அகவை அம்பாள் + நாணயம்
சிறுசேமிப்பு திட்டம்
இன்றைய உலகில் பணம் என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் மிகமுக்கியமானதாக மாறிவிட்டது. நம்முடைய அன்றாட தேவைகளை பணம் மட்டுமே தீர்மானிக்கிறது. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை பணம் இல்லாமல் ஒரு அணுவும் அசைய முடியாது. அதனால்தான் மனிதர்களாகிய நாம் பணத்தைத் தேடி அலைந்து கொண்டு இருக்கின்றோம்.
இன்பங்களைத் மறந்து இல்லறத்தைத் துறந்து இனிய வாழ்வு எதுவென்று தெரிந்தும் அதை அனுபவிக்க முடியாமல் எத்தனையோ பேர் அயல்நாடுகளில் தூக்கத்தை மறந்து துக்கத்தையும் தூய இன்பமாக எண்ணி வாழ்வது பணத்திற்காகத்தான். அயல்நாடுகளில் பணி செய்பவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும். வலியை சுமந்தால்தான் வாழ்க்கையை நடத்த முடியும். பணம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்டது. பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். வறுமையின் காரணமாக மக்கள் கொத்தடிமைகளாக வாழ்வதையும் காண்கின்றோம். கொரணா காலத்தில் பணம் பொருள் இல்லாமல் பசியால் இறந்த கொடுமையும் அரங்கேறியது.
பணத்தை இரவுபகல் பாராமல் ஓடிஓடி சம்பாதிக்கின்றோம். ஆனாலும் வறுமை ஒழிந்தபாடிலில்லை; வளமை வந்தபாடிலில்லை. வரவு எட்டணா செலவு பத்தனா என்ற நிலைதான் தொடர்கிறது. சம்பாதித்தாலும் சேமிப்பு என்பது கானல் நீராகவே இருக்கிறது. சாண் ஏறினால் முழம் வழுக்கிறது. காரணம், உடனடித்தேவைகளுக்கு உதாரணமாக மருத்துவச்செலவு, கல்வி, பெண்ணின் கல்யாணம் என்று தேவைகள் வரும்போது கையறுநிலைக்கு தள்ளப்படுகின்றோம். அப்போது செல்வந்தர்கள் அல்லது கந்துவட்டி தொழிலில் ஈடுபடுபவர்களிடம் கடன் வாங்கும் நிலை உண்டாகிவிடுகிறது. கடன் வாங்கும்போது எப்படியோ ஒருவேலை முடிந்தது என்று எண்ணினாலும் வட்டி கட்டும்போதுதான் அதன் வேதனையை உணர்கிறோம்.
கந்துவட்டிக்கு வாங்கிய எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம். வாங்கிய கடனுக்குமேல் வட்டி கட்டி அசலைக் கட்டமுடியாமல் எத்தனையோ குடும்பங்கள் தீயில் கருகி இருக்கின்றன. கந்துவட்டியின் கொடுமை தாங்க முடியாமல் மாவட்ட ஆட்சியரகம் முன்னால் தீக்குளித்த நிகழ்வுகளையும் பார்த்திருக்கின்றோம். வேறு வழியில்லாமல் வட்டிக்கு வாங்கித்தான் அவசர தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
வட்டியில்லாமல் யாரும் பணம் கொடுப்பதில்லை. மேலும், அப்படியே கொடுத்தாலும் அவரை பிழைக்கத் தெரியாதவன் என்று அவரிடம் கடன் வாங்கியவரே சொல்லும் நிலையும் உண்டாகிறது. வட்டி இல்லாமல் கொடுத்தாலும் பணத்தை பலரும் திருப்பித்தர பல மாதங்கள் கடத்துவதும் நடந்தேறுகிறது.
அரசு வங்கிகள் எல்லாம் தனியார்மயமாகிக் கொண்டிருக்கிறது. தனியார் வங்கிகள் பல வீடுதேடி வந்து மயக்கும் சொற்களைப் பயன்படுத்தி கடன் கொடுக்கிறார்கள். பிறகு மாதமாதம் வசூலுக்கு வரும்போதுதான் இடுப்பில் கட்டியிருக்கும் கோவணமும் காணாமல் போகின்றது. தனியார் வங்கிகளில் வட்டிவிகிதம் என்பது கூடுதலாகவே இருக்கிறது.
அரசு வங்கிகளில் பெரும்பணக்காரர்களுக்கு மட்டுமே கடன் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. எல்லோருக்கும் வங்கி கணக்கு இருக்கிறது என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நம் இந்திய ஒன்றியத்தில் மாதந்தோறும் வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட தொகை இருப்புத்தொகையாக இல்லையென்றால் கிடக்கும் சிறுதொகையையும் சுரண்டிக்கொள்ளும் அவலநிலை நீடிக்கிறது. ஏழைகளிடம் சுரண்டி பெரும்பணக்காரர்களுக்கு தள்ளுபடியில் கடன் அளிக்கும் நாடாக நம் இந்திய ஒன்றியம் இருக்கிறது.
ஏழைகள் அரசு வங்கிகளில் அடகு வைத்த அரைபவுன் ஒருபவுன் நகைகள் ஏலத்திற்கு வந்துவிடும். கல்விக்கடன் பெற்றவர்களின் பெயர்பட்டியல் வங்கியின் தகவல்பலகைக்கு வந்துவிடும். சிலநாட்களில் வங்கி ஊழியர்கள் கல்விக்கடன் பெற்றவர்களின் வீடுகளுக்கே சென்று விடுவார்கள். மேலும் அவர்களது வங்கிக்கணக்கு முடக்கப்படுவதுடன் குடியிருக்கும் வீட்டையும் ஜப்தி செய்துவிடுவார்கள். இந்திய ஒன்றியத்தில் பெரும்முதலாளிகளிடம் இப்படி நடந்துகொண்டதில்லை என்பதே வரலாறு.
கந்துவட்டிக்காரர்களிடமும் தனியார் நிதிநிறுவனங்களிலும் கடன்பெற்று மக்கள் அவதிப்படுவதைப் பார்த்த புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வயலோகம் மற்றும் மண்ணவேளாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அகரப்பட்டியைச் சேர்ந்த முற்போக்கு சிந்தனையாளர்களான திரு.சே.அருணாசலம் (மத்திய பாதுகாப்புத்துறை) திரு.கி.முத்தையா (இயற்கை விவசாயி), திரு. பழ.செந்தில்குமார் (சுயதொழில் செய்து வருபவர்) , திரு.கண்ணன், திரு.கி.சரத்குமார் மற்றும் பலரால் ஒன்றுகூடி உருவாக்கப்பட்ட அமைப்புதான் "அகவை அம்பாள் + நாணயம் சிறுசேமிப்பு திட்டம்" என்பதாகும்.
இத்திட்டத்தில் அகரப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் முந்நூறுக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மாதந்தோறும் ரூபாய் ஐநூறு வீதம் (500/-) சந்தா செலுத்துகின்றனர். பெறப்பட்ட சந்தா தொகையிலிருந்து யாருக்கு கடன் தேவையோ அவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறார்கள். வங்கிகளிலும் நிதிநிறுவனங்களிலும் ஜாமின், சாட்சி என்று அலைந்து திரிந்து கடன் பெறுவதற்குள் ஏன்டா கடன் கேட்டோம் என்று மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவோம். ஆனால் இந்தத் திட்டத்தில் இருப்பவர்கள் அனைவருமே அதே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் கடன் பெறுவதும் எளிமையாகிவிடுகின்றது. பெரிய தொகையை கடனாக வழங்காமல் பலருக்கும் கிடைக்கும் வகையில் தொகையை பிரித்து கடனாக வழங்கப்படுகிறது.
