முதல்பரிசு சிறுகதை நூலிலிருந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதல்பரிசு சிறுகதை நூலிலிருந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 அக்டோபர், 2018

சாமக்கோழி - சோலச்சி

                   சிறுகதை

......சாமக்கோழி...  -சோலச்சி
''இந்தக் கூறுகெட்ட உலகத்துல காலம் போறதே தெரியமாட்டேனுது... எப்புடியாவது திங்ககெழம சந்தையில எலந்தப்பழத்த வித்துறனும். கனகுக்கு மாத்திக்கிறதுக்குக்கூட வேற பாவாடை இல்ல.  கிடைக்கிற காசுக்கு நல்ல பாவாடைய வாங்கிட்டு இருட்டுறதுக்குள்ள வீடு வந்து சேந்துறனும். தனக்குள்ளயே பேசிக்கொண்டு கனகையும் கையில்  பிடித்துக்கொண்டு நடந்தாள் சொர்ணம் பாட்டி.
  மகன் சாராயம் குடிச்சே செத்துப் போனான். மருமக எங்கே போனாளோ இன்னைக்கு வரை தெரியல. அந்தப் பாட்டிதான் கனகை வளர்த்து வருகிறாள். அவளும் இப்போது ரெண்டாங்கிளாசு படிக்கிறாள். நல்லாப் படிச்சாலும் பிள்ளைங்க எல்லாரும் அவள தபால் பெட்டினுதான் கூப்புடுவாங்க....
  பலமுறை ஊசியால் தச்சதையே தச்சு அந்தப் பாவாடை சட்டை நஞ்சு போயிருச்சு. உதவி பண்றதுக்கும் வேற ஆளு இல்ல. சொர்ணம் பாட்டியோ எலந்தப்பழம், நாவல்பழம், கொய்யாப்பழம்னு சீசனுக்குத் தகுந்தமாறி விக்கிறாள். அதுல கெடக்கிற காச வச்சுத்தான் ரெண்டு உசுரும் வாழனும். ஒரு பாவாடை,  சட்டை கனகுக்கு வாங்கனும் என்ற ஆசை. அது இன்றைக்கு நிறைவேறும் என்ற ஆசையோடு சந்தையை அடைந்தாள் சொர்ணம் பாட்டி.
  ''என்னப்பாட்டி எலந்தப்பழம் மாரி இருக்கு. வயசான காலத்துல எதுக்கு ரொம்ப நேரம் குந்திக்கிட்டு இருக்கே. மொத்தமா வெலயச் சொல்லு நான் வாங்கிக்கிறேன்....'' என்றார் முரளி.
  ''மவராசன் நல்லா இருப்பா.. இதை எடுத்துக்கிட்டு இருபது ரூபா கொடு....''
  ''சரி பாட்டி, இந்தாங்க இருபத்தஞ்சு ரூபா இருக்கு. பேத்திக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்க...''
  ''சரிப்பா...'' கையெடுத்து கும்பிட்டாள்.
