சோலச்சி
சுழன்று அடிக்கும் காற்றாய் இருக்கிறது என் எழுத்து. எனக்குள் பிறக்கும் என் எழுத்துகள் நிமிர்ந்தே நிற்கும். தவறுகள் செய்தால் உன் உச்சந்தலையில் அமர்ந்து ஓங்கிக் கொட்டும்..! - சோலச்சி
திங்கள், 18 நவம்பர், 2024
சோலச்சி பிறந்த தினம்
ஞாயிறு, 17 நவம்பர், 2024
கலைமாமணி நவீனன் நினைவு விருது 2024
கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கும் விழா புதுக்கோட்டை- 2024
இடமிருந்து வலம் தமிழ்ச்செம்மல் தங்கம்மூர்த்தி, மருத்துவர் ச.ராம்தாஸ், ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் சேதுராமன், சோலச்சி, முனைவர் தாமோதர கண்ணன், ரவி நவீனன். |
சென்னை கலைமாமணி நவீனன் நினைவு அறக்கட்டளையும் புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து நடத்திய கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கும் விழாவும் மற்றும் உழல் வழிகள் நூல் வெளியீட்டு விழாவும் சனிக்கிழமை (16.11.2024) மாலை புதுக்கோட்டை அறிவியல் இயக்க அரங்கில் நடைபெற்றது. சர்வஜித் அறக்கட்டளையின் நிறுவனர் எங்கள் ஐயா மருத்துவர் ச.ராம்தாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலக்கிய ஆளுமைகளுக்கு கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கப்பட்டது. உலக அரங்கில் ஒப்பற்ற ஆளுமை எங்கள் ஐயா ஞானாலய பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் எங்கள் ஐயா தமிழ்ச்செம்மல் தங்கமூர்த்தி அவர்களுக்கும் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் சேதுராமன் அவர்களுக்கும் ஆவணப்பட இயக்குனர் முனைவர் தாமோதர கண்ணன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. மாபெரும் ஆளுமைகளுடன் சோலச்சி ஆகிய எனக்கும் இவ்விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. வாழ்நாளில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது எல்லாம் அரிதிலும் அரிது. இம்மாபெரும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த கலைமாமணி நவீனன் அவர்களின் புதல்வர் எழுத்தாளர் ரவி நவீனன் அவர்களுக்கும் வாசகர் பேரவையின் செயலர் எங்கள் ஐயா பேராசிரியர் சா.விஸ்வநாதன் அவர்களுக்கும் பேரன்பு நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.
கலைமாமணி நவீனன் அவர்கள் தனது 17-வது வயதிலேயே பத்திரிகைத்துறைக்கு வந்தவர். 92 வயது வரை எழுதிக் கொண்டே இருந்தவர். ஆரம்ப காலத்தில் "நவயுவன்' என்ற பத்திரிகை மூலம் தனது பத்திரிகைப் பணியைத் தொடங்கியவர் பின்னாளில் "சுதேசமித்ரன்', "மஞ்சரி', "தென்றல் திரை' உள்ளிட்ட பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார்.
சினிமா செய்திகளை வெளியிடுவதற்கு என்றே "நவீனன்' என்ற பெயரில் தினசரி பத்திரிகை தொடங்கினார். பொருளாதார நெருக்கடியால் அவரால் இப்பத்திரிகையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் "தினமணி கதிர்' உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றும் சூழல் உருவானது.
எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து 1980-ம் ஆண்டு "சினிமா எக்ஸ்பிரஸ்' தொடங்கப்பட்டபோது அதன் முதல் ஆசிரியராக நவீனன் நியமிக்கப்பட்டார். "தினமணி' நாளிதழ் வெளியிட்ட அண்ணா பற்றிய வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். சினிமா மற்றும் அரசியல் உலகில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் தினமணி கதிரில் தொடராக எழுதி வந்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள பூதலூர் கிராமத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் முத்துசாமி.
கலைமாமணி |
விழாவில் கலந்துகொண்ட திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையம் பகுதி நேர செய்தி வாசிப்பாளர் |
. |
முனைவர் தாமோதரக் கண்ணன் அவர்களுக்கு கலைமாமணி நவீனம் நினைவு விருது வழங்கப்படுகிறது. |
பேராசிரியர் சேதுராமன் அவர்களுக்கு கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கப்படுகிறது. |
தமிழ்ச் செம்மல் தங்கம்மூர்த்தி அவர்களுக்கு கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கப்படுகிறது. |
ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கப்படுகிறது. உடன் பேராசிரியர் சா.விஸ்வநாதன். |
எழுத்தாளர் ரவி நவீனன் அவர்களுக்கு மருத்துவர் ச. ராமதாஸ் அவர்களால் நினைவு பரிசு வழங்கப்படுகிறது. வலமிருந்து பேராசிரியர் சா. விஸ்வநாதன், ரவி நவீனன். |
முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் , புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோருடனும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, கார்த்தி, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களோடும் நெருங்கிப் பழகியவர்.
2009-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும், மணிமேகலை மன்றம் வழங்கிய இலக்கியச் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். தனது சினிமா செய்திகளில் வதந்திகளை எழுதாமல் உண்மை நிகழ்வுகளை மிகவும் துணிச்சலாகவும் நேர்மையாகவும் எழுதி வந்தவர். தனது நேர்மையை மாபெரும் ஆயுதமாக பயன்படுத்தியதால்தான் எல்லோருடனும் நெருங்கி பழகும் வாய்ப்பு கிட்டியது. தனது அப்பா நவீனன் அவர்கள் புதுக்கோட்டையில் சில காலம் தங்கி பணி செய்ததாக தகவல் அறிந்ததும் இந்நிகழ்வை புதுக்கோட்டையில்தான் நடத்த வேண்டும் என்கிற பேராவலில் நிகழ்ச்சியை நடத்தியதாகவும் அவரது மகன் ரவி நவீனன் அவர்கள் விழாவில் நெகழ்ச்சியோடு பதிவு செய்தார்கள்.
சோலச்சிக்கு கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கப்படுகிறது. |
பேரன்பின் வழியில்
சோலச்சி
9788210863
solachysolachy@gmail.com
ஞாயிறு, 10 நவம்பர், 2024
ஆளுமைகளை வளர்த்தெடுக்கும் வாசிப்போர் மன்றம் - சோலச்சி
திங்கள், 2 செப்டம்பர், 2024
சோலச்சியின் முட்டிக்குறிச்சி நாவலுக்கு பாராட்டு
"தனது தோழனை தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய தமிழ்நாடு கலை இலக்கிப் பெருமன்றம்"
சோலச்சியின் முட்டிக்குறிச்சி நாவல் மணப்பாறை சௌமா இலக்கிய விருது பெற்றமைக்காக 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் புதுக்கோட்டை எம்.ஐ கல்வி நிறுவனத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மாவட்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வுக்கு மாநிலக்குழு உறுப்பினர் எழுச்சிக்கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்கள் திருச்சியிலிருந்து கலந்து கொண்டது நிகழ்வினை மேலும் சிறப்பு செய்தது. மாநில குழு உறுப்பினர் எழுத்தாளர் கோவில் குணா, பேராசிரியர் சிவகவி காளிதாஸ், எழுத்தாளர் சி.பாலையா, எழுத்தாளர் கொத்தமங்கலம் சிவானந்தம், கவிஞர் சின்ன கனகு, என ஆளுமைகள் பலரும் முட்டிக்குறிச்சி நாவல் குறித்து பேசினார்கள்.
எழுச்சிக்கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்களின் புரட்சிகரமான உரை தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் தோழர்களின் இதயங்களை மேலும் வலுவாக்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் மாதவன் அவர்கள், கவிஞர் ஜீவாதாசன், பாடகர் பெருமாள் பட்டி அடைக்கலம், எழுத்தாளர் பாலஜோதி இராமச்சந்திரன், கவிஞர் அழகுநிலவன், கவிஞர் பெர்னாட்ஷா, இந்திய கம்யூனிஸ்ட் தோழர் பாண்டியராஜன் உட்பட தோழர்களால் அரங்கம் நிறைந்து காணப்பட்டது.
"முட்டிக்குறிச்சி" நாவல் முழுவதையும் அழகான கவிதையாக்கி எல்லோரும் பாராட்டும்படி வாசித்தார் கவிஞர் சின்ன கனகு.