பெரும் தொகை ஒருசிலரிடமே முடங்கிவிட்டால் அமைப்பின் நோக்கம் சிதறடிக்கப்பட்டுவிடும். ஆதலால் யாருக்கு அத்தியாவசியமான தேவை ஏற்படுகிறதோ அவர்கள் மட்டுமே கடன் பெறுகிறார்கள். கடன் வாங்குபவர்களும் தங்களால் எவ்வளவு தொகை கட்ட முடியுமோ அந்தத் தொகையை மட்டுமே கடனாக வாங்கிக் கொள்கிறார்கள். மேலும் சிக்கனம் சிறுசேமிப்பு மற்றும் கிடைக்கிறது என்பதற்காக கடன் வாங்காமை போன்ற பண்புகளும் வளர்ந்துவிடுகிறது. இத்திட்டத்தில் உள்ள உறுப்பினர்களிடம் இயற்கையாகவே விட்டுக்கொடுக்கும் பெரும்தன்மை உள்ளதால் தங்குதடை இல்லாமல் அமைப்பு சீராக செயல்படுகிறது.
அகவை அம்பாள் + நாணயம் சிறுசேமிப்பு திட்த்திற்கென வரவு செலவு குறிப்பேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறது. மேலும் திறந்த நிலையில் வெளிப்படையான நம்பகத்தன்மையுடன் செயல்படுவதால் பலரும் தங்களை உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ள முன்வருகின்றனர். மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. பத்து உறுப்பினர்களுக்கு ஒரு குழு ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் அந்தந்த ஒருங்கிணைப்பாளர்கள் சந்தா மற்றும் இதர தொகையினைச் சேகரித்து அமைப்பில் செலுத்திவிடுகின்றனர். அதனால் உறுப்பினர்களை கண்காணிக்கும் மற்றும் பணிகள் எளிதாகிறது.
அரசாங்கத்தையும் மற்றவர்களையும் எத்தனை காலம்தான் நம்பி இருப்பது. நமக்கான ஓர் அமைப்பு உருவாக வேண்டும் என்றால் ஒற்றுமையும் சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுக்கும் குணமும் நிச்சயமாக வேண்டும். இந்த அமைப்பில் , மதம் கடந்து சாதி கடந்து மனித நேயத்துடன் மனிதமாக சங்கமித்து இருப்பது என்பது உலக வரலாற்றில் அகரப்பட்டி உயர்ந்து நிற்கிறது என்பதையே பறைசாற்றுகிறது.
கல்வி, சுய தொழில் தொடங்குதல், விவசாய பணிகள் மற்றும் மருத்தவ செலவுகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. காலப்போக்கில் "அகவை அம்பாள் + நாணயம் சிறுசேமிப்பு திட்டம் " என்கிற அமைப்பானது தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற மாநிலத்தின் தலை சிறந்த கிராம வங்கியாக செயல்படவும் வாய்ப்பு இருக்கிறது.
எங்கள் ஊர் (அகரப்பட்டி) மக்கள் முன்னெடுத்து இருக்கும் இந்த அமைப்பைப் போல் ஒவ்வொரு ஊரும் தனக்கான ஒரு அமைப்பை உருவாக்கி தமிழ்நாட்டை இந்திய ஒன்றியத்தில் முன்மாதிரி மாநிலமாக உருவாக்க வேண்டும். நமக்கான தேவைகளை நம்மால் இயன்றவரை நாமே செய்து முடிப்போம்; நானிலத்தில் உயர்ந்து நிற்போம்.
மனிதம் ஒன்றுதான் மண்ணை ஆளும்; வளர்ச்சியும் மாற்றமும் நம்மிலிருந்து தொடங்கட்டும்.
வாழ்த்துகளுடன்
சோலச்சி அகரப்பட்டி
பேச: 9788210863
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக