புரட்சிக் கலைஞருக்கு புகழ் வணக்கம்..!
கருப்பு நிலாவாம்
அந்த கரிமேடு கரிவாயனை
மாநகரக் காவல்
புலன் விசாரணை செய்தாலும்
அந்த பூந்தோட்ட காவல்காரன்
எப்போதும்
பொன்மனச் செம்மல்தான்...!
ஊமை விழிகளால்
சட்டம் ஒரு இருட்டறை என்றாலும்
வேங்கையின் மைந்தனாய்
புது யுகம் படைக்க
புதிய தீர்ப்பு வழங்கி
எங்கள் குரலாய் ஒலித்து
நீதியின் மறுபக்கத்தை காட்டிய
எங்கள் வீரபாண்டியன்..!
சேதுபதி ஐ.பி.எஸ்ஸாக
பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டாலும்
வீரம் வெளஞ்ச மண்ணில்
தர்ம சக்கரமாய்
வாழ்ந்து வழிகாட்டிய
எங்கள்
பெரியண்ணா...!
புரட்சிக்கலைஞனாய்
கொள்கை நெறி தவறாத கேப்டனாய்
வலம் வந்ததை
பார்த்தவர்கள் சொல்லுகின்றனர்
பழகியவர்களும்
உள்ளம் உருக உரைக்கின்றனர்..!
இல்லாதோருக்கு இயன்றதை
வழங்கச் சொன்னாய்
எப்போதும்
நியாயத்தின் பக்கமே நின்னாய்..!
தொண்டர்களாய் மாறிய ரசிகர்களை
ஏமாற்றக் கூடாது என்பதற்காகவே
அரசியலில் காலூன்றினாய்
வேரூன்றும் நேரத்திலே
எங்களை
நெஞ்சடைக்க செய்ததென்ன..?
பாரியை வள்ளல் என்று
பறம்பு மலையோ சொல்லி மகிழும்
அந்தப் பாரியே நீதான் என்று
இந்தப் பாரோ மார்தட்டி மகிழும்...!
வறுமையை ஒழித்திட எண்ணிய
உன் வலிமை நியாயமானதுதான்...
ஆட்சியாளர்கள் முயலாமையில்
இருக்கும் வரை
வறுமையும் நிலையானதுதான்...!
பிறர் செய்வது தவறு என தெரிந்தால்
நாக்கை உருட்டினாய்
கையை உயர்த்தி மிரட்டினாய்
கோபம் கொப்பளிக்க
உரக்க கத்தினாய்..
இது சதிகார உலகம்
உன்னை நக்கலடித்தே
நகர்ந்து விட்டது...!
உன் மேடைப் பேச்சு
எழுதி வைத்து பேசுவதல்ல..
எதார்த்தத்தை பேசியது..!
அப்பழுக்கற்ற மனிதராய் அரசியலில்
வெளிச்சம் போட்டு காட்டினாய்..!
சற்றே நிதானித்திருக்கலாம்
நிலை தடுமாறுவதை
தவிர்த்திருக்கலாம்...!
உன்னைப் புறம் தள்ளி
எல்லை மீறிய பிறகு
என்ன செய்வது...?
ஓ...வென அழுகின்றேன்
இரு கண்கள் போதவிலை..
காற்றும் உன்னிடம்
உதவி கேட்டதோ...?
மூச்சுக்காற்றையே விட்டுவிட்டாயே...!
நெறஞ்ச மனசுக்காரரான
எங்கள் சொக்கத்தங்கமே
எங்கள் ஆசானே
நீயொரு சகாப்தம்...!
- சோலச்சி அகரப்பட்டி
பேச : 9788210863
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக