வியாழன், 14 செப்டம்பர், 2023

மாண்புமிகு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள் - சோலச்சி

 மாண்புமிகு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மீது பெரும் மரியாதையும் பேரன்பும் அதிகமாக உள்ளது. காரணம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு சனாதனம் குறித்த தனது நிலைப்பாட்டினைப் பகிரங்கமாக எடுத்துரைத்ததன் மூலம் இந்தியா முழுவதும் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. 



   ஆண்டாண்டு காலமாக வர்ணங்களால் சாதிய பாகுபாடு வன்கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கிறது. இதை சனாதன தர்மம் என்று சிலர் மார்தட்டிக் கொள்வதுதான் வேதனையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. சாதிய பாகுபாடுகளால் வர்ணங்களால் பாதிக்கப்பட்டவனுக்குத்தான் வலியும் வேதனையும் தெரியும்.

  சாதிய பாகுபாடுகளை களையாமல் ஒரு நாடு வளர்ச்சி பெற முடியாது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த ஏற்றத்தாழ்வுகள்தான் அதனுடைய வளர்ச்சியை பாதித்துக் கொண்டிருக்கிறது. நாம் சனாதன தர்மம் என்று சொல்லி மேலும் மேலும் மக்களை தாழ்த்தி பிரித்தாலும் சூழ்ச்சியை முன்னிலைப்படுத்தாமல் அனைவரும் சமம் என்கிற உயர்ந்த எண்ணத்தை கருத்தியலாக கொண்டு தோள் மேல் தோள் போட்டு பயணிக்க முன்வர வேண்டும்.

     பல்லக்கை தூக்க வைப்பேன் என்பதற்கும் பல்லக்கை நானே தூக்குவேன் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இந்த அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்.... என்று அவ்வையார் பாடியிருக்கிறார் என்றால் அன்றைய சாதிய கொடுமைகள் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இப்போது இந்த வன்கொடுமைகள் இந்தியா முழுவதும் நடைபெறுவதை நாம் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த சாதிய கொடுமைகளைத்தான் சனாதனம் என்று நாம் சொல்லுகின்றோம்.

     இப்போதும் இந்திய திருநாட்டில் குடிநீர் குளத்திற்கு செல்ல முடியாத நிலை, கோயிலுக்குள் செல்ல முடியாத அவல நிலை, தான் விரும்பிய உணவை உண்ண முடியாத இழி நிலை, மனம் ஒத்து வாழ முடியாத நிலை, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மேலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல்லே நம்மை சிந்திக்க வைக்கிறது. காரணம் தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் அவர்களை தாழ்த்தியது யார் என்கிற கேள்விக்கு விடை காண வேண்டும். இந்தக் கேள்விக்கு விடை என்றால் உங்களிடமே விட்டு விடுகின்றேன். மேலும் இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் எல்லோரும் இந்த திருநாட்டின் பூர்வீக குடிகள். ஏதோ ஒரு சூழ்நிலையில் அவர்கள் மதம் மாறி இருக்கிறார்கள். அவர்கள் இருந்த மதத்தில் கொள்கைகளோ அல்லது கொடுமைகள் தாங்காமலோ மதம் மாறி இருக்கலாம். அல்லது அவர்கள் எதிர்பார்த்தது போல் விரும்பிய வண்ணம் ஓர் மதம் அவர்களை ஈர்த்திருக்கலாம். அதனால் அவர்கள் மதம் மாறி இருப்பார்கள். 

    குடி பெருமை பேசுவதையும் சாதி பெருமை பேசுவதையும் நியாயப்படுத்த முடியாது. எப்போது பார்த்தாலும் எங்கள் மதத்தையே திட்டுகிறீர்களே தைரியம் இருந்தால் அந்த மதத்தை அடுத்த மதத்தை திட்டுங்களே என்று பார்ப்போம் என்று சொல்வது விதண்டாவாதம். காரணம், நம் வீட்டில் நிறைய ஓட்டைகளை வைத்துக்கொண்டு அடுத்த வீட்டில் உள்ள ஓட்டைகளை குறை சொல்ல நினைப்பது நியாயம் அல்ல. முதலில் நம் வீட்டில் உள்ள ஓட்டைகளை அடைப்பதற்கு நாம் தயாராக வேண்டும்.

     மேலும், புராணங்களையும் இதிகாசங்களையும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் சீர்திருத்தவாதிகள் தந்தை பெரியார் அவர்களும் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களும் அயோத்திதாச பண்டிதர் அவர்களும் நன்கு ஆராய்ச்சி செய்த பிறகே அது குறித்த கருத்துக்களை துணிச்சலாக எடுத்துரைத்தனர். மதவாத மாயைக்குள் சாதிய இனவாத போதைக்குள் மூழ்கி விடாமல் மனிதநேயம் காக்க சகோதரத்துவம் சமத்துவம் என்பதை இரண்டு கண்களாக கொண்டு நாம் இந்த தேசத்தை காப்பாற்ற வேண்டும்.

   சனாதன ஒழிப்பு மாநாடு நடத்திய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்திற்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


மாண்புமிகு அமைச்சர் திரு .உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

                               பேரன்பின் வழியில்

                                       சோலச்சி 

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான அருமையான கருத்துக்கள்...

yuvabharathi சொன்னது…

செம்மை நண்பா

'பசி'பரமசிவம் சொன்னது…

வாசித்து மகிழ்ந்தேன்.

பாராட்டுகள்; வாழ்த்துகள்.