செவ்வாய், 6 அக்டோபர், 2026

பகவான் கேண்டீன் முதலாளி குமார்

 


                                     “ பகவான் கேண்டீன் முதலாளி குமார்”

 


 


 

ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு இங்கு மிகக் குறைந்த ஊதியத்தில் வேலை செய்து குடும்பத்தின் வறுமை நிலை மிக உச்சத்தையே தொட்டு இருந்தது. சோத்துக்கும் வழி தேடிக்கொள்ளும் நிலையான வேலை தேடிய பொழுது எங்கள் ஊரைச் சேர்ந்த சித்தப்பா ராம ஜெயம் அவர்கள் புதுக்கோட்டையில் ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று உங்கள் ஓட்டலில் எனக்கும் வேலை கேட்டு வரவும் என்று சொன்னேன். நீ வாத்தியாருக்கு படிச்சிருக்க அங்க உனக்கு என்ன வேலை கொடுப்பாங்க என்று திருப்பி கேட்டார். படித்து இருக்கின்றேன் என்று சொன்னால் ஒருவேளை வேலை கிடைக்காதோ என்று கருதி நான் படித்து இருப்பதாக சொல்ல வேண்டாம். எந்த வேலையாக இருந்தாலும் செய்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவரும் அதன்படியே கேட்டு வந்து தகவல் சொன்னார். அதன்படி அவருடன் சென்று 2004 ஜனவரி முதல் வாரத்தில் புதுக்கோட்டை பிருந்தாவனம் அருகில் பகவான் கேண்டியனில் வேலைக்கு சேர்ந்தேன்.   

பழைய கைலி பழைய அரக்கை சட்டை அணிந்தபடி கேண்டியன் வாசலில் முதலாளி முன் நின்றேன். மேலும்  கீழுமாக பார்த்தவர் ஒழுங்கா வேலை செய்வியா என்று கேட்டார். உனக்கு 60 ரூபாய் சம்பளம். மாலை ஐந்து மணியிலிருந்து இரவு 12 மணி வரை கடை இருக்கும். காலை 6 மணி முதல் 11 மணி வரை காலை டிபன் இருக்கும். இங்கேயே தங்கி வேலை செய்யவும். மதியமும் இரவும் பாத்திரம் கழுவுவதற்கு ஒரு அம்மா வருவார்கள் அவருடன் சேர்ந்து பாத்திரம் கழுவ வேண்டும். எச்சில் இலை எடுக்க வேண்டும். டேபிள் துடைக்க வேண்டும். புது குளத்தில் தென்கரையில் இருந்த அடிகுழாயில் இரவு 12 மணிக்கு மேல் ட்ரை சைக்கிளில் (தண்ணீர் எடுப்பதற்கு என்று பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மூன்று சக்கர மிதிவண்டி) சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டும். ஒவ்வொரு இரவும் 70 முதல் 100 குடம் வரை தண்ணீர் எடுத்து வர வேண்டும். தண்ணீர் எடுத்து முடித்த பிறகு கேண்டியனை நாள்தோறும் இரவு கழுவ வேண்டும். எப்படியும் இரவு இரண்டு, மூன்று மணி ஆகிவிடும். பிறகு சிறிது நேரம் குட்டி தூக்கம். அதிகாலை நான்கு மணிக்கு எல்லாம் ராஜேந்திரன் மாஸ்டர் வந்துவிடுவார். அவருக்கு தக்காளி வெங்காயம் ஒரு கூடை நறுக்கி தர வேண்டும். காலையில் டிபன் உண்டு. 11 மணி வரை காலையில் கடை இருக்கும். அதன் பிறகு டேபிள் அனைத்தையும் கழுவ வேண்டும். காலை உணவு சாப்பிட 11 மணி ஆகிவிடும். மதியத்திற்கு பொங்கலோ ஊத்தப்பமோ கொஞ்சம் கட்டி வைத்து விடுவேன். அதுதான் மதிய உணவு. சிறிது நேர தூக்கம். பிறகு இரண்டு மணிக்கு மாலை நேர சமையல் செய்ய மாஸ்டர் ராஜேந்திரன் வந்து விடுவார். மீண்டும் அவருக்கு குருமாவுக்கு சட்டினி சாம்பார் செய்வதற்கு காய்கறிகள் நறுக்கி தர வேண்டும். மதிய நேரத்தில் திலகர் திடல் சென்று விறகு கடையில் ட்ரை சைக்கிளில் விறகு ஏற்றிக்கொண்டு வரவேண்டும். தட்டு வண்டியில் மளிகை சாமான் கொண்டுவரும் தர்மன் அண்ணனிடம் பொருட்களை வாங்கி பாதுகாப்பாக வைக்க வேண்டும். இதெல்லாம் என்னுடைய அன்றாட வேலை. காலையில் டிபன் கடை, மாலையில் பரோட்டா உட்பட முழுக்க முழுக்க சைவம். ஒரு நாள் சம்பளம் ரூபாய் 60. மூன்று மாதங்கள் இப்படியே தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருந்தேன். கடையின் முதலாளி குமார் அவர்கள் என்னிடம் அதிகமாக பேசியது இல்லை. மாலையும் காலையும் எப்பொழுதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

