திங்கள், 23 டிசம்பர், 2024

தொவரக்காடு - நண்பன் வ.கருப்பையாவுக்கு - சோலச்சி

 


நான் எழுதிய நான்காவது சிறுகதை நூல் "தொவரக்காடு". இந்நூலை நினைவில் வாழும் என் ஆருயிர் நண்பன் விராச்சிலை வ.கருப்பையாவுக்கு அர்ப்பணிப்பு செய்திருப்பேன். இந்நூலில் நான் எழுதிய என்னுரையை பதிவு செய்துள்ளேன்.

             ஆகச் சிறந்தது நட்பு



     எழுதிக் குவித்துவிட வேண்டும் என்பது அல்ல எனது இலக்கு. எழுத்து ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும்.   இணையம் வசதிகள் பெருகிவிட்டாலும் பாமரரும் வாசிக்கும் வண்ணம் நூல்களை கொண்டு செல்ல வேண்டும்.  எழுதுவதற்கு பலரும் முன்வந்து விட்டாலும் அவற்றை அச்சில் கோர்த்து நூலாக வெளியிடுவதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது.  எப்படியோ நூலாக கொண்டுவந்துவிட்டாலும் எழுதிய நூலாசிரியரே தனது தோளில் சுமந்து விற்க வேண்டிய அவலநிலை இன்னும் நீடிக்கிறது. 


    காடு மேடு என்று அலைந்து திரிகின்றேன். அனைவருடனும் கைகுலுக்குகிறேன். நயவஞ்சகர்கள் என தெரிந்தும் எழுத்தின் மூலமாக அவர்களின் குணத்தை மாற்ற முயற்சிக்கிறேன். சமூக போராட்டங்களில் முன் நிற்கின்றேன். பாலைவனக் காற்றில் மூழ்கி அதையும் ரசிக்கின்றேன். எங்காவது கார்மேகம் தழுவி இந்தப் பூமியை குளிர்வித்துவிடாதா என்ற நினைப்பில் பயணிக்கின்றேன். 


   தொவரக்காட்டினை ஒழுங்குபடுத்திய புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையற்கலை மற்றும் ஹோட்டல் நிர்வாக கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் திருமதி மு.ராதா அவர்களுக்கும் மனிதநேயத்தின் மாண்புகளை தன்னகத்தே கொண்டு பயணித்துவரும் தோழர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்களுக்கும் பொன்னமராவதி மருத்துவ நுண்ணறிஞர் டாக்டர் ஆ.அழகேசன் அவர்களுக்கும் போலிஸ் டுடே பத்திரிகையின் செய்தியாளர் ஆருயிர் நண்பர் கும்பகோணம் த.மணிகண்டன் அவர்களுக்கும் தொவரக்காட்டிற்கென அட்டைப்படம் உருவாக்கித்தந்த பலகுரல் வித்தகர் பாடகர் பேராசிரியர் சி.பூ.முடியரசன் அவர்களுக்கும் அகநி பதிப்பகம் பேரன்புக்குரிய அண்ணன் மு.முருகேஷ் அவர்களுக்கும்  நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

  

     நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் நாம் ஆய்வு செய்கிறோமோ இல்லையோ யாரோ ஒருவர் ஆய்வு செய்துகொண்டும் ரசித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.  நாம் ஆய்வு செய்யாவிட்டாலும் ரசிக்க கற்றுக்கொள்வது அவசியம்.  ரசனை ஒன்றுதான் நமக்கான வாழ்வியலைப் பெற்றுத்தரும்.


   வான சூரியனின் ஒளியில் எத்தனையோ கோடி உயிர்கள் உயிர்பெற்று வாழ்கின்றன.  வட்ட நிலவுக்கு ஏற்றார்போல் எத்தனையோ உயிர்கள்  தத்தமது தகவமைப்பை மாற்றிக்கொண்டு வாழ்கின்றன. பறக்கும் தூரம்வரை பரந்து விரிந்து செல்லும் காற்று எத்தனையோ கோடி உயிர்களின் வாழ்வுக்கு துணை நிற்கிறது.  வான சூரியன், வட்ட நிலா, காற்று என இதன் பட்டியலை நீட்டிக்கொண்டே செல்லலாம். மற்றவர்களின் வாழ்வுக்கு துணை நிற்பதால் தனது தனித்துவத்தை இவை என்றாவது இழந்திருக்கிறதா....? மற்றவர்களுக்காகவும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.  


   ஆயிரத்து ஐநூறு பேர் படிக்கும் பள்ளிக்கூடத்தில் அந்தச் சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். அந்தச் சிறுவன் பள்ளியின் சீருடையான வெள்ளைச்சட்டை மற்றும் சாக்கு போன்று இருக்கும் காக்கி நிற கால்சட்டையைத் தவிர வேறு ஆடைகளை அணிந்தது கிடையாது. எப்போதும் துருதுருவென இருக்கும் அந்தச் சிறுவனின் பேச்சையும் செயல்பாடுகளையும் கண்டு மாணவர்கள் நிறைய பேர் அவனோடு நட்பு பாராட்டினார்கள்.


   அந்தச் சிறுவனின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் இவனோடு நெருங்கி பழகினான். இருவரையும் பள்ளியில் தனித்தனியே பார்க்க முடியாத அளவுக்கு நண்பர்கள் ஆனார்கள். 


   ஒருநாள் பள்ளிக்கூடம் முடிந்ததும் மாலை நேரத்தில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பையன்,  தன் நண்பனை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றான். இரவு தங்கிய அவனிடம் நண்பனின் அப்பா, அம்மா,  தங்கைகள் அனைவரும் பாசமழை பொழிகின்றனர். அப்படியொரு இனிமையான இரவுப் பொழுதை அன்றுதான் அனுபவித்தான். பாசமழையில் நனைந்து உறங்கி காலையில் எழுந்து கண்மாயில் குளிந்துவிட்டு வந்த அவனிடம் தாம்பூலத்தட்டை நீட்டுகிறாள் நண்பனின் அம்மா. சற்றே தயங்கியபடி அனைவரையும் பார்க்கும் அவனை ''புடிப்பா..... உள்ளபோயி போட்டுக்கிட்டு வா...'' என்கிறாள் அம்மா. அவனுக்கே அளவெடுத்து தைத்தது போல் புத்தம் புதிய பேண்ட் சட்டை. புதிய ஆடை அணிந்து வந்த அவனை, வீடே கொண்டாடி மகிழ்ந்தது. வாழ்வில் முதல்முறையாக பள்ளிச்சீருடையை களைந்துவிட்டு வேறு ஆடை அணிந்த அந்தச் சிறுவன் நான்தான். புதிய ஆடையை அணிவித்து மகிழ்ந்தவன் என் ஆருயிர் நண்பன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் விராச்சிலை திரு.வயிரவன் சாந்தி இவர்களின் மகன் கருப்பையா. 


   நான் வாழ்வதற்கும் வளர்வதற்கும் துணை நின்றவர்களில் மிகவும் முக்கியமானவன். என்னை நன்கு அறிந்தவன். நச்சாந்துபட்டியிலிருந்த சித்திவிநாயகர் திரையரங்கம் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள திரையரங்குகளில் எத்தனையோ படங்களை இரவுபகலாக பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். நுங்கு வெட்டி குடித்துவிட்டு கண்மாயிலும் கிணற்றிலும் நீச்சலடித்து விளையாடி மகிழ்ந்திருக்கின்றோம். எனது கண்ணீரை துடைத்து வெற்றியின் வாசலை கண்டுபிடித்து வழி நடத்தியவன். 



   என்னோடு இரண்டறக்கலந்த என் ஆருயிர் நண்பன் வ.கருப்பையா தற்போது என் அருகே இல்லை.  கொரணா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த காலத்தில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி கொரணா பெருந்தொற்று ஏற்பட்டு என்னை மீளாத்துயரில் தவிக்கவிட்டுச் சென்றான். என்னை வாழ வைத்தவனுக்கு இந்த தொவரக்காட்டை படைத்தளிக்கின்றேன். 

                                                                           பேரன்பின் வழியில்

                                                                                     சோலச்சி



திருவள்ளுவர் நகர்,

புல்வயல் அஞ்சல் - 622104

வயலோகம் வழி

புதுக்கோட்டை மாவட்டம்.

தமிழ்நாடு.

பேச : 9788210863

மின்னஞ்சல்: solachysolachy@gmail.com

வலைப்பக்கம்: solachy.blogspot.com




கருத்துகள் இல்லை: