சனிக்கிழமை இரவு சேலம் மாநகர் இரும்பாலையில் மனமகிழ் முத்தமிழ் மன்றத்தின் 75வது குறிஞ்சிக் கவியரங்க நிகழ்வு நான் தலைமை ஏற்க இருபத்தாறு கவிஞர்கள் "நலமறிய ஆவல் " என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக கவிதை வாசித்தனர். இரும்பாலைக்குள் இப்படி ஒரு கரும்பாலையா என்று வியந்து போனேன். அனைத்து கவிஞர்களும் தனக்கான நடையில் அரசியல், சாதி, மழை, மகன், இருசக்கர வாகனம் ..... என பல்வேறுபட்ட கருவில் கவி படைத்தனர். மாதந்தோறும் நிகழும் கவியரங்க கவிதைகளை தொகுத்து "அம்பறா " என்ற கவிதை இதழாகவும் வெளியீடு செய்கிறார்கள். ஏதோ வாசித்தோம் தொலைத்தோம் என்றில்லாமல் கவிதைகளை ஆவணப்படுத்தும் அவர்களின் பாங்கு பாராட்டுக்குரியது. ஒவ்வொரு இலக்கிய அமைப்புகளும் இதுபோன்ற ஆவணப்படுத்துதலை பின்பற்றுவதன் மூலம் தமிழுக்கு மேலும் மகுடம் சூட்டி மகிழ முடியும். இந்த குறிஞ்சி கவியரங்கத்தையும் அம்பறா இதழையும் தளராமல் தொடர்ந்து நடத்திவரும் என் அருமைத் தோழர் " கவிப்பேராசான் மீரா விருது பெற்ற ஞாபக நடவுகள் கவிதை நூலின் ஆசிரியர் கவிஞர் @கூ.ரா.அம்மாசையப்பன், என் அருமைத் தோழர் "முனியமரம் கவிதை நூலின் ஆசிரியர் கவிஞர் பாலா, அருமைத் தோழர் க.மாதுகண்ணன் மற்றும் மனமகிழ் முத்தமிழ் மன்ற நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்....
நான் வாசித்த கவிதையில் சில வரிகள் ...
குல்லா போட்டவனையும்
கும்புடு போட்டவனையும்
குறிபார்த்தே கொலையும்
செய்கின்றார்....
காலம் மாறி காவிகளால்
நாறிக்கொண்டிருக்கிறது - அதில்
ஆணவக் கொலைகளோ
அரங்கேறிக் கொண்டிருக்கிறது...
தேசம் நாசமாய் போகும்
வேளையில்
யாரிடம் போய்க் கேட்பது
"நலமறிய ஆவல் " என்று.....
- சோலச்சி புதுக்கோட்டை
நிகழ்வில் எனது நூல்களில் ஐம்பது பிரதிகளை மனமகிழ் முத்தமிழ் மன்ற நிர்வாகிகள் விலை கொடுத்து பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது...
2 கருத்துகள்:
உருக்காலையை உருக வைத்திருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள் நண்பரே
மகிழ்ச்சி நண்பரே
கருத்துரையிடுக