வெள்ளி, 21 அக்டோபர், 2022

வெள்ளந்தி மனிதர்கள் - மண்டகொளத்தூர் கவிஞர் நா.காமராசன்


   கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசனின் "வெள்ளந்தி மனிதர்கள் '' - சோலச்சி

     



ஒவ்வொரு முறையும் நாம் பிறக்கப் போவதில்லை. அறிவியலின் அதீத வளர்ச்சியில் உயிரின் பிறப்பைக் கூட உறுதி செய்துவிட முடிகிறது. ஆனால் அந்த உயிர் எப்போது பிரியும் என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது என்பதை உணர்ந்தும் , இந்த நிலத்தை நாம் படுத்துகின்றபாடு இருக்கின்றதே அதை எழுத்திலும் எழுதிவிட முடியாது. பேராசைகளால் குவிந்து கிடக்கிறது மனித வாழ்க்கை.

    வாழ்க்கை இதுதான் என்பதை உணர்ந்து வெள்ளந்தியாக வாழ்பவர்களை பார்த்தால், பிழைக்கத் தெரியாதவன் ; ஏமாளி ; கிறுக்குப்பயல் என்று இன்னபிற பெயர்களால் அழைக்கின்றோம். எது எப்படியோ..... ஏதோ ஒரு நோக்கத்தில்தான் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். நோக்கம் சரியாக இருந்தால் பாதையும் சரியானதாகவே அமையும்.

அமாவாசை கருக்கல்
மூக்கிவீட்டு நாய்வேற கத்திகீனேகீது!
செவிடன் முள்ளேலி தோட்டத்து
வழியாத்தான் கொல்லைக்கு போகனும் ;
      - என்று வெள்ளந்தியாக பேசும் மனிதர்களின் பேச்சு வழக்கினை அப்படியே படம்பிடித்து தான் வாழ்ந்த,  வாழ்கின்ற வாழ்க்கையை கவிதை நூலாக புனைந்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கி இருக்கிறார் மண்டகொளத்தூர் கவிஞர் நா.காமராசன் அவர்கள். 

    எதற்காக வாழ்கிறோம் என்று தெரியாமல் ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீரர்களைப் போல ஓடிக்கொண்டே இருக்கின்றோம். உறவுகளைப் பற்றியெல்லாம் எண்ணுவதற்கு நேரமில்லை. கூடப் பிறந்தவர்கள் யார் என்பதே தெரியாமல் பலரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.  தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என பெரும்பாலும் வாழ்க்கையை சுருக்கி விட்டோம். அஞ்சு வயசுல அண்ணன் தம்பி, பத்து வயசுல பங்காளி என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. இதை பாதிக்கப்பட்ட ஒருவனால்தான் இப்படி சொல்லியிருக்க முடியும். அதற்காக அதேயே பிடித்துக்கொண்டு தொங்குவது எந்த விதத்தில் நியாயம். 

   இந்நூலில் 'அம்மா'வான அண்ணன் என்றொரு கவிதையை படைத்திருக்கிறார் கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசன் அவர்கள்.  அந்தக் கவிதையை யார் வாசித்தாலும் நமக்கொரு அண்ணன் இல்லையே என்கிற ஏக்கமும் அண்ணன் இருந்தால் அவர்மீது மேலும் வளர்கிற உன்னதமான அன்பினையும் உணர முடியும்.
 
சார் நா வேலைக்கு
போகலனாலும் பரவாயில்லை ;
இவனுக்கு நாலெழுத்து சொல்லிக்குடுங்க
இவனும்
என்ன மாதிரி
மரம் வெட்ற
வேலைக்கு வந்துடக்கூடாது ;
இந்த வெயிலு முள்ளு
சொன எல்லாம்
எங்களோட போகட்டும் சார்..!

  - என சொல்லுவதாக கவிதை நிறைவு கொள்கிறது. இந்தக் கவிதையை வாசித்ததும் என் வாழ்வில் நடந்த நிகழ்வு ஒன்று நெஞ்சில் ஊஞ்சலாடுகிறது. நான் பன்னிரெண்டாம் வகுப்பில் படித்து முடித்ததும் அரசு தொழிற்கல்வியில் சேர்ந்து படித்தேன். அப்போது என் அண்ணன் சென்னையில் தனியார்‌ தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். என் அண்ணன் கவிஞர் புதுகை தீ.இர அவர்கள் கண்ணீர் மல்க கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் "நான்தான் ஐடிஐ படிச்சுட்டு கம்பெனியில் இரும்பு ராடுனு கஷ்டப்படுறேனு பாத்தா தம்பியுமா கஷ்டப்படனும். அவன் படிச்சுட்டு நிழலுல வேலை பாக்கனும். என்னோட கஷ்டம் அவனுக்கு வரக்கூடாது '' என்று எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தைப் படித்துக் காட்டியதும் என் அம்மாவும் அப்பாவும் ஓவென அழுதார்கள். நீ நெழலுக்குள்ள தாய்யா வேல கெடைக்கும்னு எங்க அம்மா அப்பா சொன்னதும், எனக்கு ஆசிரியர் பயிற்சியில் படிக்க இடம் கிடைத்ததும் என் அண்ணன் என்னை ஆரத்தழுவி மகிழ்ந்ததையும் எண்ணிப் பார்க்கிறேன். என் உணர்வுகளை மீட்டெடுத்த கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசன் அவர்களுக்கு நன்றி பாராட்டுகின்றேன். உறவின் உன்னதத்தை உங்களாலும் உணர முடியும்.

