சனி, 13 அக்டோபர், 2018

சாமக்கோழி - சோலச்சி

                   சிறுகதை

......சாமக்கோழி...  -சோலச்சி
''இந்தக் கூறுகெட்ட உலகத்துல காலம் போறதே தெரியமாட்டேனுது... எப்புடியாவது திங்ககெழம சந்தையில எலந்தப்பழத்த வித்துறனும். கனகுக்கு மாத்திக்கிறதுக்குக்கூட வேற பாவாடை இல்ல.  கிடைக்கிற காசுக்கு நல்ல பாவாடைய வாங்கிட்டு இருட்டுறதுக்குள்ள வீடு வந்து சேந்துறனும். தனக்குள்ளயே பேசிக்கொண்டு கனகையும் கையில்  பிடித்துக்கொண்டு நடந்தாள் சொர்ணம் பாட்டி.
  மகன் சாராயம் குடிச்சே செத்துப் போனான். மருமக எங்கே போனாளோ இன்னைக்கு வரை தெரியல. அந்தப் பாட்டிதான் கனகை வளர்த்து வருகிறாள். அவளும் இப்போது ரெண்டாங்கிளாசு படிக்கிறாள். நல்லாப் படிச்சாலும் பிள்ளைங்க எல்லாரும் அவள தபால் பெட்டினுதான் கூப்புடுவாங்க....
  பலமுறை ஊசியால் தச்சதையே தச்சு அந்தப் பாவாடை சட்டை நஞ்சு போயிருச்சு. உதவி பண்றதுக்கும் வேற ஆளு இல்ல. சொர்ணம் பாட்டியோ எலந்தப்பழம், நாவல்பழம், கொய்யாப்பழம்னு சீசனுக்குத் தகுந்தமாறி விக்கிறாள். அதுல கெடக்கிற காச வச்சுத்தான் ரெண்டு உசுரும் வாழனும். ஒரு பாவாடை,  சட்டை கனகுக்கு வாங்கனும் என்ற ஆசை. அது இன்றைக்கு நிறைவேறும் என்ற ஆசையோடு சந்தையை அடைந்தாள் சொர்ணம் பாட்டி.
  ''என்னப்பாட்டி எலந்தப்பழம் மாரி இருக்கு. வயசான காலத்துல எதுக்கு ரொம்ப நேரம் குந்திக்கிட்டு இருக்கே. மொத்தமா வெலயச் சொல்லு நான் வாங்கிக்கிறேன்....'' என்றார் முரளி.
  ''மவராசன் நல்லா இருப்பா.. இதை எடுத்துக்கிட்டு இருபது ரூபா கொடு....''
  ''சரி பாட்டி, இந்தாங்க இருபத்தஞ்சு ரூபா இருக்கு. பேத்திக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்க...''
  ''சரிப்பா...'' கையெடுத்து கும்பிட்டாள்.
  கண்ணுல தென்பட்ட ஒரு துணிக்கடைக்குள் சென்று பாவாடை விலையை கேட்டாள். எல்லாம் நாற்பது ரூபாய்க்கு மேலதான் சொன்னார்கள்.  பல கடைகளில் ஏறி இறங்கி கால் வலித்ததுதான் மிச்சம். பொழுதும் சாய்ந்தது. '' நாளைக்கு ரொம்ப கொண்டுவந்து வித்துட்டு இந்தக் காசையும் செத்து நல்ல பாவாடை வாங்கிறனும்..'' கனகைக் கூட்டிக்கொண்டு அந்த ஒத்தையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினாள்.
 பாதி தூரம் சென்றவுடன் யாரோ கூப்பிடவும் திரும்பிப் பார்த்தாள். இரண்டு தடியன்கள் கத்தியோடு நின்று கொண்டு ''ஏ...கெழவு என்ன வச்சுருக்க... ஒழுங்கா கொடுக்கல குத்திடுவோம்..அது என்ன சீலையில முடிஞ்சு வச்சுருக்கே..அத அவுத்துக் கொடுடி...''
  ''சாமி... நான் பெத்த ராசாக்களா.. விட்டுடுங்கய்யா... இருபத்தஞ்சு ரூபாதான் வச்சுருக்கேன். ஏம் பேத்திக்கு சட்டை எடுக்கனும்ப்பா...'' என்று கெஞ்சினாள்.
  ''அண்ணே...அண்ணே... எங்கள விட்டுடுங்கண்ணே....''
  ''போங்கடி... இன்னைக்குப் பூரா ஒன்னுமே கெடைக்கல. விடனுமாம்ல....''சொர்ணம் பாட்டியைத் தள்ளிவிட்டு  இருபத்தஞ்சு ரூபாயை எடுத்துக்கொண்டு ஓடிப்போனார்கள் வழிப்பறி திருடர்கள்.  பாட்டியின் கனவு அப்படியே கடற்கரையில் கட்டிய மணல்வீடு போல கண்ணீரில் அரித்துக்கொண்டு போனது.
  ''எந்திரிங்கபாட்டி... '' பழைய துணியால் அவள் முகத்தை துடைத்து தூக்கினாள் கனகு. 
  ''இந்தச் சட்டையே எனக்கு நல்லா இருக்கு. இதான் எனக்குப் புடிச்சிருக்கு. பள்ளிக்கூடத்துல பாவாட சட்ட தர்றதா டீச்சர் சொன்னாங்க அதப் போட்டுக்குறேன்...''
  அவளை அணைத்தவளாய் ''எப்புடியாவது ஒரு பாவாட சட்ட எடுத்தர்றேன் தாயி....'' கண் கலங்கினாள் சொர்ணம் பாட்டி.
  அன்றிரவு முழுவதும் பாட்டிக்கு தூக்கமே இல்லை.  சாமக்கோழி கூவும் போதே எழுந்து எலந்த மரத்தில் எலந்தப் பழம் பொறுக்கத் தொடங்கினாள். விடியும் பொழுதாவது நமக்கு வெளிச்சம் தராதா என்ற நம்பிக்கையில் சொர்ணம் பாட்டி..
                   &&&&&&&&&

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மனம் கனத்துத்தான் போனது நண்பரே