அன்னவாசலில் இலக்கிய விழா
அக்20. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இலக்கிய கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இலக்கிய கூட்டம் கோகிலா மெட்ரிக் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இலக்கிய கூட்டத்திற்கு இலக்கிய ஆர்வலர் எம்.சி.லோகநாதன் தலைமை வகித்தார். சிறுகதை எழுத்தாளர் சோலச்சி வரவேற்புரை வழங்கினார். கவிஞர் கு.இலக்கியனின் சாபத்திற்குள் பயணிக்கும் இரயில் கவிதை நூல்குறித்து இலக்கிய ஆர்வலர் சேக் அப்துல்லா விமர்சன உரை நிகழ்த்தினார். கவிஞர் புதுகை தீ.இர அவர்களின் வியர்வையின் முகவரி கவிதை நூல் குறித்து எழுத்தாளர் செம்பை மணவாளன் அவர்கள் விமர்சன உரை நிகழ்த்தினார். விழாவில் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பரிதி இளம்வழுதி அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், அன்னவாசல் காவல்நிலையமானது பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய இடத்திலேயே அமைந்திட வலியுறுத்தியும் புத்தகங்கள் இருக்கும் வீடுகளாக மாற்றுவோம் என்ற அடிப்படையில் மாதந்தோறும் இரண்டு நூல்களாவது வாங்கி வாசிக்க செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்துவதெனவும் அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியை அன்னவாசல் கீரனூர் சாலையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் கவிஞர் புரட்சித் தமிழன் சத்தியசீலன், கவிஞர்.புதுகை தீ.இர, நதிகள் இணைப்பு போராளி கவிஞர் புதூர் உ.அடைக்கலம், ஆவடிக் கவிஞர் சக்திகுமார் போன்றவர்கள் கவிதை வாசித்தனர். கவிஞர் பூ.அடைக்கலம் மது ஒழிப்பு பற்றிய சமூகப் பாடலைப் பாடினார். மோகன்ராஜ், குழந்தைவேலு, குமார், கே.டி.கந்தசாமி, பா.இன்பராஜ், ஆ.கிருஷ்ணகுமார் போன்ற இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட கவிஞர் கு.இலக்கியன் பேசும்போது, கிராமப்புற பகுதிகளில்தான் இலக்கியம் செழித்து வளர்கிறது. இலக்கியத்தின் பிறப்பிடமும் கிராமங்கள்தான். இந்த அமைப்பானது புதிய படைப்பாளர்களை ஊக்குவிக்கும் அரணாக விளங்குகிறது. இன்று இலக்கிய அமைப்புகள் பல இயங்கிவந்தாலும் இது போன்ற கிளைகளில் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வருவது அவசியமாகிறது. அன்னவாசல் கிளையின் செயலாளர் சோலச்சி சகபடைப்பாளர்களை மிகச் சிறப்பாக நேர்த்தியாக வழிநடத்தி வருவதைக் கண்டு வியக்கிறேன். எத்தனையோ இலக்கிய கூட்டங்களுக்கு சென்றிருக்கின்றேன். இருந்த போதும் இந்தக் கூட்டம் மன நிறைவாக இருக்கிறது. இன்றைய படைப்பாளர்கள் அலங்காரத்திற்காக சொற்களை குவித்து எழுதுவதை தவிர்த்து வாழ்வியலின் அனுபவங்களை துயரங்களை அதற்கான தீர்வுகளை எழுத முன்வர வேண்டும். பேனா கிடைத்துவிட்டது என்பதற்காக அனைத்தையும் எழுதக் கூடாது. இந்த சமூக வளர்ச்சிக்கு எது தேவையோ அதை உணர்ந்து எழுத வேண்டும் '' என்று கூறினார். நிறைவாக எழுத்தாளர் சோலச்சி நன்றியரையாற்றினார்.
1 கருத்து:
மகிழ்ந்தேன் நண்பரே
கருத்துரையிடுக