புதுக்கோட்டை வீதி கலை இலக்கிய களம் 36வது கூட்டம் 19.02.2017 ஞாயிற்றுக் கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. அதில் என்னால் விமர்சனம் செய்யப்பட்ட நூல் குறித்து...
நூல் விமர்சனம் :-
"அப்பாவின் வேட்டி " (கவிதை நூல்) - கவிஞர் பொம்பூர் குமரேசன்.
ஆசிரியர் முகவரி :
154 ஈ-1
நாயக்கர் தோட்டம்,
பூசாரி பாளையம்,
கோயம்புத்தூர் - 641003
தொடர்பு எண் :9976775637
வெளியீடு :நறுமுகை
29/35,தேசூர்பாட்டை,
செஞ்சி -604202
விழுப்புரம் மாவட்டம்
தொடர்பு எண் : 9486150013
பக்கங்கள் :96
விலை :75
முதற்பதிப்பு :மே 2016
வளர்ந்து வரும் இலக்கிய உலகில் கவிதைகளின் பங்கு மிக முக்கியமானது. "கவிதைகளில் நல்ல கவிதை, கெட்ட கவிதை என்று கிடையாது. பொதுவாக இந்த சமூகத்திற்கு பயன்படக்கூடிய கவிதைகள் அனைத்துமே நல்ல கவிதைகள்தான் ." கவிஞர் பொம்பூர் குமரேசன் அவர்களின் "அப்பாவின் வேட்டி " கவிதை நூல் இந்த சமூகத்திற்கு பயன்படக்கூடிய மிகச் சிறந்த நூல்.
இன்று பொறியியல் மாணவர்களைப் போல் கவிஞர்களும் பெருகிவிட்டார்கள். கவிதைகளின் நடையும் பலவிதமாக மாறிவிட்டது. ஆண்டுதோறும் தமிழுக்கு எண்ணற்ற நூல்கள் புதிதுபுதிதாக வந்து மகுடம் சூட்டத் தொடங்கி விட்டனர்.
"எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு - இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன், நமது தாய்மொழிக்கு புதிய உயிர் தருவோனாகின்றான் " என்பார் முண்டாசு கவிஞர் பாரதியார். அந்த வகையில் இந்நூல் எளிய நடையில் எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய நூலாக வெளிவந்து இருப்பது பாராட்டுக்குரியது.
"ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எழுதி குவிப்பது அல்ல படைப்பு. நிறைய எழுதுவதல்ல மன நிறைவாக எழுதுவதுதான் படைப்பு "என்பார் புதுக்கோட்டை பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் முத்துநிலவன் அவர்கள். கவிஞர் பொம்பூர் குமரேசன் அவர்கள் மன நிறைவாக எழுதியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.
"கருப்பும் ஆட்சிக்கு வரும்
இன்று அந்தியிலும்
நாளை ஆப்ரிக்காவிலும்...!"
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுச்சிக்கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் எழுதிய இந்தக் கவிதையினை இன்றும் இயக்குநர் பாரதிகிருஸ்ணகுமார் அவர்கள் பல மேடைகளில் தனக்கு பிடித்தமான கவிதை என்று சொல்லி வருவது அந்தக் கவிதையின் எளிய நடையும் எல்லைதாண்டிய சமூக பற்றும்தான் காரணம்.
இந்த கவிதை நூலில் அப்படி குறிப்பிட்டு சொல்லும் வகையில் எண்ணற்ற கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூல் அப்பாவைப் பற்றிய நூல் என்றபோதும் சமூகம் சார்ந்த படைப்புகளையும் பதிவு செய்துள்ளார் கவிஞர்.
வீட்டுக்கணக்கு என்ற
கவிதையில்....
"எல்லாக்
கணக்குகளையும்
சரியாகப் போடும்
அப்பா..
வீட்டுக்
கணக்கை மட்டும்
தப்புத்தப்பாய்
போடுகிறார்..
அம்மாவின்
முந்தானை
கண்ணீர் சொட்ட.......
என்று மிக அழுத்தமாக அதன் வலிகளை உணர்த்தி நம் கண்களையும் கலங்கச் செய்துவிடுகிறார் கவிஞர்.
அப்பாவின் வேட்டி என்கிற கவிதையில் ...
அப்பா
அடிக்கடி சட்டை மாற்றம்
அரசியல்வாதி அல்ல ....
அன்றாடம் கசக்கிகட்டும்
விவசாயி....
என்று ஊழல் அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி கொடுக்கிறார். மேலும்
அப்பாவின் வேட்டியில்
தெரியும் வானம்
அதையும்
மறைத்து மறைத்துக்கட்டிக்
காப்பார் மானம் ...
..............
..............
..............
..............,,,
ஒருநாள்
அப்பாவின் வேட்டி
அதிகம் கிழிந்து போக...
ஒரு துண்டு
சாமி துடைக்கவும்...
ஒரு துண்டு
சாணம் மொழுகவும்
ஒரு துண்டு
கரித்துணியாகவும்
ஒரு துண்டு
கோவணமாகவும்
மாறிப்போனது...
எதற்கும் கவலைப்
படுவதில்லை அப்பா....
