வியாழன், 29 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் குடிமகனின் கதறல் - சோலச்சி





ஊரடங்கில் உறைந்து கிடக்கிறது 
எங்களது உயிர்...

நடமாடுவதற்கே நடுங்குகின்றன
எங்கள் கால்கள்....

நடப்பதை அறியாமல்
தலைதெறிக்க ஓடி
தரையில் வீழ்கின்றன
எங்கள் கால்நடைகள்.....

கூந்தலில்
ரோஜாக்களை சூடி
அழகு பார்த்த
எங்கள் மண்
இரத்த ஆற்றை அள்ளி
உடலெங்கும் பூசி
வழிந்தோடச் செய்கிறது......

தொங்கும் ஆப்பிள்கள்
கொத்துக்கொத்தாக 
குண்டடிபட்டி சாகின்றன....

எல்லையில்லா வான்வெளியில்
எல்லையில் மூச்சுபட்டாலே
எரிந்து போகின்றன
எங்கள் உடல்கள்....












மூத்திரம் அடிப்பதற்கும்
மூச்சு விடுவதற்கும்
முறைப்படி அனுமதி கேட்க
முட்டுச் சந்துக்குள்
முடங்கிக்கிடக்கிறோம்.....

பசுமையான மண்ணில்
பாசாங்காய்
பதற்றத்தை உண்டாக்கி
பற்றியெரியச் செய்யும் வித்தைகள்
பாரபட்சமின்றி நடக்கின்றன......

பனி மலைகள்
இனி பலகோடி ரூபாய்க்கு
ஏலம் போகும்......

பள்ளத்தாக்குகள் பங்களா கட்டுவதற்கு
பயன்படுத்தப்படும் .....

வற்றாத நதிகளில்
தொழில்பட்டறை கழிவுகள்
தொய்வின்றி பயணமாகும்...

காடுகள் அழிக்கப்பட்டு
கால் செண்ட் இடம்
கால் கோடிக்கு விற்பனையாகும்....

முதலைகள் காணா மண்ணில்
பெரும் முதலைகள்
பெருவெளியில் நடமாடும்.....

மொழி திணிப்பும்
உணவு முறையும்
நடைமுறைக்கு தள்ளப்படும்.....

போர்க்கருவிகளின் கூடாரமாய்
அறிவிக்கப்பட்டு
நாங்கள் அகதியாக்கப்படலாம்....

நாதியற்றவர்களாய்
நாடெங்கும்
நடமாடும் நிலையும் வரலாம்.....




அழகிய மண்
இனி
அழுகிய மண்ணாய்
ஆகப்போவதை
அருகிலிருந்தே பார்க்கும்
அவலம் அமையலாம் ......


   - சோலச்சி புதுக்கோட்டை 




         - 2019 ஆகஸ்ட் 25-31ஜனசக்தி இதழில் வெளியானது.

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

கரங்கள் உயரட்டும் - சோலச்சி


கரங்கள் உயரட்டும் - சோலச்சி


இன்னுமா சாதி
இருக்குனு கேட்குறான்
இந்தியாவில்தானா இவனும்
இருக்கிறான்...

பொல்லாத நாட்டில்
வாழத்தான் முடியல...
பொங்கி எழுடா
பொழுது விடியல....
             
தீண்டாமை காணாமை
நடவாமை கல்லாமை
திருவிதாங்கூரில் நடந்த கொடுமை
மறக்க முடியுமா....

சோறு சாப்பிட போறேனு சொன்னதுக்கு
கட்டி ஒதச்சு அடிச்ச கொடுமை
நினைவில் நீங்குமா....

கஞ்சிக்கு குடிக்கப் போறேனு சொல்லு
கைகட்டி தனியே
தூரமா நில்லு....

கட்டிக்க உனக்கு துணி ஒரு கேடா
ஒட்டிய வயிறுதான்
உனக்கு எப்பவும் போடா....

இன்னும் இன்னும் கொடுமை .....

எல்லா பக்கமும் இப்பவும் நடக்குது
கண்ணு காத மூடிதான்
உலகம் கெடக்குது.....

அந்தக்காலம் இந்தக்காலம்
இனி எந்தக்காலம் வந்தாலும்
மனித பிறவி மேலானது
ஒதுக்க முடியுமா....

விலங்கோடு விலங்கு
காதல் பண்ணுது - மனுசன்
மனித காதலை கொன்று குவிப்பதை
ஏத்துக்க முடியுமா.....

இளவரசன் காதலோ தண்டவாளத்துல
உடுமலை சங்கரோ
நகரத்தின் நடுவுல.....

ஒட்டுமொத்தமா இந்துனு சொல்லுறான்
உள்ளுக்குள்ளதான்
தலித்துகள கொல்லுறான்....

இன்னும் நீளனுமா மரணம்.....









தலைநிமிரச் செய்தவர்களின்
சிலையை துண்டிக்க
துடிக்குது பெருங்கூட்டம்...


அடங்கியே இருப்பது கொடுமை
அகிலத்தை ஆளனும் அறிவுத்திறமை..... 

கண்ண மூடிக் கிடப்பது பாவம்
கரகங்கள் உயர்த்தி
பொங்கனும் கோபம்....

                  -சோலச்சி



ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

பின் தொடரும் மரணம் - சோலச்சி



பின் தொடரும் மரணம்....

                                            -சோலச்சி











சுழன்று அடிக்கும் காற்றாய்
இருக்கிறது
என் எழுத்து....

எனக்குள் பிறக்கும்
என் எழுத்துகள்
நிமிர்ந்தே நிற்கும் ....

தவறுகள் செய்தால்
உச்சந்தலையில் அமர்ந்து
ஓங்கி கொட்டும்....

என் உதடுகளின்
புன்னகையில்
காயத்தை ஏற்படுத்த
காலம் பார்த்து
களம் அமைத்துக்கொண்டு இருக்கிறார்கள்
கருங்காலிகள்....

வசை பாடுவதற்கும்
வம்பிழுப்பதற்கும்
வாடகைக்கு ஆள் பிடித்து
பணியமர்த்தியிருக்கிறார்கள்....









சொற்களை எரிந்தவர்கள்
கற்களையும்
கழிகளையும்
தாராளமாக வீச
தொடங்கிவிட்டார்கள்....

எரிமலையில் நீராடி
பனிமலையில் படுத்துறங்கி
பாலைவனத்திலும்
பம்பரம் சுழற்றியவன்
நான்.....

வான சூரியனே
என் வாசல் வர
விண்ணப்பித்து காத்திருக்கும்....

வட்ட நிலாவோ
என் வியர்வைக்கு விசிறியாக
வேண்டுகோள் விடுக்கிறது....

என்னைக் கொன்று
ருசித்து உண்ண
பெருங்கூட்டம் 
கிளம்பியிருக்கிறது....

பெரும் காற்றைக் கிழித்துக்கொண்டு
பின் தொடர்கிறது
மரணம்.....

என் வாகனச் சக்கரம்
வலுவிழந்து போகலாம்...
காலச் சக்கரம்
கைகூடாமல் இருக்கலாம்...

அடையாளம் தெரியாமல் 
என்னை எரித்தாலும்
அங்கங்களை
அணுஅணுவாய்
அறுத்து சிதைத்தாலும்.....

கண்மூடாது
நிலத்தில் ஊன்றிய
என் எழுத்துகள்....

            - சோலச்சி

சனி, 17 ஆகஸ்ட், 2019

நல்ல மனம் கொண்ட - சோலச்சி


நல்ல மனம்...... சோலச்சி






நல்ல மனம் கொண்ட மனிதர்களாலே
உலகம் வாழுது தம்பி.....

இங்கே ஒவ்வொரு மனுசனும்
போதையினாலே
நாளும் வாழுறான் வெம்பி....

புலவன் இங்கே
புலமை என்ற போதையில்
வாழுறான்....

அன்பு போதைதான்
ஆசை போதைதான்
ஒவ்வொரு பாதையும் போதைதான்....

மது பழக்கமும்
புகைபிடி பழக்கமும்
பொல்லாத போதை தம்பி...

காம மோகமும்
காசு மோகமும்
நல்ல பாதையில்லை தம்பி....















உருவத்தைக் கொடுத்த
இயற்கையினாலே
உள்ளத்தை உணர முடியவில்லை....

பள்ளமான வாழ்க்கையினை
பாரில் சரிசெய்ய முடியவில்லை....

வெள்ளம் திரண்டு வந்தால் கூட
அணைகட்டி தடுத்திடலாம்
உன் தகாத ஆசை திரண்டு வந்தால்
தடுக்க என்ன வழி
செய்திடலாம்......

சுரண்டித் தின்பதும்
சுயநலம் கொள்வதும்
நல்ல பாதையில்லை தம்பி....

உலகத்தைப் படைத்த
இயற்கையுமிங்கே
ஓயாமல் நாளும் அழுகிறது....

கலக்கம் செய்யும் மனிதராலே
கண்களை மூடி வாழ்கிறது....

காலங்கள் இப்படி கழிந்தால்
காத்திட முடியாது
உன்னை நீயே காக்காவிட்டால்
உன் வாழ்க்கை விடியாது.....!!!

                     - சோலச்சி



ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

போகிற போக்கில் - சோலச்சி




உனக்கு ஒன்னும் வாங்கித் தரலே



போகிற போக்கில் சாக்கு போக்கு
சொல்லாமல் வாயேன்டி
உன் பார்வை காட்டும் சங்கதி
கேட்க நானும் வாரேன்டி......!

நாளும் பொழுதும் பாராமலே
பாட்டு பாடினோம் - நாம
நடுக்காட்டில் கூட்டாஞ்சோறு ஆக்கி
எதையோ தேடினோம்
தைல மர காத்து உன் தலையில் ஆடுது
பசும் புல்லப்போல உன் உதடு
சிரிச்சு காட்டுது...!

பழைய வயலில் சம்பா நெல்லு
அறுக்க போனோமே
குத்திய சம்பா நெல்ல பிரிச்சு
அரிச்சு தின்னோமே
வாய்க்கால் வரப்பு எல்லாம்
நம்ம கதைய சொல்லுமடி
வாய் திறந்து சொல்லு
நான் துணையா வாரேன்டி....!

















மலையில் கோயில் இருந்துச்சு
கும்பிட தோணல
மரத்தில் அமர்ந்து பேச
நேரம் போதல
வெயில் கூட நம்மல பார்த்து
மழையா வேர்த்து கொட்டுச்சு
மானமுள்ள தமிழர் மனசு வாழ்த்து பாடுச்சு.....!






உனக்கு ஒன்னும் வாங்கித் தரலே
என் மனசு போதுமா
என் உசுர வழி நடத்துவதே
உன் நெனப்பு தானம்மா
என்னை விட்டு நீயும் பிரிவதில்லையே
தென்னை போல ஓங்கி மலர
எதுவும் தடைகள் இல்லையே....!

                         - சோலச்சி

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

பித்துப் பிடிக்க வச்சவள... - சோலச்சி




கவிதை ஒன்னு எழுதி வச்சேன்
ரொம்ப நாளா
கண்டு நீயும் கருத்துச் சொல்லு
எந்தன் தோழா....


என்று நானும் சொல்லித்தானே 
எடுத்து தந்தேன்
எப்படியோ அவ கைக்கு போனது அன்று...!


அறியாத பொண்ணு அவ 
அருகில் வந்தாள்
அழகான கடுதாசி நீட்டிச் சொன்னா....


ரொம்ப நல்லா புடுச்சுருக்கு 
இன்னும் எழுத
எப்பவும் துணையாவேன் 
அன்பு தோழா....!






சிரிச்ச முகம் சிரிச்சுக்கிட்டே 
போனதம்மா
காதல் சிறையில்தான் பூட்டிவச்சு 
போனாளம்மா....


கண்ணாலே பேசி வந்தோம் 
ரொம்ப நாளா
கடுதாசிக் கொடுத்துக்கிட்டோம் 
கொஞ்ச நாளா....


பள்ளி நாட்கள் முடியத்தானே 
நேரம் வந்தது
பாவி அவ மனசுதானே 
முள்ளானது....



குத்தியிருந்தா பிடுங்கி நானும் 
எறிஞ்சிருப்பேன்
பித்துப் பிடிக்க வச்சவள 
என்ன செய்ய ........!!!

                           - சோலச்சி  புதுக்கோட்டை