சனி, 5 பிப்ரவரி, 2022

ஆத்தா எழுந்து வா... - சோலச்சி

 

ஆத்தா எழுந்து வா....

மூணு பிள்ளை பெத்த
மூத்தது மேல பாசம் வச்ச
கடசாரியா பொண்ணு பெத்த
அது மேலயும் கணிவு வச்ச...

நடுவுல நான் பொறந்தேன்
குடுகுடுன்னு தான் வளர்ந்தேன்

அறியாத காலத்துல
ஆசையா வளத்தியானு
அக்கம்பக்கம் சொல்லலையே
ஆறுதலா நாலு சொல்லு
ஆத்தா நீ போகும் போதும் வெல்லலயே...

ரெண்டு கட்டி கூழு குடிக்கையில
முண்டிக்கிட்டு நான் பறந்தத
கூழ் கொடுத்த பொன்னம்மா கெழவி
நான் வளர்ந்தும் சொன்னுச்சு...

ஒனக்கு கோபம் வர்றப்பல்லாம்
கொள்ளிக்கட்டை சூடு மட்டும்தான்
எம்மேல வைக்கல
ஆப்பையால  அடி வச்ச
ஊதாங்குழாயால வீங்கவச்ச...
அடி தாங்க முடியாம
விட்டியா நான் பறந்தேன்....

நான் பறந்து திரிஞ்ச கதை
அந்த ஊரு சனம் சொல்லுமே
அடி வாங்க முடியாமத்தான்
அடங்காத பிள்ளையாகி
அந்தப் பெரிய குளத்துக்குள்ள
பெரும்படை திரட்டி
டிச்ச விளையாட்ட
புதுசு புதுசா வெளையாண்டேன்...

சாயந்தரம் ஆக்குற கஞ்சிதான்
கா வயிறு அரைவயிறுமா
குடலுக்குள்ள முண்டுச்சு
விடிஞ்சா பழைய கஞ்சி
கா வயித்துக்கே தள்ளாடுச்சு
நாம மொத்தம் அஞ்சு பேரு
அஞ்சு வயிறும்
அப்படித்தான் தவிச்சுச்சு....

நாத்து நட போன இடத்துல
எப்பவாச்சும் கூழோ கஞ்சியோ
கொடுத்தாங்கன்னா
கொட்டை இலையிலதான்
கொட்டாம கொண்டு வந்து
கொடுத்து மகிழ்ந்த கதை
கொஞ்சம்கூட அகலாது
உன்ன விட்டா எங்களுக்கு நிழலேது...

ஓம் மடியில படுத்துக்க
ஓராயிரம் தடவ
முண்டி வந்தேன்
மூத்ததும் கடைசியுமே
முந்திக்கிட்டு படுத்தக்கும்...

அவங்களுக்கு மட்டுமே
அரசாங்க பட்டா
அச்சடிச்சு கொடுத்த மாதிரி
அக்கறையா படுக்க வச்ச
எப்படியாச்சும் பொழச்சுக்குவானு
அப்பப்ப சொல்லித்தானே
என்னைய தள்ளி வச்ச.....

திங்கிற தீனியிலயும் எனக்கு
கொஞ்சமாதான் கிள்ளித் தந்த
இல்லனு யாரும் வந்துட்டா
இருக்கிறது அள்ளித்தந்த...

ஒழுங்கா குளிக்கலனு
ஓடத் தண்ணியில மூழ்க வச்ச
கட்டிக் கரம்பைய
குழி தோண்டி கரைச்சு வச்சு
தலையில தேச்சு விட்டு
முதுகையும் தீட்டிவிட்ட
முடி பஞ்ச இருந்துச்சு
முதுகு மட்டும் ஏனோ
உன் நகம் பட்டு
தீயா எரிஞ்சுச்சு.....

உடம்பு சரியில்லன்னு
ஒரு நாளு நீ படுத்த
ஆத்தாடி அப்புறமா
எந்திரிக்க தான் மறந்த....

பொல்லாத நோக்காடு வர
சொல்லாம செத்துப்போன
என்னைய கொல்லாம கொன்னுப்புட்ட ....

நான்... அழுத கண்ணீரு
அஞ்சு மடை வெள்ளமாச்சு
ஆத்தா என் உடம்பு வத்திப்போச்சு...

கா வயிறோ
அரை வயிறோ கஞ்சி குடிச்சாலும்
ராத்திரியில் தூக்கம் தான்
சொல்லாம வந்துச்சு
ஆத்தா நான் வளர்ந்தேன்
அந்தத் தூக்கம் ஓடிப்போச்சு....

எப்படி தூங்குறது
இப்பவர தெரியலையே
எனக்காக ஒரு மடி
ஒன்னப்போல கிடைக்கலயே...

ஆத்தா.... எழுந்து வா
ஆப்பையால ஒரு அடி
ஊதாங்குழாயால ஒரு போடு
நீ தந்தா போதும்
நிம்மதியா தூங்கி முழிப்பேன்....

                         - சோலச்சி அகரப்பட்டி



4 கருத்துகள்:

PUTHIYAMAADHAVI சொன்னது…

ஆத்தாவின் நினைவுகள்..கவிதையின் உயிரோட்டமாய். வாழ்த்துகள் 💐

Unknown சொன்னது…

கவிதை மிகவும் சிறப்பு

ஸ்ரீமலையப்பன் சொன்னது…

அருமை

Unknown சொன்னது…

அருமை அய்யா கண்களில் நீர் எட்டி பார்க்கிறது..... வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.. இராம.காமராசு...