வெள்ளி, 17 மார்ச், 2023

கவிஞர் தஞ்சை விஜய் அவர்களின் விதைக்குள் இருக்கிறது காடு - சோலச்சி

     






     சோலச்சி பார்வையில் “விதைக்குள் இருக்கிறது காடு”


   கவிதை என்பது வாசிக்கும் போதே புரியும் படியாக இருக்க வேண்டும். புரியாத சொற்களை பயன்படுத்தி புரியாத நடையில் எழுதுவதால் யாருக்கு என்ன பயன் தரப் போகிறது. இந்த சமூகத்திற்கு எதை சொல்ல விரும்புகிறோமோ அதை எல்லோருக்கும் புரியும்படியான எழுத்து மொழியில் எழுதுவது சாலச் சிறந்தது. எல்லோருக்கும் பொருள் விளங்கும் படியான நல்லதொரு நூலினை விதைக்குள் இருக்கிறது காடு என்கிற கவிதை நூல் மூலம் இந்த தமிழ் சமூகத்திற்கு வழங்கி இருக்கிறார் கவிஞர் தஞ்சை விஜய் அவர்கள்.




  முற்காலத்தில் கவிதைகளுக்கும் கவிஞர்களுக்கும் தட்டுப்பாடு நிறைந்து காணப்பட்டது. இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டும் என்றால் யார் எழுதுவது என்கிற சூழ்நிலையும் உருவாகி இருந்தது. ஆனால் இன்று எல்லோரும் எழுதுகிறார்கள். எண்ணற்ற நூல்கள் நமக்கு வாசிக்க கிடைக்கிறது. கவிதைகள் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்து விடுமா என்று சொன்னால் நிச்சயம் ஏதாவது ஒன்றை செய்து விடும். மனம் சோர்வாக இருக்கின்ற நேரத்தில் கவிதைகள் நம்மை அசைபோட வைக்கின்றன. உறங்கிக் கிடப்பவனை தட்டி எழுப்புகிறது கவிதை. முதுங்கி கிடப்பவனை எழுந்து நடக்க வைக்கிறது கவிதை. வாழ்வதற்கு வழி இல்லை என எண்ணி துவண்டு கிடப்பவர்களை தூண்டி விடுகிறது கவிதை. சிறுகதையை நாவலை வாசிப்பதற்கு கூடுதல் நேரமாகும். ஆனால் கவிதை அப்படி அல்ல. கிடைக்கும் நேரமெல்லாம் ஒரு கவிதையை வாசித்து விடலாம். 

  எல்லோரும் வாசிக்கும்படியான கவிதைகளை எல்லோராலும் எழுதிவிட முடியாது. ஒரு சிலரால் மட்டுமே அது சாத்தியமாகும். சாத்தியமாகும் கவிதைகளை விதைக்குள் இருக்கிறது காடு என்கிற கவிதை நூலில் படைத்திருக்கிறார் கவிஞர் தஞ்சை விஜய் அவர்கள்.

  கவிதைகள் விற்பனையாவதில்லை. கவிதைகளை யாரும் வாசிப்பதில்லை. கவிதைகள் மேடைகளில் அரங்கேற்றுவதற்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. கவிதை நூல் போட்டால் யார் ஏற்பார்கள் என்று சொல்லும் வீணர்கள் மத்தியில் கம்பீரமான கவிதைகளை படைத்தளித்து இருக்கிறார் கவிஞர் தஞ்சை விஜய் அவர்கள்.

உன் மூக்கின் மீது 

முகாமிட்டிருக்கும் 

மூக்குத்தியை 

கொஞ்சம் வெளியேற்று 

என் 

முத்தங்கள் குடியேறட்டும்... 

    இந்தக் கவிதைக்கு விளக்கம் தேவைப்படுகிறதா..? நிச்சயம் தேவைப்படாது. இந்தக் கவிதையை எழுதியவர் கவிஞர் புதுகை சிக்கந்தர் அவர்கள். காற்றமர்ந்த ஊஞ்சல் என்னும் கவிதை நூலில் இக்கவிதை இடம்பெற்றுள்ளது.

   கவிதைகள் என்பது வாசிப்பவரை தொடர்ந்து வாசிக்க வைக்க வேண்டும். இன்றைய அவசர உலகில் தமிழ் அகராதியை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ண தோன்றுகிற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அப்படியானால் நமது கவிதைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எழுதுபவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

    வாசிப்பவர்களை தொடர்ந்து வாசிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மிக நேர்த்தியான படைப்புகளை வழங்கி இருக்கிறார் கவிஞர் தஞ்சை விஜய் அவர்கள்.

  உழுதவனுக்கு உழக்குத்தான் மிஞ்சும் என்று சொலவடை உண்டு. தஞ்சை விஜய்யின் கவிதையில் வைக்கோலும் வண்டியுமாய் மிஞ்சுகின்றன. பதவியால் பணத்தால் உயர்ந்து உச்சங்களைத் தொட்டவர்களுக்கு முன்பு சமதளத்தில் பார்த்தவர்கள், பழகியவர்கள் எல்லாம் இப்போது சிறுத்துத் தாழ்ந்தவர்களாய் மாறி விடுவதை ஒரு கவிதையில் பதிவு செய்வதாக மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் பதிவு செய்கிறார்.

   உண்மையில் தனது கவிதைகளில் எவ்வித சமரசமும் இல்லாமல் பயணிக்கிறார் கவிஞர் தஞ்சை விஜய் அவர்கள். எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய நியாயமான கருத்துகளுக்கு பின்வாங்காமல் தொடர்ந்து எழுதிட வேண்டும் என கவிஞர் தஞ்சை விஜய் அவர்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

வெறும் வயிற்றில் விவசாயி

நகரத்து வாசிகள் தருகின்றனர்

குப்பைத் தொட்டியிடம் உணவு

     _ இவ்வாறுதான் கவிஞர் தஞ்சை விஜய் அவர்கள் தனது முதல் கவிதையை தொடங்குகின்றார். கிராமத்தில் இருக்கும் விவசாயிகள் நெல் மற்றும் தானியங்களை உற்பத்தி செய்வதற்கு தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து வேலை செய்கின்றனர். ஆனால் நகரத்தில் வசிக்கும் பலர் உடல் உழைப்பின் உன்னதத்தை உணராமல் தான்தோன்றித்தனமாக உணவுகளை வீணாக்குகின்றனர். 

    நகரத்தில் நடைபெறும் இல்ல விழாக்களில் ஆடம்பரம் என்கிற பெயரில் பல வகையான உணவுகளை தயார் செய்து வீணாக குப்பையில் கொட்டும் அவல நிலையை நாம் பார்த்து இருக்கின்றோம். இந்த நிகழ்வுகளை பார்த்து வேதனை கொண்ட கவிஞர் தஞ்சை விஜய் அவர்கள் தனது கவிதையால் சவுக்கடி கொடுக்கின்றார் என்று நான் உரக்கச் சொல்லுவேன். உணவு கிடைக்காமல் எத்தனையோ நாடுகள் அல்லாடுகின்றன. 

   சோமாலியா போன்ற நாடுகளில் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ரஷ்யா உக்ரைன் போரில் உணவு கிடைக்காமல் மக்கள் தவித்ததை நாம் பார்த்தோம். மேலும் கொரோனா போன்ற பெரும் தொற்று காலங்களில் உணவு கிடைக்காமல் நம் நாட்டில் எத்தனையோ பேர் இறந்து போனார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு உணவின் அருமையை உணர்ந்து உணவின் அவசியத்தை நினைத்து உணவினை வீணாக்காமல் தேவைக்கு ஏற்றார் போல் பயன்படுத்த வேண்டும் என இந்த கவிதை மூலம் வலியுறுத்துகிறார் கவிஞர் தஞ்சை விஜய் அவர்கள். கவிஞர் தஞ்சை விஜய் அவர்களின் சமுதாய கண்ணோட்டத்திற்கு நான் தலைவணங்கி பாராட்டி மகிழ்கிறேன்.

   பறவை போட்ட விதைகள்

   மனிதன் தோண்டி எடுத்தான்

   வேரோடு மரங்கள்..


 மனிதனால் இந்த பூமிக்கு என்ன பயன் என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் பூமியில் பிறந்தோம் வளர்ந்தோம் இதுவரை இந்த பூமிக்கு நாம் செய்த பயன் என்ன என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். நாம் இதுவரை ஒரு மரக்கன்றையாவது நட்டு வைத்திருக்கின்றோமா..? இன்று எண்ணிப் பார்த்தாலே மரங்களை அழிப்பதற்கு நம் மனம் தயங்கும். நாம் எதையும் எண்ணி பார்ப்பதில்லை. யார் எப்படி போனால் எனக்கென்ன நான் இப்படித்தான் இருப்பேன் என்கிற குறுகிய புத்தியோடு பலரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். மனிதன் தின்று போட்ட விதை பல நேரம் முளைப்பதில்லை. ஆனால் பறவைகளின் எச்சம் மூலமாக வந்த விதைகள் மரமாகி செழித்து வளர்கின்றன. அந்த மரங்கள் தான் நமக்கு காற்றை மழையை தருகின்றன. மரங்களை அழிக்க கூடாது என்பதை வலித்துதான் கவிஞர் தஞ்சை விஜய் அவர்கள் மேற்கண்ட கவிதையை புனைந்து இருக்கிறார். 

  

  நஷ்டமின்றி நகைக்கடை முதலாளி

  மகிழ்ச்சியாக வாழவில்லை

  கஷ்டத்தில் சுரங்க தொழிலாளி


  இந்தக் கவிதை பல அர்த்தங்களை நமக்கு கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இரவு பகல் பார்க்காமல் அலை கடலில் மீன் பிடித்து வரும் மீனவர் மனம் நிறைவாய் வாழ முடியவில்லை. ஆனால் அதை வாங்கி விற்கும் முதலாளி கோடி கோடியாய் சம்பாதித்து கோட்டை கட்டி வாழ்கின்றார். அதே போல்தான் இரவு பகல் பாராமல் விவசாயம் செய்யும் விவசாயி கடனில் மூழ்கி இறந்தும் போகின்றார். ஆனால் நெல்லை வாங்கி அரிசியாகவோ மற்ற பொருளாகவோ விற்பனை செய்யும் முதலாளிகள் கோடி கோடியாய் சம்பாதித்து மகிழ்ச்சியாய் வாழ்வதை நாம் பார்க்கின்றோம். இப்படி பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். உழைப்பு சுரண்டப்படுகிறது என்பதை தனது கவிதைகள் முத்தாய்ப்பாய் பதித்து இந்த சமூகத்தை வெட்கி தலை குனிய வைக்கின்றார் கவிஞர் தஞ்சை விஜய் அவர்கள்.


அர்ச்சகர் வீட்டில்

திருடர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்

அம்மன் நகைகள்..


  இந்த கவிதையை வாசிக்கின்ற பொழுது பராசக்தி திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நீதிமன்றத்திலே வாதிடுகின்ற அந்தக் காட்சிதான் நினைவுக்கு வருகின்றது. சமுதாயத்தில் பக்தி என்கிற பெயரில் கார்ப்பரேட் கம்பெனிகளின் கூடாரமாக கோவில்கள் பல இருப்பதை கண் முன்னே காட்சிப்படுத்துகின்றார் கவிஞர் தஞ்சை விஜய் அவர்கள். நாம் ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் ஆன்மிகம் என்கிற பெயரில் நடத்தப்படுகின்ற சுரண்டலையும் பாகுபாடுகளையும் தான் வன்மையாக கண்டிக்கின்றோம். இதுபோன்ற கவிதைகளை மிக துணிச்சலாக எழுதிய கவிஞர் தஞ்சை விஜய் அவர்களை மனதார பாராட்டி மகிழ்கின்றேன்.


நிரம்பி விட்டது குளம்

எப்போது வந்து அள்ளுவார்கள்

மிதக்கின்றன குப்பைகள்...


  நீர் நிலைகளை சுரண்டி கட்டிடங்களாக மாற்றி விட்டோம். எஞ்சி இருக்கின்ற நீர் நிலைகளையும் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்து விட்டோம். நம்முடைய இருப்பிடத்தை சுத்தம் செய்கின்றோம் என்ற பெயரில் வாழ்வாதாரத்தை வீணாக்கி விட்டோம். மண்ணில் தண்ணீர் பஞ்சம் பல இடங்களில் தலைவிரித்து ஆடுகிறது. மண்ணில் விழுந்த தண்ணீரை அள்ளி குடித்து வந்தோம். தற்போது கேண்களில் அடைத்து வைத்து தூய்மையான குடிநீர் என்கிற பெயரில் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கின்றோம். இயற்கையை பாதுகாக்காமல் இந்த உலகத்தில் நாம் வாழ்ந்து விட முடியாது என்பதை உரக்கச் சொல்லுகின்றார் கவிஞர் தஞ்சை விஜய் அவர்கள்.



தனி மரம்

தோப்பு ஆனது

விழுந்த விதைகள்...


  என கவிதை நூலில் கவிதையை நிறைவு செய்கிறார் கவிஞர் தஞ்சை விஜய் அவர்கள். இந்நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கவிதைகளும் சமூக சிந்தனை கொண்ட உயர்ந்த படைப்பாக திகழ்கிறது. தொடர்ந்து சமூகம் சார்ந்து சிந்தித்து சமுதாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவார் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை என்னுள் எழுகிறது. சின்ன சின்ன கவிதைகள் மூலம் இந்த சமூகத்தில் சிறகடித்து பறந்து திரியும் கவிஞர் தஞ்சை விஜய் அவர்களை உச்சி முகர்ந்து பாராட்டுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.



 தொன்னூற்று ஆறு பக்கங்கள் கொண்ட இந்நூல் படைப்பு பதிப்பகம் மூலம் 2022-ல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அட்டைப்படம் மிக நேர்த்தியாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. வளரும் தலைமுறையை கொண்டாடுவது நம்முடைய மரபு. வாசிக்க வேண்டிய நூல். விலை கொடுத்து வாங்கி வாசித்து மகிழுங்கள். கவிஞரை வாழ்த்துங்கள். நன்றி.


விலை ரூபாய் 100

நூல் ஆசிரியர் 

கவிஞர் தஞ்சை விஜய் அலைபேசி எண் : 8220581363


பதிப்பகம் முகவரி:

படைப்பு பதிப்பகம்

8 , மதுரை வீரன் நகர்

கூத்தப்பாக்கம்

கடலூர் தமிழ்நாடு 607002

பேச: 9489375575

நட்பின் வழியில்

              சோலச்சி அகரப்பட்டி

                                    பேச: 9788210863



   


கருத்துகள் இல்லை: