கதையல்ல – ( சோலச்சி 9788210863 )
வழக்கம் போல் இரவு உறங்கச் சென்றேன். உறக்கத்தில் விழித்த என் குழந்தைகள் எப்போதும் போல் ஆளுக்கொரு பக்கமாய் என்மீது கால்களை தூக்கிப் போட்டுக்கொண்டு என் முகத்தைப் பார்த்தனர். அந்தப் பார்வையின் அர்த்தம் புரியாதவனா நான். கதை கேட்காமல் ஒருநாளும் உறங்கியதில்லை என்பதை நான் அறிவேன். சில நேரங்களில் நான் உறங்க நள்ளிரவு ஆகிவிடும். கேட்காமல் விட்டுப் போன கதைகளை மறக்காமல் சேர்த்து மறுநாள் இரண்டு கதைகளாக சொல்ல வேண்டும். ஆனால் எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் உண்டு.
நான் இரண்டு கதைகள் சொன்னால் அவர்கள் ஆளுக்கொரு கதை சொல்ல வேண்டும். அவர்கள் சொல்லும் பெரும்பாலான கதைகள் நான் சொன்ன கதைகளாகவே இருக்கும்.
அதில் ஒரு மாற்றம் என்னவென்றால் பெயர்கள் மட்டுமே மாறி இருக்கும். யானை கதை சொன்னால் அவர்கள் பூனை என்று பெயர் மாற்றி சொல்லுவார்கள். நான் கதை சொல்லத் தொடங்கினேன்.
''ஒரு பெரிய காடு இருந்துச்சாம். அந்தக் காட்டுல பெரிய யானை இருந்துச்சாம். அது தலையதலைய ஆட்டி நடந்து போகும்போது குட்டி யானை ஒன்னு வந்துச்சாம். அது பின்னாடியே இன்னொரு குட்டி யானை வந்துச்சாம்.....'' இப்படி ஆரம்பித்தேன். இப்படியான கதைகளே அவர்களுக்குப் பிடிக்கும்.
எனக்கு என் அப்பா பத்தாம்வகுப்பு படிக்கும்வரை கதை சொன்னார். ஆனால் அவருக்காக நான் ஒரு கதை கூட சொன்னதில்லை. ஆனால் என் குழந்தைகள் எனக்காக நிறையவே சொல்லியிருக்கிறார்கள்.
மூத்தவள் தன்யா நான்காம் வகுப்பு படிக்கிறாள். குட்டி குட்டி கதைகளை எழுதி பெட்டி நிறைய வைத்திருக்கிறாள். அந்தக் கதைகளில் சொற்கள் குறைவாக இருக்கும். அனைத்தும் படக்கதைகளாகவே இருக்கும். படங்களில் காடுகள் நிறைந்திருக்கும். பறவைகளும் விலங்குகளும் அவளது கதைகளில் மகிழ்ச்சியோடு வாழ்ந்தன. வீட்டைச் சுற்றிலும் பறவைகளுக்காவே நிறைய மரங்களை நட்டு வளர்த்து வந்தாள். அவை அவளை விட பலமடங்கு பெரிதாக இருக்கிறது.
விலங்குகள் வாழ்வதற்கான காடுகளை வளர்க்க முடியாவிட்டாலும் பறவைகளாவது வந்து தங்குகிறதே என்று பேரானந்தம் கொள்வாள்.
இளையவள் ஓவியா இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். அவளால் கதைகளை எழுத முடியாது என்றாலும் பொம்மைகளை கையில் வைத்துக்கொண்டு கதை சொல்வதில் கெட்டிக்காரி. அவள் கதை சொல்லத் தொடங்கிவிட்டால் ஒவ்வொரு முறையும் " அடடா அழகுடா.... ரொம்ப அழகுடா... ம் அப்பறம்... சூப்பர்.... சூப்பர் '' என்று இடையிடையே சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
அது அவள் கதைக்கான அங்கீகாரமாகவே கருதுகிறாள். கதை சொல்லி முடித்ததும் எனது பாராட்டுக்கு பரிசாக எனது கன்னங்களில் முத்தமிட மறந்ததே இல்லை. ஆனால் மூத்தவளுக்கு கதையிடையே "ம்.... ம்....'' உச்சரித்தால் போதும்.