என்று கண்ணீர்த்துளிகளால் நம்மை நிறைத்துவிடுகிறார் கவிஞர். இந்தக் கவிதையை வாசிக்கும் அனைவருக்குள்ளும் அவரவர் அப்பா மிக உயர்ந்த இடத்தில் வந்து போகிறார் என்பதை காணலாம். அப்பாவை நேசிக்காதவர்களும் இனி நேசிக்கும்படி செய்துவிடுகிறார் கவிஞர். எந்த அப்பாக்களும் தனக்கென எதுவும் தனியாக செய்து கொள்வது கிடையாது.
"இன்று பெரும்பாலான அப்பாக்கள் தாயுமானவராக இருப்பதை காண்கிறேன் " என்று அவ்வப்போது சொல்லுவார் பெண்ணியக்கவிஞர் மு.கீதா அவர்கள்.
இன்று பெற்றோரைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே இத்தேசத்தில் சிட்டுக்குருவிகள் மீதும் அப்பா அக்கறை கொண்டதாக குறிப்பிடுகிறார்.
"வயலிலிருந்து
வந்தால் அப்பா
விளைந்த நெற்கதிர்களை
எறவானத்தில் கட்டுவார்...
சிட்டுக்குருவி
சின்னது
சின்னதாய்ப் பறந்து
கொத்தித் தின்னும் ....
என்று குறிப்பிடுகிறார் கவிஞர். இந்த இடத்தில் அப்பா முண்டாசு கவிஞர் பாரதியாக வந்து போகிறார்.
சைக்கிள் கவிதையில்....
பின்பக்க மட்காட்டில்
சாயம் போன ஹெர்குலஸ்
உலகத்தையே தூக்கித்
தோளில் வைத்து நிற்பார்
வெற்றிப் பெருமிதத்தோடு ...
அப்பாவும்
தூக்கித் தூக்கிப் பார்க்கிறார்
குடும்பத்தை நிமிர்தவே
முடியவில்லை ....
என்று சொல்லும் போது அப்பா வீட்டுக்காக எவ்வாறு உழைத்து தேய்ந்து போகிறார் என்பதை உணர முடிகிறது. அப்பாவைப் பற்றிய கவிதைகள் ஏராளம் என்றாலும் பொதுவான படைப்புகளும் குவிந்து கிடக்கின்றன.
மணல் கொள்ளை பற்றி கவிஞர் இவ்வாறு கூறுகிறார்....
புதைத்தல்..... என்கிற தலைப்பில்
மாண்டுபோன
மனிதனை
ஆற்றங்கரையில்
புதைக்கிறார்கள்...
மணல் அள்ளி
ஆற்றை
வீட்டில்
புதைக்கிறார்கள்....
என்கிறார் கவிஞர். இந்தக் கவிதை வரும் காலங்களில் பலராலும் பேசப்படக்கூடிய கவிதையாக வரும் என்பதில் ஒருபோதும் ஐயமில்லை.
கவிஞர் பொம்பூர் குமரேன் அவர்கள் தீண்டாமை பற்றியயெல்லாம் மிக உருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.
மிகச் சிறப்பான கவிதை நூல்தான் மறுப்பதற்கில்லை என்றபோதும் சில இடங்களில் உரைநடையும் உறவாடுகிறது. அந்த இடங்களில் வார்த்தைகளை சற்று திருப்பி போட்டாலே இன்னும் மிகச் சிறந்த படைப்பாக வந்துவிடும். அதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். நூலை வாசிக்கின்ற பொழுது பிடித்த கவிதை அருகே ஒவ்வொரு காகிதமாய் வைத்துக்கொண்டு வந்தேன். வாசித்து நிறைவு செய்த பிறகு பார்க்கிறேன் அனைத்துப் பக்கங்களிலும் காகிதம் வைக்கப்பட்டிருந்தது. அப்படியானால் நூல் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை நீங்களும் வாசித்து பார்த்தால் நிச்சயமாக உணர்வீர்கள். உங்கள் வீட்டு புத்தக அலமாரியில் "அப்பாவின் வேட்டி " யும் இடம் பெற வேண்டிய நூல். கவிஞர் பொம்பூர் குமரேசன் அவர்கள் மேலும் நூல்கள் பல படைத்து களப்பணியாற்றும்படி மனசார வாழ்த்தி பாராட்டி மகிழ்கின்றேன்.
- நட்பின் வழியில்
சோலச்சி புதுக்கோட்டை
பேச : 9788210863
10 கருத்துகள்:
அருமையான நடுநிலையான உண்மையான விமர்சம். நன்றி தோழரே.
புத்தகம் வேண்டும் நண்பா
ரசனையான விமர்சனம்... அருமை...
மிக்க மகிழ்ச்சி
அருமையான விமர்சனம் நண்பரே
அப்பாவைப் பற்றிய கவிதைகள் நன்றாக உள்ளன . பல அப்பாக்கள் தியாகிகளாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள்
மிக்க நன்றி
மிக்க நன்றி அய்யா
கவிஞரின் தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் தோழர். மிக்க நன்றி
கருத்துரையிடுக