செவ்வாய், 4 ஜூலை, 2023

சோலச்சியின் தொவரக்காடு - மண்வாசம் மிகுந்த படைப்பும் வட்டார சொல் குவிப்பும் - யாழவள்

 

 

 சோலச்சியின் தொவரக்காடு - மண்வாசம் மிகுந்த படைப்பும் வட்டார சொல் குவிப்பும் - யாழவள்

 

 வணக்கம்.

 

      மன்னிப்புக் கோரிக்கையுடன்தான் இந்தப் பதிவை பதிவு செய்ய வேண்டியுள்ளது.  முகம் தெரியாத போதும் அகம் காட்டிய நண்பர் சோலச்சி அவர்களுக்கு வாழ்த்துகள்.

 

  நண்பர் சோலச்சியின் நூல் நாடுவிட்டு நாடு தபாலில் வந்திருந்தது. பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள். அவற்றின் நெருக்கடிகள். ஆதலால் நூல் பற்றி அவசரமாக எழுத முடியவில்லை.  சாட்டுப்போக்காக செயல்புரிந்து எனக்கு பழக்கமில்லை. முழுமையாக வாசித்து முடிக்க வேண்டும் என்ற அவா. எல்லாம் சேர்ந்தே நண்பரின் எதிர்பார்ப்பை காத்திருக்க வைத்துவிட்டது. மன்னிக்கவும்.

 

  மேலும்,  இந்நூல் குறித்து சொல்வது என்றால் அவ்வளவு இலகுவான செயலும் இல்லை.  வாசிப்பு ஓட்டத்தில் இந்த கதைகளை உள்வாங்க முடியாது. பொறுமை, நிதானம் உடைவர்களால்தான் இந்தக் கதைகளின் உயிர்ப்பை அனுபவிக்க முடியும்.  அந்த அளவுக்கு கிராமத்து மண் வாசனை அள்ளிக் கொட்டிக்கிடக்கின்றது. 

 

  எழுத்து நடை, மொழி நடை என்பனவும் தனக்கே உரித்தான உயிர்ப்புடன் சவால்விட்டெழுகின்றது. கதைகளின் கதைச் சூழலில் எம்மையும் பின்னிப் பிணைத்து கைபிடித்து இழுத்துச் செல்கின்றது என்றால் மிகையில்லை.  2009- 2015 வரை ஆறு ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தவள் என்ற அடிப்படையில் தென்னகச் சினிமா, தொலைக்காட்சி, நாடகங்கள் உறுப்பினர்களும் உறவுகளின் சிறிய சிறிய நட்புக்கள் என இவற்றுடனான பழக்க வழக்கங்களும் கலந்துரையாடல்களும் இந்தத  தொகுப்பினை புரிந்துகொள்ளவும் அந்தக கிராமிய சூழலில் வாழவும் முடிந்தது.

 

   மொத்தமாக பன்னிரெண்டு கதைகள்.  அவை யாவும் வெவ்வேறு சூழலையும் வெவ்வேறு களத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. ஒவ்வொரு பிரதேசத்திற்குரிய பிரதேசமொழி உரையாடல்,  நகைச்சுவை,  பிள்ளை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு நிலை என்று வாழ்வியலின் பாகங்கள் யாவும் எழுத்துகளால் கொட்டிக்கிடக்கின்றது.

 


    பன்னிரெண்டு கதைதானே வாசிப்பிற்கு பன்னிரெண்டு நிமிடம் போதும் என்ற முடிவுக்கு மட்டும் வந்துவிட முடியாது.  குறிப்பாக தமிழ்நாட்டின் பேச்சு மொழிகளில் ஊறியவர்கள் மிக இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.  தமிழ்நாட்டிற்கு அப்பாற்பட்ட புதிய வாசகர்கள் புரிந்து கொள்வதற்கு ஒரு வாசிப்பு போதாது. அவர்களுக்கு மறு வாசிப்பின் ஊடாகவே இந்த கிராமிய வாழ்வியலை அனுபவிக்க முடியும் என நான் நம்புகின்றேன்.

 

   பால்கார நந்தன் கதையில் தஞ்சாவூர் பற்றியும் அங்குள்ள கிராமத்தின் மாடு வளர்ப்பு,  மாட்டுடன் உண்டாகும் குடும்ப உறவாடல் இரவு பகல் பாராது மாட்டுடனான அர்ப்பணிப்பு ''மாடுகளுக்கு தண்ணீர் வைத்து வைக்கோல் போட்டுவிட்டு உள்ளே வந்தபோது இரவு ஒன்றானது என்பதுடன் மட்டுமன்றி எத்தனை மணிக்கு படுத்தாலும் மூன்று மணிக்கே எழுந்துவிடுவார். இவர் எழும் நேரமும் மாடுகள் கத்தும் நேரமும் ஒன்றாக இருக்கும். களக்காடு கிராமத்திற்கு நந்தன் வீட்டு மாடுகள்தான் மணிக்கூண்டு என்பதனூடாக அவர்கள் ஓய்வின்றி உழைப்பிற்காக இருவரும் தம்மை அர்ப்பணித்து வாழ்வதும் கணவன் உழைப்பிற்கு மனைவியின் பங்களிப்பு என்பதும் அவள் தாலி தொடக்கம் அனைத்தும் அடகு வைத்து சும்மா இருந்த நந்தனை பால்கார நந்தன் ஆக்கியது என்ற வரைக்கும் அந்த உழைப்பு வீண்போகவில்லை. மாட்டின் வளர்ப்பும் அதன் மீதான பரிவும் தமிழகத்தின் ஜல்லிக்கட்டு விழாவை நினைவூட்டுகின்றன. இந்தக் கதையில் கிராமிய வாழ்க்கையை படம்பிடித்துக் காட்டியிருப்பினும் மிக நுணுக்கமாக சாதி அரசியல் என்பன ஒழிந்திருக்கவும் செய்கின்றது.

 

   மட்டக்காளையில் மட்டையன்பட்டி மஞ்சுவிரட்டு,  அங்கு கதாநாயகனாக சித்தரிக்கும் பெருமாள் அப்பச்சி, காளை அடக்கும் விதம் சுவாரஸ்யமானது. அங்கும் சாதிக்காற்று மெல்லென வீசிக்கொண்டுதான் இருக்கிறது.

 

   '' ஊரக்கு வைகாசி மாசத்துலதான் திருநாளு..... சட்டிசட்டியா கறியாக்கி கூட்டங்கூட்டமாய் திங்கிறானுவ'' என்பதும் ''வேலைக்கு எங்கு சென்று இருந்தாலும் சனிக்கிழமை மாலை ஒவ்வொருவரும் குடும்பத்துடன் பெருமாள் அப்பச்சி வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள் '' என்பதும் கூட்டுக்குடும்ப வாழ்வியலின் ஏக்கம் அனுபவிப்பு ஒன்று கூடும் பண்பு என்பன இன்றைய சந்ததிக்கு மிகமுக்கியமான எடுத்துக்காட்டுகளாகவே உள்ளன. நகர்ப்புறங்களில் இப்போது ஒன்று கூடுதல் எல்லாம் வெறும் போலி பண்புகளாகவே பரிணமித்து வருகின்றன.

 

   மட்டக்காளையை அடக்கும் விதம் மிகவும் நுணுக்கமானது. யதார்த்தமானது. அனுபவிப்பின் வெளிப்பாடு அது.

 

  தெக்குறிச்சியாள் மிகவும் அற்புதமான அடையாளம். இன்றைய பெண்கள் தமக்கான உற்சாகத்தையும் வீராப்பையும் வலிந்து திணிக்க வேண்டியவர்களாகவே சூழல்கள் உள்ளன.  இன்றைய இயந்திரங்களுடனான வாழ்க்கை முறையும் பெண்களின் உடலையும் மனதையும் சோம்பேறி நிலைக்கு கொண்டு செல்கிறது. இந்த நிலைக்கு எதிராக இயல்பான வாழ்க்கை முன்னொரு காலத்தில் இருந்தது என்றால் மிகையல்ல. வயசானவர்களை கிழவி, கிழடு, பெரிசு என்றெல்லாம் கூறி நகைச்சுவையாகவோ கோபமாகவோ உரையாடும் பண்பும் தமிழர்களிடம் உள்ளது. 

 

   அவளது வாய் தூங்கும்போதாவது மூடி இருக்குமா..? அதுவும் கிடையாது.  தூக்கத்திலும் ஏதாவது உளறிக்கொண்டுதான் இருப்பாள்  என்ற வகையில் அவளது குடும்ப பொறுப்பும் அக்கறையுமே இவளின் தியாகமாக உள்ளது. 

 

    ஊரெல்லாம் சுத்துறா , இவளுக்கு ஒன்னுன்னா ஏம்புட்டு உசுரும் போக வேண்டியதுதான் என்று தாளமுத்து சொல்லி கண் கலங்குவார். ... தெக்குறிச்சியாளின் பலமாகத்தான் தாளமுத்து வாழ்கிறார் என்பதன் வெளிப்பாடு ஆகும்.

 

   சட்டியை வழிச்சு நக்கி கூழ்குடிப்பது, அதைப்பார்த்து அவள் மகிழ்வது இதெல்லாம் இப்போது உயிர்ப்புடன் எந்த குடும்பத்தில் உள்ளது.  இவற்றைக் காணமுடியவில்லையே என்ற ஏக்கம்தான் வாசிக்கும் என் மனதில் பரவிக்கிடக்கின்றது.

 

  கருவமுள் குத்தி மயக்க நிலைக்கு போனதும் மீண்டு வந்ததும் வரையான சூழல் களம் மிகவும் பதட்டம் மிக்கது. அத்தகைய உணர்ச்சி நிறைந்தது. தெக்குறிச்சியாளை இழந்து தவிக்கப்போறேன் என தாளமுத்துவின் மனநிலை வெளிப்படுத்த முடியாதது.  ஒருசில மணி நேரம் சினிமா பார்த்த மாதிரியும் ஒரு மனநிலை.  அப்படி ஒரு மனநிலையில்தான் இந்தக் கதையின் உணர்வு . உண்மையில் இந்தக் கதை நாயகர்களின் சூழலை நேரில் அனுபவித்திருக்கும் எழுத்தாளன்,  இந்தக் குடும்பத்தையும் கிராமத்தையும் எமக்கு நேரில் காட்ட வேண்டும் என்ற மனம் அலாவுகின்றது.

 

   தடயம் - முழுமையான மலை வாழ்வியல். மலையின் அழகியல் வர்ணனை .ஆயிரம் ஆயிரம் அழகுணர்வுகள்.

 

     பன்றியின் பெயரை பலரும் வீடுகளில் அபசகுணமாக கருதினர் என்பதில் பன்றி அபசகுணமானதை இதுவரை நான் அறிந்திருக்கவில்லை. அதே போல் கால் பித்த வெடிப்புக்கு முந்திரி எண்ணெய் தடவுவதையும் எழுத்தாளர் சோலச்சி மூலமே அறிந்துகொள்ள முடிகிறது. தடயம் - முழுக்க முழுக்க மலையும் மலை சார் காடும் நிறைந்த இயற்கையை வர்ணித்து பயணிக்கின்றது. நாவல் இலக்கியம் தரும் இரசனையை உள்ளடக்கியதாகவே உள்ளது.

 

   ரெண்டாள் வீதி - கொஞ்சம் பயத்தையும் தந்தது. கிராமத்தில் இருந்து பேருந்து பிடித்து வேலைக்குப் போவதும் பேருந்து வரும் வரை காத்திருப்பதும் பேருந்தில் ஏறியதும் உரிய இடம் வரும் வரை அந்த பேருந்து எப்படி இருக்கும் என்ற சூழலும் தவிர, அது ஒரு வயல்கிராமம். அந்த வயல் கிராமம் இப்போது காட்டுத்தீயில் கருகியதாய் காட்சிதரவே நகரத்திற்கு வேலை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டது. அது இன்று சகல இடங்களிலும் ஏற்பட்டுள்ள நகரமயமாக்கலே காரணம்.  இதற்குள்ளும் ''டிலாக்கி லாட்ஜ்'' மிக அவமானத்திற்குரியது. உண்மையில் புதுப்புது இடங்களுக்குப் பயணிப்பவர்கள் அந்த ஊர் பற்றி அறிந்து தெரிந்து உதவிபெற்று பயணிக்க வேண்டியதை இக்கதை வாயிலாக உணர முடிகின்றது.  

 

  '' புதுப்பட்டி அஞ்சலக்கிட்ட போனியே எப்படி இருந்துச்சு...?'' ''புதுப்பட்டிகாரிக்கிட்ட எவ்ளோ கொடுத்தாலும் தகும் மாப்ளே...'' ''இருக்குற நீயே போறப்ப என்னய மாறி இல்லாதவனுக்கு.... எனத் தொடரும் கதையாடல் அந்த உள்ளூரில் நிகழும் பண்பாட்டுச் சீரழிவை எடுத்துக்காட்டுகின்றது.

 

   இரவு நேரங்களில் பேருந்தில் இறங்கும் நபர்களை டிலாக்கி லாட்ஜ் பணியாளர்கள் குறைந்த வாடகை அறை என்று கூறி அழைத்து வந்து மங்கைகளின் மடிகளில் உறங்க வைத்து மடியை நிரப்பிக் கொண்டனர். இவற்றுக்கு ஒத்து ஊதும் காவல்துறையையும் இந்த சமூகம்தான் வளர்த்து வருகின்றது.  மாதந்தோறும் டிலாக்கி லாட்ஜிலிருந்து டவுன் போலிஸ் டேசனுக்கு மாமூல் செல்வதால் கெடுபிடிகள் கிடையாது என்பதும் அசையாத நம்பிக்கை.  இந்த நம்பிக்கைதான் அந்த கிராமத்தில் சமூகச் சீரழிவுக்குத் துணை போகிறது. உள்ளதை உள்ளபடி காட்டும் எழுத்தாளர் சோலச்சி இக்கதையை ஊக்குவிப்பதனை தவிர்க்க வேண்டும். பெண்களுக்கான வர்ணிப்பு ஆண்களை வற்புறுத்தி அழைக்கும் பாணியில் எழுதப்பட்டாலும்,  நகரில் இருந்து கிராமத்திற்கு வரும் முருகன் ஊடாக இவ்வாறான சூழலை இல்லாது செய்யும் செயற்பாட்டை படைப்பாளி உருவாக்குவது படிப்பினையாக அமையும்.

 

   கணவன் கணேசனை உழைப்பிற்காக வெளிநாடு அனுப்பிவிட்டு இரு பிள்ளைகளோடு தோட்டம் வயல் என தன் உழைப்பால் குடும்பத்தையும் சீர்படுத்த முனையும் இராசாத்தி.  வேலை விட்டு வீடு வரும்போது மகளைக் காணாது தேடத் தொடங்குகிறாள். தேடலின் உச்சம் வாசகருக்கு பதட்டத்தை தரவே, அப்படியே கதையின் முடிவை நோக்கி மனதை ஓட வைக்கின்றது. 

 

    ஈரம் கதையின் காலப்பகுதி கொரோணா காலத்தில் எழுதப்பட்டதை அடையாளம் காட்டுகின்றது. '' கொரோணா கொரோணானு ஊரையும் நாட்டையும் சாகடிச்சுக்கிட்டு இருக்கானுக. பள்ளிக்கூடத்தை ஒரேயடியா இழுத்து மூடிட்டானுங்க.'' ''அப்பாவுக்கும் நாலஞ்சு மாசமா வேலை இல்லாம வீட்டுக்குள்ளயே கெடக்குறாராம்'' என்பதனூடாக உலகமே ஒடுங்கிப் போனதை பதிவு செய்துள்ள படைப்பாளி மேலும் இந்தக்கதை ஊடாகக் கொடுக்கும் பதட்ட நிலை என்பது அண்மைக்காலமாக தமிழகத்தை உலுக்கிய ஆழ்துளைக் கிணறு விவகாரம் மூடியற்ற பாதுகாப்பற்ற குழிகளுள் பிள்ளைகள் விழுந்து இறந்த சம்பவங்கள் ரித்திக்கா தொடர்பிலும் உலுப்பத் தொடங்கியது. 

 

   உள்ளூர நுகர்ந்து பார்த்தால் மிகவும் அன்பு நிறைந்த உள்ளங்கள் கணேசன் - இராசாத்தி.  '' நம்ம வீட்ல முள்ளங்கியும் கத்தரிக்காயும் நெறைய இருக்குல்ல, அதுல கொஞ்சம் எடுத்துப்போயி கொடுத்துட்டு வந்தேம்மா'' என்ற பிள்ளையின் பிஞ்சு மனம் அந்த பெற்றோரின் இனிமையான வளர்ப்புக்கும் வழிகாட்டலுக்கும் பண்புக்கும் அடிப்படையாகவே உள்ளது.

