வியாழன், 1 ஜூன், 2023

வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1998 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் சங்கமம் விழா

     

                ஆகச் சிறந்தது நட்பு 

    மனித வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள் பள்ளிப் பருவம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்தப் பள்ளி பருவத்தை நினைவு கூறும் வகையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தம்மோடு படித்த மாணவர்களை ஒருங்கிணைத்து கொண்டாடி மகிழ்ந்த நிகழ்வு வயலோகம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.











    27.05.2023 சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரை புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வயலோகம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்னால் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்ட நிகழ்வு நடைபெற்றது. 







    முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா என்பதோடு நின்றுவிடாமல் அன்றைய காலகட்டத்தில் தங்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர் பெருமக்களையும் அலுவலர்களையும் வரவழைத்து சிறப்பு செய்யப்பட்டது. மேலும் அந்த மாணவர்களால் ரூபாய் மூன்று லட்சம் செலவில் பள்ளிக்கூடத்திற்கு மாணவர்களுக்கான கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டது.







   25 ஆண்டுகளுக்கு முன்னால் படித்த நண்பர்களை ஒருங்கிணைப்பு செய்வது என்பது இயலாத காரியம். வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்கிற பழமொழிக்கு ஏற்ப நண்பர்கள் நாலா பக்கமும் பிரிந்து இருக்கிறார்கள். எங்கெல்லாம் தம்மோடு படித்த நண்பர்கள் இருக்கின்றார்களோ அவர்களை எல்லாம் ஒருங்கிணைப்பு செய்யும் வேலையை அகரப்பட்டி பழ.செந்தில்குமார் அவர்களும் வயலோகம் கரு.சக்திவேல் ஐயா அவர்களும் வயலோகம் சி.முத்துக்குமார் அவர்களும் இவர்களோடு படித்த தோழி கலைச்செல்வி அவர்களும் முன்னின்று செய்தனர். 











    இந்த ஒருங்கிணைப்பு என்பது இரண்டு ஆண்டு காலம் நடைபெற்றது. ஒரு வழியாக 60 மாணவர்களைத்தான் ஒருங்கிணைக்க முடிந்தது. சிலரைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இவர்களோடு படித்த மாணவர்கள் சிலர் காலமாகி விட்டனர். இருந்தபோதிலும் முயற்சியை கைவிடாமல் தம்மோடு படித்த நண்பர்களை அடையாளம் கண்டு 1998 வயலோகம் நண்பர்கள் என்ற வாட்ஸப் குழு ஒன்றை ஏற்படுத்தினார். இந்த வாட்ஸ் அப் குழு மூலமாக நண்பர்களிடம் கலந்துரையாடினர். நண்பர்கள் சிலர் அவ்வப்போது சந்தித்து அடுத்த கட்ட நகர்வு குறித்து பேசி வந்தனர்.










     அவ்வாறு கலந்துரையாடி வயலோகம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சந்திப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தினர். சந்திப்பு என்பது  நட்பு பாராட்டுவதுடன் மட்டும் நின்று விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு வாழ்ந்ததற்கான அடையாளமாக ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என தீர்மானித்தனர். அதன் அடிப்படையில் வயலோகம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் திரு.ஜெயராஜ் அவர்களை நண்பர்கள் குழு சந்தித்தனர். 











    தற்போது பணியாற்றும் வயலோகம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களிடம் பள்ளிக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறது என்ற விபரத்தினை நண்பர்கள் குழு சேகரித்தனர். அதன் அடிப்படையில் பள்ளியில் உடனடியாக மாணவர்களுக்கான கழிப்பறையை கட்டித் தருவது என முடிவெடுத்து நண்பர்களிடம் வாட்ஸ் அப் குழுவில் விவாதித்தனர். இறுதியாக மாணவர்களுக்கு ரூபாய் 3 லட்சம் செலவில் கழிப்பறையை கட்டுவதற்கான பணிகளை முறையாக தொடங்கினர்.












    இந்த நண்பர்களில் சிலர் சிங்கப்பூர் தைவான் மலேசியா போன்ற நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அயல்நாடுகளில் பணியாற்றக்கூடிய நண்பர்களும் மற்ற நண்பர்களும் தங்களால் இயன்ற நிதியை வழங்குவது என முடிவெடுத்தனர்.







  அந்த வகையில் நிதியினை நிர்வாகம் செய்வதற்கு வாட்ஸ் அப் பழ.செந்தில்குமார் அவர்களை தேர்வு செய்து அவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கட்டிடம் கட்டித் தரக்கூடிய பொறுப்பினை தம்மோடு படித்த நண்பர் சு.பெருமாள் சுவாமிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் குறித்த நேரத்தில் மிகச் சிறப்பாக கட்டி முடித்தார்.  அந்தப் பணிகளை சோலச்சியாகிய நானும் வாட்ஸப் பழ.செந்தில்குமார் அவர்களும் முன்னின்று மேற்பார்வை செய்து ஒழுங்குபடுத்தினோம். தற்போது பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றக்கூடிய திரு ஜெயராஜ் அவர்களின் விருப்பத்திற்கு இணங்க கட்டிடம் செம்மையாக கட்டி முடிக்கப்பட்டது. 










      வாட்ஸ் அப் குழுவில் நண்பர்களிடம் கலந்துரையாடி நண்பர்கள் அனைவரையும் விழாவில் பங்கேற்க செய்ய வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு வாட்ஸ் அப் குழுவில் விவாதித்து 27.05. 2023 சனிக்கிழமை காலையில் விழாவினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.










    அயல்நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் பணியாற்றக்கூடிய நண்பர்களும் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு சக்திவேல் ஐயா, முத்துக்குமார், லட்சுமணன், முருகானந்தம், தனபால், ஆறுமுகம், சந்திரசேகர் போன்றோர் பெரும் தொகையினை செலவு செய்து விழாவில் கலந்து கொண்டார்கள். இருந்தும் அயல்நாடுகளில் பணியாற்றக்கூடிய நண்பர்கள் சிலரால் விடுமுறை கிடைக்காத சூழ்நிலையில் வர இயலவில்லை.









   25 ஆண்டுகளுக்கு முன்னால் தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் பணியினை சோலச்சியும் வாட்ஸ் அப் பழ.செந்தில்குமாரும் முன்னெடுத்து செயல்பட்டனர். வாட்ஸ் அப் குழு என்பது மாணவர்களுக்கு தனியாகவும் மாணவிகளுக்கு தனியாகவும் என இரண்டு குழுவாக பிரிந்து நண்பர்களை சேகரித்து ஒருங்கிணைக்கும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. மாணவர்கள் குழுவுக்கு கரு.சக்திவேல் ஐயாவும் பழ.செந்தில்குமார் அவர்களும் சி.முத்துக்குமார் அவர்களும் க.முருகானந்தம் சுவாமிகள் அவர்களும் குழு நிர்வாகிகளாக  இருந்து செயல்பட்டனர். மாணவிகள் குழுவுக்கு கலைச்செல்வியும் புனிதாவும் குழு நிர்வாகிகளாக செயல்பட்டனர்.












    குறிப்பிட்ட நாளில் நிகழ்வும் தொடங்கியது. மாணவர்கள் நீல நிற சட்டையும் வேட்டியும் சீருடை அணிந்து வந்திருந்தனர். அதேபோல்  மாணவிகளும் பச்சை நிறத்தில் சீருடைகள் அணிந்து வந்திருந்தனர். தங்களோடு படித்த மாணவர்களை ஒரு சிலரால் பெயர் தெரிந்தும் அடையாளம் காண முடியவில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. உடலில் ஏற்பட்ட மாற்றங்களே அதற்கு முழுமுதற் காரணமாகும். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் நண்பர்களை சந்தித்து அன்பை பரிமாறிக் கொண்டு அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சி என்னும் பேரின்பத்தை முகத்தில் உலாவ விட்டதை எல்லோருமே உணர்ந்தனர். இப்படி ஒரு வாய்ப்பு இனி எப்போது கிடைக்கும் என்று ஏங்கும் அளவிற்கு இந்த சந்திப்பு மன நிறைவாக அமைந்தது. 












      விழா நாளில் மூத்த ஆசிரியர்கள் திரு.ராமையா அவர்கள் திரு.அருள்ராஜ் அவர்கள் திரு.குழந்தைவேலு அவர்கள் திரு.அய்யனார் அவர்கள் திரு.கோவிந்தன் அவர்கள் திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் திருமிகு.ஜெயந்தி அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.  திரு.முனியாண்டி அவர்கள்,  திருமிகு தனம் அவர்கள் போன்ற அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தற்போதைய தலைமை ஆசிரியர் திரு ஜெயராஜ் அவர்கள் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.







    முதல் நிகழ்வாக மரக்கன்றுகளை நடும் விழா நடைபெற்றது. இரண்டாவது நிகழ்வாக கழிப்பறையை திறந்து பள்ளிக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. மூன்றாவது நிகழ்வாக ஆசிரியர் பெருமக்களை சிறப்பு செய்யும் நிகழ்வும் வாழ்த்தரங்கமும் நடைபெற்றது.






   விழாவில் கலந்துகொண்டு தலைமை உரை ஆற்றிய தலைமை ஆசிரியர் திரு ஜெயராஜ் அவர்கள், விழா ஒருங்கிணைப்பு செய்து பள்ளிக்கு கழிப்பறை கட்டிக் கொடுத்த மாணவர்கள் அனைவரையும் மனதார வாழ்த்தினார். மேலும் இது போன்ற நிகழ்வினை இப்பள்ளியில் படித்த மாணவர்கள் முன்னெடுப்பு செய்து அரசு பள்ளிகளுக்கு ஆதரவு கரம் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 



   தொடர்ந்து பேசிய மூத்த ஆசிரியர் பெருமக்கள் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களிடம் படித்த மாணவர்களை மனதார பாராட்டி மகிழ்ந்தனர்.



    விழாவில் கலந்து கொண்டு பேசிய க.முருகானந்தம் சுவாமிகள், சி.முத்துக்குமார், கரு.சக்திவேல் ஐயா, சுகுமார், த.மணிகண்டன், சகிலா போன்றவர்கள் தங்களுடைய ஆசிரியர்களின் அருமை பெருமைகளை பேசி மகிழ்ந்தனர். மாணவர்கள் அனைவரும் தங்களுடைய ஆசிரியர்களைப் பார்த்ததும் அன்பின் மிகுதியால் காலில் விழுந்து வணங்கி வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டனர்.



   எஸ்.லெட்சுமணன் பேசும்போது தற்போது பணியாற்றக்கூடிய தலைமையாசிரியர் ஜெயராஜ் அவர்கள் பள்ளியின் நிர்வாகத்தை மிகச் சிறப்பாக நடத்தி வருவதாகவும் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவதாகவும் தெரிவித்து நன்றி பாராட்டினார். 



    சந்திரசேகர் பேசும்போது , நான்(school room) பள்ளியறையில் கூறியது போல இன்னொரு முறை இதை சொல்லியே ஆக வேண்டும்.  மிகவும் மனம் நெகிழ்ந்த தருணம் இதுபோல் என் வாழ்நாளில் மகிழ்ந்த தருணம் கண்டதில்லை. எனது பள்ளி தோழர்களை கண்டதில்  மிகவும் ஆனந்தம் கொண்டேன்.  பள்ளி அறையில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு 25 வருடம் பின்னுக்கு சென்று பார்த்தல் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நான் பெற்ற ஆனந்தத்தை எப்படி சொல்வது என்று புரியவில்லை அவ்வளவு ஆனந்தம் கிடைக்கப் பெற்றேன்.  💐💐 ஆடம்பர வாழ்க்கை 50 வயதில் கூட  கிடைத்துவிடும். ஆனால் ஆசைப்பட்ட வாழ்க்கை அந்த அந்த வயதில் தான் கிடைக்கும். 💐💐 இன்னொன்று நிகழ்வு என்னவென்றால்  மாணவர்கள் கலந்து கொள்வது என்பது கால சூழலுக்கு ஏற்ப ஒன்று கூடுவது என்பது சாத்திய மற்றது. சாத்திய மற்றதை சாத்தியமாக்கிய சாதனையாளர்கள் யார் என்றால் இந்த நிகழ்ச்சியை இந்த நிகழ்வை உருவாக்கிய ஒன்று கூட்டிய  திரு சக்திவேல்  திரு முத்துக்குமார் திரு பழ.செந்தில்குமார் திரு முருகானந்தம் திருமதி கலைச்செல்வி மற்றும் திரு சோலச்சி இன்னும் பலர் இந்த சாதனையாளர்களுக்கு எனது இரு கரம் கூப்பி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வது  என்பது இயல்பு ஆனால் மாணவிகள் சாத்தியமற்ற கால சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும். அவர்களை ஒன்று திரட்டி இந்நிகழ்வில் கலந்து கொள்ள முயற்சி எடுத்த திருமதி கலைச்செல்விக்கு இரு கரம் கூப்பி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவியர்களுக்கு  அனுமதி அளித்த 💐💐💐கணவன்மார்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் கலந்து கொண்ட முன்னாள் ஆசிரியர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கிக் கொள்கிறேன்.   🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என்றும் உங்கள் நண்பன் CSK   (CHANDRASEKARAN ) என்று குறிப்பிட்டார்.




    கலைச்செல்வி பேசும்போது, நாம் அனைவரும் ஒவ்வொரு குடும்பத்தை சார்ந்து இருக்கிறோம். நாம் பள்ளிக்கால நண்பர்கள் என்பதைக் கடந்து குடும்ப உறவாக குடும்பமாக ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி மகிழ வேண்டும் என்று பெருமிதத்தோடு கூறி மகிழ்ந்தார். 



    படிக்கும் காலங்களில் எல்லோரிடமும் அளவோடு பேசக்கூடிய சகிலா , மேடையில் ஆசிரியர்களின் பெருமையினை கண்ணீர் மல்க பேசியது அனைவரையும் கவர்ந்தது. 



   இந்த விழாவில் மொத்தம் 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சி முத்துக்குமார், கரு.சக்திவேல் ஐயா, கு.விஜயகுமார், பழ.செந்தில்குமார் ,சு.பெருமாள் சுவாமிகள், சோலச்சி , த.மணிகண்டன், க.முருகானந்தம் சுவாமிகள், வெ. பாலகிருஷ்ணன், எம்.வீரய்யா, எஸ்.லட்சுமணன், அகிலா, முத்தமிழ் செல்வி, இளவரசி எம்.மகாலட்சுமி, மாங்குடி நாகராஜ், பாண்டிமீனா, டி வனிதா, எம் சௌபர் நிஷா, உஷா, கலைச்செல்வி ,பாண்டி, எஸ். புனிதா, நசீர் காதர் மீரா ,சுரேஷ் அன்பு கிருஷ்ணன், சுகுமார் , அகஸ்டின் , சந்திரசேகர், கு.சுமதி, வீ.சுமதி, தனவடிவு, லெட்சுமி, தனபால், ரெங்கசாமி, சின்னையா, மாரிமுத்து, ரவிச்சந்திரன், ஆறுமுகம், சோலை ,முருகேசன், இளங்கோ, காட்டுப்பட்டி சக்தி போன்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.




     ஆசிரியர் பெருமக்களுக்கு மாணவர்களால் பொன்னாடையும் நினைவு பரிசும் நூல்களும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. அதேபோல் ஆசிரியர் பெருமக்களின் திருக்கரங்களால் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் அறுசுவை சைவ உணவு மாணவர்களால் பரிமாறப்பட்டது. 




   உணவு இடைவேளைக்குப் பிறகு மாணவர்கள் அனைவரும் தங்கள் படித்த வகுப்பறையில் சென்று அமர்ந்து இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வகுப்பறைக்குள் நுழைந்த ஆசிரியர் திரு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தியும் கேள்வி கேட்டும் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வினை எதிர்பார்த்திடாத மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி மகிழ்ந்தனர். 



     25 ஆண்டுகளுக்குப் பிறகும் தம்மோடு படித்த மாணவர்களையும் சந்திப்பதற்கு மாணவிகளை அனுப்பி வைத்த அவர்களது குடும்பத்தாருக்கும் மாணவர்கள் அனைவரும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். 



    அயல்நாடுகளுக்கு வேலைக்குச் சென்று விடுமுறை கிடைக்காமல் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் பன்னீர் , தவசி ,சார்லஸ் சகாயராஜ் ,கோ மணிகண்டன், அடைக்கலம் ,சே.மூக்கையா, மாரிமுத்து என்கிற அறிவு, மாணிக்கம், அ.நாகராஜ் , ஆ. சேவுகன்,  சரவணகுமார், அன்சர் அலி, போன்ற மாணவர்களும் வாட்ஸ் அப்பில் அனுப்பிய புகைப்படங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.





   25 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மாணவர்கள் படிக்கின்ற பொழுது வயலோகத்தில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே உயர்நிலைப் பள்ளியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 



   கரு.சக்திவேல் ஐயாவை தலைவர் என்றும் எஸ்.லெட்சுமணனை செயல் தலைவர் என்றும் வாட்ஸ் அப் பழ.செந்தில்குமாரை அறங்காவல் குழு தலைவர் என்றும் முருகானந்தம் மற்றும் பெருமாள் இருவரையும் சுவாமிகள் என்றும் சுகுமாரை சின்ன எம்ஜிஆர் என்றும் செல்லமாக அழைப்பதுண்டு.



   நண்பர்கள் வாழ்வில் மறக்க முடியாத வரலாற்று நிகழ்வாக மாணவர் சந்திப்பு விழா நடைபெற்றது. இதுபோன்ற நிகழ்வினை ஒவ்வொருவரும் முன்னெடுத்து தம்மோடு படித்த மாணவர்களோடு நட்பு பாராட்டி ஒருவருக்கு ஒருவர் உதவி புரிந்து வாழ்க்கையின் பயணத்தை சிறப்பானதாக மாற்ற வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம்.

     நாங்கள் பயின்ற அன்றைய காலக்கட்டத்தில் திரு.ந.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமை ஆசிரியராகவும் திரு.இராமையா அவர்கள், திரு.சந்திரசேகர் அவர்கள், திரு.கே.எஸ்.சுப்பிரமணியன் அவர்கள், திரு.குழந்தைவேலு அவர்கள், திரு.கோவிந்தன் அவர்கள், திரு.புலவர் வெள்ளைச்சாமி அவர்கள், திரு.மாணிக்கம் அவர்கள், திரு.மோகன் அவர்கள், திரு.அருள்ராஜ் அவர்கள், திரு.அய்யனார் அவர்கள், திரு.செந்தில்குமார் அவர்கள், திரு.ரமேஷ் அவர்கள், திருமதி.பேபி அவர்கள், திருமதி.மீனாட்சி அவர்கள், திருமதி.சுகந்தா அவர்கள், திரு.இருதயராஜ் அவர்கள், திரு.சி.கே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,  திரு.மீனாட்சிசுந்தரம் அவர்கள், திருமதி.ஜெயந்தி அவர்கள், திருமதி.எலிசபத்ராணி அவர்கள்  ஆசிரியர் பெருமக்களும் திரு.அய்யாச்சாமி அவர்கள், திரு.மணி அவர்கள்,  திரு.முனியாண்டி,  திருமதி தனம் அவர்கள் அலுவலர்களும் பணியாற்றினர். சிலரின் பெயர்களும் விடுபட்டிருக்கலாம். மன்னித்தருள வேண்டுகின்றேன்.

    அப்பழுக்கற்ற எங்களின் பள்ளிக்கால நினைவுகள் இப்போதும் இனிமையாகவே இருக்கிறது. 

    வயலோகத்தில் பயின்ற பள்ளிக்கால நினைவுகளை மனதில் வைத்தே தொவரக்காடு என்கிற எனது சிறுகதை நூலில் சுக்கு நூறாய் என்கிற சிறுகதையும்,  அட்டணக்கால் என்கிற சிறுகதை நூலில் சுட்டுத் தின்னு என்கிற சிறுகதையும் எழுதியிருப்பேன். 

   மதிய உணவினை பள்ளியில் வாங்கி சித்தாம்பலத்தில் வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டது, ஆலமரத்தில் ஊஞ்சல் ஆடியது, பெரிய கண்மாயில் ஆட்டம் போட்டது, அண்ணாப்பண்ணை தோப்புக்குள் விளையாடி மகிழ்ந்தது, ஆயிரங்குழி கேணியில் குதித்து விளையாடியது என நினைவுகள் நீண்டுகொண்டே போகும். 

    எங்களின் ஆசிரியர் பெருமக்களை இப்போது பார்த்தாலும் பயம் கலந்த பணிவும் பாசமும் எங்களை அறியாமல் வந்துவிடுகிறது. தாய், தந்தை, ஆசிரியர் இவர்கள் மூன்றுபேரும்தான் கடவுள். கடவுள் என்று ஒன்று தனியாக இல்லை. 

    வயதான காலத்தில் நல்ல நினைவுகளை யார் வைத்திருக்கிறார்களோ அவர்களே வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்ததற்கு அடையாளம். நிச்சயமாக இந்த நண்பர்கள் அனைவரும் நல்ல நினைவுகளை கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள். எனவே இவர்கள் அனைவரும் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்ததற்கான சிறப்பினை அடைவார்கள்.



    இந்த மாணவர்களோடு சோலச்சி (தீ.திருப்பதி)  என்னும் நான் எட்டாம் வகுப்பு வரை தான் இவர்களோடு படித்தேன் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் இப்போது வரை நண்பர்களாக நீடிப்பது என்பதுதான் நட்பின் உயரிய உள்ளம். 

           பேரன்பின் வழியில்

          சோலச்சி 9788210863


3 கருத்துகள்:

கு.தயாநிதி சொன்னது…

மிகவும் பாராட்டுக்குரிய நிகழ்வு ஆகும். இன்றைய அவசர யுகத்தில் மனித உறவுகளை வளர்ப்பது என்பது அரிதாக உள்ளது. அதனைப் போக்கும் அளவு இது அமைந்துள்ளது. வாழ்த்துகளும் பாராட்டுகளும்

Purusothaman சொன்னது…

மிகவும் அருமையான நிகழ்வு

சோலச்சி சொன்னது…

மகிழ்ச்சி