''சியூக்கியின் பயணம்''
- சோலச்சி
"நம்மல மாதிரியே ஆளுங்க இன்னொரு கிரகத்துல இருந்ததற்கான அடையாளங்கள் இருக்கதா சொல்றாங்களே உண்மையா....அப்பா'' கேட்டுக்கொண்டிருந்தான் சியூக்கி.
''அப்படிதாம்பா சொல்றாங்க. ஆனா எந்தளவுக்கு உண்மைனு தெரியல. நம்ம இருக்க இந்த எடம் செவப்பா எவ்ளோ அழகா இருக்கு. ஆனா அவுங்க கண்டுபிடிச்சுருக்க எடம் ஒரே புழுதிமூட்டம் இருப்பதாகவும் அவுங்க வாழ்வதற்காக எதையோ பெருசு பெருசா கட்டி வச்சுருக்க மாதிரியும் நம்ம சைன்டிஸ்ட்க ரொம்ப வருசமா சொல்றாங்க. அதப்பத்தின கதைகள் நெறையவே இருக்கு'' சொல்லிக்கொண்டே வெள்ளை நிறத்தில் ஒரு மாத்திரையை எடுத்து தன் வாயில் போட்டுச் சப்பிக் கொண்டார் கியூராக். அவர் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது.
"நெறைய கதையா.... அப்பா.....அப்பா.... கொஞ்சம் சொல்லுங்களே'' அடம்பிடித்தான் சியூக்கி.
''ஏங்க அவனுக்கு கத சொல்ற வயசா. ஒன்னும் தெரியாத புள்ள மாதிரு நீங்களும் சொல்லிட்டே இருக்கீங்க. ஏழு வயசு ஆம்பள மாதிரியா இருக்கான். அவனாட்டம் புள்ளைங்க கல்யாணம் காச்சி முடிஞ்சு புள்ள பெத்துட்டானுக. காலகாலத்துல அவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வைக்கப் பாருங்க. நம்ம என்ன சின்னஞ்சிறுசுகளா. வயசு எனக்கே பதினொன்னு முடியப்போது. இன்னும் எத்தன வருசத்துக்கு நா இருக்கப் போறேனோ. இப்பவே ஒருவேலை செய்ய முடியல'' சத்தம் போட்டாள் லியூரா.
மனிதர்களின் அதிகபட்ச ஆயுட்காலம் இருபத்தைந்து ஆண்டுகள்தான். இருபத்தைந்து வயதை தொட்டது இலட்சத்தில் ஒருவர்தான். சென்ற ஆண்டு கால்மாகாணத்தைச் சேர்ந்த பெப்சிகான் என்பவர்தான் இருபத்திரண்டு வயதை தொட்ட சாதனை மனிதர்.
உலக ரகசியங்களை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தான் சியூக்கி. பத்து வயது வரை திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற முடிவில் இருந்தான் சியூக்கி. அவன் லியூராவிடம் சொன்னபோது அவள் குதிகுதியென்று குதித்துவிட்டாள்.
''இப்பவே ஒனக்கு வயசாயிருச்சு. இன்னும் மூனு வருசம்னா. ஒருபய பொண்ணு கொடுக்க மாட்டான். நீ கெழவனாயிடுவ புரிஞ்சுக்க. பேரன் பேத்திய பாத்துட்டு சாவனுங்குற ஆசை எங்களுக்கில்லையா. அந்த மனுசனுக்கு இப்பவே அங்க வலிக்குது, இங்க வலிக்குதுனு புலம்புறாரு. ஏங்க எடுத்துச் சொல்லுங்க'' சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் போனாள் லியூரா.
"கல்யாணத்த பண்ணிட்டே அதப்பத்தின ரகசியங்களை தேடுப்பா. எங்களுக்கும் வயசாயிருச்சுல்ல. கை நிறைய சம்பாதிக்கிற இந்த நேரத்துலயே கல்யாணத்த செஞ்சுறனும். ஒனக்கு ஒரு உண்மைய சொல்றேன் கேளு. இந்த உலகத்துலயே மார்ட் லுக் ங்கிற ஆராய்ச்சியாளர் எழுதுன புத்தகம்தான் சிறந்த புத்தகமா எல்லாரும் கருதுறாங்க. அது மேலோட் மாகாணத்துல இருக்க நூலகத்துல இருக்குது. அத யாரும் அவ்வளவா படிக்கிறதுல்ல. ஏன்னா அது அவ்ளோ பெரிய புத்தகம். அதுலருந்து எனக்கு தெரிஞ்ச சேதி ஒன்னு சொல்றேன்.''
''நமக்கு தவிச்சுச்சுனா வெள்ள மாத்திரைய போட்டுக்குறோமா. ஆனா அங்க வாழ்ந்தவங்க திரவம் மாதிரி ஒன்னு இருந்ததாவும் அதக் குடிச்சதாவும் சொல்றாங்க. அந்த திரவம் நாலாபக்கமும் பெருகிக் கெடந்துச்சாம். பல எடங்கள்ல நிக்காம ஓடிக்கிட்டே இருந்துச்சாம். அதத்தான் அந்த மக்கள் குடிச்சதாவும் குளிச்சதாவும் சொல்றாங்க''
''அது எப்படி அவருக்கு தெரியும்" ஆவலாக கேட்டான்.
''நமக்கு முன்னாடி வாழ்ந்தவங்க வழிவழியா சொல்லிருக்காங்க அத கேட்டு எழுதிருக்காரு. அந்த மாதிரி ஆய்வு பண்றதுக்கு அவரோட புத்தகம்தான் பலருக்கு தொணையா இருக்கு. ஆனா அங்க நீ இப்ப போகக் கூடாது. கல்யாணம் பண்ணிட்டு ரெண்டு வருசம் கழிச்சுதான் போகனும். அதுக்குள்ள உனக்கு பொறக்குற புள்ளைங்களும் பெரிய ஆளா வந்து சம்பாதிக்க ஆரம்பிச்சுருவானுக. நாங்க உசுரோட இருக்க வரைக்கும் பாத்துக்குறோம்'' அவன் அப்பா கியூராக்கின் பேச்சால் மகிழ்ந்து போனான்.
''விட்டாக்க விடிய விடிய பேசிக்கிட்டு இருப்பீங்களே. வூடமாட சமக்க ஒத்தாச பண்ண ஒரு ஆளு இல்ல'' சொல்லிக்கொண்டே பீங்கான் தட்டு ஒன்றில் சமைத்த அய்ந்தாறு மாத்திரைகளை ஆவி பறக்க கொண்டு வந்தாள் லியூரா.
''எங்க அம்மா கைப்பக்குவத்த இந்த உலகத்துலயே யாரும் மிஞ்ச முடியாது. வாசனை தூக்குதும்மா''
''ம்... இந்தன வருசமா அவரு ஏமாத்துனாரு. இப்ப அப்பாவுக்குள்ள புத்தி ஒனக்கும் ஒட்டிக்கிருச்சா'' செல்லமாய் கோபித்துக் கொண்டாள் லியூரா.
சியூக்கிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. அவனை விட இரண்டு வயது குறைவான லயா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள்.
''வயசு அஞ்சு ஆகுது. இத்தன வருசமா படிப்பு படிப்புனு காலத்த கடத்திட்டா. இவள எவன் வந்து கட்டிக்கப் போறானோனு நெனச்சுக்கிட்டு இருந்தேன். சூரிய கடவுளா பாத்து நல்ல வரன கண்ணுல காமிச்சுருச்சு'' நிம்மதி பெரு மூச்சு விட்டாள் லயாவின் தாய் சலீயான்.
சூரியன்தான் அனைவருக்குமான கடவுள். ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் ஊரே கூடி நின்று வரவேற்பதும் மாலை நேரத்தில் மணற்பரப்பில் அமர்ந்து கதைகள் பேசியும் விளையாடியும் மகிழ்ந்து வந்தனர். பகல் பொழுது இதமான வெளிச்சம் நிறைந்த இளம் சிவப்பு நிறமாகவும் இரவுப் பொழுது முழு சிவப்பு நிறமாகவும் இருந்தது. தெருக்கள் எங்கும் நீல நிற விளக்குகள் வெளிச்சத்தை வழங்கிக் கொண்டு இருக்கும்.
''லயா.... நிலா ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்கள். நாம் இதுவரை பார்த்ததில்லை. இப்பெருவெளியின் பேரழகு என்று நம் முன்னோர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். எனக்கென்னமோ அப்பெருவெளியின் பேரழகு நீதான் என்று எண்ணுகின்றேன். உண்மைதானே'' சியூக்கியின் பேச்சில் அவள் மயங்கிக் கிடந்தாள். அந்த மேகமலைகள் நகர்ந்து கொண்டிருந்தன.
''உங்களின் பொல்லாத பேச்சில் மயங்கிய அந்த மேக மலைகள் நாணத்துடன் நகர்ந்து செல்லும் அழகினை மெல்ல ரசித்துக் கொண்டிருக்கின்றேன். அந்த மேக மலைகளுக்குள் நான் நம்மைக் காண்கின்றேன்'' என்றாள் லயா.
கைகோர்த்து பேசிக் கொண்டே பெரும் மணல் திட்டுகளுக்கு பின்புறம் சென்றார்கள். அங்கு இவர்களைப் போன்று தன்னிலை மறந்த தம்பதியினர் பலர் வான வெளியை வசீகரித்துக் கொண்டிருந்தனர்.
நாட்களில் மூழ்கி திளைத்து நட்சத்திரத்தை ஒத்த இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தனர். நீண்ட நாள் ஆசையான பூமி ஆராய்ச்சியில் இறங்க நினைத்து மேலோட் மாகாணம் செல்ல திட்டமிட்டான். மேலோட் மாகாணம் செல்ல வேண்டும் என்று சொன்னால் லயா விடமாட்டாள் என்பது சியூக்கிக்கு தெரியும். அதனால் வேலை சம்பந்தமாக வெளியூர் செல்கிறேன். வர நான்கு நாள் ஆகும் என்று கூறி ஐநூறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மேலோட் மாகாணத்திற்கு பயணமானான் சியூக்கி.
நூலகத்தைக் கண்டு பிடித்து தன்னை அங்கு உள்ள பணியாளர்களிடம் அறிமுகம் செய்து தனது பயண நோக்கத்தையும் எடுத்துக் கூறினான். அவர்கள் சியூக்கிக்கு உதவுவதாக உறுதியளித்தனர். பணியாளர் ஒருவர் அந்த நூலினை தூக்கிக் கொண்டு வந்தார். ''இதுவரைக்கும் யாருமே படிக்க ஆசப்படாத இந்தப் புத்தகத்தையா வாசிக்கப் போறீங்க'' என்பது போல பார்த்தார் அந்தப் பணியாளர். தனியறையில் அமர்ந்து மார்ட் லுக்கின் நூலினை திறந்து வாசித்த சியூக்கிக்கு பேரதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமி என்கிற கோளிலிருந்து ஊசி வடிவ வாகனம் ஒன்றில் பலர் இங்கு வந்ததாகவும் அங்கு தற்போது உயிர்கள் வாழ்வதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் நாடுகள் சில பூமி பற்றிய ஆராய்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பல நாடுகள் முயற்சியை கைவிட்டுவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. உயிர்கள் அனைத்தும் அழிந்ததற்கு மிக முக்கிய காரணம் பூமியின் வளத்தை சுரண்டியதுதான். பூமியில் உயிரினங்கள் பல வாழ்ந்ததாகவும் அதில் சிலவற்றின் படங்களும் வரையப்பட்டிருந்தன. காடுகள் செழித்து வளர நீர் என்ற ஒன்று அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக இருந்தது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இங்கு மனிதர்களைத் தவிர வேறு யாருமே இல்லையே. அப்படியானால் நம்மைத் தவிர வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான உயிர்கள் தற்போது அழிந்துவிட்டனவா. படங்களைப் பார்க்கும் போதே வியப்பாக இருக்கிறதே. பூமியில் வாழ்ந்தவர்கள் அவ்வளவு கொடுமைக்காரர்களா. நாம் பூமியிலிருந்து எப்படி இங்கு குடியேறினோம். நாம் ஒவ்வொருவரும் ஏழடி பத்தடி என்று இருக்கின்றோமே. அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்ற நினைப்பில் புத்தகத்திற்குள் மூழ்கினான் சியூக்கி.
பூமி பற்றிய ஆராய்ச்சிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்ள எண்ணி அந்நாட்டு விஞ்ஞான குழுமத்திற்கு கடிதம் எழுதினான் சியூக்கி.
''என்னங்க நீங்க போயிதான் ஆகனுமா. பூமிய ஆராய்ச்சி பண்ண போனவங்க பல பேர இன்னும் திரும்பி வரலனு சொல்றாங்க. அங்க உயிர்வாழ எந்த அறிகுறியும் இல்லனு சொல்லித்தான் பல நாடுகள் அந்த ஆராய்ச்சிய ஒதுக்கி வச்சுட்டாங்க. இப்ப நீங்களும் போயி ஒங்களுக்கு ஒன்னுனா நா என்ன பண்ணுவேன்'' லயா சோகமாய் நின்றிருந்தாள்.
''என் தனிமைப் பொழுதை எண்ணும் போதெல்லாம் அந்த மேக மலைகளில் நம்மைக் காண்கின்றேன் என்று சொன்னாயே மறந்துவிட்டாயா. என் நினைவுகள் உன் உறக்கத்திற்கு தடையாக இருந்தால் அந்த மேக மலைகளிடம் தூது அனுப்பு. ஓடோடி வந்துவிடுகிறேன்'' சியூக்கியின் ஆறுதலான பேச்சுகளில் லயா அமைதியாகவில்லை.
நாட்கள் நகர்ந்தன. விண்கலத்தின் மூலமாக சியூக்கியுடன் சேர்ந்து மூன்று பேர் பூமி பற்றிய ஆராய்சிக்கு அந்நாட்டு அரசால் அனுப்பி வைக்கப்பட்டனர். விண்கலம் வேகமாக பூமியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
-----------******------------
சோலச்சி அகரப்பட்டி
பேச: 9788210863
குறிப்பு : சோலச்சியின் அட்டணக்கால் சிறுகதை நூலிலிருந்து
---------*****------
1 கருத்து:
பூமியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.....அப்பப்பா இவ்வாறான முடிவினை நான் எதிர்பார்க்கவில்லை.
கருத்துரையிடுக