புதன், 5 ஜூலை, 2023

கனிமொழி செல்லத்துரையின் இராவுத்தர் சாமி வரலாறும் வழிபாடும் - சோலச்சி

 

  

 

    முனைவர் கனிமொழி செல்லத்துரை அவர்களின்

  இராவுத்தர் சாமி வரலாறும் வழிபாடும் 

 

      தமிழ் மொழியில் கதை, கவிதை, நாவல், கட்டுரை என எண்ணற்ற நூல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் கட்டுரை நூல்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கட்டுரை நூல்களில் பயணக் கட்டுரை ,ஆய்வுக் கட்டுரை, வரலாற்றுக் கட்டுரை என பல வகைகள் உண்டு. தற்கால அரசியலை முன்னெடுத்து சமகால 

நூல்
நூல்

கட்டுரைகள் தொடர்ந்து
வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வரலாற்றை ஆய்வு செய்வதற்கு எண்ணற்ற தரவுகள் தேவைப்படும். அதற்காக கூடுதல் நேரத்தை ஒதுக்க நேரிடும். வரலாற்று ஆய்வு கட்டுரைகளில் கள ஆய்வு என்பது மிக முக்கிய பங்காற்றுகிறது. கள ஆய்வுகளில் இனத்தைப் பற்றிய ஆய்வு, கடவுள் பற்றிய ஆய்வு, வழிபாடு பற்றிய ஆய்வு என ஆய்வுகளை வகைப்படுத்தி கொள்ளலாம்.

     கிராமங்களில் எண்ணற்ற வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. வழிபாட்டு முறைகளை இரண்டு வகையாக பிரிக்க முடியும். ஒன்று குலசாமி வழிபாட்டு முறை,  இன்னொன்று கார்ப்பரேட் கம்பெனிகளின் வழிபாட்டு முறை. குலசாமி வழிபாட்டில் நேர்த்திக்கடன் காணிக்கை என்பதெல்லாம் அவர் அவர்கள் முடிவு செய்வது.  இந்த குலசாமி வழிபாட்டில் சாமியாடி பூசாரி இருப்பார்கள் பெரிதாக மாடமாளிகை கோபுரங்கள் எதுவும் இருக்காது. ஆனால் கார்ப்பரேட் வழிபாட்டு முறையில் விளம்பரங்கள் மாடமளிகைகள் வழிபாட்டு முறைகள் என வேறு விதமான ஆடம்பரமாக இருக்கும் .

      பெரும்பாலும் கடவுள்களை கார்பரேட் கம்பெனிகளாகவே மாற்றி பணம் கொழிக்கும் இடமாக ஆக்கிவிட்டார்கள். எது எப்படியோ என்றாலும் நம்மக்கள் கொண்ட இறை நம்பிக்கையை எள்ளளவும் குறைத்து மதிப்பிட முடியாது. நம் மக்களின் இந்த இறை நம்பிக்கையைத்தான் சனாதன கும்பல் சூறையாடுகின்றன. ஒற்றுமையோடு வாழும் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியால் கூறு போடுகின்றனர்.


நூலாசிரியர்

     நம் முன்னோர்களின் வழிபாட்டில் எவ்வித பாகுபாடும் இருந்ததில்லை. இடைச்செருகளாய் வந்த சிலரால் கோயில்கள் சிலருக்கு மட்டுமான கூடாரமாக போய்விட்டது.

   அழகர் கோயில் வழிபாடு குறித்து தொ.பரமசிவன், குலசாமி வழிபாடு குறித்து தோழர் அருணன் போன்றவர்களின் ஆய்வுகளும் ஆசீவகம் குறித்த பேராசிரியர் க.நெடுஞ்செழியன் ஆய்வுகளும் மிக முக்கியமானவை. அந்த வரிசையில் புதிய முயற்சியாக தோழர் கனிமொழி செல்லத்துரை அவர்களின் வரலாற்றுத் தேடல் தொடங்குகிறது.

    நாட்டார் வழிபாட்டில் குலசாமிகள்தான் மிகமுக்கியப் பங்காற்றுகின்றன. நாட்டார் வழிபாட்டில் அனைத்து மக்களும் வழிபடும் இடமாக மாறிப்போயிருக்கிறது. அங்குள்ள சாமிகளின் பெயர்களைக் கேட்டாலே நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

    தோழர் கனிமொழி செல்லத்துரை அவர்கள் இராவுத்தர் சாமி வரலாறும் வழிபாடும் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் பரவலாக பயணம் செய்திருக்கிறார் என்பதை இந்நூலை வாசிக்கும்போது உணர முடிகிறது.

    இந்திய ஒன்றியத்தில் மதபாகுபாடுகள் களைந்து சகோதரத்துடனும் சமத்துவத்துடனும் வாழவே நாம் அனைவரும் விரும்புகின்றோம். அதை மையமாக வைத்துத்தான் நமது வழிபாடுகளும் இருக்கின்றன. நம் நாட்டில் சனாதன கும்பல் இந்து முஸ்லீம் கிறித்துவம் பிரச்சனையை தூண்டிவிடுகிறார்கள். ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்காகவும் அதிகாரத்தை தக்க வைப்பதற்காகவும் இஸ்லாம் வெறுப்பு அரசியலை கையிலெடுக்கிறார்கள். சூழ்ச்சியில் சிக்கி எண்ணற்ற அப்பாவிகள் இறந்துபோகும் அவல நிலை இன்றளவும் தொடர்கிறது.

    இந்துக்கள் வேளாங்கண்ணிக்கு செல்வதும் நாகூர் தர்ஹா செல்வதும் ஆண்டாண்டுகாலமாக நடந்து வருகிறது. அதேபோல் இந்துக் கோயில்களின் திருவிழாக்களில் இஸ்லாமியர் கிறித்துவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தல் அமைப்பது அன்னதானம் வழங்குவது போன்ற நல்ல செயல்களைச் செய்து வருகிறார்கள். இந்தச் செயல்கள்தான் சிலருக்கு கண்களை உறுத்துகிறது. நாம் ஒருமைப்பாட்டுடன் ஒற்றுமையுடன் எப்போதும் மதநல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

     இந்துக் கோயில்களில் இராவுத்தர் சாமி வழிபாடு என்பது பல ஊர்களில் நடந்தேறி வருகிறது. ஆனால் இந்த இராவுத்தர் சாமிகள் உண்மையிலேயே இராவுத்தர்கள்தானா என்கிற ஆராய்ச்சி நீளுவதாக நூலாசிரியர்  பதிவு செய்கிறார்.

     பெரும்பாலும் நாட்டார் தெய்வங்களின் வரலாறு காலம்காலமாய் செவிவழியாகச் சொல்லப்பட்டு வருவதே ஆகும். செவிவழிச் செய்திகளை உறுதிப்படுத்துவதற்கு போதிய ஆதாரங்கள் கிடைப்பதில்லை. மேலும் இந்திய ஒன்றியத்தில் உள்ள இஸ்லாமியர்களோ கிறித்துவர்களோ அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் அல்ல. மதம் மட்டமே அயல்நாட்டிலிருந்து வந்தது. மக்கள் இந்திய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் தெளிவு கொள்ள வேண்டும்.  இருபத்தோறாம் நூற்றாண்டிலேயே இவ்வளவு சாதிய வன்கொடுமைகள் நடைபெறும்பொழுது முந்தைய காலக்கட்டங்களில் இன்னும் அதிகமாகவே வன்கொடுமைகள் நிகழ்ந்திருக்கக் கூடும். வன்கொடுமைகளிலிருந்து மீளவும் தங்களது சந்ததியினரைக் காப்பாற்றிக்கொண்டு உயிர் வாழவும் மதம் மாறியிருக்கிறார்கள் என்பதே உண்மை. இதற்கு நிறைய ஆதாரங்கள் பரவிக்கிடக்கின்றன.

      முலை வரியின் கொடுமைகள் தாங்க முடியாமல் கிறித்துவ மதத்திற்கு மாறிய வரலாறுகள் நிறையவே உண்டு. இந்துக்கள் சேர்ந்து கட்டிய கோயிலுக்குள் குறிப்பிட்ட இனத்தவர் மட்டமே ஆதிக்கம் செலுத்தும் நிலைமை இப்போதும் தொடர்கிறதே...! வரலாறுகளை நாம் உன்னிப்பாக ஆராய வேண்டும். அதற்கு தோழர் கனிமொழி செல்லத்துரை போன்றவர்கள் கள ஆய்வில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.


வழிபாட்டில் இராவுத்தர்


    மகாபாரத கதையான பஞ்ச பாண்டவர்கள் கதையிலும் முத்தால் இராவுத்தர் வருகிறார். வேதாரண்யம் வட்டம் பூப்பட்டியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் பக்தர் குல மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பக்தர் குல மாரியம்மனுக்கு எதிர் வலது பக்கத்தில் இராவுத்தர் சாமி சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் செவிவழி வரலாறு உண்மையிலேயே நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது

    பொதுவாக நாம் புராணங்களையும் இதிகாசங்களையும் நம்புவதில்லை என்றாலும் இப்படியெல்லாமா நடந்திருக்கும் என்றும் யோசிக்க வைக்கிறது.

     அனைத்து திரௌபதி அம்மன் கோவிலிலும் பெரும்பாலும் காவல் தெய்வமாக போத்தராசாவும் முத்தால் இராவுத்தரும் இருப்பார்கள். இவர்களைப் பற்றிய கதைகள் ஏராளம் என்றாலும் இப்படியொரு கதையும் உண்டு.

   அதாவது, சிவனும் பார்வதியும் கடற்கரையில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஈசானிய மூலையில் மணலால் மாளிகை ஒன்றை கட்டுவதாகவும் அம்மாளிகைக்கு காவலாளியாக மணலில் பொம்மையும் செய்து வைக்கிறார் பார்வதி. ., இப்படி கதை நீண்டு கொண்டு செல்லும் போது ஒருகட்டத்தில் போத்தராசாவின் மகன் அல்லிமுத்து முத்தால் இராவுத்தரின் மகள் மல்லிகா மீது காதல் கொள்கிறான். அல்லிமுத்து தன் தாய் சங்குவதியிடம் சொல்லுகிறான். சங்குவதி யாரென்றால் பஞ்சபாண்டவர்களின் தங்கை. இவள் பஞ்ச பாண்டவர்களிடம் முறையிடுகிறாள்.

    பஞ்சபாண்டவர்கள் தனது தங்கை மகன் அல்லிமுத்துவுக்குப் பெண் கேட்பதற்காக முத்தால் இராவுத்தரிடம் செல்கிறார்கள். பெண் தர முடியாது என்று கூறி பஞ்சபாண்டவர்களையே சிறைபிடித்து விடுகிறார் முத்தால் இராவுத்தர். பிறகு அல்லிமுத்துவுக்கு தன்மகளை கலியாணம் செய்து வைக்க சம்மதித்து கலியாணமும் நடைபெற்றதாக கதை முடிகிறது. பிறகு வடக்கு வாசலுக்கு இராவுத்தர் காவல் காக்கிறார். இந்த நிகழ்வு பஞ்சபாண்டவர்கள் வனவாசம் இருந்தபோது நடைபெற்றதாக வாய்வெளிச் செய்தி இன்றளவும் தொடர்கிறது. இந்தச் செய்தியை புதுச்சேரியைச் சேர்ந்த தோழர் ஆதிராமன் சொன்னதாகவும் தகவலைப் பதிவு செய்கிறார் நூலாசிரியர் தோழர் கனிமொழி செல்லத்துரை அவர்கள்.

    உண்மையிலேயே இராவுத்தர் என்பவர்கள் இஸ்லாமியர்கள்தானா என்கிற ஆய்வினை தொய்வில்லாமல் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.  குதிரை வியாபாரம் செய்பவர்களை இராவுத்தர் என்றும் அழைப்பதுண்டு என்கிற செய்தியையும் பதிவு செய்கிறார். மேலும் இராவுத்தர் என்கிற பட்டம் பல இனத்தவருக்கும் வழங்கப்பட்டு வந்தது என்றும் தற்போது இஸ்லாமியர்களில் சிலர் தங்களை இராவுத்தர் என இன்றளவும் அழைக்கப்பட்டுக் கொள்வதையும் நூலாசிரியர் பதிவு செய்கிறார்.

     குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டதும் பாபர் மசூதி இடிப்பில் இந்திய ஒன்றியத்தில் இஸ்லாமியர்கள் எவ்வாறு தாக்கப்பட்டார்கள் என்பதையும் நாடறியும். மாட்டுக்கறி வைத்திருந்ததாகச் சொல்லி உத்திரபிரதேசம் மாநிலத்தில் இஸ்லாமியர் குடும்பம் பட்ட துயரினையும் நாம் சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. இன்றளவும் ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும்மேலும் நசுக்கப்படுவது தொடர்கதையாகிறது.  விவேகானந்தர் , வள்ளலார், இராமானுசர் போன்றவர்கள் சனாதனத்திற்கு எதிராகவும் சமத்துவம் சகோதரத்துவத்துக்காகவும் பாடுபட்டார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

      முத்துப்பேட்டைத் தர்கா,  ஏர்வாடி, நாகப்பட்டினத்திலிருந்து வேளாங்கண்ணி செல்லும் வழியில் உள்ள பாப்பாக் கோவில் தர்கா, சிவகங்கையில் உள்ள மொட்டைப் பக்கிரி தர்கா, வேதாரண்யம்,  திருநெல்வேலி என தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று கள ஆய்வு செய்துள்ள நூலாசிரியர் தோழர் கனிமொழி செல்லத்துரை அவர்களுக்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