   போதும்பொண்ணுக்கும் அருணுக்குமான அன்புறவைக் காட்டிய நிலையில் அவள் பெரியவள் ஆனதும் அருண்மீது சந்தேகிக்க துணிகின்றது. ஆயினும் அருண் பதிமூன்று வயது இளையவன் எனக் கூறும் எழுத்தாளர் , ஆண் பெண் உறவுகளின் புரிதலற்ற விபரீதங்களை தொட்டுச் செல்லாமல் நகர்த்திய விதம் சுட்டிக்காட்டப்பட வேண்டியது. பெண்ணை பாவித்துவிட்டு வாயிக்கு வந்தமாதிரி பேசுவதையும் தீட்டு தீண்டாமை என சாதி பேசுவதையும் சுட்டிக்காட்டும் ‘’ தொவரக்காடு'' போதும்பொண்ணுவின் தந்தை முத்துவின் ஒரே சொத்தாகும். இந்தக் கதை மே மாதம் 2020 காற்றுவெளியில் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

‘’ போனாப் போகுதுனு எறக்கப்பட்டு தொட்டா'' எனக் கூறும் மைக்கேலை அவ்வளவு சுலபமாக தப்பிக்கவிட முடியாது. கதையின் இறுதியில் அத்தையின் வரவுக்காக காத்திருக்கும் அருணின் ஏக்கமும் தேடலும் வருத்தம் தரும் பயணமாகும். இந்த நூலின் பெயராகவும் தொவரக்காடு தலைப்பிடப்பட்டுள்ளது. கருப்பு திராட்சையும் கடைசி நிமிடங்களும், தெருவாசம், சுக்கு நூறாய் மற்றும் நாலு மரங்களும் நல்ல சொல்லும் கதைகள் வாசித்து முடிப்பதறவகு பொறுமையும் அமைதியும் அவசியம்.  ஒட்டுமொத்தமாய் பன்னிரெண்டு கதைகளும் மிக ஆழமானவை. சுவாரஸ்யமானவை.

  ஒவ்வொரு கிராமிய வாசனைகளையும் அதன் மனம், சுவை வெளிவர ஊர்களுக்கே உரித்தான நடை , உடை, பாவனை, உணவு, போக்குவரத்து, இயற்கை,  செயற்கை என அனைத்தையும் அள்ளிக்கொட்டி நிறைத்துள்ளார் படைப்பாளி.

 சாதி, மதம், ஆண், பெண் பாகுபாடும் இங்கு விஞ்சவில்லை. கிராமத்துடன் அழைத்துச் செல்லும் கதைகள் இன்னும் இன்னும் பண்பாட்டை வெளிக்கொணரட்டும்.

   காலதாமதமான பதிவுக்கு மன்னிக்கவும். நூல்கள் பல தொடர்ந்து வெளிவர எனதன்பு வாழ்த்துகள்.

-    யாழவள்

 03.07.2022

11.55 PM

ஊடகவியலாளர்

ஈழம்.

   

    -  இவ்வாறு தொவரக்காடு நூலில் ஊடகவியலாளர் சகோதரி யாழவள் அணிந்துரை எழுதியுள்ளார்கள்.


அகநி வெளியீடாக 2022 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள இந்நூல் ரூபாய் 120/- க்கு கிடைக்கும்.

நூலினைப் பெற வங்கி கணக்கு எண்:


     கீழ்காணும் வங்கிஎண்ணுக்கு ரூபாய் 120/- அனுப்பிவிட்டு அதை வாட்ச்அப் - க்கு தங்களது முகவரியுடன் அனுப்பினால்(இந்தியாவுக்குள்) நூல் அனுப்பி வைக்கப்படும்.  


T.THIRUPPATHI

A/NO : 101001000004091

IFSC:IOBA0001010

BANK: INDIAN OVERSEAS BANK

            VAYALOGAM 

PUDUKKOTTAI DISTRICT 


Google pay மற்றும் வாட்ச்அப் எண் : 9788210863


பேரன்பின் வழியில்

சோலச்சி

 

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான விமர்சனம்...

வாழ்த்துகள்...

சோலச்சி சொன்னது…

மகிழ்ச்சி தோழர்