். உங்களுக்கு கல்வி கற்று கொடுத்த அறிவை வளர்த்த உங்களின் வாழ்க்கையை நெறிப்படுத்திய ஆசிரியர்களை அவமதிக்க எப்படி உங்களுக்கு மனம் வருகிறது. அனைத்தும் சரியாக இருக்கும் என்று நம்மால் சொல்ல முடியாது. ஒன்றிரண்டு சரியில்லாமல் இருக்கத்தான் செய்யும். இது அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். அதற்காக அனைவரையும் தவறாக சொல்லி விட முடியுமா..? 

     ஆசிரியரை அவமதிக்கும் ஒரு சமூகம் வளர்ச்சி அடைந்ததாக சரித்திரம் இல்லை. இனிமேலாவது ஆசிரியரை அவமதிக்காமல் இருங்கள் என்று பேரன்போடு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அந்தப் பதவிக்கு காரணமாக இருந்தவர்கள் ஆசிரியர்கள்தான். உங்களை உச்சத்திற்கு அனுப்பி வைத்து அதே இடத்தில் ஆசிரியராக நின்று கொண்டு உங்களை அழகு பார்க்க கூடியவர்களை எண்ணி பெருமைப்பட வேண்டுமே தவிர அவர்களை சிறுமைப்படுத்த கூடாது.  ஆசிரியர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுங்கள் ; நிச்சயமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதைச் செய்யாமல் சமூக வெளியில் அவர்களை கண்டபடி பேசுவது அழகல்ல. 

     உயர் பொறுப்பில் இருப்பவர்கள் இனிமேலாவது கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும். சிலர் உயர் பதவிக்கு வந்துவிட்டால், தான் வானத்தில் இருந்து குதித்து வந்தது போல் அல்லது பூமிக்குள்ளிருந்து அறிவுச் சுரங்கத்தினால் வெடித்து வந்தவர் போல் நடந்துகொள்வது வெட்கக்கேடு அவமானம். தன்னிடம் படித்த மாணவன் அதாவது தன் போன்ற ஆசிரியரிடம் படித்த ஒரு மாணவன் தனக்கு அதிகாரியாக வந்து ஆலோசனை சொல்லுகிற பொழுது அந்த ஆசிரியரின் மனம் நெகிழும். அதை உணராமல் இறுமாப்புடன் நடந்து கொள்வது அழகல்ல; கண்டிக்கத்தக்கது வன்மையாக கண்டிக்கின்றேன்.

      ஆசிரியர்கள் அவ்வளவு ஊதியம் வாங்குகிறார்கள் இவ்வளவு ஊதியம் வாங்குகிறார்கள் என்று சில சமூக உதவாக்கரைகள் காழ்ப்புணர்ச்சியோடு பொது வெளியில் பேசுவதை காண்கின்றேன். அந்த உதவாக்கரை களால் இந்த சமூகத்திற்கு ஒரு துளி அளவேனும் பயன்படப் போவதில்லை. இனிமேலாவது ஆசிரியர்கள் மீது பொறாமைப் படாமல் காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல் அவரவர் வாழ்வை முன்னேற்றுவதற்கான பணிகளை செய்து மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டுகின்றேன். 

     ஆசிரியர்களிடம் படிக்கும் குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றாலும் பழக்கவழக்கங்கள் சரியில்லை என்றாலும் அதற்கு ஆசிரியர்கள் தான் முழுப் பொறுப்பு. இதில் எவ்வித மறுப்பும் இல்லை. அதை உணர்ந்து ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இந்த சமூகத்தை மிகச் சிறந்த வலிமையான வளமையான சமூகமாக மாற்றி இந்திய ஒன்றியம் உலக வெளியில் மேன்மையுற பாடுபட அனைவரையும் அன்போடு மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். 

           - சோலச்சி அகரப்பட்டி
            பேச: 9788210863

திங்கள், 6 செப்டம்பர், 2021

நட்சத்திர ஆசிரியர் விருது - சோலச்சி

'நட்சத்திர ஆசிரியர் விருது''


கவிராசன் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் திரு.கவி முருகபாரதி அவர்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் அலைபேசியில் அழைத்தார்கள். பேச்சின் தொடக்கத்திலேயே தங்களுக்கு இந்த ஆண்டுக்கான கவிராசன் அறக்கட்டளை மூலமாக வழங்கும் நட்சத்திர ஆசிரியர் விருது வழங்க இருப்பதாக தகவல் சொன்னார்கள்.   கவிராசன் அறக்கட்டளை பற்றி நன்கு அறிந்தவன் என்கிற முறையில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.



 கவிராசன் அறக்கட்டளை மூலமாக விருது பெறுவதற்கு நாம் விண்ணப்பிக்க முடியாது. கல்வியாளர்களும் சமூக ஆர்வலர்களுமே விருதுக்குரியவர்களை பரிந்துரை செய்வார்வார்கள். யார் யாருக்கு பரிந்துரை வந்துள்ளது,  யார்  பரிந்துரை செய்தது என்பதெல்லாம் ரகசியம். பரிந்துரை செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் விருது வழங்கப்படாது. பரிந்துரைக்கு வந்தவர்களில் ஐந்து ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும். விருதுக்கு பரிந்துரை செய்த தோழர்களுக்கும் கவிராசன் அறக்கட்டளைக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


     நட்சத்திர ஆசிரியர் விருது மூலமாக மேலும் செழுமைபடுத்திக்கொள்கிறேன்.  நம்முடைய செயல்களை நமக்கே தெரியாமல் பலரால் கண்காணிக்கப்படுகிறோம் என்பதே உண்மை. விருதுக்காகவும் பாராட்டுக்காகவும் நாம் உழைக்கவில்லை. நம்முடைய உழைப்பு மூலம் மேலும் நன்மைகள் உண்டாகுமெனில் அதுவே வெற்றி.

   




நட்சத்திர ஆசிரியர் விருது வழங்கும் விழாவானது 05.09.2021 ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டையின் புகழ்மிக்க நட்சத்திரங்களில் ஒருவரான தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்கள்.



நாம் நமது கடமை எது என்று உணர்ந்து பணி செய்வோம்.