"நீர்த்த உரைநடைக்குள் வீர உணர்வுகள் "
கவிதை விமர்சனம்
எஸ்.ரமேஷ் திருவில்லிபுத்தூர்
கவிமதி சோலச்சி எழுதிய "காட்டு நெறிஞ்சி " என்ற கவிதை நூலுக்கு விமர்சனம்.
நூல் : காட்டு நெறிஞ்சி
ஆசிரியர் : கவிமதி சோலச்சி
வெளியீடு : இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி
வருடம் : 2016
பக்கம் :128
விலை :110/-
தற்கால கவிதை இலக்கியம் குறித்து எனக்கு ஒரு நன்னம்பிக்கை இல்லை. அதிலும் புதுக்கவிஞர்கள் புற்றீசல்களாய், ரத்தத்தின் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை போல் பல்கிப் பெருகிவிட்ட தேசத்தில், கவிதை இலக்கியம் மிகுந்த அலங்கோலமாய்க் காட்சியளிக்கிறது. தமிழில் உரைநடை எழுத்தத் தெரிந்தவர்கள் எல்லாமே புதுக்கவிஞர்கள் தான் என வைத்துக்கொண்டால் அநேகமாக பலசரக்குக் கடையில் மளிகைச் சரக்குக்கு ரசீது எழுதி தரும் குமாஸ்தாவும் ஒரு புதுக்கவிஞர்தான்.
ஒரு நீண்ட உரைநடை வரியை மடக்கி மடக்கி எழுதி அதைக் கவிதை என்று பெயரிட்டு அழைப்பது, காண்டாமிருகத்தைக் கோயில் யானை எனப் பெயரிட்டு அழைப்பதற்குச் சமானமாகும்.
வசன கவிதை என்ற இலக்கிய வடிவத்தை உருவாக்கிய பிதாமகர் என்று நாம் சுப்பிரமணிய பாரதியைக் கொண்டாலும், யாப்பு கட்டுமானத்தை மீறி ஒரு புதிய வடிவத்தை உருவாக்கிய ந.பிச்சமூர்த்தியை புதுக்கவிதை இயக்கத்தின் மூத்த ஸ்தாபகர் என்று கொள்ளலாம்.
கவிமதி சோலச்சியின் புதுக்கவிதை தொகுதியான "காட்டு நெறிஞ்சி "வாசிக்கப் பெற்றேன். புதுக்கவிதைகளுக்கான சகல பொருத்தங்களும் இதற்கு பொருந்தியுள்ளன.நான் வாசித்தவற்றுள், எனக்கு தோன்றியவற்றை இங்கு விமர்சனமாக முன் வைக்கிறேன்.
இத்தொகுதியில் பக்கம் 19 இல் "சுதந்திரமாம் சுதந்திரம் " என்னும் கவிதையில் "விண்ணையும் தாண்டிவிட்டது விதவிதமாய் ஊழல்கள் " என்ற வரிகள் நல்ல வரிகள். காற்று, நிலம், நீர், ஆகாயம், வாகனம் தொடங்கி அரிசி, கோதுமை நுகர்பொருள், தொலைத்தொடர்பு, கல்வி, மருத்துவம், வேளாண்மை, ராணுவம் என்று சகல துறைகளிலும் ஊழல் செய்து புகழ் பெற்ற நாடு நம் இந்தியா. இதைக் கவிஞர் சோலச்சி சுட்டிக் காட்டியுள்ள விதம் அருமை.
வீட்டு வேலையும், விருந்தினர் உபசரிப்பும் காத்திருக்கிறது, விளம்பர இடைவேளைக்காக.....!
விருந்தோம்பல் என்பது நம் தமிழரின் பண்டைய மரபு. இன்றைக்கு விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தாலும் தொலைக்காட்சி நெடுந்தொடர்களைத்தான் நமது இல்லத்தரசிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நயமாகச் சுட்டிக்காட்டியுள்ளார் கவிஞர்.
சில கிராமப்புற இளமைக்கால நினைவுகள் நமது மனத்திரையில் அவ்வப்போது தோன்றுவது போல சோலச்சிக்கும் தோன்றுகிறது.
"பார்வை " என்ற கவிதை
எங்கு பார்த்தாலும்
எழுதிவிட்டுத்தான் செல்கிறேன்
என்னோடு உன் பெயரையும்
கள்ளிச் செடிகளில்....
இது நல்ல அழுத்தமான பதிவு.
பக்கம் 38 இல் "மலரும் நானும் " என்ற கவிதை. பாலியல் தொழிலாளியைப் பற்றியது.
"விளக்குகள் யாவும் சிவப்பாகவே...
உறக்கமின்றித் தவிக்கும்
என் கண்களுக்கு ....
எங்கோ மலர்களிடம்
எச்சங்களைச் சுமந்தபடி நான்.....
இவை நல்ல வரிகள்.
பக்கம் 47இல் "வாழ்க்கை ஒரு பாடம் " என்ற கவிதை. அதில்
"பேதங்களை உடைத்தெறிந்த பெரியார்
நேதாஜி பகத்சிங் பூமி....
ஈ.வே.இராமசாமி என்பவர் பேதங்களை உடைத்ததாகவும், அவர் சாதியத்திற்கு எதிராகப் போராடியதாகவும் ஒரு கருத்து உள்ளது. ச.வெங்கடேசன் என்பவர் எழுதியுள்ள ஈ.வே.இராமசாமியின் மறுபக்கம் " என்ற நூல் ஈ.வே.ராவின் உண்மை முகத்தை நமக்கு தோலுரித்துக் காட்டுகிறது.
பக்கம் 50 இல் "எப்படித் துணிந்தாய் "என்ற கவிதை. அதில்,
"மூத்தகுடி எம் குடியென
மார்தட்டி வாழ்ந்தேன் அன்று.....
.........,,,,
என் இனம் அழிவதைத் தடுக்கத் துப்பில்லை
தேசீயக் கீதம் ஒரு கேடா.....???
தேசியக்கீதம் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை. கேரளாவில் மலையாளுகளும், கர்நாடகாவில் கன்னடியர்களும் ஆந்திராவில் தெலுங்கர்களும் எந்தவொரு பொதுப் பிரச்சினை என்றாலும் அம்மாநில நலனுக்கு ஒற்றுமையாகக் குரல் கொடுக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை என்ன....?????? சொந்த இனத்தைக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்களும், இனத் துரோகிகளும் இருக்கும் மாநிலமல்லவா தமிழ்நாடு. இதில் நீங்கள் தேசியகீதத்தைப் பழிப்பது எப்படி சரியாகும்.
பக்கம் 86 இல் "கிழட்டுப் பச்சோந்தியின் கோணப் புத்தியில் ஆட்சி " இது யாரைக் குறிப்பிடுகிறார் சோலச்சி.....???
பக்கம் 89 இல் "பகடை " என்ற கவிதை .... தேர்தலின் போது ஓட்டு வேட்டையாடி, வெற்றி பெற்று, பதவியைப் பிடித்து, தமிழனை மொட்டையடித்து, தலையில் சந்தனம் தடவி விட்ட தலைவர்களை வைத்துக்கொண்டா, நீங்கள் "தனி ஈழம் அமைப்போம் " என்கிறீர்கள்.
வருடாவருடம், தமிழ்நாட்டின் தலைவர்கள் சூளுரைத்து சபதம் செய்யும் ஒரு விசயம் "கச்சத்தீவை மீட்போம் "என்பது. இந்த வீர முழக்கத்தைக் கேட்டு தமிழர்கள் பலருக்கு பைத்தியமே பிடித்துவிட்டது.
பக்கம் 91 இல் "புதிய எழுச்சி
"உரிமைக்கு உதவ நாதியில்லை...
தமிழ் நிமிர்ந்து நடக்க ஒரு வீதியில்லை....
நல்ல வரிகள். தமிழ்நாட்டில் தமிழ் எங்கே இருக்கிறது. பக்கம் 68 இல் "தமிழ் பிழைத்தது..." என்ற கவிதை பாரதி வாழ்வு பற்றியது.
"தமிழ்ப் பேர் சொல்லி
உலகு பிழைக்குதடா...
தமிழ் இவனிடம் பிழைத்ததடா...
என்ற வரிகள் அற்புதமானவை.
பக்கம் 79 இல் பில்லி சூனியம் என்ற கவிதை.
"கடவுள் என்று எதுவும் இல்லை
கண்டது யார்
காட்டு என்றால் பதிலும் இல்லை ....
கவிஞர் சொல்வது உண்மை. ஆனால் இந்த ஞானோதயம் இப்போது வருவதற்கும், அறுபது வயதில் வருவதற்கும் இடையில் ஒரு வித்தியாசம் உண்டு.
கடவுள் என்று எதுவும் இல்லை என்று இந்துக் கடவுளை மட்டும்தான் குறிப்பிடுகிறாரா அல்லது இஸ்லாமிய, கிறித்தவக் கடவுள்களையும் சேர்த்துக் கொள்கிறாரா என்பது தெரியவில்லை.
பக்கம் 96 இல் "இனியொரு தப்பு நடந்தால் " கவிதையில்
"மேல்சாதி கூட்டம்னா
நெத்தியிலா முளச்சிருக்கு...
.....,,,
.....,,, இனி
வெடைச்சிச்சுனா வெட்டிடுவோம் பாத்துக்கோ....."
என்ற வரிகள் வன்முறை, குரூரத்தின் உச்சம். இந்த வரிகள் பிரபல மேடைப் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகத்யின் பேச்சுகளை நினைவுபடுத்துகிறது.
பக்கம் 105 இல் "மாடும் அந்த மனிதனும் " என்ற கவிதை அருமை.
பக்கம் 108 இல் கடவுள் வழிபாடு பற்றிக் குறிப்பிடும் கவிஞர், பாவம் மனிதன் என்ற கவிதையில்
"எல்லாவற்றிலும் அதைப் படைத்தவன் பெயரஸ, தேடிப் பார்க்கிறேன், காணவில்லை இறைவன் பெயரை....என்ற வரிகள் அற்புதமானவை. ஆனால் தனிமனிதனின் நம்பிக்கை என்ற விசயத்தில் குறிக்கிடுவது என்பது சரியாகாது.
பக்கம் 118இல் "விடியல் " என்ற கவிதை
"காரில் கை அசைக்கும் காட்சி கண்டு கழகம் கட்டியணைப்பதாய் மகிழ்கின்றார்...." என்ற வரிகள் மோசடிக் கும்பல்களான கரை வேட்டி கும்பல்களை தெளிவாக அடையாளம் காட்டுகிறார் கவிஞர் சோலச்சி. பல இடங்களில் நயமான வரிகள் காணப்படுகின்றன.
ஆக, புதுக்கவிதைகளுக்கே உரிய நடையில், பரவலாக அறியப்பட்ட பாடுபொருட்களாகிய காதல், வீரம், சமூக அவலம், அரசியல் சீர்கேடு, ஈழப் பிரச்சினை, பாரதி புகழ் ஆகியவற்றை தனக்கே உரிய நடையில் படைத்துள்ளார் கவிமதி சோலச்சி.
உரைநடை மிகுந்தும், சந்த தாளம் குறைந்தும் வீரப்பிரகடனங்களும் முழக்கங்களுமாக இந்நூல் அமைந்துள்ளது.
வரும் காலங்களில், வார்த்தைகளினய அடர்த்தியில், வேறு பல பாடுபொருட்களை உள்ளடக்கி நல்ல ஓசை, தாளத்தோடு இன்னும் பல சீரிய கவிதைகளை கவிமதி சோலச்சி படைத்திட விரும்புகின்றேன். நன்றி வணக்கம் வந்தே மாதரம்...!!!
3 கருத்துகள்:
நூல் பற்றிய விமர்சனம் அருமை.புத்தக முழுமையும் படிக்க வேண்டிய ஆர்வத்தை தூண்டியுள்ளது.திரைப்படத்திற்கு எப்படி விமர்சனமோ அப்படியே ஒவ்வொரு நூலுக்கும் விமர்சனம் தேவை இன்றைய இயந்திர வாழ்க்கைக்கு.நன்றி கவிமதி சோலச்சி மற்றும் விமர்சகர் ஆகியோருக்கு
அருமை
வாழ்த்துக்கள் நண்பரே
மிக்க நன்றி நண்பரே
கருத்துரையிடுக