கவிஞர் சின்ன கனகு அவர்கள் முட்டிக்குறிச்சி நாவல் குறித்து வாசித்த கவிதை உங்கள் வாசிப்புக்கு.....
பொய்யாய் முரண்டு பிடித்த
பெட்டைக்கோழி சேவலுடன்
கூடிமகிழும் காட்சி
காளைக்கோழி மலையின்
திமிழ் கொண்டைபிடித்த
மகிழ்ச்சி
மனிதத் தோலின் நிறம்
சிகப்பு சீக்கென்பதால்
அழகப்பன் பிறப்பு
அழுஞ்சிப் பழத்துடன்
ஒப்பீடு சிறப்பு
கட்டாந்தரையொரசி
காரைமுள்ளெடுத்து கீறி
சுவைக்கும் கத்தாழம்பழத்தை
ஈட்டியுள்ள
செவத்தப்பயலுகலாக பயமுறுத்தும்
முரணருமை
பட்டவன் முனியன்
நாட்டார் தெய்வங்கள்
இடமாறிய சிவன்
தடமாறா பதிவு
ஜாதி வன்ம
சின்னச்சாமிக்கு
நூதன தண்டனை அளித்து
தப்பித்த தடையமழிப்பு
கருப்பையாவுடன்
காதல் கொண்டதால்
பயங்கோலி வெள்ளாளச்சிக்கு
பெருமலையும் கடுகானகாட்சி
ஊரையே ஒதுக்கிவைத்தது சாட்சி
முட்டுச்சேலை
ஒரு சமூகம்
தொட்டுத் தந்தால்
தீட்டோடிப்போகும்
கேள்விப்பட்டிருக்கிறேன்
முட்டுக்குறிச்சியில்
இத்தனை துன்பங்கள்
கலங்கி தவிக்கிறேன்
பார்வதி கண்டவனார்
காராளவேந்தன் காவண்ணா
இருந்தென்ன
அன்று
வயநாட்டில்
இன்று
வங்காளத்தில்
வளனார்கள்
மாரியம்மாக்களை
சூறையாடிக்கொண்டேயுள்ளனர்
வேரறுக்க கரம்கோர்ப்போம்
நேற்றைய நிகழ்வுகளை
நாளைய தலைமுறையடைய
இன்று
கற்பனை கலப்பில்லா
வட்டார மொழி சிதைவில்லா
கற்றாலை
அட்டைப்பட முகப்புடன்
முட்டிக்குறிச்சி
மூலிகை நூல்படியமைத்த
விருதாளர் இன்னும் பல
படைப்புகள்கண்டு
விருதுகள்
பெற வாழ்த்துகிறேன்...
அன்புடன்
சின்ன💊கனகு
மாவட்டத் தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் நிகழ்ச்சி தொகுப்பு என சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்விற்கு கவிஞர் சிவகுமார் அவர்கள் நன்றிபாராட்டினார்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்ட பொருளாளராகிய சோலச்சியின் நூலைக் கொண்டாடுவது என்பது தனது தோழனை தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய நிகழ்வாகும். பேரன்பின் தோழமைகளுக்கு பேரன்பு நிறைந்த மகிழ்ச்சியை தெரிவித்து மகிழ்கின்றேன்.
பேரன்பின் வழியில்
சோலச்சி
வெள்ளி, 26 ஜூலை, 2024
சோலச்சியின் காட்டு நெறிஞ்சி- பேரா சா.விஸ்வநாதன்
🌻நல் வணக்கம்🙏
சுரண்டப்பட்டது
மண்வளம் மட்டுமல்ல
மனித வளமும் தான்!
விழுதொன்று கண்டேன்
கவிதையில் .. பக். 22
....
வீட்டு வேலையும்
விருந்தினர்
உபசரிப்பும்
காத்திருக்கிறது ...
விளம்பர
இடை வேலைக்காக....!
பக்.29.
.....
மரம் செழிக்க
வேரும் விழுதும் ...
மாநிலம் தலைக்க
மண்ணும் மனிதமும்...
மண்
வளர்ச்சியின் முத்திரை!
