வெள்ளி, 5 ஜனவரி, 2018

சோலச்சியின் விரிசல் நூல் குறித்து - புரட்சித்தமிழன் சத்தியசீலன்

விரிசல் - நூல் ஆய்வு புரட்சித்தமிழன் சத்தியசீலன்

நூல் ஆய்வு - புரட்சித்தமிழன் சத்தியசீலன்
*************
நூலின் பெயர்: விரிசல்
நூலின் ஆசிரியர்: கவிமதி சோலச்சி புதுக்கோட்டை
நூல் அச்சாக்கம்: கேபிட்டல் இம்பிரசன், சென்னை.
நூல் வெளியீடு: மேன்மை வெளியீடு, சென்னை.
நூலின் விலை: ரூ. 100/-
நூலாசிரியரிடம் பேச: 9788210863

இந்நூலின் ஆசிரியர் முகநூலில் தான் எனக்கு அறிமுகம். இவர் இதுவரை இரண்டு சிறுகதை நூல் இரண்டு புதுக்கவிதை நூல் என நான்கு நூல்கள் வெளியிட்டுள்ளார். அதில் சமீபத்தில் வெளியிட்டுள்ள சிறந்த சிறுகதை நூலுக்கான விருதுபெற்ற "கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்" என்னும் சிறுகதை நூலும் "விரிசல்" எனும் புதுக்கவிதை ஆகிய இந்த நூல் ஆகிய இரண்டு நூல்களை மட்டும் நான் படித்துள்ளேன்.

ஆசிரியர் பற்றி;
""""""""""""""""""""
இவர் நான் பிறந்த கவிதைக் கோட்டையாம் புதுக்கோட்டையின் மைந்தன் ஆவார். ஆதலால் இவரின் கவி தமிழோடு சிறப்பாக விளையாடியுள்ளது. இவர் எனது அருமை தோழர் கவிஞர் புதுகை தீஇர அவர்களின் சகோதரர் ஆவார். இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் தனது மாணவர்களையும் சிறந்த எழுத்தாளராகவும், கவிஞராகவும் உருவாக்குவார் என நம்புகிறேன். நான் புதுகையில் தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை கிளை துவங்குவதற்காக ஒருங்கிணைப்பாளராக புதுகை சென்றபோது இரண்டு நாட்களாக என்னோடு இணைந்து ஆலோசனை வழங்கி புதுகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலக்கிய அமைப்புகள் பற்றி எடுத்துக் கூறி உதவி செய்த அருமை நண்பராவார். இவரும் நமது #தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையின் புதுகை மாவட்ட நிர்வாகியாக பொறுப்பேற்று செயல்படுவார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

நூலைப் பற்றி;
""""""""""""""""""
#விரிசல் எங்குள்ளது என்ற கேள்விக்கு வித்தியாசமான முறையில் புதுக்கவிதையில் புகுத்தியிருக்கிறார் சமூகத்தின் விரிசல்களை ஆசிரியர் சோலச்சி அவர்கள்.

அழகிய சிநேகிதமாய் தொடங்கி மந்திர சாவியால் முடித்தவிதம் அற்புதம்.

#அவிழ்த்து_விடச்சொல் எனும் கவிதையில்

"ஆணவத்தை சுமந்து கொண்டு
வடக்கு நோக்கி
போகும் போதெல்லாம்
அவமானப்பட்டே
திரும்புகிறோம்...!"

என்று ஆணவ அரசியலால் அழிந்துவரும் விவசாயம் பற்றி அழகான சொல்லால் சாடியிருக்கிறார்

விவசாயம், காதல், அரசியல் என அனைத்தையும் தமிழால் துவைத்து கவிதைகளாக தொங்க விட்டிருக்கிறார்.

#நாய்நாடு எனும் கவிதையில்

"தொண்டு செய்யும் அரசியலோ
துவண்டு போச்சுடா - இது
பணம் காய்க்கும் தொழிலாக
மாறிப் போச்சுடா"

என இன்றைய அரசியலின் நிலைபற்றி அப்பட்டமாக சொல்லி அந்த அரசியலை எப்படி #திருப்பி_அடி ப்பது என்பது பற்றி

"தேசம் உன் கையில்
தெளிவு பெறட்டும்
நீ
தொடும் மையில்"   என்றும்

விவசாயத்திற்கு ஆதாரமான மழைநீர் உற்பத்திக்கு காரணமாக இருக்கும் மரமே மழைநீர் குறைவிற்கும் தடையாக இருப்பது பற்றி #கருத்தடை_மாத்திரை எனும் கவிதையில்

"கடகடனு வளரும்
யூகலிப்ட்ஸ்சு
மழை மேகத்தின்
கருத்தடை மாத்திரை"   என்று

எதார்த்தமாய் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் இன்று சாதிகளால் சாகடிக்கப்படும் காதல்பற்றி #பிறப்பு_ஒரு_முறை என்னும் கவிதையில்

"மனம்
ஒத்துப் போனால்
வாழட்டும்...
பிறப்பு ஒருமுறை
உயிர் எடுக்க வேண்டாம்
தொடரட்டும் தலைமுறை...!"  

என்று எதார்த்த வரிகளால் மெருகேற்றியுள்ளார். அதேபோல் காதலால் விதைத்த கவிதையினை கையாண்ட விதம் பாருங்கள்

"விதண்டாவாதம் செய்யும்
உன்னைவிட்டு
விலகி நடக்கிறேன்
என் வருகையை நோக்கி காத்திருக்கிறது
எனக்கான விதை...!
இதோ விதைத்துவிட்டேன்...!"

என அற்புதமாக சொல்லியிருக்கிறார். #மிகக்_கொடியவன் எனும் கவிதையில்

"எத்தனை எத்தனையோ
அவதாரங்கள்
எடுத்தும் பயனில்லையே
இல்லாத இவர்களாலே
நாளும் தொல்லையே..."

என்று கடவுளையே சாடும் சாட்டையடி வார்த்தைகளால் சிலிர்க்கிறது இதயம். படித்து பயன் பெறுங்கள். மிக அருமையான கவிதைப் பெட்டகம் இவர் இன்னும் பல சமுதாய சாடல் கவிதைகளையும் சரித்திரம் படைக்கும் பல சிறுகதைகளையும் படைத்து வெற்றிபெற வாழ்த்துகள்.
                        நன்றி
புரட்சித்தமிழன் சத்தியசீலன்
பேச : 9994959035
            7598638802

3 கருத்துகள்:

புரட்சித்தமிழன் சொன்னது…

இன்னும் பல நூல்கள் இயற்றி சரித்திரத்தில் இடம்பிடிக்க வாழ்த்துகள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அருமையான மதிப்பீடு. மதிப்புரையாளருக்கு நன்றி. உங்களுக்கு வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
வாழ்த்துக்கள் நண்பரே