சப்ளையராக சித்தப்பா ராமஜெயம், சப்ளையராக அண்ணன் சீனி, பார்சல் கட்டுபவராக அண்ணன் சண்முகம், சமையல் மாஸ்டர் ராஜேந்திரன், பரோட்டா மாஸ்டர்கள் அண்ணன்கள் சோலை , சண்முகம் என இவர்கள்தான் பகவான் கேண்டியனில் உள்ள ஊழியர்கள். அருகில் ஹரிப்பிரியா கேண்டின் அண்ணன் மூர்த்தி அவர்களும் சைவ கேண்டியன்தான் நடத்திக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் சாப்பிட்ட இலையை எடுத்து தொட்டியில் போட்டுவிட்டு மேசையை துடைத்துக் கொண்டிருந்தேன். இரவு 10:30 மணி அளவில் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. அப்போதுதான் முதலாளி குமார் அவர்கள் என்னை அழைத்தார். சார் என்று தான் அழைப்பேன். என்னைப் பற்றி அவருக்கு எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

அவர் இருக்கை அருகே என்னை அழைத்தவர் மேலும் கீழும் பார்த்தார். உன்னைய பார்த்தா அப்பா அம்மா பேச்சை கேட்கிறவன் மாதிரி தெரியல. தாய் தகப்பன் பேச்சைக் கேட்கலனா இப்படித்தான் கஷ்டப்படணும். இந்த காலத்திலேயும் நீ எல்லாம் எதுக்கு படிக்காம இருக்க. ம்.... இனிமேல் ஆச்சு பொறுப்பா பொழச்சிக்கோ. வேலை ஈஸியா இருக்குதா என்று கேட்டார். நானும் நல்லாருக்கு சார்... என்றேன்.

ஆமா... பத்தாவது படிச்சி இருப்பியா என்று கேட்டார். காரணம் என்னுடைய உடையும் உடல் மொழியும் அவ்வாறாக இருந்ததுதான். நான் சற்று யோசித்தேன்... காரணம் டீச்சர் ட்ரைனிங் முடித்திருப்பதாக சொன்னால் ஒரு வேளை வேலை தர மாட்டாரோ என்று உள்ளுக்குள் பயம்.

அதுவும் படிக்கலையா உன்னை எல்லாம் பொளேர்னு கன்னத்துல விடனும் என்று முறைத்துப் பார்த்தவர் கொடுக்கிற காச ஒழுங்கா வீட்ல கொடுக்குறீயா இல்லையா என்றார். நான் எதுவும் பேசவில்லை. என் சூழ்நிலை எனக்கு தானே தெரியும்.

பகவான் கேண்டியனுக்கு எப்போதாவது ஸ்டுடியோ டீலக்ஸ் சேகர் அண்ணன் சாப்பிட வருவார். முதலாளி குமார் அவர்களின் நண்பர் குணசேகரன் கேண்டியனுக்குள் வரும் போதே திருப்பதி என்ன பண்ற என் சத்தம் போட்டுக்கொண்டே வருவார். அந்த சத்தத்தை கேட்கும்பொழுது புதுக்கோட்டையில் நம்மையும் பேர் சொல்லி அழைக்க ஆள் இருக்கிறதே என்று மகிழ்ச்சி அடைவேன்.

புதுக்கோட்டையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள் என பலரும் இரவு 10 மணிக்கு மேல் சாப்பிட வருவார்கள். சில நேரம் உணவு இருக்காது. ஆனால் ஏதாவது செஞ்சு கொடு குமாரு என்று சொல்லிக் கொண்டே வருவார்கள். அப்போது திடீர் சமையலாக பரோட்டா மாஸ்டர் சண்முகம் அண்ணன் அல்லது சோலை அண்ணன் சமையல் செய்து கொடுப்பார்கள். அதை மனம் நோகாமல் சாப்பிட்டு விட்டு பல நேரங்களில் சென்றிருக்கிறார்கள்.

முதலாளி குமார் அவர்கள் ஆஞ்சநேயர் மீது அளவு கடந்த பற்று கொண்டவர். காலையும் மாலையும் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்வது வழக்கம். கோயிலுக்கு சென்று வந்த பிறகு கேண்டியனில் உள்ள சாமி படங்களுக்கு பூஜை செய்வார். பூஜைகள் முடிந்த பிறகு தான் உணவு பரிமாறப்படும்.