மனிதம்
நட்பின்
விழித்திரை!
பக்.36.
....
தானே தலைவர் என்பார்
தர்மம் நீதி வெல்லும் என்பார்
ஓட்டைகள் ஆயிரம்
வைத்துக் கொண்டு
அங்கே ஒழுகுது
இங்கே ஒழுகுது என்பார்.
தன் ஓட்டை அடைக்க
மறந்திடுவார்!
தமிழாய்! தமிழராய் !
கவிதையில் ..
பக். 74.
.....
"சோலச்சி" என்ற, தன் கல்விக்கு வழிகாட்டியதோடு, வாழ்க்கைக்கும் வழிகாட்டிய ஆசிரியையின் பெயரில் இருக்கும்,திருப்பதியை கஜா புயல் நிவாரணத்தின் போது, மருத்துவர் ராமதாஸ் அவர்களின் மருத்துவமனையில் முதன் முதலில் சமூக சேவகராக பார்த்தது. இங்கிருந்து தான் நிவாரணப் பொருட்கள் கிராமங்களுக்குக் கொண்டு செல்லப்படும். மனிதர் மூட்டை அரிசியை அநாயசமாக தூக்கிக் கொண்டு போவார். லாரி பொருட்களை சத்தமில்லாமல் இறக்கி விடுவார்கள் சோலச்சியும், எப்போதும் புன்னகையோடு பயணிக்கும் ஜெரால்டும். ஜெரால்டு அப்போது பள்ளி மாணவர் இப்போது பொறியாளர்.எத்தனையோ குடும்பங்களுக்கு இவர்கள் வழியே பொருட்கள் போய் சேர்ந்திருக்கிறது.
பின்னர் தான் தெரியும் சோலச்சி, புதுக்கோட்டை மாவட்ட ஒரு பின்தங்கிய கிராமப் பள்ளி ஆசிரியர் என்று.
சோலச்சி, ஆசிரியர், சமூக சேவகர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர் தற்போது நாவலாசிரியர் என்று பன்முகம் கொண்டவர்.
அவரின் இந்த "காட்டு நெறிஞ்சி" கவிதைத் தொகுப்பு, சமூகம், தேசம் சார்ந்த பிரச்சினைகளை பேசும் கவிதை நூல். எல்லோருக்கும், படித்தவுடன் புரியும் எளிய கவிதைகள்.
எல்லா கவிதைகளும் சிறப்பு. அதில் இரண்டு கவிதைகள் எனக்கு மீண்டும் மீண்டும் வாசிக்கத் தோன்றியது.
ஒன்று,
உலக சிம்மாசனத்தில்
உயர்ந்த இடம்
உங்களுக்குத்தான்!
முயற்சியில்
நீங்களே
எனக்குப் பாடம்!
என்று,நத்தை, சிலந்தி, எறும்பு மூன்றையும் வைத்து வரைந்திருக்கும் . 'முயற்சி' கவிதை.
இரண்டாவது, சென்னை
'கூவம்' ஆற்றை வைத்து எழுதியிருக்கும்
'கண்ணீர் அஞ்சலி ' கவிதை.
1978 ல் நான் சென்னைக்கு முதலில் போன போது முகத்தில் அடித்த கூவம் 'மணம்' இந்த கவிதையைப் படித்த போது மீண்டும் முகத்தில் அடித்தது
அம்பானி வீட்டுக்கு போகும் இந்தியப் பிரமுகர்கள் 'தராவி'க்குள் போக மாட்டார்கள்.
சென்னையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் கூவம் கரையிலும், பக்கிங்காம் கால்வாய்க் கரையிலும் நடக்க மாட்டார்கள். "இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது" என்பார் காந்தி. சென்னை, மும்பையின் ஆன்மா கூவம் கரையிலும், தராவியிலும் தான் என்று சொல்லலாம். ஒரு முறை, இந்தியாவை உலக வல்லரசாக நினைப்பவர்கள் இந்த இடங்களில் வசிக்கும் மக்களைத் தரிசித்தால் இந்த தேசத்தின் நிலையை அறியலாம்.
கூவம் சிரழிக்கப்பட்டதையும் தேசத்தின் அவலத்தையும் கூவம் வழி பேசியிருக்கிறார் சோலச்சி, கண்ணீர் அஞ்சலி கவிதையில் . கூவத்தின் வழி இப்படி தேசத்தை யாராவது பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை.
வாசிக்க வேண்டிய கவிதை நூல்.
சோலச்சிக்கு ....💐💐
இனிய நந்தவனம் பதிப்பகம்,
சென்னை.
94432 84823
ரூ.110/-
பேராசிரியர் சா.விஸ்வநாதன்
செயலர்,
வாசகர் பேரவை
புதுக்கோட்டை.
வியாழன், 4 ஜூலை, 2024
சோலச்சியைப் பாராட்டி மகிழ்ந்த கவிச்சுடர்
கவிச்சுடர் கவிதை பித்தன் என்னும் பெரும் குணக்காரர்.
அலைபேசி உரையாடல்:
அழைப்பில் பெயரைப் பார்த்ததுமே மட்டற்ற மகிழ்ச்சி.
சோலச்சி எங்க இருக்கீங்க..
ஐயா.. பள்ளிக்கூடத்துலருந்து வீட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கேங்கய்யா.
ம்..சரி குமரமலை கிட்ட தானே வீடு.
ஆமாங்கய்யா...
இன்னும் பத்து நிமிசத்துல நம்ம வீட்டுல இருப்பேன். பாத்து வாங்க...
இதைக் கேட்டதும் அடடா... இது என் வரம் அல்லவா... என்று பேரானந்தம் கொண்டேன்.
இன்று (04.07.2024 வியாழக்கிழமை ) மாலை 05.25க்கு எங்கள் இல்லத்திற்கு போற்றுதலுக்குரிய ஐயா கவிச்சுடர் அவர்கள் வருகை புரிந்தார்கள்.
முட்டிக்குறிச்சி நாவலுக்கு சௌமா இலக்கிய விருது கிடைத்திருப்பதை பாராட்டி பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார்கள். இலக்கிய ஆளுமைகளை இருக்கும் இடம் தேடி வாழ்த்துவதில் பெரிய மனசுக்காரர். எங்கள் வீட்டில் உள்ள யாவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம். எங்கள் இல்லத்தைச் சுற்றிக் காண்பித்தோம். வீட்டுக்குள் இருக்கும் சிறிய நூலகத்தையும் பார்வையிட்டார்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நூல்களை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
நான் சிறுவனாக இருந்த பொழுது புல்வயல் கிராமம் நெறிகிப்பட்டிக்கு எங்கள் பெரியப்பா திரு. மாயழகு ஆசிரியர் அவர்களைப் பார்ப்பதற்காக அடிக்கடி வருவார்கள். என் தாத்தா எஸ்.ஆர்.பெரியையா அவர்கள் கவிச்சுடர் அவர்கள் மீது தீராத அன்பு கொண்டவர். எங்கள் தாத்தா (அம்மாவின் அப்பா) மலேசியாவிற்கு வேலைக்குச் சென்றிருந்த பொழுது நேதாஜி அவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்ததாக சொல்லுவார். மேலும் புதுக்கோட்டை மகாராஜா அவர்கள் புல்வயல் கிராமத்திற்கு வந்திருந்த பொழுது கை கொடுத்து ஆங்கிலத்தில் உரையாடி இருக்கிறார். மகாராஜா வியந்து பாராட்டியதாக புல்வயல் கிராமத்தில் உள்ள மூத்தவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன். ஐயா கவிச்சுடர் அவர்கள் நெறிகிப்பட்டிக்கு வரும் போதெல்லாம் சிறுவர்களாக இருந்த நாங்கள் ஆவலோடு பார்த்து மகிழ்வோம். ஐயா கவிச்சுடர் அவர்கள் நம் இல்லத்திற்கு வருகிறார் என்று அலைபேசியில் தொடர்பு கொண்டு என் குழந்தையிடம் சொன்ன பொழுது என் மனைவி உள்பட யாரும் நம்பவே இல்லை. இன்று எங்கள் இல்லத்திற்கு வருகை புரிந்து எங்களை எல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறார்கள். காய்ந்து கிடந்த எங்கள் பூமியில் பசும்புற்கள் முளைத்ததாக எண்ணுகின்றேன். எங்கள் இல்லத்தில் 30 நிமிடங்களுக்கும் மேலாக எங்களோடு கலந்துரையாடி எங்களோடு புகைப்படமெடுத்துக் கொண்டு நாங்கள் அளித்த தேநீரையும் மனநிறைவோடு அருந்தி வாழ்த்தி சென்று இருக்கும் எங்கள் ஐயா கவிச்சுடர் அவர்கள் வந்த இந்த நாள் இனியநாள் என்பேன்.
அக்கா ரமணிதேவி , அண்ணன் வைகை பிரபா, அருமைத் தம்பி திலீபன்ராஜா போன்றோரின் உறவு முறைகளைப் பற்றியும் ஆவலோடு கேட்டறிந்து மகிழ்ந்தார்கள்.
புதுக்கோட்டை எப்போதும் பெரும் குணக்காரர்களின் கோட்டையாகவும் இருக்கிறது என்பதற்கு இந்நிகழ்வும் ஒரு சாட்சி.
இடம்: சோலச்சியின் இல்லம்
திருவள்ளுவர் நகர்,
குமரமலை அருகில்.
புல்வயல் கிராமம்.
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த பாராட்டு விழாவின் தொடர் நிகழ்வு தான் ஐயா கவிச்சுடர் அவர்களின் இன்றைய வருகை.
சனி, 29 ஜூன், 2024
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பாராட்டு விழா
சோலச்சி, உலகக் கவிஞர் பீர்முகமது, அன்புக் கவிஞர் நேசன் மகதி,.
தாய் தன் குழந்தைகளின் மீது எப்போதும் தனிக்கவனம் செலுத்துவாள். குழந்தைகளின் மீது அக்கறை கொண்டு அவர்களின் சின்னச் சின்ன செயல்களைக் கூட வியந்து வாரி அணித்து கொஞ்சி மகிழ்வாள். ஏனெனில் , தான் கொஞ்சுவதன் மூலம் தனது குழந்தைகள் அடுத்த கட்ட இடத்திற்கு உயர்வார்கள் என்பது நம்பிக்கை. அந்த வகையில் புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம் 28.06.2024 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தனது குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்தது. உலகக் கவிஞர் பீர்முகமது , அன்புக் கவிஞர் நேசன்மகதி, உங்கள் சோலச்சி என மூன்று குழந்தைகளையும் மேடையில் உட்கார வைத்து அழகு பார்த்து தமிழில் உள்ள அனைத்து சொற்களையும் பாமாலையாக கோர்த்து கொஞ்சி மகிழ்ந்தது.
பொன்னாடையையும் முத்து மாலையையும் அணிவித்தும் நூல்களை பரிசாக அளித்தும் மூன்று குழந்தைகளையும் உச்சி முகர்ந்து பாராட்டி மகிழ்ந்தது புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம்.
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டியில் தொடர்ந்து வாகை சூடி வருகிறார் அன்புக் கவிஞர் நேசன்மகதி. பழங்காலத்து பொருட்களை சேகரித்து பாதுகாத்து வருகிறார் உலக கவிஞர் பீர்முகமது. சோலச்சியின் முதல் நாவலான "முட்டிக்குறிச்சி" சௌமா இலக்கிய விருது பெற்றிருக்கிறது. இந்த மூன்று காரணங்களுக்காகவும் மாபெரும் விழா நடத்தப்பட்டது.
படைப்பாளர்களை அடையாளம் கண்டு கொண்டாடி மகிழ்வதில் புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம் தனித்துவம் மிக்கது. தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் மகாசுந்தர் அவர்கள் வரவேற்க தமிழ்ச் செம்மல் தங்கம் மூர்த்தி அவர்கள் அறிமுக உரை நிகழ்த்த வந்திருந்த ஆளுமைகள் தங்களுக்கே உரிய நடையில் வாழ்த்தரங்கத்தை சிறப்பு செய்தார்கள்.