  கண்ணுல தென்பட்ட ஒரு துணிக்கடைக்குள் சென்று பாவாடை விலையை கேட்டாள். எல்லாம் நாற்பது ரூபாய்க்கு மேலதான் சொன்னார்கள்.  பல கடைகளில் ஏறி இறங்கி கால் வலித்ததுதான் மிச்சம். பொழுதும் சாய்ந்தது. '' நாளைக்கு ரொம்ப கொண்டுவந்து வித்துட்டு இந்தக் காசையும் செத்து நல்ல பாவாடை வாங்கிறனும்..'' கனகைக் கூட்டிக்கொண்டு அந்த ஒத்தையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினாள்.
 பாதி தூரம் சென்றவுடன் யாரோ கூப்பிடவும் திரும்பிப் பார்த்தாள். இரண்டு தடியன்கள் கத்தியோடு நின்று கொண்டு ''ஏ...கெழவு என்ன வச்சுருக்க... ஒழுங்கா கொடுக்கல குத்திடுவோம்..அது என்ன சீலையில முடிஞ்சு வச்சுருக்கே..அத அவுத்துக் கொடுடி...''
  ''சாமி... நான் பெத்த ராசாக்களா.. விட்டுடுங்கய்யா... இருபத்தஞ்சு ரூபாதான் வச்சுருக்கேன். ஏம் பேத்திக்கு சட்டை எடுக்கனும்ப்பா...'' என்று கெஞ்சினாள்.
  ''அண்ணே...அண்ணே... எங்கள விட்டுடுங்கண்ணே....''
  ''போங்கடி... இன்னைக்குப் பூரா ஒன்னுமே கெடைக்கல. விடனுமாம்ல....''சொர்ணம் பாட்டியைத் தள்ளிவிட்டு  இருபத்தஞ்சு ரூபாயை எடுத்துக்கொண்டு ஓடிப்போனார்கள் வழிப்பறி திருடர்கள்.  பாட்டியின் கனவு அப்படியே கடற்கரையில் கட்டிய மணல்வீடு போல கண்ணீரில் அரித்துக்கொண்டு போனது.
  ''எந்திரிங்கபாட்டி... '' பழைய துணியால் அவள் முகத்தை துடைத்து தூக்கினாள் கனகு. 
  ''இந்தச் சட்டையே எனக்கு நல்லா இருக்கு. இதான் எனக்குப் புடிச்சிருக்கு. பள்ளிக்கூடத்துல பாவாட சட்ட தர்றதா டீச்சர் சொன்னாங்க அதப் போட்டுக்குறேன்...''
  அவளை அணைத்தவளாய் ''எப்புடியாவது ஒரு பாவாட சட்ட எடுத்தர்றேன் தாயி....'' கண் கலங்கினாள் சொர்ணம் பாட்டி.
  அன்றிரவு முழுவதும் பாட்டிக்கு தூக்கமே இல்லை.  சாமக்கோழி கூவும் போதே எழுந்து எலந்த மரத்தில் எலந்தப் பழம் பொறுக்கத் தொடங்கினாள். விடியும் பொழுதாவது நமக்கு வெளிச்சம் தராதா என்ற நம்பிக்கையில் சொர்ணம் பாட்டி..
                   &&&&&&&&&

திங்கள், 27 நவம்பர், 2017

ஆட்டுக்கார ஆறுமுகம் (சிறுகதை) - சோலச்சி

         --ஆட்டுக்கார ஆறுமுகம் -- 
   
                   - சோலச்சி புதுக்கோட்டை
  
  காண்போர் யாவரையும் கவரக்கூடிய கண்கள்,  சிலிர்த்து நிற்கும் புருவங்கள், வசீகரப்படுத்தும் சின்ன உதடுகள், சேலைக் கட்டாமல் தாவணி போட்ட சின்ன இடை கொண்ட பத்மாவதி கஞ்சிக் கூடையை தலையில் சுமந்து கொண்டு வயலுக்கு சென்று கொண்டு இருந்தாள். "இங்கேரு நானும் வர்றேன் நில்லு "" என்றான் அரை டவுசர் போட்ட ஆறுமுகம்.
  "என்ன ஆறுமுகம் பரீட்சைக்கு படிக்காம வயலுக்குச் வர்ற..."
  "அட நீ வேற ..! நல்லா படிக்கிற நீயே போகும்போது மக்குப்பய நா.... என்ன "
  "இல்ல ஆறுமுகம் கொஞ்சம் படிச்சா பாஸ் பண்ணிடுவே... ஏதோ மாமன் மயனாச்சேனு சொன்னேன். நீ படிக்கலைனு வையி ஒனக்கு வாக்கிறவ அவ்ளோதான்..."
  "அதுக்கு நீயே வந்துருவே...."
  "ஆசையப் பாரு.  அப்பா உழுகுறாரு கொஞ்சம் சும்மா இரு...."
  "அப்பா..... கஞ்சி கொண்டு வந்துருக்கேன்...."
  முருகவேலு காளைகளை வயலில் நிற்க வைத்தார்.
  இந்தா கால் அலம்பிட்டு வர்றம்மா.. என்னம்மா மாப்பிள்ளையையும் கூட்டிக்கிட்டு வந்துருக்கே...."
  "இல்லப்பா ஆறுமுகம்தான் வந்துச்சு...."
  "மாப்ள...! ஏம் பொண்ணு தாவணி போட்டுட்டா, நீங்க இன்னும் டவுசரையே மாத்தலையே... அதமாத்துங்க..." என்றார் கிண்டலாக.
  "இருங்க மாமா வர்றேன்...." வேகமாக ஓடினான்.
  "மாப்ள நில்லுங்க ...! எங்கே ஓடுறீங்க..."
  "ஒன்னுல்ல..."
  "மாப்ள எப்பவுமே வெளையாட்டுப் புள்ளதான்..."
  சாப்பிட்டு முடித்தவுடன் கஞ்சிக் கூடையை தூக்கி தலையில் வைத்தார்...
  "நா வர்றப்பா..."
  "பாத்துப் போமா..."
  "சரிப்பா..."
  "பத்மா நில்லு ...." வேர்த்து விறுவிறுக்க ஓடி வந்தான். 
  "யாரு அடையாளமே தெரியல... அட நம்ம ஆறுமுகம் மச்சான்..."
  "பத்மா நா போட்டுருக்க கைலியும் சட்டையும் எப்புடி இருக்கு...."மூச்சு வாங்க நின்றான்.
  "ம்..... சோளக்காட்டு பொம்ம மாறி இருக்கு ...." "நா வர்றேன் ..." புன்முறுவலுடன் சென்றாள்.
  அன்று ஒரு நாள்...
, "ஆறுமுகம் இங்கே வாயேன்....."
    "ம்.... என்ன...."
  "ஒன்ன பேரு சொல்லு கூப்புட்டா தப்பா நெனச்சுக்குவியா..."
  "நீ கூப்புடாம வேற யாரு கூப்புடுறது... என்ன கைய பின்னாடி மறக்கிற...."
  "ஒனக்கு புடிக்குமுனு கேப்ப ரொட்டி சுட்டுக் கொண்டு வந்தேன், தின்னு....."
  "கொண்டா,   அடேங்கப்பா,  நீ செஞ்சதாச்சே....என்ன ருசி... காலம் முழுசும் ஓங்கையாலே சாப்புடனும்...."
  "ம்.... அவசரத்த பாரு...! நா பி.எஸ்.சி முடிச்சதுக்கு அப்புறந்தான் கல்யாணமே..."
  மௌனமாக இருந்தான்....
  "எதுக்கு அமைதியாயிட்ட..."
  "அது..... படிப்ப நிறுத்த முடிவு பண்ணிட்டேன்...."
  "என்ன சொல்ற...."
  "ஆமா... ஒனக்காவது சொத்து பத்து கேணினு இருக்கு... எங்களுக்கு பத்து ஆடுதான் இருக்கு. அம்மா எறந்ததுக்கு அப்பறம் அப்பா பாத்துக்கிட்டு வந்தாரு. அவருக்கும் ஒடம்பு சரியில்ல.எனக்கும் படிப்பும் ஏறல. சோத்துக்கு என்ன பண்றது. நீ நெறைய படிக்கனும். நல்லா படிச்ச மாப்ளயப் பாத்து கல்யாணம் பண்ணிக்க...." கண் கலங்கினான்.
  "நல்லா இருக்கு ஒன்னோட பேச்சு,  ஓ ஆசைப்படி நெறையப் படிக்கிறேய்யா, ஆனா உன்னத்தான் கட்டிக்கிடுவேன்...."
  நாட்களும் கடந்தன.....
  ஆள் உயர குச்சியைத் தூக்கிக் கொண்டு  தூக்குச் சட்டியில்  கூழை ஊத்திக்கொண்டு ஆடுகள ஓட்டிக்கிட்டு போவான். பத்மாவின் நெனப்பு அவனை வாட்டியது. பத்து ஆடுகள மேய்க்கத் தொடங்கியவன் அறுநூறு ஆட்டுக்கு சொந்தக்காரன் ஆனான்.
  அன்றொரு நாள்.....
  "மச்சான் நான் பி.எஸ்.சி பாஸ் பண்ணிட்டேன். இனிமே நமக்கு கல்யாணந்தான்...." சந்தோசத்துடன் ஓடி வந்தாள் பத்மாவதி.
  "எனக்கு தெரியுமே.... நீ எல்லாத்துலேயும் பாஸ் பண்ணிடுவேணு...."
  வேப்ப மரத்தில் வைக்கப்பட்டு இருந்த குங்குமத்தை எடுத்து அவளது ஊள்ளங்கையில் வைத்தான்.
  ஒருநாள்,  இங்கே பாரு கோவிந்தசாமி. ஓம்புள்ள ஆட்டுக்கார ஆறுமுகத்த ஏம்புள்ளையோட பழக விடுறது நல்லா இல்ல. பத்மாவதிக்கு பிடிச்ச மாப்ளயா பாத்து கட்டுறதா முடிவு பண்ணிட்டேன். ஓம் மவன் குறுக்கே வந்தா அப்பறம் போலிசுக்கு போறது மாறி இருக்கும்.... எச்சரித்தார் முருகவேல்.
  "நல்லா இருக்கே... அதுக ரெண்டும் மனசுல ஆசை வளர்த்துக்கிட்டு திரியுதுங்க. சேத்து வக்கிறதுதாயா மொறை...."
  "இதபாரு நான் சொன்னா சொன்னதுதான்  ...." கோபத்துடன் புறப்பட்டார் முருகவேல். 
  சிலநாள் கழித்து ராத்திரி ஒரு மணிக்கு  யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தார் கோவிந்தசாமி.
  "என்னம்மா ராத்திரில......"
  "இல்லங்க மாமா.... வேறொருத்தருக்கு என்னயக் கட்டி வக்கிறதா கட்டாயப்படுத்துனாங்க. நா முடியாதுனுட்டு யாருக்கும் தெரியாம வந்துட்டேன்...."
  "சரி,  வாமா விடிஞ்சதும் பேசிக்கிவோம்...." உள்ளே அழைத்தார் கோவிந்தசாமி
  பொழுது விடிந்தது.....
  "ஆறுமுகம் உங்கள அரஸ்ட் பண்றோம்...." என்றார் இன்ஸ்பெக்டர்.
  "எதுக்கு....."
  "முருகவேல் பொண்ண கடத்திக்கிட்டு வந்துட்டதா புகார் கொடுத்துருக்காங்க....
  "என்னய யாரும் கத்திக்கிட்டு வரல...நாந்தான் வந்தேன்...." தண்ணீர் குடத்தை இறக்கி வைத்துவிட்டு விவரத்தைச் சொன்னாள் பத்மாவதி.
  "அப்படியா.... உனக்கென்னமா வயசு...."
  "இருபத்தொன்னு நடக்குது சார்....."
  "கேச வாபஸ் வாங்கிட்டு சின்னஞ்சிறுசுகள வாழ்த்துங்க...." வாழ்த்துக் கூறி விடைபெற்றார் இன்ஸ்பெக்டர் ......
            -----&------
  கவிமதி சோலச்சியின் "முதல் பரிசு " சிறுகதைத் தொகுப்பிலிருந்து ....
பேச :9788210863
மின்னஞ்சல் : solachysolachy@gmail.com

வெள்ளி, 24 நவம்பர், 2017

வெளிச்சம் (சிறுகதை) - சோலச்சி


சிறுகதை 


                 வெளிச்சம் -சோலச்சி
      
வயிற்று வலியும் மயக்கமும் வர வீட்டு வாசலிலே விழுந்துவிட்டேன். "அய்யய்யோ....! தொளசி விழுந்துட்டானே....." என் தாய் ஆரியமாலா அழுது ஓடி வர அனைவரும் வந்துவிட்டனர். பாதி கெரக்கத்தில் இருந்த என்னை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். ஓரளவு மயக்கம் தெளிந்தேன். வயிற்று வலி நின்றபாடில்லை. என்னை என் பிடித்துக்கொள்ள அண்ணன் ரவி மோட்டார் சைக்கிளில் வைத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசரகால சிகிச்சை பிரிவில் அட்மிட் செஞ்சாங்க... டாக்டரும் என்னை பரிசோதனை செய்து மருந்துகள் கொடுத்தார். அது பத்து படுக்கைகள் கொண்ட அறை. நான்கு நோயாளிகள் படுத்திருந்தார்கள். என்னை ஒரு படுக்கையில் படுத்திரு என்று சொல்லிவிட்டு வெளியே வந்து கம்பவுண்டரிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். "இன்னா தொளசி ஆச்சு... ஊட்டுக்கு போயிருந்தேனா அம்மா சொன்னச்சு. ஓடி வந்துட்டேன். எப்புடி இருக்குது....." என்றான் கோயம்பேட்ல இருக்கும் பாலிய சினேகிதன் ஆறுமுகம். "வயித்துலதான் வலிச்சுக்கிட்டே இருக்கு... டாக்டரு சரியாய்டும்னுருக்கார்...." "ஒடம்ப கவனுச்சுக்க இந்தா செலவுக்கு நூறுரூபாய வச்சுக்க ..." கொடுத்த பிறகு புறப்பட்டான். சுருங்கிப் போன முகம் சட்டை போடாமல் சேலையால் மூடிய தேகம். தொளதொளனு ஆடும் கைகள். வெண்பஞ்சு போல் முடி, கிணத்துக்குள் நீந்தும் மீன்போல குழிவிழுந்த கண்களை உடைய அந்த பாட்டியை தள்ளுவண்டியில் படுக்கவைத்து தள்ளிக்கொண்டு வந்தார்கள். டாக்டர் அவசர அவசரமாக காலில் கட்டு கட்டினார். இரத்தம் வழிவது நின்றது. "வயசான ஆளுங்கிறதால காலு ரொம்ப வீக்காயிருக்கு. ஆப்ரேசன் செஞ்சாதான் சரியாகும். எட்டாயிரம் ரூபா செலவாகும். ஏற்பாடு செய்ங்க...." என்றார் டாக்டர். "பணத்துக்கு என்ன பண்றதா யோசிச்சுருக்கே.. என்கிட்ட ஆயிரம் ரூபாதான் இருக்கு. ஓன்கிட்ட எவ்ளோ இருக்கு...." ""ரெண்டாயிரம் ரூபா நா வச்சுருக்கண்ணே. மீதி ஐயாயிரம் ரூபாய் தான்..." மகன்கள் இருவரும் பேசிக்கொண்டனர். படியில் இருந்து இறங்கும்போது வழுக்கிருச்சு. வயசானதால காலு ஒன்னு ஒடிஞ்சே போச்சு. வயசானவளாக இருந்தாலும் அந்தப் பாட்டி மீது மகன்கள் இருவரும் அளவு கடந்த பாசம் வைத்தார்கள். கொஞ்ச நேரத்தில் தலையை விரித்துக் கொண்டு கண்களில் நீர் ஒழுக "ஆத்தா வொன்கு என்னாச்சு..." கத்திக்கொண்டு வந்தாள் மகள் லெட்சுமி. "ஆத்தாள பாத்துக்க பணத்துக்கு ரெடி பண்ணிட்டு வர்றோம். கண்விழிச்சா ... பக்கத்துல இருக்க முனியங்கடையில் சாப்பாடு வாங்கிக் கொடு...." இருவரும் புறப்பட்டனர். பாட்டி நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தார். "மயக்கம் தெளிஞ்சவுடனேயே சோறு கொடுக்கனுமே...."அவள் மகள் என்னிடம் "எங்க ஆத்தால பாத்துக்கங்க சாப்படு வாங்கிட்டு வந்தர்றேன்...." என்று தேமிய குரலோடு பேசிவிட்டுச் சென்றாள். மயக்கம் தெளிஞ்சு எந்திருச்ச அந்தப் பாட்டி " நா எவ்ளோ கஸ்டப்பட்டு வளத்தேன். நாயா பேயா ஒழச்சு காப்பாத்துனேன். என்னய அனாத மாறி தூக்கிப் போட்டுட்டு எல்லோரும் போயிட்டாங்களே.... நல்லா இருப்பாங்களா..." புலம்ப ஆரம்பித்தாள். அந்தப் பாட்டிக்கு தன் பிள்ளைகள் தனக்காக கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியாது. நான் உண்யை எடுத்துச் சொன்னேனஸ. உடனே அவள் "ஏம் புள்ளங்க மாறி முடியுமா...." என்று பெருமையாக சொல்லிக்கொண்டே அந்தப் பழைய சேலையால் கண்ணீரை துடைத்துக் கொண்டாள். தன் தாயின் முகத்தில் ஏதோ வெளிச்சம் தெரிவதாய் உணர்ந்தாள் உள்ளே வந்த லெட்சுமி.
              ---------&--------
             சோலச்சியின்
"முதல் பரிசு " என்ற சிறுகதை நூலிலிருந்து...
பேச : 9788210863
மின்னஞ்சல் : solachysolachy@gmail.com