மதிமுக பொதுச்செயலாளர் திரு வைகோ அவர்கள் 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டார். புதுக்கோட்டையிலும் இரவு 9 மணி அளவில் புதுக்குளம் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார். அவரின் பேச்சுக்களை தீவிரமாக ரசித்தவன் நான். அந்த வகையில் அவரின் பேச்சைக் கேட்பதற்காக ஒன்பது மணிக்கெல்லாம் ட்ரை சைக்கிளை எடுத்துக்கொண்டு புதுக்குளத்திற்கு தண்ணீர் எடுத்து வருவதாக சொல்லி சென்றுவிட்டேன். பொதுக்கூட்டம் முடிந்த பிறகுதான் கேண்டியனுக்கு வந்தேன்.

வேலை நேரத்தில் இங்கு இருக்காமல் தண்ணீர் எடுப்பதாக சென்று விட்டு இவ்வளவு நேரம் என்ன செய்தாய் என்று கேட்டு முதலாளி குமார் அவர்கள் சற்று கோவமாகவே நடந்து கொண்டார் . வேறு வழி இல்லாமல் பொதுக்கூட்டத்தை பார்த்துக்கொண்டு இருந்ததாக சொன்னேன் . அவர் சற்று கோபத்தை குறைத்தவர் சரி போய் வேலையை பாரு என்று சொன்னார் . அதற்குக் காரணம் மதிமுக மாவட்ட செயலாளர் அண்ணன் கலியமூர்த்தி அவர்கள் முதலாளி குமார் அவர்களுடன் நெருக்கமாக இருப்பவர் . அடிக்கடி கேண்டியனுக்கும் வருபவர் .

 அன்று இரவு 11 மணிக்கு என்னை அருகில் அழைத்த முதலாளி குமார் அவர்கள் நிறைய அறிவுரைகளை சொன்னார்கள் . நானும் பொறுமையாக கேட்டு கொண்டேன் . பிறகு என் குடும்பத்தில் உள்ளவர்களை பற்றி விசாரித்தார் . உயிர் பிழைக்கவே முடியாத சூழ்நிலையில் என் தாய் இருப்பதையும் குடும்பத்தில் வறுமை நிலையையும் எடுத்துக் கூறினேன் . அதைக் கேட்டு கண் கலங்கியவர் இதற்குத்தான் படிக்க வேண்டும் என்று நான் யாரைப் பார்த்தாலும் சொல்கிறேன் என்று சொன்னார் . இப்ப சொல்லு நீ என்னதான்டா படிச்சிருக்க என்று கேட்டார் . எழுதப் படிக்கவாச்சும் ஓரளவுக்கு தெரியுமா என்று கேட்டார் .

   நான் டீச்சர் ட்ரைனிங் 2002 இல் புதுக்கோட்டையில் படித்ததாக சொன்னேன் . சற்று நேரம் ஆஞ்சநேயர் புகைப்படத்தை பார்த்து ஏதோ மனதுக்குள் வேண்டிக்கொண்டார் . எனக்கு ஒன்றும் புரியவில்லை . சிறிது நேரம் கழித்து .... நாளைக்கே உனக்கு வாத்தியார் வேலை கிடைச்சா  நூறு பேருக்கு சொல்லிக் கொடுக்கக்கூடிய குருயா நீ . உன்ன போய் டேபிள் துடைக்கவும் பாத்திரம் கழுவும் வெச்சிட்டேனே என்று கண் கலங்கினார் . நீ ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை என்று உரிமையுடன் கேட்டார் . படித்திருக்கிறேன் என்று சொன்னால் ஹோட்டலில் வேலை தர மாட்டீர்களோ என்று பயந்து தான் சொல்லவில்லை என்றேன் . அதுக்காக இப்படியா பழைய சட்டை கைலிய கட்டி இருப்ப . நல்ல சட்டை போடுறது இல்லையா என்றார் . சொல்லப்போனால் மாற்றிக் கொள்வதற்கு கூட அப்போது வேறு துணி இல்லை என்பது தான் உண்மை .    

உனக்கு இனிமேல் 80 ரூபாய் சம்பளம் . நீ டேபிள் துடைக்க வேண்டாம் . சப்ளை மட்டும் செய் என்றார் . நான் ஆஞ்சநேயர் பக்தன் . நான் சொன்னால் பலிக்கும் . கவலைப்படாதே உனக்கு சீக்கிரம் வேலை கிடைக்கும் என்றார் . அது மட்டுமல்லாது அங்கு சாப்பிட வரும் கல்வி அதிகாரிகளிடம் என்னை பற்றி சொல்லி அறிமுகம் செய்து வைத்தார் .

 எப்போதும் சத்தம் இல்லாமல் வேலை செய்யும் நான் சப்ளையர் வேலை கிடைத்ததும் முதல் முதலாக என்னுடைய குரல் ஒலிக்க ஆரம்பித்தது .

 

திருப்பதிக்கு ஒரு ஊத்தப்பம் ......

