--ஆட்டுக்கார ஆறுமுகம் --
- சோலச்சி புதுக்கோட்டை
காண்போர் யாவரையும் கவரக்கூடிய கண்கள், சிலிர்த்து நிற்கும் புருவங்கள், வசீகரப்படுத்தும் சின்ன உதடுகள், சேலைக் கட்டாமல் தாவணி போட்ட சின்ன இடை கொண்ட பத்மாவதி கஞ்சிக் கூடையை தலையில் சுமந்து கொண்டு வயலுக்கு சென்று கொண்டு இருந்தாள். "இங்கேரு நானும் வர்றேன் நில்லு "" என்றான் அரை டவுசர் போட்ட ஆறுமுகம்.
"என்ன ஆறுமுகம் பரீட்சைக்கு படிக்காம வயலுக்குச் வர்ற..."
"அட நீ வேற ..! நல்லா படிக்கிற நீயே போகும்போது மக்குப்பய நா.... என்ன "
"இல்ல ஆறுமுகம் கொஞ்சம் படிச்சா பாஸ் பண்ணிடுவே... ஏதோ மாமன் மயனாச்சேனு சொன்னேன். நீ படிக்கலைனு வையி ஒனக்கு வாக்கிறவ அவ்ளோதான்..."
"அதுக்கு நீயே வந்துருவே...."
"ஆசையப் பாரு. அப்பா உழுகுறாரு கொஞ்சம் சும்மா இரு...."
"அப்பா..... கஞ்சி கொண்டு வந்துருக்கேன்...."
முருகவேலு காளைகளை வயலில் நிற்க வைத்தார்.
இந்தா கால் அலம்பிட்டு வர்றம்மா.. என்னம்மா மாப்பிள்ளையையும் கூட்டிக்கிட்டு வந்துருக்கே...."
"இல்லப்பா ஆறுமுகம்தான் வந்துச்சு...."
"மாப்ள...! ஏம் பொண்ணு தாவணி போட்டுட்டா, நீங்க இன்னும் டவுசரையே மாத்தலையே... அதமாத்துங்க..." என்றார் கிண்டலாக.
"இருங்க மாமா வர்றேன்...." வேகமாக ஓடினான்.
"மாப்ள நில்லுங்க ...! எங்கே ஓடுறீங்க..."
"ஒன்னுல்ல..."
"மாப்ள எப்பவுமே வெளையாட்டுப் புள்ளதான்..."
சாப்பிட்டு முடித்தவுடன் கஞ்சிக் கூடையை தூக்கி தலையில் வைத்தார்...
"நா வர்றப்பா..."
"பாத்துப் போமா..."
"சரிப்பா..."
"பத்மா நில்லு ...." வேர்த்து விறுவிறுக்க ஓடி வந்தான்.
"யாரு அடையாளமே தெரியல... அட நம்ம ஆறுமுகம் மச்சான்..."
"பத்மா நா போட்டுருக்க கைலியும் சட்டையும் எப்புடி இருக்கு...."மூச்சு வாங்க நின்றான்.
"ம்..... சோளக்காட்டு பொம்ம மாறி இருக்கு ...." "நா வர்றேன் ..." புன்முறுவலுடன் சென்றாள்.
அன்று ஒரு நாள்...
, "ஆறுமுகம் இங்கே வாயேன்....."
"ம்.... என்ன...."
"ஒன்ன பேரு சொல்லு கூப்புட்டா தப்பா நெனச்சுக்குவியா..."
"நீ கூப்புடாம வேற யாரு கூப்புடுறது... என்ன கைய பின்னாடி மறக்கிற...."
"ஒனக்கு புடிக்குமுனு கேப்ப ரொட்டி சுட்டுக் கொண்டு வந்தேன், தின்னு....."
"கொண்டா, அடேங்கப்பா, நீ செஞ்சதாச்சே....என்ன ருசி... காலம் முழுசும் ஓங்கையாலே சாப்புடனும்...."
"ம்.... அவசரத்த பாரு...! நா பி.எஸ்.சி முடிச்சதுக்கு அப்புறந்தான் கல்யாணமே..."
மௌனமாக இருந்தான்....
"எதுக்கு அமைதியாயிட்ட..."
"அது..... படிப்ப நிறுத்த முடிவு பண்ணிட்டேன்...."
"என்ன சொல்ற...."
"ஆமா... ஒனக்காவது சொத்து பத்து கேணினு இருக்கு... எங்களுக்கு பத்து ஆடுதான் இருக்கு. அம்மா எறந்ததுக்கு அப்பறம் அப்பா பாத்துக்கிட்டு வந்தாரு. அவருக்கும் ஒடம்பு சரியில்ல.எனக்கும் படிப்பும் ஏறல. சோத்துக்கு என்ன பண்றது. நீ நெறைய படிக்கனும். நல்லா படிச்ச மாப்ளயப் பாத்து கல்யாணம் பண்ணிக்க...." கண் கலங்கினான்.
"நல்லா இருக்கு ஒன்னோட பேச்சு, ஓ ஆசைப்படி நெறையப் படிக்கிறேய்யா, ஆனா உன்னத்தான் கட்டிக்கிடுவேன்...."
நாட்களும் கடந்தன.....
ஆள் உயர குச்சியைத் தூக்கிக் கொண்டு தூக்குச் சட்டியில் கூழை ஊத்திக்கொண்டு ஆடுகள ஓட்டிக்கிட்டு போவான். பத்மாவின் நெனப்பு அவனை வாட்டியது. பத்து ஆடுகள மேய்க்கத் தொடங்கியவன் அறுநூறு ஆட்டுக்கு சொந்தக்காரன் ஆனான்.
அன்றொரு நாள்.....
"மச்சான் நான் பி.எஸ்.சி பாஸ் பண்ணிட்டேன். இனிமே நமக்கு கல்யாணந்தான்...." சந்தோசத்துடன் ஓடி வந்தாள் பத்மாவதி.
"எனக்கு தெரியுமே.... நீ எல்லாத்துலேயும் பாஸ் பண்ணிடுவேணு...."
வேப்ப மரத்தில் வைக்கப்பட்டு இருந்த குங்குமத்தை எடுத்து அவளது ஊள்ளங்கையில் வைத்தான்.
ஒருநாள், இங்கே பாரு கோவிந்தசாமி. ஓம்புள்ள ஆட்டுக்கார ஆறுமுகத்த ஏம்புள்ளையோட பழக விடுறது நல்லா இல்ல. பத்மாவதிக்கு பிடிச்ச மாப்ளயா பாத்து கட்டுறதா முடிவு பண்ணிட்டேன். ஓம் மவன் குறுக்கே வந்தா அப்பறம் போலிசுக்கு போறது மாறி இருக்கும்.... எச்சரித்தார் முருகவேல்.
"நல்லா இருக்கே... அதுக ரெண்டும் மனசுல ஆசை வளர்த்துக்கிட்டு திரியுதுங்க. சேத்து வக்கிறதுதாயா மொறை...."
"இதபாரு நான் சொன்னா சொன்னதுதான் ...." கோபத்துடன் புறப்பட்டார் முருகவேல்.
சிலநாள் கழித்து ராத்திரி ஒரு மணிக்கு யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தார் கோவிந்தசாமி.
"என்னம்மா ராத்திரில......"
"இல்லங்க மாமா.... வேறொருத்தருக்கு என்னயக் கட்டி வக்கிறதா கட்டாயப்படுத்துனாங்க. நா முடியாதுனுட்டு யாருக்கும் தெரியாம வந்துட்டேன்...."
"சரி, வாமா விடிஞ்சதும் பேசிக்கிவோம்...." உள்ளே அழைத்தார் கோவிந்தசாமி
பொழுது விடிந்தது.....
"ஆறுமுகம் உங்கள அரஸ்ட் பண்றோம்...." என்றார் இன்ஸ்பெக்டர்.
"எதுக்கு....."
"முருகவேல் பொண்ண கடத்திக்கிட்டு வந்துட்டதா புகார் கொடுத்துருக்காங்க....
"என்னய யாரும் கத்திக்கிட்டு வரல...நாந்தான் வந்தேன்...." தண்ணீர் குடத்தை இறக்கி வைத்துவிட்டு விவரத்தைச் சொன்னாள் பத்மாவதி.
"அப்படியா.... உனக்கென்னமா வயசு...."
"இருபத்தொன்னு நடக்குது சார்....."
"கேச வாபஸ் வாங்கிட்டு சின்னஞ்சிறுசுகள வாழ்த்துங்க...." வாழ்த்துக் கூறி விடைபெற்றார் இன்ஸ்பெக்டர் ......
-----&------
கவிமதி சோலச்சியின் "முதல் பரிசு " சிறுகதைத் தொகுப்பிலிருந்து ....
பேச :9788210863
மின்னஞ்சல் : solachysolachy@gmail.com
மின்னஞ்சல் : solachysolachy@gmail.com
2 கருத்துகள்:
அருமை
நன்றி நண்பரே
தொகுப்பிலிருந்து பகிர்கின்ற விதம் அருமை. பாராட்டுகள்.
கருத்துரையிடுக