விளம்பரம் அல்ல ; வியப்பு....!!!
'' ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜ் ''
நான் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களை வியப்பாக பார்த்ததுண்டு. ஏனென்றால் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். சிலர் புத்தகத்தை பார்த்து நடத்துவார்கள் ; சிலர் புத்தகத்தைப் பார்க்காமல் நடத்துவார்கள் ; சிலர் நகைச்சுவையாக நடத்துவார்கள் ; சிலர் பாடத்தை தவிர வேறு எந்த பகுதிகளுக்கும் சென்றுவிடமாட்டார்கள். நான் விடுதியில் தங்கி படித்த நேரத்தில் ஏதாவது ஒரு பாடத்தை ஆசிரியர்களைப் போல் பேசிப் பார்த்ததுண்டு. மேல்நிலைக்கல்வி பயின்றபோது வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் நண்பர்களுக்கு பாடம் நடத்திக் காண்பித்த தருணங்களை எண்ணி மகிழ்ச்சி அடைவதுண்டு.
இப்போதும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணியை ஆர்வமுடன் கவனிப்பதுண்டு. யாரிடமாவது கற்பித்தலில் புதிய வழிமுறைகளை கற்றுக்கொள்ள மாட்டோமா என்ற ஏக்கம்தான். அவர்களிடம் கற்றுக்கொள்வதற்கு ஏதாவது ஒன்று இருக்கும் என்று நம்புவதுண்டு.
கல்லூரி மாணவர்களிடம் பேராசிரியர்கள் எவ்வாறு கற்பித்தல் பணியில் ஈடுபடுகின்றார்கள் என்பதை காண்பதற்கு ஆவலோடு இருக்கின்றேன். ஏனெனில் கற்பித்தல் எல்லோராலும் செய்துவிட முடியாது. கற்றவர்கள் அனைவராலும் கற்பித்தல் பணியில் ஈடுபட முடியாது.
நீண்ட நாட்களாக எனக்குள்ளும் ஓர் ஆசை. கேட்டரிங் மாணவர்களுக்கு எப்படி கற்பித்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதைக் காண வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.
எனது ஆசை 2021 அக்டோபர் 26 தேதியன்று நிறைவேறியது. புதுக்கோட்டையில் நான் பார்த்து வியக்கும் தோழர்களில் ஒருவர்தான் தோழர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்கள்.
எனது சொந்த வேலை காரணமாக அக்டோபர் 26 ஆம் தேதி புதுக்கோட்டை சிவபுரம், வலது புறம் வெள்ளாற்றின் கரையில் இயற்கை எழில் சூழ செயல்பட்டு வரும் தோழரின் ஆக்ஸ்போர்டு கல்லூரிக்குச் சென்றிருந்தேன். நான் சென்றிருந்த நேரம் தோழர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்கள் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். வகுப்பு முடிந்ததும் பார்த்துவிட்டு செல்லுவோம் என்ற நினைப்பில் வரவேற்பறையில் நின்றிருந்த சகோதரியிடம் எனது பெயரைச் சொல்லிவிட்டு இருக்கையில் அமர்வதற்குள் தோழர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்கள் ஓடோடி என்னருகே வந்தார். நீங்கள் வந்ததை சன்னல் வழியே பார்த்துவிட்டேன். நீண்ட நேரம் காத்திருக்க வைக்கக்கூடாது என்பதற்காக வந்தேன் என்ற அவரது பதில் அவருக்கே உரித்தான பெருந்தன்மையையும் பேரன்பையும் காட்டியது.
வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டு இருப்பதை நிறுத்திவிட்டு என்னைப் பார்க்க வந்ததால் மாணவர்கள் நலன் கருதி இரண்டு நிமிடங்கள் கூட என்னால் இருக்க மனமில்லாமல் நான் பார்க்க வந்த விபரத்தை தெரிவித்துவிட்டு கிளம்பும்போது தோழரிடம் "தோழர் நீங்கள் பாடம் நடத்துவதைப் பார்க்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை '' என்று சொன்னேன். உடனே மறுப்பேதும் சொல்லாமல் இப்போதே உள்ளே வாங்களேன் என்று அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
மாணவர்களோடு மாணவனாக இருக்கையில் அமர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். ஆரம்பக்கல்வி பயிலும் குழந்தைகளிடம் அங்கன்வாடி குழந்தைகளிடம் எவ்வாறு இனிமையாக அவர்களது ஆர்வத்தை தூண்டும் விதமாக நடக்க வேண்டுமோ அதைவிட மென்மையாக அவர் கற்பித்தல் பணியில் ஈடுபட்ட விதம் என்னை வெகுவாக வியப்பில் ஆழ்த்தியது.
