திங்கள், 25 நவம்பர், 2024

நவம்பர் 25 என் தாயின் நினைவு தினம் - சோலச்சி

 

நவம்பர் 25


நினைக்காத நாளில்லை 

இருந்தும் தாயே

இன்று உன் நினைவு நாளே...!!!




அன்னைக்கி ராத்திரி பூரா 

என் மடியில

உன் தலைய வச்சு

ஆராரோ பாடி அழுதே மயங்கி கிடந்தேன்...


அஞ்சாறு நாளாவே ஒத்த சொல்லு

சொல்லி முடிக்க 

அய்யய்யோ சிரமப்பட்ட...


அஞ்சாறு வருசமா நார்க்கட்டுலே கெதினு

ஆத்தாடி முடங்கி கிடந்த

இல்லாத வைத்தியம் எல்லாம்

ஏதேதோ செஞ்சும்

என் தாயி உன்னைத்தான் 

எந்திரிக்க வைக்க முடியலையே...


அரசாங்க வேலைக்கி நானு போயி

மாசம் ஒன்னும் ஆகலயே...

அந்த சேதி கேக்கத்தான்

உசுர தக்க வச்சு கெடந்தியா....


ஆசையா நீ கேட்ட கருப்பு திராட்சை 

அரைக்கிலோ பத்து ரூபானு

வாங்கியாந்து ஊட்டி விட்டேன்

அந்த சாறுதான் நீ குடிச்ச

கடைசி ஆகாரம்....


மூச்சு மட்டும் விட்டு விட்டு ஓடுச்சு

கண்ணு நிலைக்குத்தி முகட்டையே பாத்துச்சு

அந்த பார்வைக்கு பொருளென்ன 

என் தாயி....


நல்ல சேலை கட்டி ஒருநாளும் பார்த்ததில்லை

நகை நட்டு காது மூக்குல போட்டதில்லை

வறுமைய விரட்ட வழி தெரியாம

வகமடுப்பா போயிட்டியே....


காத்தால வானத்துல வெள்ளி மொளச்சு

வேடிக்கை பாத்துச்சு...

அந்த நேரத்துலதான் நம் வீட்டு வாசலுல

ஊரு சனமே ஒன்னா கூடுச்சு...


எப்பவும் கூவுற சேவலு

அன்னக்கினு அழுதே கூவுச்சு

அதுக்கும் தெரிஞ்சுருக்கு உன் மூச்சு நின்ன கதை....


அஞ்சாறு வருசமா அழுதே துவண்ட நானு

அன்னக்கினு அரை சொட்டு கண்ணீரு வடிக்கலயே...

அத ஊரு சனம் சொல்லி பேசுறது

காதுல கேட்டும் என் கண்ணு கலங்கலயே

கல்லா நின்று தொலஞ்சேனே....


தாயே நல்லடக்கம் செஞ்சு நானு வந்தேன்

அப்ப அணை உடைஞ்சு கரை புரண்ட கண்ணீர

தடுக்க யாராலும் முடியலையே...

என் தாயி இப்பவரை உன் நினைவு குறையலயே....


படிக்காத ஆளா இருந்தாலும் - என் தாயி 

படிச்சு படிச்சு நீ சொன்னத

வெளையாட்டா கடந்து போனேனே

இப்ப வெவரம் தெரிஞ்சுருச்சு

என் வேதனைய வெளியில் சொல்ல முடியலயே....


இருக்கும் வரை அம்மான்னு சொன்னதில்ல

தாயினுதான் நானழச்சேன்

என் தாயி அத நீயும் 

தடுத்ததில்ல....


குண்டாஞ்சட்டியில கஞ்சி ஊத்தி 

ஊட்டி விடுவ

இப்ப ஒருமுறை கொண்டாந்து 

ஊட்டி விடுவே.....!!!

          - உன் அன்பு மகன் சோலச்சி







செவ்வாய், 19 நவம்பர், 2024

சோலச்சி பிறந்த தினம்



எட்டுத்திக்கும் வில் ஏந்திபடியே நிற்கும் சில உறவுகள் 
கட்டுக் கட்டாய் வந்து விழும் வசவுகள் 
இதயத்தில் ஊடுருவி ரத்த நாளங்களை உறிஞ்சியும்
கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தபோதும்
எரிக்கும் விழிகளாலே வீழ்த்திய போதும்
வானளவு ஏமாற்றங்களை வாரி கொடுத்த போதும்
இரும்பு கரம் கொண்டு நசுக்கிய போதும் 
ஓரவஞ்சனையால் ஒதுக்கி தள்ளிய போதும்
உதிரமே கைவிட்ட போதும் 
விழுகின்றேன்...
எழுகின்றேன்...
மீண்டும் மீண்டும் 
பூத்துக் கொண்டே இருக்கின்றேன்...