தடையில்லாமல் தனது கதையை சொல்லிக்கொண்டே போவாள். காடுகளையும் யானையையும் பற்றிய எனது கதையை சொல்லி முடிப்பதற்குள் இருவருமே உறங்கிவிட்டனர். ஏனென்றால் உறக்கத்தில் விழித்து கதை கேட்டால் நீண்ட நேரம் விழித்திருக்க வாய்ப்பேது.
பகலில் நடந்த நிகழ்வுகளை அசை போட்டேன். சின்னத்தம்பி அண்ணன் என்னிடம் பந்தயம் கட்டியது நினைவுக்கு வந்தது.
''இல்ல தம்பி... வந்தாலும் வரலாம் என்றார். மழையே ஒழுங்கா வராத நம்ம ஊர்ல கஜா புயல் எங்கண்ணே வரப்போகுது. புதுக்கோட்டைனாலே வறட்சி மாவட்டம்னு தானே பேரு'' என்றேன். ''அப்படினா ஐநூறு ரூபாய் பந்தயம்'' என்றார். நான் சிரித்துக்கொண்டே சம்மதம் தெரிவித்தேன். இரவு உறக்கத்திலும் அதை நினைத்து சிரித்துக் கொண்டேன். மணி பன்னிரண்டு முடிந்து அதிகாலை தொடக்கமாயிருந்தது. நினைவுகளை மறந்தவனாய் கண்களை மூடி உறங்க தொடங்கினேன். உறக்கம் என் சொர்க்க வாசலுக்குள் நுழைந்து என்னை ஏந்திக் கொண்டது.
படபடவென இறக்கைகள் அடித்துக்கொள்ளும் சத்தமும் கறுக் கறுக் என எதையோ கடிக்கும் சத்தமும் கேட்டது. வீட்டோரத்தில் இருக்கும் கொய்யா மரத்திலிருந்து அந்த சத்தம் வருவதை உணர்ந்தேன். வீட்டின் தெற்குப்பக்கமாகத்தான் தோட்டம் இருக்கிறது.
தென்பக்க சன்னலை மெதுவாக திறந்தேன். நிலவொளியில் மரங்கள்
பளிச்சென தெரிந்தன.
''அப்பா.... வௌவால வெரட்டாதீக. அது தின்னுட்டுப் போவட்டும். அதுவும்தான் என்னோட பிரண்டு'' மூத்தவள் தன்யா தூக்கத்திலும் கண்களை விழிக்காமல் என்னிடம் சொன்னாள்.
அவள் உறக்கத்திலும் தோட்டத்தின் நினைப்போடுதான் இருக்கிறாள்.
''ச்சு....ச்சு...'' உச்சுக்கொட்டி அவளை உறங்க வைத்தேன்.
இரண்டு கனிதின்னும் வௌவால்கள் கொய்யா மரத்தின் கிளையில் தலைகீழாய் தொங்கியவாறு தனது இறக்கைகளை அடித்துக்கொண்டு கனியை உண்டு மகிழ்ந்தன. அவை உண்ண உண்ண வயிற்றின் மேல்நோக்கிச் சென்றது. பலநேரங்களில் வௌவால்கள் உண்ணுவதைப் பார்த்திருந்தாலும் அன்று ஏதோ புதிதாக பார்ப்பதுபோல் தோன்றியது.
கொய்யா காய்களையும் மாங்காய்களையும் நான் ஒருநாள் கூட பறித்தது கிடையாது. ஒருமுறை மாமரத்தில் மாங்காய் பறிப்பதற்காக ஏறுவதற்கு தயாராகினேன்.
''அப்பா... கீழ எறங்குங்க. அது என்னோட பிரண்டு. நீங்க ஏறுனா அதுக்கு வலிக்கும்ல''
''அப்பறம் யாரும்மா பறிக்கிறது''
'' நான்தான் பறிப்பேன். அது என்னய ஒன்னும் சொல்லாது''
தன்யாவின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட நான் அன்றுமுதல் மரத்தில் ஏறுவதே இல்லை. அனைத்து மரங்களிலும் அவள்மட்டுமே ஏறுவாள். கறிவேப்பிலை வேண்டும் என்றாலும் அவளிடம்தான் கேட்பேன். அவள்தான் ஏறி ஓடிக் கொடுப்பாள். ஓடித்த இடம் மரத்திற்கு வலிக்கக் கூடாது என்பதற்காக அந்த இடத்தில் முத்தம் கொடுத்துக்கொண்டே மன்னிச்சுக்க.... மன்னிச்சுக்க என்பாள். என் மகளின் இளகிய குணத்தையும் மரங்கள் பறவைகள் மீது கொண்ட பாசத்தையும் எண்ணி மகிழ்ந்து போவேன்.
எங்கள் ஊரில் மொத்தமே பதினைந்து வீடுகள்தான் இருக்கிறது. அதில் எங்கள் வீடு மட்டுமே எப்போதும் பசுமையாக இருக்கும். பக்கத்தில் இருக்கும் அடிகுழாயிலிருந்து குடத்தில் தண்ணீர் கொண்டு வந்துதான் மரங்களுக்கு ஊற்றுவது. என் குழந்தைகளுக்கும் மிகச்சிறிய குடங்களை வாங்கிக் கொடுத்திருந்தேன். அதில் தண்ணீர் கொண்டுவந்து மரங்களுக்கு ஊற்றுவார்கள்.
''ஏய்... விடுப்பா. இல்ல... டீச்சர்கிட்ட சொல்லிருவேன். சட்டைய விடு... விடு....'' வாய் உளறிக் கொண்டு இருந்தாள் ஓவியா. வகுப்பில் நடந்தது ஏதோ நினைவுக்கு வர அவள் அவ்வாறு உளறிக்கொண்டிருந்தாள். ''யாருடா அது... விடுறியா அடிப்போடவா'' நான் சத்தமிட்டதும் ''அப்பா.. என்கிட்ட படுப்பா...'' தூங்கிக்கொண்டே பேசுகிறாள்.
மெதுவாக சன்னலை சாத்த முயற்சித்தேன். ஆனாலும் டப்பென சத்தம் கேட்டு வௌவால்கள் பறந்தன. அவைகள் பறக்கும் சத்தம் கேட்டு மரத்தில் இருந்த பறவைகளும் பறந்தன. பறவைகள் பறக்கும்போது எழுந்த காற்றில் மரங்கள் அசைந்து பெருங்காற்றை உருவாக்குன. அந்தப் பெருங்காற்று சன்னலில் மோதி திரும்பிச் சென்றது.
மனிதர்களுக்கு பெயர் வைப்பது போல் மரங்களுக்கும் பெயர் வைத்து அழகு பார்த்தாள் தன்யா. அதனால்தான் மரங்களை தன் நண்பர்களாகவே பாவித்தாள். அவள் மரங்களோடும் பறவைகளோடும் பேசும்போதெல்லாம் எனக்குள்ளும் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும். ''அப்பா எதுக்குத் தெரியுமா காய்களை கொஞ்சமா புடுங்குறது. பாவந்தானே பறவையெல்லாம். அதுகளுக்கு தங்குறதுக்கு ஒழுங்கான வீடுகளே இல்ல. சாப்பாடு இல்ல. நம்ம தோட்டத்துல இருக்கதால அதுக வந்து வயிறு முட்ட சாப்புடுதுங்க'' அவளின் குழந்தை மொழி தேனினும் இனியதாகவே இருந்தது.
