''ஆயிரங்காலத்து காதல்'' கவிஞர் பிறைமதி கவிதை நூல் குறித்து....
காதலோடு வாழ்வோம்....
பணத்தோடு வாழ்வதுதான் இப்பிறவியில் பிறந்ததன் பிறவிப்பயன் என்று ஒரு கூட்டம் பணத்தின் பின்னால் அலைந்துகொண்டு இருக்கிறது. சாதியை தன் இரத்தத்தில் கலந்து திமிரோடு வாழ்வதுதான் வாழ்க்கை என்று ஒரு கூட்டம் பித்து பிடித்து திரிந்து கொண்டு இருக்கிறது. பதவி சுகம்தான் வாழ்க்கையில் யாம் பெற்ற பேறு என்று, அரசியல் போதையில் சிக்கி ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். எல்லோரும் மகிழ்வோடு வாழ வேண்டும் என்று எவரும் எண்ணுவதே இல்லை. மன நிறைவான வாழ்க்கை வாழ வேண்டுமா காதலோடு வாழுங்கள். காதல் உங்களை வழி நடத்தும் ; காதல் உங்களை மனிதனாக்கி மகிழ்ச்சியை நிலைநிறுத்தும்.
என் அருமை நண்பர் கவிஞர் பிறைமதி அவர்களின் "ஆயிரங்காலத்து காதல்..." என்கிற கவிதை மகிழ்ச்சி நிறைந்த புதிய உலகிற்கு உங்களை அழைத்துச் செல்லும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
கவிஞர்களுக்காக எழுதுவது கவிதை அல்ல... கவிதையின் பரிணாமம் மாறிவிட்டது என்பார்கள்.யாருக்காக நாம் கவிதை எழுதுகிறோம் என்பது மிக முக்கியம். பாமரரும் புரிந்து கொள்ளும் விதத்தில் கவிதைகள் படைக்க வேண்டும். அந்தக் கவிதைகள்தான் காலத்திற்கும் நிற்கும். எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும் கவிதைகளை தமிழ்ச்சமூகத்திற்கு வழங்கியுள்ள என் ப்ரியத்திற்குரிய தோழர் கவிஞர் பிறைமதி அவர்களுக்கு எனஹ நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பேச்சாளர்கள் சிலரின் பேச்சைக் கேட்டாலே நாடி நரம்புகள் புடைத்து நிற்கும். சிலரின் கவிதைகள் இறுக கட்டி தழுவிக்கொள்ளும். இதமாய் தழுவிக்கொள்ளும் கவிதைகளை நேர்த்தியாக வழங்கி பைந்தமிழுக்கு புகழ்மாலை சூடியிருக்கிறார் கவிஞர் பிறைமதி அவர்கள்.
கவிஞர் அவரது காதல் மனைவிக்கும் அவர்களின் காதலுக்கு அடையாளமாய் திகழ்ந்துகொண்டு இருக்கும் அன்பு மகளுக்கும் இதை பரிசாக வழங்கியிருக்கிறார். இதன் மூலம் தமது இல்லக் காதலை நம்மால் உணர முடிகிறது.
அழகு எது என்று கேட்டால் பலரும் பலவிதமாக சொல்லுவார்கள். சிலர் ஏதாவது சொல்லியும் சமாளிப்பார்கள். நூலின் முதல் கவிதையிலேயே காதலுக்குள் நம்மை மூழ்க வைக்கிறார்.
"கொட்டிக்கிடக்கிறது
அழகு
உன் முகமெங்கும்...."
-என்று சொல்லி அசத்துகிறார். உங்கள் காதலியிடம் அல்லது மனைவியிடம் இந்தக் கவிதையை சொல்லிப்பாருங்கள். உங்களை உச்சி முகர்ந்து கொண்டாடுவார்கள். அனுபவித்து பார்ப்பதன் மூலமாக உணர முடியும்.நீங்கள் அனுபவிக்கத் தொடங்குங்கள்..... நிச்சயம் உணர்வீர்கள்.
வாழ்க்கை பெரும் போராட்டமாக மாறிக்கொண்டு இருக்கிறது. ஏதோ ஒரு விதத்தில் நம்முடைய வாழ்வியல் போராட்டங்களுக்கு தடை ஆணை வந்துகொண்டேதான் இருக்கிறது. நம் கவிஞரோ ரசனை மிகுந்த வரிகளால் நம்மை காதல் வானில்உலாவவிடுகிறார்.
"இடையிடையே
வந்து போகும் காற்றையும்
உன் இடையை
இடைவிடாமல்
பார்க்கும்
என் கண்களையும்
எந்தச் சட்டத்தின் கீழ்
தடை செய்வாய்....."
-கவித்துவத்தை காதலில் கலந்து காதல் வானில் சிறகடித்து பறக்கவைக்கும் கவிஞர் பிறைமதி அவர்களை தமிழின் இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகளையும் ஒன்றாக்கி வாழ்த்த வேண்டும். நான் மனசார வாழ்த்துகிறேன்.
எத்தனையோ முத்தங்களை நாம் வாங்கியிருக்கலாம்.... கொடுத்திருக்கலாம்... பார்த்திருக்கலாம். திரைப்படத்துறையில் முத்தக்காட்சிக்கு தனித்துவம் உண்டு. எங்காவது தலைமுடி முத்தம் கொடுத்து பார்த்திருக்கின்றீர்களா.... அவளின் தலை முடியே பார்த்து வியக்கும் பேரழகு கொண்டவள் என்பதை கவிஞர் இவ்வாறு படைத்திருக்கிறார்.