கூட வந்ததை குறை சொல்வதற்கில்லை 
கூடி பிறந்ததோ இன்பத்தின் எல்லை
கூட பிறந்ததோ எந்த சொற்களுக்குள்ளும் அகப்படவில்லை...!


எதிர்பார்ப்பு இல்லாத பேரன்பினை
பரந்த நிலமெங்கும் பாயாக விரிக்கின்றேன்
தாயாக என் நட்புகள் தாங்கி பிடிப்பதால் 
தடம் பதித்து பயணிக்கின்றேன்
மகுடங்களுக்குள் நுழைந்து விடாமல் 
நல்ல மனங்களுக்குள் உட்புகுகின்றேன்
தோளோடு அணைத்துக் கொள்ளும்
அந்த கதகதப்பில் மகிழ்கின்றேன்...


நான் பிறப்பெடுப்பேன் என்று 
எண்ணியதில்லை என் பெற்றோரும் 
எதார்த்தமாய் அமைந்த வாழ்வில் 
இரண்டாவதாக பிறந்தேன் 
இப்போது ஆறுதல் சொல்ல 
தாய் இல்லை என்றாலும் 
அவர் இருந்தவரை அவருக்கு தாயானேன்
அவ்வாறே அப்பாவுக்கும் தொடர்கிறேன்....


வெறும் கையோடு பிறந்தேன் 
வெறும் பயலாய் தொடரவில்லை 
விரல்கள்தோறும் பேரன்பு நிறைந்து கிடக்கிறது
இறுக பற்றிக் கொள்கிறேன் 
இருக்கும் வரை 
இல்லை என்காமல் 
அள்ளிக் கொடுங்கள் பேரன்பினை...!


கூழ் குடித்து பிறந்தவன் 
கூரை வீட்டில் வளர்ந்தவன் - உங்கள் 
கூட்டாளியாக தொடர்பவன்..!!!

            நவம்பர் 19
சோலச்சி பிறந்த தினம் 














ஞாயிறு, 17 நவம்பர், 2024

கலைமாமணி நவீனன் நினைவு விருது 2024

 கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கும் விழா புதுக்கோட்டை- 2024


இடமிருந்து வலம் தமிழ்ச்செம்மல் தங்கம்மூர்த்தி, மருத்துவர் ச.ராம்தாஸ், ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் சேதுராமன், சோலச்சி, முனைவர் தாமோதர கண்ணன், ரவி நவீனன்.


சென்னை கலைமாமணி நவீனன் நினைவு அறக்கட்டளையும் புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து நடத்திய கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கும் விழாவும் மற்றும் உழல் வழிகள் நூல் வெளியீட்டு விழாவும் சனிக்கிழமை (16.11.2024) மாலை புதுக்கோட்டை அறிவியல் இயக்க அரங்கில் நடைபெற்றது. சர்வஜித் அறக்கட்டளையின் நிறுவனர் எங்கள் ஐயா மருத்துவர் ச.ராம்தாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலக்கிய ஆளுமைகளுக்கு கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கப்பட்டது. உலக அரங்கில் ஒப்பற்ற ஆளுமை எங்கள் ஐயா ஞானாலய பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் எங்கள் ஐயா தமிழ்ச்செம்மல் தங்கமூர்த்தி அவர்களுக்கும் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் சேதுராமன் அவர்களுக்கும் ஆவணப்பட இயக்குனர் முனைவர் தாமோதர கண்ணன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. மாபெரும் ஆளுமைகளுடன் சோலச்சி ஆகிய எனக்கும் இவ்விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. வாழ்நாளில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது எல்லாம் அரிதிலும் அரிது. இம்மாபெரும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த கலைமாமணி நவீனன் அவர்களின் புதல்வர் எழுத்தாளர் ரவி நவீனன் அவர்களுக்கும் வாசகர் பேரவையின் செயலர் எங்கள் ஐயா பேராசிரியர் சா.விஸ்வநாதன் அவர்களுக்கும் பேரன்பு நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.


கலைமாமணி நவீனன் அவர்கள் தனது 17-வது வயதிலேயே பத்திரிகைத்துறைக்கு வந்தவர். 92 வயது வரை எழுதிக் கொண்டே இருந்தவர்.  ஆரம்ப காலத்தில் "நவயுவன்' என்ற பத்திரிகை மூலம் தனது பத்திரிகைப் பணியைத் தொடங்கியவர் பின்னாளில்  "சுதேசமித்ரன்', "மஞ்சரி', "தென்றல் திரை' உள்ளிட்ட பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார்.


சினிமா செய்திகளை வெளியிடுவதற்கு என்றே  "நவீனன்' என்ற பெயரில் தினசரி பத்திரிகை தொடங்கினார். பொருளாதார நெருக்கடியால் அவரால் இப்பத்திரிகையை  தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் "தினமணி கதிர்' உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றும் சூழல் உருவானது.


 எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து 1980-ம் ஆண்டு "சினிமா எக்ஸ்பிரஸ்' தொடங்கப்பட்டபோது அதன் முதல் ஆசிரியராக நவீனன் நியமிக்கப்பட்டார். "தினமணி' நாளிதழ் வெளியிட்ட அண்ணா பற்றிய வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். சினிமா மற்றும் அரசியல் உலகில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் தினமணி கதிரில் தொடராக எழுதி வந்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள பூதலூர் கிராமத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் முத்துசாமி.



 










கலைமாமணி 
 நவீனன் நினைவு விருது பெற்ற ஆளுமைகளுடன் சோலச்சி 

விழாவில் கலந்துகொண்ட திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையம் பகுதி நேர செய்தி வாசிப்பாளர்
 தோழர் ஸ்ரீகாந்த் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் தங்கம்மூர்த்தி மற்றும் எழுத்தாளர் ரவி நவீனன். 


.
முனைவர் தாமோதரக் கண்ணன் அவர்களுக்கு கலைமாமணி நவீனம் நினைவு விருது வழங்கப்படுகிறது.


பேராசிரியர் சேதுராமன் அவர்களுக்கு கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கப்படுகிறது.


தமிழ்ச் செம்மல் தங்கம்மூர்த்தி அவர்களுக்கு கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கப்படுகிறது.



ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கப்படுகிறது. உடன் பேராசிரியர் சா.விஸ்வநாதன்.








எழுத்தாளர் ரவி நவீனன் அவர்களுக்கு மருத்துவர் ச. ராமதாஸ் அவர்களால் நினைவு பரிசு வழங்கப்படுகிறது. வலமிருந்து பேராசிரியர் சா. விஸ்வநாதன், ரவி நவீனன்.



முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் , புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோருடனும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, கார்த்தி, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களோடும் நெருங்கிப் பழகியவர்.


 2009-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும், மணிமேகலை மன்றம் வழங்கிய இலக்கியச் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். தனது சினிமா செய்திகளில் வதந்திகளை எழுதாமல் உண்மை நிகழ்வுகளை மிகவும் துணிச்சலாகவும் நேர்மையாகவும் எழுதி வந்தவர். தனது நேர்மையை மாபெரும் ஆயுதமாக பயன்படுத்தியதால்தான் எல்லோருடனும் நெருங்கி பழகும் வாய்ப்பு கிட்டியது. தனது அப்பா நவீனன் அவர்கள் புதுக்கோட்டையில் சில காலம்  தங்கி பணி செய்ததாக தகவல் அறிந்ததும்  இந்நிகழ்வை புதுக்கோட்டையில்தான் நடத்த வேண்டும் என்கிற பேராவலில் நிகழ்ச்சியை நடத்தியதாகவும் அவரது மகன் ரவி நவீனன் அவர்கள் விழாவில் நெகழ்ச்சியோடு பதிவு செய்தார்கள்.


சோலச்சிக்கு கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கப்படுகிறது.


                                              பேரன்பின் வழியில் 

                                                       சோலச்சி 

                                                     9788210863 

                                       solachysolachy@gmail.com







ஞாயிறு, 10 நவம்பர், 2024

ஆளுமைகளை வளர்த்தெடுக்கும் வாசிப்போர் மன்றம் - சோலச்சி

"வியக்க வைத்த ஆளுமைகள்" 




 மொழி சுவை உடையது. ஆம்.. எப்போது என்றால் குழந்தைகள் பேசுகின்ற பொழுது மொழி சுவையுடையதாக மாறுகிறது. புதுக்கோட்டையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளிக்கு என்று தனித்துவ அடையாளம் உண்டு. இந்தப் பள்ளியை மிகவும் நேர்த்தியாக நிர்வகித்து வரும் என் பேரன்புக்குரிய தமிழ்ச்செம்மல் தங்கமூர்த்தி அவர்கள் "வாசிப்போர் மன்றம்" என்கின்ற அமைப்பு ஏற்படுத்தி மாணவர்களிடையே வாசிப்பு திறனை மேம்படுத்தி வருகின்றார்கள்.


