திங்கள், 17 செப்டம்பர், 2018

பக்குவமாய் மனசு - சோலச்சி


பக்குவமாய் மனசு....
எதற்கோ
பயந்து ஓடுவதாகவே
உணர்ந்தேன்
இதுநாள் வரை.....

ஓடி ஓடி மறைந்தபோதும்
துரத்தி அடிக்கிறாய்
உன் துப்பட்டாவால்
அந்த மேகத்தை....!

நீ
ஓய்வு எடுப்பதன்
உச்சநிலைதானோ
அமாவாசை ........!

வெல்வதும்
பின் வாங்குவதுமான
நிலையில்
தொடர்ந்தபடி....!

மகிழ்ச்சியின் உச்சத்தில்
முழு நிலவாய்.......
தேய்ந்து
மறைந்த போதும்
பணியைத் தொடர்ந்தபடி
நீ.....!

மகிழ்ச்சியின் உச்சத்தில்
மகிழ்வதும்....
தொய்வின் நிலையில்
தொலைந்து
போவதுமாய் நான்.....

எனக்குள்ளும்
இருக்கிறது
உணரத் தொடங்குகிறேன்....
பக்குவமான
என்மனதை
ரசித்தபடி......!
           - சோலச்சி
[ எனது காட்டு நெறிஞ்சி கவிதை நூலிலிருந்து ]