மீண்டும் சன்னல் கதவை மெதுவாக திறக்கிறேன். ஒன்றிரண்டு பறவைகள் மேலே பறப்பதும் மரங்கள் அசைவதுமாக இருந்தன. இளங்காற்று என் முகத்தில் மோதி முத்தமழை பொழிந்தன. விழிகளை திறந்தும் மூடியும் அந்த உணர்தலை ரசிக்கின்றேன். சன்னலை மூடிவிட்டு என் குழந்தைகளின் நடுவே உறங்கினேன்.
மரங்கள் அசைவதும் பறவைகளின் பாட்டுக் கச்சேரியையும் என் செவிகளுக்கு எப்போதும்போல் விருந்தளித்தன. காற்றின் தாலாட்டில் என்னை முழுவதுமாய் அர்ப்பணித்துக் கொண்டேன். அமைதியாக உறங்கும் பாறையைப் போல் எந்தச் சலனமும் இல்லாமல் உறங்கினாலும் மனசுக்குள் நாளை புயல் வருவதாக வானிலை ஆய்வாளர்களும் அரசும் சொன்னார்களே என்ற நினைப்பும் இருந்தது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சூறைக்காற்று சுழன்று வீசியது. மணி இரண்டு இருக்கும்.
ஆழிப்பேரலை பொங்கியது. ம்ம்ம்ம்ம்ம்......என அழுத்தமாக வீசிய புழுதியை வாரி இறைத்தது. அந்தப் பெருங்கடல், காற்றுக்கு வேகத்தைச் செலுத்தியது. வேகத்தைக் கூட்டுவதற்காக அலைகளை சுழல விட்டன. சுழன்று எழுந்த அலைகள் பல கிலோமீட்டர் வேகம் கொண்ட பெருங்காற்றை வீடுகளுக்குள் செலுத்தியது.
அந்தக் காற்று மரங்களுக்குள் புகுந்து பல கிலோமீட்டர் வரை சென்றது. காப்பாத்துங்க.... காப்பாத்துங்க... என்று மரங்கள் கத்தின. வீட்டின் கூரைகள் காற்றைத் தடுக்க முடியாமல் அலறி அடித்துக்கொண்டு பறந்தன. புயலின் நினைப்போடு உறங்கியதால் இவை கனவு என்றிருந்தேன். சிறிது நேரத்தில் என் மீது இலைகளும் மண் துகளும் விழுந்தன. ஆகா... கனவு இல்லை நிசம் என்று உணர்ந்து விழித்தேன். என் வீட்டின் ஓடுகள் பறந்து கீழே விழுந்தன. வான வெளிச்சம் வீட்டுக்குள் புகுந்தது.
புகை மண்டலமாய் வானவெளி காட்சியளித்தது.
என் குழந்தைகளை தூக்க முயற்சித்தேன். இரண்டு ஓடுகள் பறந்து எங்கள் அருகில் விழுந்தது. குழந்தைகளை விருட்டென என் பக்கமாக இழுத்துக் கொண்டேன். சடச்சடவென மழைத்தூறல் விழுந்ததும் ''அப்பா .... அப்பா.... '' என்றவாறே என் குழந்தைகள் எழுந்து விட்டனர். அதற்குள் பத்துப்பதினைந்து ஓடுகள் காற்றில் பறந்து சிதறின. துணிகள் மழையில் நனைந்தன. பாயை மட்டும் எடுத்துக்கொண்டு குழந்தைகளோடு பக்கத்து அறைக்குள் சென்று மின் விளக்குப் பொத்தானை அழுத்தினேன். மின் இணைப்பு காற்று வரும்போதே மின்வாரிய ஊழியர்களால் ஏற்கனவே துண்டிக்கப்பட்டிருந்தன. எமர்சன்சி விளக்கினை தேடினேன். வீசிய சுழல் காற்றில் அலமாரியில் இருந்த அவ்விளக்கு கீழே விழுந்து நொறுங்கிக் கிடந்தது. தீப்பெட்டி நனைந்து போயிருந்தது. விளக்கேற்றுவதற்கும் வழியில்லை. என் குழந்தைகள் என்னை இறுக அணைத்துக்கொண்டனர். இந்த அறையில் இருக்கும் ஓடுகள் சரிந்துவிடக் கூடாதென்று நினைத்துக் கொண்டேன்.
இந்த அறையில்தான் பீரோவும் புத்தகங்களும் இருக்கின்றது. ஓவியா என் மார்போடு ஒட்டிக்கொண்டு ஒரு குரங்குக் குட்டியைப்போல் காட்சியளித்தாள். ''அப்பா.. கடவுள் இல்லதானப்பா. ஆமடா தங்கம். பொய்யிப்பா கடவுள் இருக்காரு'' தன்யா சொன்னதைக் கேட்டு அந்தப் புயலிலும் ஆச்சரியமாக இருந்தது. அவள் மேலும் தொடர்ந்தாள். ''நீங்கதானப்பா எங்க காப்பாத்துறீங்க. அப்ப நீங்கதான் கடவுள்'' அவளின் இந்தப் பேச்சால் நான் ஒரு நொடி உறைந்து போனேன். இந்த வயதில் எவ்வளவு அறிவார்ந்தப் பேச்சு. இது புரியாமல் கடவுள் பேர் சொல்லி பிழைப்பு நடத்துவதும் கலவரம் செய்வதும் கீழ்த்தரமான செயல் இல்லையா இந்தச் சமூகத்தைப் பார்த்து நானே கேட்டுக்கொண்டேன்.
இந்த அறையின் ஓடுகளும் பறந்தால் வேறு எங்கு செல்வது என்ற நினைப்பில் அந்த அறைக்குள் இருக்கும் இரண்டு பெரிய அலமாரியிலும் இருந்த சில்லறை சாமான்களை ஒரே அலமாரியில் அடுக்கினேன். ஒரு அலமாரியை துணியால் துடைத்து சுத்தம் செய்தேன். என் குழந்தைகளை அந்த அலமாரிக்குள் உட்கார வைத்தேன். மீண்டுமொரு காற்று பெரும் இரைச்சலுடன் வருகை புரிந்தது. அப்போது வானம் விடியத் தொடங்கும் நேரமாக இருந்தது. பறவைகள படபடவென பறந்து சென்றன. தூறல் மழையாக பெய்யத் தொடங்கியது.
ஏழெட்டு ஓடுகள் உடைந்து வெளியேயும் உள்ளேயும் விழுந்தன. அப்பா.... உள்ள வந்துரு என்று என் குழந்தைகள் கத்துகிறார்கள். அலமாரிக்குள் நான் எப்படிச் செல்வது. என் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே என்னுள் இருந்தது. மழையில் நனைந்தவாறே வேட்டி ஒன்றை எடுத்து சாரல் அடிக்காமல் அலமாரியில் போத்தினேன். அதையும் விலக்கிக் கொண்டு அவர்கள் கத்திக் கொண்டு இறந்தார்கள். ஒன்னுல்லம்மா... தைரியமா இருங்க... சொல்லிக்கொண்டே இரண்டு பாய்களை எடுத்து புத்தகங்கள் இருக்கும் இரும்பு அலமாரியை மூடினேன்.
மழை நீர் பாயில் விழுந்து வீட்டுக்குள் கெண்டைக்கால் அளவுக்கு நிரம்பியது. அறையிலிருந்து நீர் வெளியேறும் ஓட்டை வழியாக கைகளால் தண்ணீரைத் தள்ளினேன். அவை சுழன ற்று வீசும் பெருங்காற்றால் வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே வந்தது.
கரப்பான் பூச்சிகளும் பாச்சைகளும் நீரில் நீந்தி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள என் மேல் ஏறின. அவைகளை தட்டி விட்டேன். அவை மீண்டும் என் மீது ஏறின. மீண்டும் தட்டிவிட மனமில்லை. அவை நீந்தி அலமாரிக்குச் சென்றுவிட்டால் என் குழந்தைகள் நிலை என்னாவது எண்ணிக்கொண்டேன். அப்போது வாசலில் தொப்பென்று ஏதோ விழுந்தது.
மெதுவாக கதைவைத் திறந்தேன். அப்பா....தெறக்கதீக காத்து ரொம்ப அடிக்குது என்று இருவருமே கத்தினர். தலையில் வழியும் நீரை துடைத்துக்கொண்டே வாசலைப் பார்த்தேன்.
நான்கு வீடு தள்ளி இருக்கும் வேப்ப மரத்தின் பெரிய கிளையொன்று முறந்து வந்து வாசலில் கிடந்தது.
நான்கு வீடுகளைக் கடந்து எப்படி வந்து விழுந்திருக்கும்.
வெளியில் யாரும் நிற்பதாக தெரியவில்லை. வெளியில் நான் வந்திருந்தால் என்னவாயிருக்கும் நினைத்தாலே பயமாக இருந்தது. வீதியில் சென்ற மின்சார கம்பியில் கருவைமரம் சாய்ந்து அறுந்து கிடந்தது. மின்சார வாரிய ஊழிகள் என் கண்முன்னே வந்து சென்றனர். இரு கரங்களால் அவர்களை வணங்கினேன். கதவைச் சாத்திவிட்டு மழையில் நனைந்தவாறே தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டேன். மரங்கள் சுழன்று சுழன்று வீசின. மரங்களின் கூக்குரல் கேட்டுத்தான் காப்பாற்ற முடியாமல் வானம் அழுவதாக எண்ணினேன். தலையிலிருந்து முகத்தில் வழிந்த நீரை கைகளால் துடைத்துக் கொண்டேன். என் குழந்தைகள் சாரல் விழாமல் போத்தியிருந்த வேட்டியை விலக்கிக் கொண்டு என்னைப் பார்த்தவாறு தேமித்தேமி அழுது கொண்டிருந்தனர். அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள் பாதி சாரலில் நனைந்தன. அவற்றை முழுவதுமாக மூடுவதற்கு என்னிடம் எதுவுமே இல்லை. இப்படி ஒரு புயல் வருமென்று யாரும் எதிர்பார்த்ததே இல்லை.
பொழுது விடிந்தது. மழை விட்டது.
ஆனால் காற்றின் கோரப்பசி நிற்கவில்லை. அப்பா சோட்டாபீம் கீழ படுத்து கெஞ்சுதுப்பா. அதக் கொல்ல வேண்டாமுனு காத்துக்கிட்ட சொல்லுப்பா என்று தன்யா கதறுகிறாள். மாமரத்தைதான் அவள் சோட்டா பீம் என்கிறாள். அவள் கண்முன்னே மாமரம் வேறோடு பிடுங்கி ஏறியது. அப்பா... என் பிரண்டு பாவம்ப்பா. நான் பொறந்தப்போ வச்சதுனு சொன்னியே. அதுல இருந்த குட்டி மாங்காய் எல்லாம் விழுந்துருச்சே. அந்த ஏலைக எல்லாம் துடிக்குதே என்று கத்தினாள். என்னை அறியாமல் அழுகை வந்தது. அப்பா ரத்தம் வருது என்று ஓவியா கத்தினாள். பதறிப்போய் எதுலயும் இடிச்சுக்கிட்டியம்மா அவளைத் தூக்கினேன். அப்பா ஓம்மொகத்துலப்பா என்று என் முகத்தை துடைத்தாள். அவளின் இரண்டு கைகளிலும் இரத்தம் வழிந்தது. மேலிருந்து விழுந்த ஓடுதான் சதி செய்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். புயலுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
ஏனெனில் என்மீது விழுந்ததால் வலி தெரியாதவனாய் இருந்தேன். என் குழந்தைகள் மீது விழுந்திருந்தால் அர்த்த ராத்திரியில் என்னால் என்ன செய்ய முடியும்.
பெருங்காற்றில் வேரோடு சாய்ந்த பலா மரம் ஒன்று தனது இலைகளை தரையில் அடித்துக்கொண்டு எங்களை விட்டு கதறியது. கோபம் தீராத காற்று, சுழன்று வீச அந்த மரத்தை பக்கத்து வீட்டு வாசலில் தூக்கிச் சென்று போட்டது. அவர்கள் கதவைத் திறந்தாலும் வெளியில் வரமுடியாது.
வெளியில் இருப்பவர்கள் அந்த மரத்தை அப்புறப்படுத்தினால்தான் அவர்களால் வெளியில் வர முடியும்.
எங்கள் ஊருக்கு காவலாய் இருந்த பனை மரங்கள் சுழன்று வீசிய பெருங்காற்றினை தடுக்க எவ்வளவோ முயற்சித்தும் பனைமரங்களிடம் சாக்கு போக்கு காட்டிவிட்டு மற்ற மரங்களையும் கூரை வீடு, ஓட்டு வீடு, ஆஸ்பெட்டாஸ் வீடுகளின் கூரைகளை புடுங்கி எறிந்தன. அய்ந்தாறு மருத மரங்கள் ''திரும்பிப் போ. எல்லோரையும் விட்டுவிடு'' என்று தரையில் வீழ்ந்து கெஞ்சின. அந்தப் பெருங்காற்று எதையும் காது கொடுத்து கேட்பதாக இல்லை.
மருத மரங்களை விட்டுவிட்டு மற்ற மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து தனது கோபத்தை தீர்த்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.
படுகொலையை நிகழ்த்திவிட்டு சென்ற புயல் காற்றை '' இனி வராதே... வராதே...'' என்று வீழ்ந்து கிடந்த மரங்கள் தனது மிகப்பெரிய இலைகளைக் கொண்டு விரட்டிக் கொண்டே தனது உயிரை விட்டன.
ஒவ்வொரு மரமாக சென்று என் குழந்தைகள் கட்டி அணைத்து கதறுகிறார்கள். ''அப்பா... இனி பறவையெல்லாம் எங்க போயி தங்கும். இனிமே இந்த மரத்தையெல்லாம் பாக்க முடியதா'' என்று அழுது கொண்டே ''ஜாக்கிஜான் எந்திரி... ஜாக்கிஜான் எந்திரி......'' என்று கொய்யா மரத்தின் கிளைகளைப் பிடித்து தூக்கினாள் தன்யா. அவளின் கண்ணீரில் நனைந்து போகிறது ஜாக்கிஜான். என் கால்களை இறுகப் பிடித்துக்கொண்டு தேமித்தேமி அழுகிறாள் ஓவியா. கைவிடப்பட்ட அகதியைப் போல் எல்லாவற்றையும் விரக்தியோடு பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.
என்னிடம் பந்தயம் கட்டிய சின்னத்தம்பி அண்ணனின் கூரை வீட்டின் கீற்றுகள் பறந்து வந்து எங்கள் வாசலில் கிடந்தன. அவரின் வீடு முழுவதும் நாசமாய்ப் போயிருந்தது. அவரின் மனைவி ஒப்பாறி வைத்துக்கொண்டு இருந்தார். நான் அவரைப் பார்க்கிறேன். அவர் என்னைப் பார்க்கிறார். இருவரும் கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றோம்.
*********************
|
2 கருத்துகள்:
வேதனை
நெகிழ்ச்சி...
கருத்துரையிடுக