செவ்வாய், 22 நவம்பர், 2022

2022 நவம்பர் செம்மலர் சிறுகதைகள்

 

வம்பர் 2022 செம்மலர் மாத இதழ் வாசித்தேன். வழக்கம்  போல் மார்க்ஸிய சிந்தனையோடு ஒளி வீசிய இதழில் வெளிவந்த சிறுகதைகள் குறித்து பார்க்கலாம். வாங்க....


 
    
    1.முதலில் எழுத்தாளர் அன்னக்கொடி அவர்களின் ''வெள்ளாவி'' என்கிற சிறுகதை குறித்து ;

    முழுக்க முழுக்க எழுத்தாளரின் வட்டார வழக்குச் சொல்லில் அழகிய கதை சொல்லியாக வெள்ளாவி சிறுகதையை வடித்தமைக்காக தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய இளம் தலைமுறையினர் பலர் வாசிங் மிசினோடு வாழ பழகிக்கொண்டுவிட்டதால் வெள்ளாவி என்றால் என்ன என்பது பற்றிய புரிதல் இருக்க வாய்ப்பில்லை. நடிகர் தனுஷ் அவர்களின் ஆடுகளம் படத்தில் கவிஞர் சினேகன் அவர்கள் ''அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா
உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா
நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே நானே நானே'' என்று எழுதியிருப்பார். பாடலின் பொருள் புரிகிறதோ இல்லையோ பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய பாடல் அது.

  வெள்ளாவி போன்ற சொற்களை பயனபடுத்துவதெல்லாம் அரிதினும் அரிது. காரணம், ஒரு செயல் நடைபெறாமல் வழக்கத்திலிருந்து நின்றுவிட்டால் அது சார்ந்த சொற்களும் மறைந்துவிடுவதை காண முடிகிறது. தமிழ் சொற்கள் எது பிறமொழிச் சொற்கள் எது என நம்மால் அடையாளம் காணமுடியவில்லை.  நம்மோடு அவை இரண்டறக் கலந்துவிடுகின்றன.

    துணி வெளுக்கும் சமூகத்தைச் சேர்ந்த வெள்ளையனுக்கும் மேட்டுக்குடியைச் சேர்ந்த முத்தையா மற்றும் அழகு என்பவளுக்குமான வாழ்வியலை போகிற போக்கில் சொல்லிவிட்டுச் செல்லும் நடையழகை தனது எழுத்தில் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் அன்னக்கொடி.

    வெள்ளையனை காவலர்கள் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்கிறார்கள். உண்மையைச் சொல்லச்சொல்லி துன்புறுத்துகிறார்கள். கடுகளவும் கசியாமல் வேதனையைத் தாங்கிக் கொள்கிறான். ''என்ன இருந்தாலும் வவுத்த ஆத்துன வீடு அதுனால காட்டிக்கொடுக்க மனசில்லை'' என நினைத்துக் கொள்ளும் வெள்ளையன், ''நம்மளை கையும் களவுமா பிடிக்கத்தேன் வாரான்னு பிடுங்கி எடுத்து ஓட ஆரம்பிச்சேன். அப்ப அந்த கதவுக் கொண்டி என்னோட வேட்டியப் பிடிச்சு இழுத்துருச்சு. ஆள் தப்பிச்சாப் போதுமுன்னு ஓடி வந்துட்டேன்'' முத்தையா சொல்வதும், அழகு மட்டும் வாசலில் நின்னு சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் முத்தையாவையே பார்த்துக்கொண்டு இருந்த காட்சியும் நம் கண் முன்னால் வெள்ளித்திரையாக ஓடிக் கொண்டிருக்கிறது. புது மாதிரியான கதைக்களத்தை உருவாக்கி வாசகர்களின் சிந்தனை ஓட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்ட எழுத்தாளர் அன்னக்கொடி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

   2. எழுத்தாளர் அ.பாக்யசெல்வி அவர்களின் ''காலம்''

   ஆன்மீகத்தில் மூழ்கிய ஒரு குடும்பப் பெண்ணின் கதையை எதார்த்தமாக சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் அ.பாக்யசெல்வி. சாஸ்திரமும் சம்பிராதயமும் நிறைந்த குடும்பத்தலைவியாக வலம் வருகிறாள் தனம். தன் மகனை அளவுக்கு அதிகமாகவே செல்லம் கொடுத்து வளர்க்கிறார் தந்தை.
     
   "குழந்தைக்கு எது பிடிக்குதுன்னு கேட்டு செய்றத விட்டுட்டு உப்புமா செய்ற உன் தொல்ல தாங்க முடியல.... வெள்ளிக்கிழமையானாப் போதும் சாங்கியம் சம்பிரதாயம் என்று,  இப்படியே இருக்காம வேலையைப் பாரு'' என்கிறார் தனத்தின் கணவர். தாய் ஆன்மீகம் மற்றும் தந்தை நாத்திகர் இப்படி பயணிக்கிறது கதை.

     பூசணிக்காயை தெருவில் உடைத்து வீணாக கிடப்பதைப் பார்த்து தந்தை பெரியார் வேதனைப்படுவார். சாம்பார் கூட்டு வச்சு சாப்பிட்டாக்கூட உடம்புக்கு நல்லது.  இப்படி ஒன்னுக்கும் ஆகாம தெருவில் உடைக்கிறீங்களே என்பார். தெருவில் உடைத்த பூசணிக்காய்தான் தனத்தின் கணவர் உயிரையே எடுக்கிறது. காலத்தின் குரலாய் அம்மனையே முறைத்துப்பார்த்துவிட்டு பகுத்தறிவு சிந்தனையோடு தனம் வேலைக்கு செல்வதாக காட்சிப்படுத்தியிருக்கும் எழுத்தாளர் அ.பாக்யசெல்வி அவர்கள் நல்ல கதைசொல்லிதான்.

3. சிட்னி,அவுஸ்திரேலியா எழுத்தாளர் தேவகி கருணாகரன்,

    பிரியாவும் ஜேம்சும் என்கிற அற்புதமான கதைக்களம். நடைமுறை அறிவியலின் வளர்ச்சியும் வளர்ந்து வரும் மானிட வாழ்வியல் மாற்றங்களையும் குறிக்கும் கதை.

   தொடக்கத்தில் கதையை வாசிக்கின்றபொழுது பிரியாவும் ஜேம்சும் இயற்கையிலேயே கணவன் மனைவி என்கிற சிந்தனையைத்தான் தோற்றுவிக்கிறது. கதைக்களம் ஆர்வமாக செல்கிறபோது இறுதியில்தான் பிரியா என்பது பிரியதர்சன் என்றும் இருவருமே ஆண்கள்தான் என்றும் புரிகிறது. இவர்களுக்கு மகளாக கீர்த்தி பிறப்பது போன்ற கதைக்களத்தை உருவாக்க நெஞ்சில் ஈரத்தை வளர்த்திருக்கிறார் எழுத்தாளர் தேவகி கருணாகரன்.  கதையின் நடை ஈழத்து வாசனையை கொண்டுள்ளது. 

'' டடி ! என்னுடைய ஃப்ரெண்ட் நன்சியை அவளுடைய அம்மாதான் கூட்டிக்கொண்டு போக வருவா. என்னை எப்போதும் பள்ளியில் கொண்டு போய் விடுவதும் பிறகு கூட்டிக்கொண்டு வருவதும் பிரியா தானே.'' என்று மகள் கீர்த்தி சொல்வதும்,

  ''ஜேம்ஸ்!  கீர்த்தி என்னை இடை இடையே ஒரு கேள்விக்குறியோடு பார்க்கிற மாதிரி இருக்கிறது. இந்த ஆரம்பப்பள்ளிக்கு போகத் தொடங்கியபின் தான் எல்லாம்'' என அம்மாவான பிரியா என்கிற பிரியதர்சனும் சொல்வதும் நமக்குள் ஏதோ ஒருவித மன உணர்வுகளை தூண்டுகிறது.

4. தோழர் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் அவர்களின் தாலியில் பூச்சூடியவர்கள் என்கிற கதை,

ஆதிக்க சமூகத்தின் சில அத்துமீறல்களையும் பெண்கள் மீதான வன்மங்களையும் அழகாக எழுதியிருப்பார் எழுத்தாளர். உயர்சாதிப் பெண்கள் கூந்தலில் பூச்சூடுவதும் ஒடுக்கப்பட்ட சமூகத்து பெண்கள் தாலியில் பூச்சூடுவதும் நடைமுறையில் இருந்த காலம். தாலியில் பூச்சூடியிருப்பதை வைத்தே அவர்கள் என்ன சாதி என்பதை கண்டுபிடித்துவிடலாம். கைகளில் கருப்பு கயிறு கட்டுவதே குறிப்பிட்ட சாதியை சாதியின் அடையாளம்தான். இதுபோன்ற குறியீடுகள் மனுசட்டத்தால் உருவானது. மனுதான் வர்ணங்களை உருவாக்கியது. இன்று அனைத்து சாதியிலும் பலவண்ணங்களில் கயிறு கட்டிக்கொள்கிறார்கள் என்பது வேறு.

    ''தைலி வெகு நேரமாகக் காத்திருக்கிறாள். ரெட்டி வீட்டுப் பெண்கள் கடைக்குச் சாமான் வாங்க வந்த போதுதான் அவள் வந்தாள். அவர்களுக்கு முன்னால் நின்று வாங்கக்கூடாது. ஓரமாய் நின்றே வாங்க வேண்டும்.  வாங்கிப் போய்விட்ட பிறகும் யாராவது வந்து கொண்டிருக்கிறார்கள் ''

''

   சமூகத்தில் சாதிய வாடை வீசுவதையும் ஒடுக்கப்பட்ட சமூக பெண்கள் நசுக்கப்படுவதையும் போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போய்விடுகிறார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். நம்மால்தான் அந்த இடத்தைவிட்டு நகரக்கூட முடியவில்லை. 

    மனிதனின் வாழ்வியலை எடுத்துச்சொல்லும் நான்கு கதைகளிலும் நிகழ்காலம் ,எதிர்காலம்,  கடந்த காலம் என மூன்று காலங்களையும் உணர முடிகிறது.  அறிவியலின் வளர்ச்சி எதையும் நோக்கிச் செல்கிறது என்பதையும் நம்மால் உணர முடிகிறது.

    வாய்ப்பு உள்ளவர்கள் ''செம்மலர்'' வாங்கி படியுங்கள்

செம்மலர் மாத இதழ்
6/16, புறவழிச்சாலை,
மதுரை - 625018
பேச: 0452 2669769
மின்னஞ்சல்: semmalar.tn@gmail.com

       - சோலச்சி அகரப்பட்டி
          பேச : 9788210863