   வரலாற்று ஆய்வு நூல் எழுதுவதில் உள்ள பிரச்சனைகள் ஏராளம். வாய்க்கு வந்ததைப் பேசுவதைப் போல் பேசிவிட முடியாது. மனதில் தோன்றுவதை எல்லாம் எழுத்தாக வடிவமைத்துவிட முடியாது. நூலாசிரியர் ஆய்வு மேற்கொள்ளும் இடத்திற்கு நேரடியாக சென்றுள்ளார். மேலும் வாய்ப்புகள் ஏற்படின் அங்கேயே இரவு நேரங்களில் தங்கி அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி இருக்கிறார். இராவுத்தர் சாமியின் வரலாற்றையும் அந்தப் பகுதியில் எந்தெந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டாடுகிறார்கள் என்றும் இராவுத்தர் சாமியின் வழிபாட்டு முறைகளையும் தகவல் தெரிவித்தவரின் பெயரையும் மறக்காமல் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். தர்ஹா வழிபாட்டு முறைகளையும் கள ஆய்வு செய்து நூலில் பதிவு செய்திருக்கும் தோழர் கனிமொழி செல்லத்துரை அவர்களுக்கு வாழ்த்துகள்.


  எங்கெல்லாம் இராவுத்தர் சாமி இருக்கிறதோ அவற்றின் புகைப்படங்களையும் நூலில் நூலில் பதிவு செய்திருப்பதால் தாமும் அங்கு சென்று வந்த உணர்வினைத் தருகிறார். இந்நூலினை வாங்கி வாசிக்கின்ற பொழுதோ அல்லது இந்த விமர்சனத்தை வாசிக்கின்ற பொழுதோ உங்கள் பகுதியில் அல்லது உங்களுக்குத் தெரிந்த இராவுத்தர் சாமி வழிபாடு இருக்குமானால் இந்நூலாசிரியரைத் தொடர்பு கொள்ளுங்கள். அவரது கள ஆய்வுக்கு பயன்படக் கூடும்.

    இன்றும் பல ஊர்களில் இராவுத்தர் ஊரணி, துலுக்கர் ஊரணி, இராவுத்தர் பேட்டை போன்ற பெயர்களில் இருப்பதை நூலாசிரியர் ஆய்வு செய்ய வேண்டும். இந்திய விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவர்களில் இஸ்லாமியர்களின் பங்கு அளப்பறியது. ஆங்கிலேயர்களிடம் அடிபணியாமல் மன்னிப்புக்கடி்ம் எழுதிக் கொடுக்காமல் வீரத்தோடு பணியாற்றிய இஸ்லாமிய சொந்தங்களின் மகத்தான பணியை நாம் போற்ற வேண்டும்.

     மனிதன் தோன்றிய பிறகு மனிதனால் ஏற்படுத்தப்பட்டதுதான் கடவுள். அப்படி அந்தக் கடவுளை ஏற்படுத்தும்போது இன்னார்தான் வர வேண்டும் வரக்கூடாது என்றெல்லாம் வகுக்கவில்லை. தம் முன்னோர்களையோ அல்லது தம்மைக் காத்த தலைவனையோ தலைவியையோ கடவுளாக எண்ணி வழிபட்டார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது.

     இந்திய ஒன்றியம் மதநல்லிணக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்பதை நாம் வலியுறுத்திட தீய சக்திகளை ஓரங்கட்டி வைத்திட இதுபோன்ற வரலாற்று ஆய்வு நூல்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும் ஒவ்வொருவரும் முனைவர் கனிமொழி செல்லத்துரை அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள இராவுத்தர் சாமி வரலாறும் வழிபாடும் என்கிற நூலினை வாங்கி வாசிக்க வேண்டும் என பேரன்போடு வலியுறுத்துகின்றேன்.

 

       உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்நூலை 2022 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறது. 180 ரூபாய் விலையுள்ள இந்த நூல் 150 பக்கங்களைக் கொண்டது. யாவரும் வாங்கி வாசிக்க வேண்டிய நூல்.

நூலின் விலை ருபாய் 180/-

நூல் கிடைக்குமிடம்:

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

இரண்டாம் முதன்மைச் சாலை,

தரமணி,

சென்னை 600 113

பேச: 044 22522992

 

நூலாசிரியர் அலைபேசி எண்:  

+91 96003 48587

 

பேரன்பின் வழியில்

சோலச்சி

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான விமர்சனம்