"இப்போதுதான் பார்த்தேன்
ஓர் அதிசயத்தை
உன் தலைமுடி
முத்தம் கொடுக்கிறது
உன் கன்னக்குழிக்கு....."
-இதை வாசிக்கும் ஒவ்வொரு பெண்களும் தலைவாரும் போதெல்லாம் அல்லது தலைமுடி முகத்தில் உரசும்போதெல்லாம் இந்தக் கவிதையை உச்சரிக்காமல் நகரமாட்டார்கள்.
துவண்டு போய் இருப்பவர்களுக்கு அருமருந்தாக இருப்பது அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்தான். நெருக்கமானவர்களின் சொற்கள் உயிர் பிழைக்க வைத்துவிடும்.
"ஏன் பிறந்தேன் என்று
நினைக்கும்போதெல்லாம்
எதிரில் நீ
வந்து போகிறாய்.... "
- கவிஞர் பிறைமதி அவர்களின் கவிதைகள் முரட்டுத்தனமாய் ஒருதலையாய் காதலிப்பவர்களுக்கானது அல்ல. மனம் ஒத்து பிறர் மனம் அறிந்து காதலிப்பவர்களுக்கானது. கவிதைகள் ஒவ்வொன்றும் உயிரோட்டமிக்கது.
கவிதையையும் முத்தத்தையும் கவிஞர் பிறைமதி போல் ஆழமாக யாரும் யதார்த்தமாக சிந்தித்திருக்க மாட்டார்கள். காதல் இளஞ்சோடிகள் ஒன்று அழகிய பூங்கா ஒன்றில் சந்தித்து பேசுகிறார்கள். அங்கு பூக்களும் மரங்களும் செடிகொடிகளும் நிறைந்து காணப்படுகின்றன. ஆள் அரவமற்ற சூழல் நிலவுகிறது. பறவைகள் இந்தக் காதலர்களையே பார்த்த வண்ணம் இருக்கின்றன. அப்போது காதலி தன் மெல்லிய இதழ்களை திறந்து காதலனிடம் கவிதை ஒன்று கேட்கிறாள் .. அதற்கு காதலன் சொல்கிறான்.....
"ஒது கவிதை கொடு
முத்தம் தருகிறேன் என்கிறாய்
நீ
முத்தம் கொடுத்தால்தானே
கவிதையே வரும் ...."
-ஆகா.... எவ்வளவு இணக்கமான இதமான காதல் என்பதை நம்மால் உணர முடிகிறது. இந்தக் காதல்தான் ஆயிரங்காலத்து காதல்.
எல்லோருக்கும் தன் காதலி மட்டுமே உலக அழகியாக தெரிவார்கள். அதற்காக மற்றவர்களின் அழகை குறைத்து மதிப்பிடுவது மனித இயல்பு. ஆனால் கவிஞர் பிறைமதி அவர்களோ...
"பெண்களெல்லாம்
அழகிகள்தான்
நீ மட்டும்தான்
உலக அழகி....."
-என்று காதலின் உச்சத்தை தொட்டு இனிதே உலாவிக்கொண்டு இருக்கிறார்... நம்மையும் உலாவச் செய்கிறார்.
பெண்களை போதைப் பொருளாக பார்க்கும் சிந்தனை பெருகிவிட்ட காலக்கட்டத்தில் கவிஞர் பிறைமதி இவ்வாறு தனது காதலை பதிவு செய்கிறார்.
"உன் கன்னத்தை
கிள்ளி விளையாடத்தான் ஆசை..
பூக்களை கசக்குமளவு
கொடூரன் இல்லையே நான்..."
கவிதை நூல் முழுவதும் காதல் ரசம் நிறைந்து கிடக்கிறது. இதை வாசித்து உணர்வதன் மூலம் அனுபவிக்க முடியும். ஆயிரங்காலத்து காதல் மூலம் மிகப்பெரிய காதல் கடலை கட்டி எழுப்பியிருக்கிறார் கவிஞர் பிறைமதி. இந்தக் கடலில் நீங்கள் தாராளமாக நீந்தலாம். அது உங்களை மகிழ்விக்கும்.
காதல் செய்யுங்கள்... காதலோடு வாழுங்கள் ... கவிதைக்கேற்ற படங்கள் வாசிப்பவரை வசீகரம் செய்கிறது. ஆயிரங்காலத்து காதலை ஒவ்வொரு இல்லமும் நேசிக்கட்டும் .
இந்நூலினை நண்பர்கள் பதிப்பகம் மிகச் சிறப்பாக வெளியீடு செய்திருக்கிறது. தொண்ணூற்றாறு பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் அறுபது மட்டுமே (60/-)
பதிப்பக முகவரி :
நண்பர்கள் பதிப்பகம்
145பி, கோபாலகிருஷ்ண காம்ப்ளக்ஸ்,
நேதாஜி சௌக்,
குடியாத்தம் -632602
வேலூர் மாவட்டம்
பேச : 8925335858
கவிஞர் பிறைமதி : 9843514251
மின்னஞ்சல் : poetpiraimadhi@gmail.com
அன்பு பண்பு பாசம்
நட்பின் வழியில் எந்நாளும்
சோலச்சி புதுக்கோட்டை
பேச :9788210863
2 கருத்துகள்:
அருமையான விமர்சனம் பா
எளிமையான அருமையானவிமர்சனம்...
கருத்துரையிடுக