ஞாயிறு, 21 ஜூலை, 2019

வளர்ச்சியும் வீழ்ச்சியும் - சோலச்சி





இலைகள் பழுத்த
மரம் ஒன்றில் அமர்ந்து
எச்சமிட்டு பறக்கிறது
பறவை ஒன்று....

காய்த்துக் குலுங்கும் மரங்களில்
கச்சேரி நடத்துகின்றன
பறவைகள்....

பட்டுப்போன பெரும்மரங்களை
பயன்படுத்திக்கொள்கின்றன
பச்சைக்கிளிகளும் ஆந்தைகளும்
தனக்கான வீடுகளாக....

பல நேரங்களில்
பட்ட மரங்களை
வெட்டி வீழ்த்தி விடுகிறது
காற்று....

அடி மண்ணை
வெள்ளம் அடியோடு
அடித்துச் சென்றாலும்
எங்கோ ஓரிடத்தில்
முளைத்து விடுகின்றன
அதன் விதைகள்.....






விதைகள் இடம் மாறி முளைத்தாலும்
பெயர் மாறி முளைப்பதில்லை...

ஆலம் விதை ஆலமரம்தான்
பனை விதை  பனை மரம் தான்...

விதைகள் பக்குவமானதாய்
இருக்கும் வரை
வீரியத்தோடுதான் எழும்...

உறிஞ்சும் நீரை பொறுத்தே
உறுதி செய்யப்படுகிறது
வளர்ச்சியும் வீழ்ச்சியும்....!!!

        - சோலச்சி புதுக்கோட்டை
           

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
விதைகள் வீரியத்தோடு எழட்டும்