எழுத்தாளர் விமர்சகர் ராசி பன்னீர்செல்வன் அவர்கள், நல்ல வாசிப்பாளர் சுதந்திர ராசன் அவர்கள், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர் கவி முருக பாரதி அவர்கள், தமிழாசிரியர் கழகத்தின் மூத்த தலைவர் கு.ம..திருப்பதி ஐயா அவர்கள், கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள், தனபதி ஐயா அவர்கள், வாசகர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் விசுவநாதன் அவர்கள், பாண்டியன் புத்தகம் முத்துப்பாண்டியன் ஐயா அவர்கள், மூத்த ஆசிரியரும் எழுத்தாளருமான சி. பாலையா அவர்கள், விதைக்கலாம் அமைப்பின் தம்பி எழுத்தாளர் மலையப்பன், தம்பி எழுத்தாளர் பாஸ்கர் கோபால், தம்பி நாகா பாலாஜி, மற்றும் அன்புத் தங்கை ஊடகவியலாளர் சிவா நந்தினி, தமிழ்ச் செம்மல் சந்திரன் அவர்கள், தேசியக்கவிஞர் புதுகைப் புதல்வன் அவர்கள், எழுத்தாளர் கஸ்தூரி ரங்கன், வளர்மதி இதழ் ஆசிரியர் வெங்கடேசன், பட்டிமன்ற பேச்சாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி, எழுத்தாளர் வம்பன் செபா, சகோதரி டெயாசிராணி அவர்கள், தமிழ் பேராசிரியர் தயாநிதி அவர்கள், கவிஞர் சிவகுமார், அருமை நண்பர் வெங்கடேஸ்வரா உதயகுமார் மற்றும் வெங்கடேஸ்வரா இராமன் அவர்கள், அருமை கவிஞர் காசாவயல் கண்ணன் அவர்கள், எழுத்தாளர் ராஜநாராயணன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் வீரமுத்து அவர்கள், பேராசிரியர் கருப்பையா அவர்கள், அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் அவர்கள், தோழர் பாண்டியராஜன் அவர்கள் என் ஆளுமைகளின் பட்டியல் நீளும். அரங்கம் நிறைந்த காட்சி. ஆளுமைகளின் வாசிப்பின் வாழ்த்து மழையிலும் அரவணைத்து தோள் கொடுத்த பாங்கிலும் நெகிழ்ந்து போனோம்.
முட்டிக்குறிச்சி நாவலை எழுத்தாளர் சு வெங்கடேசன் அவர்களின் வேள்பாரி நாவலோடு ஒப்பீடு செய்து வரலாற்றோடும் வாழ்க்கையோடும் பேசிய எழுத்தாளர் ராசி பன்னீர்செல்வன் அவர்களுக்கும், வாழ்வியலை உணர்ந்து பேசிய ஐயா சுதந்திரராசன் அவர்களுக்கும், முட்டிக்குறிச்சி நாவலில் வரும் சிலை வெட்டிச்சித்தரை குறிப்பிட்டு பேசிய எங்கள் தமிழ் செம்மல் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும் , முதல் சிறுகதை நூலான முதல் பரிசு நூல் குறித்து பேசிய அருமை நண்பர் கவி முருகபாரதி அவர்களுக்கும் , சோலைச் செய்யின் வரலாற்று பின்னணியை பேசி மகிழ்ந்த ஐயா கு.மா. திருப்பதி அவர்களுக்கும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து அன்பின் தோழமைகளான ஆளுமைகளுக்கும் பேரன்பின் நன்றிகள்.
இந்நிகழ்வை மாபெரும் விழாவாக சாத்தியமாக்கியது எங்கள் தமிழ்ச் செம்மல் தங்கம் மூர்த்தி அவர்களையே சாரும். தாய்க்கு நல்ல பெயரைத் தேடிக் கொடுப்பது பிள்ளைகளின் தலையாய கடமை.
முட்டிக்குறிச்சி நாவலை வாசிக்க வேண்டும் என எண்ணும் உன்னத உள்ளங்கள் பதிப்பகத்தாரின் தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
எழுத்து பிரசுரம் - ஸீரோ டிகிரி
+91 89250 61999
வாங்கி வாசித்து தங்களின் மேலான கருத்துக்களை பதிவிட பேரன்போடு வேண்டுகின்றேன்.
நட்பின் வழியில்
சோலச்சி
9788210863