பின் தொடரும் மரணம்....
-சோலச்சி
சுழன்று அடிக்கும் காற்றாய்
இருக்கிறது
என் எழுத்து....
எனக்குள் பிறக்கும்
என் எழுத்துகள்
நிமிர்ந்தே நிற்கும் ....
தவறுகள் செய்தால்
உச்சந்தலையில் அமர்ந்து
ஓங்கி கொட்டும்....
என் உதடுகளின்
புன்னகையில்
காயத்தை ஏற்படுத்த
காலம் பார்த்து
களம் அமைத்துக்கொண்டு இருக்கிறார்கள்
கருங்காலிகள்....
வசை பாடுவதற்கும்
வம்பிழுப்பதற்கும்
வாடகைக்கு ஆள் பிடித்து
பணியமர்த்தியிருக்கிறார்கள்....
சொற்களை எரிந்தவர்கள்
கற்களையும்
கழிகளையும்
தாராளமாக வீச
தொடங்கிவிட்டார்கள்....
எரிமலையில் நீராடி
பனிமலையில் படுத்துறங்கி
பாலைவனத்திலும்
பம்பரம் சுழற்றியவன்
நான்.....
வான சூரியனே
என் வாசல் வர
விண்ணப்பித்து காத்திருக்கும்....
வட்ட நிலாவோ
என் வியர்வைக்கு விசிறியாக
வேண்டுகோள் விடுக்கிறது....
என்னைக் கொன்று
ருசித்து உண்ண
பெருங்கூட்டம்
கிளம்பியிருக்கிறது....
பெரும் காற்றைக் கிழித்துக்கொண்டு
பின் தொடர்கிறது
மரணம்.....
என் வாகனச் சக்கரம்
வலுவிழந்து போகலாம்...
காலச் சக்கரம்
கைகூடாமல் இருக்கலாம்...
அடையாளம் தெரியாமல்
என்னை எரித்தாலும்
அங்கங்களை
அணுஅணுவாய்
அறுத்து சிதைத்தாலும்.....
கண்மூடாது
நிலத்தில் ஊன்றிய
என் எழுத்துகள்....
- சோலச்சி
4 கருத்துகள்:
தாங்களும் தங்கள் எழுத்துக்களும் என்றென்றும் நிமிர்ந்து நிற்பீர்
எழுத்தின் பலமே தனிதான். புன்னைகையில்...புன்னகையில் என்றிருக்கவேண்டுமோ?
சிறப்பு..
//வான சூரியனே
என் வாசல் வர
விணணப்பித்து
காத்திருக்கும்//
ஸூப்பர் வரிகள் நண்பரே மிகவும் ரசித்தேன்.
கருத்துரையிடுக