 

 

பரோட்டா மாஸ்டர் அண்ணன் சண்முகம் சிரித்துக்கொண்டார் .   டேய் திருப்பதி ப்ரமோஷன் வாங்கிட்டியா . இத்தனை நாளு நீ படிச்சத யார்கிட்டயும் சொல்லலையே .   இன்னைல இருந்து உனக்கு நான் மாணவன் . நீ என்ன ஆர்டர் பண்றியோ அதை உன் கஸ்டமர்க்கு செஞ்சு தாரேன் என்று கலகலப்பாக சொன்னார் .

 

2004 அக்டோபர் 29ஆம் தேதி கேண்டியனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் முதன் முதலாக தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன் .

 

முதலாளி குமார் அவர்கள் வாடிக்கையாளாரிடமும் அங்கு பணிபுரியும் ஊழியரிடமும் மிகவும் மரியாதையாகவும் அன்பாகவும் நடந்து கொள்வார் . ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் அறிவுரைகள் சொல்வார் . யாரேனும் குடித்துவிட்டு சாப்பிட வந்தால் அவர்களுக்கு புத்திமதி சொல்வார் . அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் . இரண்டு குழந்தைகளும் என் மீது அளவு கடந்த பாசமாக இருப்பார்கள்.

 

எப்பொழுது பிருந்தாவனம் பக்கமாக செல்ல நேர்ந்தாலும்

 திருப்பதிக்கு ஒரு ஊத்தப்பம் ....

 திருப்பதிக்கு ஒரு ரவா தோசை ....

 

இப்படி என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் .

 

முதலாளி குமார் அவர்கள் என் திருமண விழாவில் கலந்து கொண்டார் . என் மனைவி குழந்தைகளுக்கும் அவரை அறிமுகம் செய்து வைத்தேன் . நான் எப்பொழுது அந்த கடைக்கு சாப்பிட அல்லது பார்சல் வாங்க சென்றாலும் என்னிடம் முதலாளி குமார் அவர்கள் காசு வாங்க மாட்டார் . காசு கொடுக்காமல் சாப்பிட எனக்கு மனம் ஒத்துக் கொள்ளாததால் பல நேரம் அந்தப் பக்கம் செல்வதை தவிர்த்து விடுவேன் . ஆனாலும் அவரை எங்கு பார்த்தாலும் பார்த்து பேசி விட்டு தான் செல்வேன்.

 

 புதுக்கோட்டையில் தேசியக் கவிஞர் புதுகைப்புதல்வன் அவர்களுடன் நான் பேசிக் கொண்டிருந்த பொழுது உலகக் கவிஞர் பீர்முகமது அவர்களும் வந்து விட்டார் . அப்போது பகவான் கேண்டீன் முதலாளி குமார் இறந்து விட்டதாக தேசியக் கவிஞர் உலக கவிஞரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் . யார் என்று போட்டோவை காட்டச் சொன்னேன் . வாட்ஸ் அப்பில் வந்த தகவலை என்னிடம் காட்டினார் . எங்கள் முதலாளி என்று தெரிந்ததும் மிகவும் வேதனைப்பட்டேன் . வாடிக்கையாளர்களுக்கு சுவையான தரமான உணவை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் . இரவு நேரங்களில் பகவான் கேண்டியன் உணவுக்காகவே கூட்டம் அலைமோதும் . எங்கள் கேண்டியனில் உணவு தீர்ந்தால் மட்டும் தான் பக்கத்து கடையில் வியாபாரமே தொடங்கும்.

    முதலாளி குமார் அவர்கள் ஒயின் ஷாப்பில் பணி செய்யும் பொழுது தொடர்ந்து யாராவது குடிக்க வந்தால் அவர்களை அணுகி அறிவுரை சொல்வாராம் . ஏண்டா இப்படி குடிச்சு வீணா போற . பொண்டாட்டி புள்ளைய காப்பாத்து என்று புத்திமதி சொல்வாராம் . பிருந்தாவனம் அருகில் ஆட்டோ ஸ்டாண்டில் இருக்கும் அனைவருமே அவருக்கு நெருக்கமானவர்கள் தான் . புதுக்கோட்டை நகராட்சியில் கவுன்சிலராக போட்டியிட்டு நூல் இலையில் வெற்றி வாய்ப்பை இழந்தவர் .

என்னை பார்க்கும் பொழுதெல்லாம் நீ நல்லா வருவ திருப்பதி . பேர கூட மாத்தி வச்சுக்கிட்டதானே . ஆம ...  சோலச்சி என்று பெருமைப்படுவார்.

 

பகவான் கேண்டீன் முதலாளி குமார் அவர்களின் நிழலில் வேலை செய்ததை எண்ணி எப்போதும் பெருமை கொள்வேன்.

 

இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டியவர் . இளைப்பாருங்கள் சார் ...