சுருக்கைப்பை சிதறியது
சில்லறையோடு
அவள் முடிந்து வைத்த முந்தானை
மட்டும் இன்னும் இறுக்கமாய் இடுப்போடு
ஒட்டியிருந்தது
சில ஆயிரம் நோட்டுகளோடு
புளி நறுக்கிய காசுகளாய்...

     - என்று செல்லாத்தா பாட்டி பற்றிய கவிதையில் தன்னை மறந்து கண்ணீரை வரவழைக்கிறார் கவிஞர். தன்னோடு வாழ்ந்தவர்களையும் வாழ்கின்றவர்களையும் படம்பிடித்துக் காட்டுகிறார் கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசன் அவர்கள்.  கவிஞரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மழை பற்றிய கவிதையொன்றில்

மழை நின்றும் தூவானம்
விடவில்லை
அதோ அந்த அரசமரத்தின்
ஒவ்வொரு இலைகளிலிருந்தும்
இன்னும் சிதறிக்கொண்டிருந்தது...

      - என்று குறிப்பிடுகின்றார். இக்கவிதையில் கவிஞரின் ரசனையை உணர முடியும். கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசன் அவர்கள்,  பார்த்த காட்சியை அப்படியே படம் பிடிக்காமல் தன் கற்பனை ஓட்டத்தையும் சுழல விட்டிருக்கின்றார்.

கூத்து முடிந்து ஊர் திரும்புகையில்
பொழுது விடிந்திருந்தது
சாணிக்கூடையோடு எதிரில்
வந்த அம்மாதான் கத்தினாங்க ;
"ஒரு நாலுநடை இந்தக் குப்பையை
அள்ளிக்கூட கொட்ட முடியாதாடா''
என்று சொல்லி முடிப்பதற்குள்
குப்பைக்கூடை இடமாறியிருந்தது
என் தலைச்சுமையில்..!

    - மண்வாசம் என்கிற கவிதையில் இவ்வாறு காட்சிப்படுத்துகிறார். அம்மாவின் சாமர்த்தியத்தையும் கவிஞரின் நடையழகையும் வெகுவாகப் பாராட்டி மகிழ்கின்றேன். ''இதைத்தின்னா என்ன கொறஞ்சா போயிருவ'' என்று சொல்லும் எத்தனையோ அம்மாவைப் பார்த்திருப்போம். அப்படி சொல்லும் போதே பிள்ளையின் வாயுக்குள் அந்த உணவு சென்றிருக்கும். அதுதான் அம்மா.

முடங்கிக்கிடந்த சமூகத்தில்
நொண்டியாய்க் கிடந்தவனுக்கு
ஊன்றுகோலானது
ஈரோட்டுக் கைத்தடி...

டெல்லிக்காரனின் உறவை முறி
விடுதலைக்கனலை காற்றில் எறி
பூணூல் தேசம் பொசுங்கட்டும்
       - என்று கொதித்தெழுகின்றார்.

தொட்டால் தீட்டு
பார்த்தால் தீட்டு
அத்தனைக்கும் மொத்தமாய்
வைத்தான் வேட்டு..
     - என்று அண்ணல் அம்பேத்கார் பற்றி மெய்சிலிர்க்கிறார்.

சோறு விளைந்த பூமியில்
கற்கள் முளைத்திருக்கிறது
அங்கிங்கெனாதபடி ;
இங்கே நெற்களுக்கு
விலையில்லை
மனை கற்களுக்கே விலை ..!

         - விளை நிலங்கெல்லாம் மனைகளுக்காக விலை போனது பற்றிக் கவலைப்படுகின்றார் கவிஞர். வாய்கிழிய பேசும் நாம் விவசாயம் செய்யத் தயங்குகின்றோம். ஆனால் தயக்கமில்லாமல் உணவில் கை வைக்கின்றோம்.

பூமியின் உயிர் ஆறுகளால் நிர்ணயிக்கப்படுகிறது. பூமியின் இரத்த ஓட்டமே ஆறுகள்தான். நாம் ஆறுகளை கொலை செய்து பூமியின் இரத்த ஓட்டத்தை தடை செய்கிறோம். இரத்த ஓட்டத்தை தடை செய்வதன் மூலம் நாம் நம்மையே அழித்துக் கொள்கிறோம்.