நான் சென்றிருந்த நேரம் அசைவ உணவு பற்றிய பாடத்தை நடத்திக்கொண்டிருந்தார். நானோ... ஏற்கனவே அசைவ பிரியர். அசைவம் சமைப்பதென்றால் அப்படியொரு பேரானந்தம். சில குறிப்புகளை கரும்பலகையில் அவ்வப்போது எழுதுகின்றார். அவரது வெறும் கைகளை சமையலறையாக காட்சிப்படுத்துகிறார். ''வெறும் கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும் மூலதனம் '' என்று தோழர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் போன்றவர்களைப் பார்த்துதான் கவிஞர் தாராபாரதி சொல்லியிருப்பார் என்று நம்புகின்றேன்.
தோழர் அவர்கள் பாடம் நடத்தும்போது என் கண்கள் முன்னால் சமையல் காட்சி படமாக ஓடிக்கொண்டிருந்தது. மாணவர்கள் அனைவரும் திரைப்படத்தின் இறுதிக்காட்சிக்காக காத்திருப்பவர்களைப்போல் சமையல் காட்சிப்படுத்துதலில் மூழ்கி இருந்தனர். நாற்பது நிமிடம் எப்படி போனது என்றே தெரியவில்லை. பாடம் நடத்தும் திறனில் காட்சிப்படுத்துதலில் நம்மை வசியம் செய்துவிடுகிறார் என்றே சொல்ல வேண்டும்.
பார்ப்பதற்கு மிகமிக எளிமையாக எவ்வித ஆடம்பரமும் இல்லாமல், தன்னை நாடி வந்த மாணவர்களுக்கு மிகச்சிறப்பான சமையல் கலையை கற்றுத்தருவதில் தோழருக்கு நிகர் தோழர்தான் என்று உரக்கச் சொல்வேன். பொன்னமராவதி அருகில் ஆரணிப்பட்டியைச் சேர்ந்த சமையற்கலைஞர் கதிர் அவர்கள் ''நான் வணங்கும் சாமி ஆக்ஸ்போர்டு சுரேஷ் சார்தான்'' என்பார். அப்படியென்றால் தன் மாணவர்களிடம் தோழர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்கள் எந்தளவுக்கு ஒன்றிப்போயுள்ளார் என்பதை உணர முடிகிறது. எனது பார்வையில் ஆக்ஸ்போர்டு கேட்டரிங் கல்லூரியில் படித்த மாணவர்கள் பலர் அயல்நாடுகளிலும் தாய்நாட்டிலும் நல்ல வருமானத்துடனும் நல்லவர்களாகவும் சிறந்து விளங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
தோழர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்கள் மாணவர்களிடம் அணுகுமுறை வியப்பில் ஆழ்த்துகிறது. நான் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் என்கிற வகையில், தோழர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்களைக் கொண்டு ''குழந்தைகளிடம் எவ்வாறு கற்றலை ஊக்குவிக்க இனிமையாக நடந்து கொள்வது'' என்பது குறித்த கருத்தரங்கினை கல்வித்துறை ஏற்பாடு செய்து நடத்துமானால் கற்றல் கற்பித்தலில் ஆசிரியர்களுக்குள் புதிய சக்தி பிறக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ''எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே'' என்றார் முண்டாசு கவிஞர் பாரதி. தோழர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்களின் வகுப்பறை அணுமுறையால் சமையற்கலையில் புதிய புரட்சி பிறக்குது பாருங்களேன்....
வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று எண்ணுபவர்களும் வாழ்த்த வேண்டும் என்று மனசார நினைப்பவர்களும் தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.
ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்கள்
ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜ்
மாலையீடு, புதுக்கோட்டை
பேச: +919942411110
: +919443112006
அன்பு பண்பு பாசம்
நட்பின் வழியில்
எந்நாளும்
சோலச்சி :9788210863
2 கருத்துகள்:
நான் வணங்கும் சாமி...அப்பப்பா எந்த அளவிற்கு மரியாதை வைத்துள்ளனர். ஓர் அரிய மனிதரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றியும், மகிழ்ச்சியும்.
அருமையான அறிமுகம் மகிழ்ச்சி
கருத்துரையிடுக