 

கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன் ..... சார் 






சோலச்சி 

06.10.2026

 

 


சனி, 5 செப்டம்பர், 2026

பெரும் சுடராய் திகழும் எங்கள் கவிச்சுடர் - சோலச்சி

 

                    பெரும் சுடராய் திகழும் எங்கள் கவிச்சுடர்

 

 

செப்டம்பர் 5 ஆசிரியர் தின விழா


 

நான் பெரிதும் நேசிக்கும் ஆசிரியர்

 

         சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சமூக இயல் ஆசிரியர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள்

 

      பொருள் ஈட்டுவதும் புகழ் தேடி அழுவதும் படைப்பாளரின் நோக்கம் கிடையாது . சமூகத்தின் மீது தீராத அக்கறை கொண்டவர்கள் படைப்பாளிகள் . சமூகத்திற்கு எது தேவையோ அதை உணர்ந்து எழுதக் கூடியவர்களாக இருக்க வேண்டும் . ஆதலால் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட படைப்பாளிகள் அனைவருமே ஆசிரியர்கள்தான் . இச்சமுகம் சீர்பட வாழ்வதில் படைப்பாளிகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்பதை மறுக்க இயலாது. தாழ்ந்து கிடக்கும் சமூகத்தை சிகரத்தின் உச்சிக்கு கொண்டு செல்வதும் மேடு பள்ளம் நிறைந்த சமூகத்தை சமநிலைப்படுத்துவதும் எழுத்தாளர்களின் தலையாய பணி . தனது எழுத்தால் பேச்சால் இச்சமுகத்தை மாண்பு பெறச் செய்யும் மகத்தான பணியை செய்து வருகின்றார் புதுக்கோட்டை மண்ணின் எழுத்துச் சக்கரவர்த்தி எங்கள் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள்  

      செல்லும் இடமெல்லாம் தமிழின் மேன்மையையும் திராவிட சித்தாந்தத்தின் மாண்பையும் சொல் திறத்தால் நாவன்மையால் நிலைநாட்டி வருகின்றார் . பரிசுக்காக பாட்டு எழுதுவதும் பார் ஏய்க்க கூட்டு சேர்வதும் நிலம் சுமக்க வீணாக வாழும் இவ்வுலகில் தமிழைத் தன்னுயிராய் கருதி ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டோடு பயணித்து வரும் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள் சந்தப்பாவேந்தர் வெண்ணரசு அவர்களின் வாரிசு ஆவார் .  

        ஆசிரியர் என்பவர் யார் என்பதற்கு தமிழின் தொன்மையான இலக்கியமான நன்னூல் மிகச்சிறந்த இலக்கணத்தை வகுத்து தந்துள்ளது . அந்த இலக்கணத்திற்கு முழு தகுதி உடையவர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள் என்று சொன்னால் மிகை ஆகாது . உண்மையை உரக்கச் சொல்வது தானே தமிழன்னை நமக்கு கற்றுக் கொடுத்த தலையாய பாடம் .     

      வீழ்ந்து கிடக்கும் மனிதருக்கும் மனம் தாழ்ந்து கிடக்கும் மனிதருக்கும் ஏற்றமுற கவிதைகளைப் படைத்து எழுச்சி பெற செய்கின்றார் . தொட்டிலில் உறங்கும் குழந்தையும் இவர் கவிதை கேட்டு விட்டால் தானாய் எழுந்து நடைபழகி தமிழ் அமுது சுவைக்கும் . தடுமாறி நிற்போரும் இவர்கவிதை கேட்டு விட்டால் இடம் மாறாது இதயம் துடிக்கும் .  

 

குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை

கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை

நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும்

உலகியல் அறிவோடு உயர்குணம் இனியவும் அமைபவன்

நூல் உரை ஆசிரி யன்னே

             - நன்னூல் 

 

   கவிச்சுடரின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று . இச்சமூகத்திற்கு பாவேந்தர் பாரதிதாசன் வழியில் நீக்கமற கவிதைகளை படைத்து வருகின்றார் . ஒவ்வொரு கவிதையும் உள்ளத்துள் ஊடுருவி உயர்வு பெறச் செய்யும் என்பது திண்ணம் . தமிழ் உலகம் கொண்டாட வேண்டிய கவிச்சுடரோ தேன் கிண்ணம் .  முடங்கி கிடப்போரும் வழி தெரியாது மூழ்கி கிடப்போரும் இவரின் கவிதையினை வாசித்தால் முழு நிலவாய் ஒளி வீசுவர் என்பதில் ஒருபோதும் ஐயமில்லை. என்னால் சாதிக்க முடியுமா என்று வாழ்வில் ஏங்குவோரின் தடைகளை உடைக்கும் விதமாக எண்ணற்ற கவிதைகளை எழுதி சரித்திர பொன்னேட்டில் தனக்கான முத்திரையைப் பதித்துக்கொண்டு இருக்கின்றார் . அவரின் கவிதைகள் சிலவற்றை இங்கே சான்றாக வழங்குவதில் பெருமை அடைகிறேன் .  