நதியோடிய இடமெல்லாம்
இன்று நரியோடுகிறது
சுரண்டல் நரியோடுகிறது...

       - என்று வேதனைப்படுகிறார். தனது கவிதைகளில் சமூக அக்கறையை காட்டியிருப்பதன் மூலம், தான் யார் என்பதையும் நிரூபித்திருக்கிறார் கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசன் அவர்கள்.

  கைத்தடி மாத இதழில்,  மாதந்தோறும் கடைசிப்பக்க கவிதையை வாசகர்கள் தேடும் அளவு தன்னுடைய கவிதை திறமையால்,  வாசகர்களை ஈர்த்த கவிஞர், வடக்கத்தி மழை என்ற தன்னுடைய முதல் கவிதை தொகுப்பின் வழியாக கூடுதல் வாசகர்களை கவர்ந்த கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசன் என்று பதிப்பகத்தார் திரு
மு.சி.அறிவழகன் புகழாரம் சூட்டி மகிழ்கின்றார். இந்த புகழ் மகுடத்திற்கு சொந்தக்காரரான கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசன் அவர்களை நாமும் வாழ்த்தி மகிழ்வோம்.

  எல்லோரும் விவசாயத்தை பற்றிய பேசுகிறோம் படிக்கிறோம். அது வெறும் அனுபவமற்ற அடுத்தவர்களின் சிந்தனை அவ்வளவே எனும் நிலையில் ; தோழர் , கூழுக்கு வழியற்ற ஒரு ஏழை செய்யும் விவசாயத்திற்கும் மேட்டுக்குடி விவசாயத்திற்குமான இடைவெளியை கனத்த வலிகளோடு அதன் தன்மை குறையாமல் மிக அழகாக சொல்லியுள்ளார். தன்னுடைய நண்பர்கள், ஆசிரியர்கள், அக்காமார்கள், பாட்டிகள், பெற்றோர்கள் என ஒரு பெருங்கூட்டங்களுடனேயே இந்நூலென்கிலும் நடத்துகிறார் கவிதை பிரசங்கத்தை என்று உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார் அணிந்துரை வழங்கிய தோழர் ப.பார்த்திபன்.

    தோழர் ப.பார்த்திபன் அவர்களின் கூற்றினை நாமும் வழிமொழிந்து உரக்கச் சொல்கின்றோம் '' வெள்ளந்தி மனிதர்கள் '' வாகை சூடுவார்கள்.

    2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இக்கவிதை நூல்  112 பக்கம் கொண்டது. இந்தக் கவிதை நூலினை தருமபுரி மதி பப்ளிகேசன் வெளியீடு செய்திருக்கின்றது. ரூபாய் 100/- விலை கொண்ட இந்த ''வெள்ளந்தி மனிதர்கள்" அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய வாசிக்க வேண்டிய சிறப்பான நூல்.

  


    மண்டகொளத்தூர் கவிஞர் நா.காமராசன் அவர்கள் படம்பிடித்துக் காட்டும் வெள்ளந்தி மனிதர்கள் நிலமெங்கும் பரந்து விரிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நாம்தாம் அவர்களோடு வாழ்வதில்லை.   தங்கள் பகுதியில் புழங்கும் சொற்களை எந்தவொரு சாயமும் பூசாமல் அப்படியே பயன்படுத்தி அழகு தமிழுக்கு அணிகலனாக ''வெள்ளந்தி மனிதர்கள் '' நூலினை படைத்திருக்கும் கவிஞர் மண்டகொளத்தூர் நா.காமராசன் அவர்கள் இன்னும் ஏராளமான நூல்களை தமிழ், மென்மேலும் மன நிறைவு கொள்ளும் வகையில் படைக்க வேண்டும் என வாழ்த்துகின்றேன். 

    இந்த இனிய நூலினை சென்னையிலிருந்து எனக்கு அனுப்பி வைத்த நாஞ்சில் நாட்டான் என்று அன்போடு அழைக்கப்படும் தமிழர் எழுச்சிக்குரல் மாத இதழின் ஆசிரியர் தோழர் ஆ.பத்மநாபன்  அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

நூலாசிரியர் :
கவிஞர் நா.காமராசன்
29/77, விநாயகபுரம் முதல் தெரு,
அரும்பாக்கம்,
சென்னை - 600106
பேச: 72003 17638

வெளியீடு:
மதி பப்ளிகேசன்,
தருமபுரி - 635205
பேச: 73733 33078
மின்னஞ்சல் : madhipublication@gmail.com

     - பேரன்பின் வழியில்
          சோலச்சி அகரப்பட்டி
          பேச : 9788210863


1 கருத்து:

சீராளன் சொன்னது…

யதார்த்தமான கவிதைகள் தங்கள் விமர்சனம் இன்னும் அழகுபடுத்துகிறது வாழ்த்துக்கள் இருவருக்கும்