 அந்த வகையில் நவம்பர் மாத வாசிப்போர் மன்றத்தில் சிறப்பு விருந்தினராக சனிக்கிழமை ( 09.11.2024 ) கலந்து கொண்டேன். அன்றைய நிகழ்வு என்பது பார்போற்றும் நல்ல எழுத்தாளர் திரு .எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடைய சிறார் நூல்கள் குறித்த அமர்வு. எட்டு மாணவர்கள் பேசுவதாக நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதில் இரண்டு மாணவர்கள் எதிர்பாராத விதமாக விடுப்பு எடுக்க நிகழ்வில் ஆறு மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நூல் குறித்து எந்தவித குறிப்பும் இல்லாமல் குழந்தைகளுக்கே உரிய மொழி நடையில் பேசிய விதம் அடடா.‌.. அடடா.. அடடா... என்று சொல்லும் அளவிற்கு மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. 



ஓர் ஆங்கிலப் பள்ளியில் தமிழ் மொழியை இவ்வளவு உச்சத்திற்கு வளர்த்தெடுக்க முடியும் எனில் சிறந்த நிர்வாகத் திறமை மற்றும் மொழி ஆளுமை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியமாகும். மாணவர்களே வரவேற்கிறார்கள்; மாணவர்களே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்கள்; மாணவர்களே நன்றி கூறுகிறார்கள்; முழுக்க முழுக்க மாணவர்களின் கட்டுப்பாட்டில் மாணவர்களின் செயல்பாட்டில்  எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஆசிரியர்களின் வழிகாட்டலோடு சுதந்திரமான அமைப்பாக வாசிப்போர் மன்றம் செயல்படுகிறது.



 நிகழ்ச்சியை என் பேரன்புக்குரிய அண்ணன் கவிஞர் காசாவயல் கண்ணன் மற்றும் பள்ளியின் துணை முதல்வர் தோழர் குமாரவேல் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பேரன்புக்குரிய அண்ணன் கவிஞர் மா.செல்லதுரை மற்றும் அருமை தம்பி கவிஞர் சிக்கந்தர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். 

 எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தனது சிறார் கதைகள் குறித்து பேசுவதாக இருந்தால் குழந்தைகளின் மொழியில் பேசுவாரா என்பது ஐயம் தான். ஆனால், ஒவ்வொரு குழந்தைகளும் தாங்கள் வாசித்த நூலை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு அவர்களது மொழி நடையில் பேச்சு வழக்கில் மிகவும் எதார்த்தமாக பேசியதை எண்ணி பெரிதும் வியக்கின்றேன். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தால் குழந்தைச் செல்வங்களை உச்சி முகர்ந்து பாராட்டி  மகிந்திருப்பார். நானும் மனம் நிறைவோடு பாராட்டி மகிழ்ந்தேன்; மகிழ்கின்றேன். 


 நான் பணியாற்றும் பள்ளியில் வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் இலக்கிய விழா என்கிற பெயரில் மாணவர்களின் பேச்சு , நடனம்,  நூல்கள் வாசிப்பு இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றேன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 எட்டாம் வகுப்பு பயிலும் மாரீஸ்வரி என்ற மாணவி எலியின் பாஸ்வேர்டு என்கிற கதையை சைகையோடு குரலில் ஏற்றம் இறக்கத்தோடு சொன்ன விதம் இப்போதும் என் கண்கள் முன்னே காட்சியாக விரிந்து கொண்டிருக்கிறது. இது போன்ற நிகழ்வுகளை அனைத்து பள்ளிகளிலும் முன்னெடுக்கலாம். மாணவர்களிடம் பாடப் புத்தகத்தை தாண்டிய திறனையும் வளர்த்தெடுக்க வேண்டும். 


மாணவர்களிடம் நூல்களிடைய உரையாடும் நட்பினை ஏற்படுத்தி விட்டால் பாசிசத்திற்கு இடம் அளிக்காத ஒளிமயமான சுதந்திரம்; சமத்துவம்; சகோதரத்துவம் மிகுந்த இந்தியாவை நிச்சயமாக நிலைநாட்ட முடியும். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த நிகழ்வில் பள்ளியின் தாளாளரும் எங்கள் பேரன்புக்குரிய கவிஞருமான  எங்கள் தமிழ்ச்செம்மல் அவர்களால் கலந்துகொள்ள இயலவில்லை. நிகழ்வு அரங்கம் முழுவதும் எங்கள் தமிழ்ச்செம்மல் அவர்களின் பேரன்பு நிறைந்து காணப்பட்டதை உணர்ந்தேன். ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தனித்துவம் மென்மேலும் உயர பாராட்டி மகிழ்கிறேன். எங்கள் தமிழ்ச்செம்மல் தங்கம்மூர்த்தி அவர்களுக்கு பேரன்பு நிறைந்த நன்றியை தெரிவித்து மகிழ்கின்றேன். 

பேரன்பின் வழியில் 
 சோலச்சி.
 10.11.2024