 


கரையில்நின்று கனவுகண்டால்

சிப்பி திறக்காது!.. நீ

கடலில்மூழ்கி எழுந்திடாமல்

முத்து கிடைக்காது!

பெருமுயற்சி, உழைப்பில்லாமல்

வெற்றி பிறக்காது!.. என்றும்

பிறரின்காலில் நிற்பவர்க்கு

வாழ்வு சிறக்காது! .

       இந்த கவிதையை வாசிக்கின்ற பொழுதே அதன் தனித்துவத்தை உணரலாம் . இக்கவிதையை விளக்குவதற்கு பிறரின் விளக்க உரைகளோ தெளிவுரைகளோ தேவையில்லை . சொந்தக் காலில் நிற்பதற்கும் சுயமாய் சிந்திப்பதற்கும் வழியமைத்துக் கொடுக்கின்றார் கவிஞர் கவிச்சுடர் அவர்கள். உழைக்காமல் பிறரின் தயவால் உச்சம் தொட வேண்டும் என நினைப்போரின் இதயத்தில் உள்ளிறங்கி உழைக்க வேண்டும் என உற்சாகமூட்டும் கவிதை இதுவன்றோ .!

     தமிழ் சமூகம் மட்டுமல்லாது உலகமே கொண்டாடி மகிழ வேண்டிய கவிஞர்தான் கவிச்சுடர் என்பதில் ஐயமில்லை . ஏனென்றால் எல்லோருக்குமான கவிதையை படைத்திடும் வல்லவர் இவர் . படைப்பாளர் தன் மொழியின் மீது அதீத பற்று உள்ளவராகவும் மக்கள் சமூகத்தின் மீது நேயம் மிக்கவராகவும் இருக்க வேண்டும். அவர்தான் உண்மையாக படைப்புலகத்தின் ஆளுமை மிக்கவர் ஆவார் . மற்றொரு கவிதை ஒன்றை உங்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கின்றேன் .

 


சோம்பலுக்குள் மூழ்கிவிட்டால்

மீளமுடி யாது!.. வெறும்

தூக்கம்ஒன்றே நோக்கம்என்றால்

நாளைவிடி யாது!

சாம்பலுக்குள் மீண்டெழும்தீ

எளிதில்அணை யாது!.. உன்

சாதனைக்குப் பூமிப்பந்தில்

ஈடு இணை ஏது?

 


வீறுகொண்டு நீ முயன்றால் 

தோல்விநெருங் காது!.. சிறு

வேதனைக்கும் நீ துவண்டால்

வாழ்வுதுலங் காது!

சீறும்கடல்! மோதும்அலை!

பாறைஉடை யாது!.. மனத்

திண்மைகொண்டால் உன்னைவெல்ல

யாரும்கிடை யாது!

 

      இந்த கவிதையை உலகம் மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்பு செய்யும் வகையில் ஈடு இணையற்றதாக திகழ்கிறது . துவண்டு கிடக்கும் ஒரு மனிதனை தூக்கி விடும் ஊன்றுகோலாக நிமிர்ந்து நிற்கிறது இவர் கவிதை. உலக நாடுகளில் வாழும் அறிஞர்கள் இவர் கவிதையை மொழி பெயர்த்து கொண்டாடி மகிழ வேண்டியது காலத்தின் கட்டாயம் . இது வெறும் புகழ்ச்சி அல்ல . உணர்ச்சியின் வெளிப்பாடு என்பதை உலகுக்கு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன் .

     வளரும் குழந்தைகளுக்கு கவிச்சுடரின் கவிதைகளை வாசிக்க கொடுத்தால் தமிழின் மீது தனிப் பற்று கொண்டு கொண்டாடி மகிழ்வர் . தமிழ் கற்று வளர வேண்டும் என்று ஆர்வம் கொள்வர். தமிழ் மொழியின் மூதாட்டி ஔவையாரின் வாழ்த்து மொழி மிக முக்கியமானது . “ வரப்புயர்க ” என்று வாழ்த்துவார் . வரப்பு உயர்ந்தால் அதன் பயன் என்பது அழகான செய்யுளால் விளக்கி இருப்பார் ஔவை மூதாட்டி. இது ஔவையாரின் தனித்துவம். அதுபோல்தான் கவிச்சுடர் அவர்களும் தனித்துவமாக வாழ்த்துவதில் வல்லவர் .  

 




உடைத்துத் தடைகள் தூளாக

உதிக்கும் அழகு நாளாக

எடுக்கும் முயற்சி மேலாக

இனிக்கும் வாழ்க்கை தேனாக!

அடைக்கும் கதவும் தானாக

அகலத் திறக்கும் வானாக!

கிடைக்கும் வெற்றி! உனக்காகக்

கிழக்கு வெளுக்கும்! நீவாழ்க!

      இந்த கவிதையை வாசிக்கும் அனைவரும் இனிமேல் தங்கள் குழந்தைகளை இவ்வாறு தான் வாழ்த்துவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் ; தலைமுறைகள் தலை நிமிர்ந்து வாழ்ந்திட வேண்டும் என்பதில் பெரும் பணி செய்து வருகின்றார் கவிச்சுடர் அவர்கள் .

     வணக்கம் என்று சொல்வார்கள் வணங்க மாட்டார்கள். வணக்கம் என்பது வார்த்தையோடு நின்று விடும் ஒரு சடங்காக மாறிவிட்டது . எதற்காக ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது வணக்கம் சொல்ல வேண்டும் என்று எப்போதாவது சிந்தித்தது உண்டா .? வணக்கம் என்பது ஒரு உயிர்ச்சொல். உயிர் பெறச் செய்யும் உன்னதமான சொல். சோர்வுற்றுக் கிடக்கும் மனிதருக்குள்ளும் வணக்கம் என்ற சொல் ஊடுருவி புத்துணர்வு பெறச் செய்யும் . உள்ளத்துள் மண்டி கிடக்கும் அடர் இருளை கிழித்து எடுக்கும் வல்லமை பெற்றது வணக்கம் என்ற சொல் . வணக்கம் என்பது வெறும் சொல் அல்ல. அது கிளர்ந்து எழும் ஆதவனின் வெளிச்சம்.  ஒவ்வொருவரும் சந்திக்கும்பொழுது மறக்காமல் வணக்கம் சொல்வதை வழக்கமாகக் கொள்வோம் . ஏனெனில் , வணக்கம் என்பது பல வெற்றிகளைத் தேடித் தரும் மந்திரச் சொல் .  

 

 


அடர்இருள் கிழிக்கும்

    ஆதவன் வெளிச்சம்!

படர்கிளை யெங்கும்

   பறவைகள் முழக்கம்!

தொடடா இலக்கெனத்

   தோள்கள் சிலிர்க்கும்!

விடிகாலை வணக்கம்!

   வெற்றியின் தொடக்கம்!

   இது வெறும் கவிதை மட்டுமல்ல . உணர்வின் உயிரின் வெளிப்பாடு உள்ளத்தில் கலந்த தமிழரின் பண்பாடு . சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு பின்வரும் கவிதையைச் சொன்னால் சாலப்பொருந்தும் . இளையோர் யாவரும் இதயத்தில் தாங்கி நிறுத்த வேண்டிய படைப்பு இது .   

 


முட்டுக்கட்டை எத்தனை,உன்

பாதம் தடுக்கும்?

இங்கு 

முளும்சதி எத்தனை உன்

வேகம் கெடுக்கும்?

விட்டுத்தள்ளு! தன்னம்பிக்கை

தோள்கள் கொடுக்கும்!

உன்

வெற்றிக்கிந்த எட்டுத்திக்கும்

மாலை தொடுக்கும்!

         கவிச்சுடரின் காலத்தில் நாம் வாழ்கின்றோம் என்பதே நமக்கெல்லாம் பெருமை . கவிச்சுடரை ஒரு வட்டத்திற்குள் அடக்கி வைக்க முடியாது . பூமிப்பந்தை புரட்டிப்போடும் கவிதைகளை படைத்துக் கொண்டிருப்பவர் கவிச்சுடர் .

 


எத்தனைநாள் ஒடுங்கிநிற்பாய்?

அடிமை மாதிரி!.. சிலர்

இதயங்களின் பொறாமையிலும்

இறகு சேகரி!

சித்தமெல்லாம் வெற்றிக்கென்றே

உரிய நாள்குறி!..அந்தச்

சிகரம்தாண்டி உயரம் தொடச்

சிறகு நீவிரி!

     ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு புறந்தள்ளப்பட்டு கிடக்கும் மனிதருக்குள்ளும் பெரும் தீப்பிழம்பாய் வெடித்து சிதறும் கவிதைகளை ஏராளம் படைத்தவர் கவிச்சுடர். கொண்டாடி மகிழ வேண்டிய கவிதைகளைப் படைத்துக் கொண்டிருக்கின்றார் கவிச்சுடர் அவர்கள் . பெரியார் , பேரறிஞர் அண்ணா , பாவேந்தர் பாரதிதாசன் , முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீது தீராத பற்று கொண்டவர் .   

        பாவேந்தர் பாரதிதாசனின் பாட்டின் திறத்தை பண்பாட்டு வளத்தை கொண்டாடி மகிழ்கின்றார் கவிச்சுடர். கொண்டாட வேண்டும் என்று நினைத்து விட்டால் விரிகோணமாய் விழிகளை திறந்து தமிழ் சொல்லெடுத்து  பாராட்டி மகிழ்வதில் கவிச்சுடருக்கு நிகர் கவிச்சுடர்தான் . தமிழ் இனத்தின் தன்னிகரற்ற பெரும் வேந்தராக விளங்கியவர் பாவேந்தர் பாரதிதாசன் எனில் மிகையாகாது . அவரின் தமிழ் தொண்டு தமிழ் இனத்தின் குடும்ப விளக்காய் ஒளிர்கின்றது . பாவேந்தரைப் பற்றி கவிச்சுடர் இவ்வாறு பாட்டிசைக்கின்றார் . பாவேந்தர் குறித்த கவிதையை வாசிக்கின்ற பொழுது நமக்குள் நாடி நரம்புகள் துள்ளி எழுகின்றன .   

 

கழுத்துப் பிடரி சிலிர்க்க நிமிர்ந்தான்

         கண்களில் அனல்தேக்கி! - இங்கு

கால்வைத் திடுமோ இந்தி?என் றெழுந்தான்

          களத்தில் பகைநோக்கி!

எழுத்து வடிவில் நெருப்பை உமிழ்ந்தான்

          எரிமலை உண்டாக்கி! - அவன்

எடுத்துப் பிடித்தது எழுதுகோல் அல்ல!

           எந்திரத் துப்பாக்கி!

 

      சந்தப் பாக்களை சரம்சரமாய் எழுதுபவர். விருத்தம் அவரிடம் ஊற்றெடுக்கும். ஆயிரம் ஆயிரம் கவிதைகள் அவர் உள்ளத்தில் குவிந்து கிடக்கின்றது. அவர் கவிதை மட்டுமல்லாது மற்றோரின் கவிதைகளையும் கொண்டாடி மகிழ்பவர். பலரும் குறிப்பு எடுத்துக் கொண்டு தான் பேசுவார்கள். ஆனால் கவிச்சுடரோ குறிப்பேதும் இல்லாமல் பேசும் பேரழகைக் கண்டு தமிழன்னை குறிப்பு எடுத்துக் கொள்வாள்.

        கவிச்சுடரின் கவிதைகள் குறித்து நிறைய பேசலாம். உலக அரங்கிற்கு நிறைவாக அவர் கவிதை ஒன்றைத் தருகின்றேன். வாழ்நாளில் ஒரே ஒரு கவிதை மட்டும் வாசித்தால் போதும் என்று நினைப்பவர்களுக்காக இந்த கவிதை. சோர்ந்து கிடக்கும் பொழுதெல்லாம் இந்த ஒரு கவிதையை சொல்லிப் பார்த்துக் கொண்டால் தம்முள் மூழ்கும் பெரும் துயரும் விலகிப் போகும்.

 


ஆயிரம் தடைகள்

மலைபோல் நெருங்கும்!

அறிவைத் துணைகொள்!

நுரைபோல் நொறுங்கும்!

தீயென நீஎழு!

சிறுமை பொசுங்கும்!

திமிர்ந்துநில்! நிமிர்ந்து செல்!

திசைகள் வணங்கும்!

         ஆம் . இவர் பள்ளிக்கூடத்து ஆசிரியர் அல்ல . ஆனால் , சமூகம் என்னும் பள்ளிக்கூடத்தில் குவிந்து கிடக்கும் சிக்கலைக் கேடுகளைத் துடைத்து எறியும் சமூக ஆசிரியர்.  தமிழ் சமூகம் தமிழ் உள்ளவரை கொண்டாடி மகிழும் . 2010 ஆம் ஆண்டு கவிச்சுடர் கவிதைகள் என்னும் நூலினை வெளியிட்ட கவிச்சுடர் அவர்கள் மரபு வழியில் பெரும் கவிதை நூலினை மீண்டும் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம் . 

         சமூகத்தை நெறிபட நடத்திட துணை நிற்கும் படைப்பாளர்களும் ஆசிரியரே. அந்த வகையில் ஆசிரியர் தின விழாவில் எங்கள் கவிச்சுடரை கொண்டாடி மகிழ்வதில் பெருமை கொள்கின்றேன். அவரின் கவிதைகள் உலக அரங்கில் கொண்டாடப்பட வேண்டும். நான் அறிமுகப்படுத்தி இருக்கும் கடுகளவு கவிதைகளே இவ்வளவு வீரியமிக்கதாய் இருக்கிறது என்றால் அவர் எழுதி வைத்திருக்கும் பெருமளவு கவிதைகள் எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் .  

       மகா சக்கரவர்த்தியை போற்றுதலுக்குரிய எங்கள் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களின் வைர வரிகளில் இவ்வையகம் தலை நிமிரட்டும் . கவிச்சுடரின் கவிதைகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு பள்ளி பாட பத்தகங்களில் மாணவர்களுக்கு தற்கால இலக்கியத்தில் பாடப் பகுதியாக வைத்து பெருமைப்படுத்த வேண்டும்.

      அறிவைப் புகட்டி சுதந்திர சமத்துவ சகோதரத்துவத்தை வளர்க்கும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன் .

 

அன்பு பண்பு பாசம்

நட்பின் வழியில்

சோலச்சி 

9788210863