பத்தாண்டுகள் பிரதம மந்திரியாக இருக்கும்
வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தால்...
* சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்
என்பதை நிச்சயம் நிலைநாட்டி இருப்பேன்.
* விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்து
பொருளாதாரத்தை வலிமை அடையச் செய்திருப்பேன்.
* மதவாத அரசியலுக்கு முக்கியத்துவம்
கொடுக்காமல் மத நல்லிணக்கத்திற்கு துணையாக நின்று இருப்பேன்.
* மகளிருக்கு ஆட்சிப் பணிகளில் 50
விழுக்காடு என்பதை நிலைநாட்டி இருப்பேன்.
* 15 லட்சம் உங்கள் வங்கிக் கணக்கில்
செலுத்துகிறேன் போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளிக்காமல் கறுப்பு பணத்தை உண்மையாகவே
மீட்டு பொருளாதார வளர்ச்சிக்கு வகை செய்திருப்பேன்.
* குறைந்தபட்ச இருப்பு, எஸ்எம்எஸ்
அனுப்புதல், அதிக முறை பணம் எடுத்தல் போன்ற வகைகளில் வங்கிகள் ஏழைகளிடம்
சுரண்டுவதை தடுத்து இருப்பேன்.
* இந்திய துணைக் கண்டம் மத
நல்லிணக்கம் உள்ள நாடு. இங்கே பல மொழி, இனம் சார்ந்த மக்கள் வாழ்கிறார்கள்.
அவர்களின் நலனில் அக்கறை செலுத்தி ஒற்றுமைக்கு வழி அமைத்திருப்பேன்.
* மணிப்பூரில் நடந்த கொடூரம் போல்
நடக்காமல் பெண்களின் சுய மரியாதையை நிலைநாட்டி இருப்பேன்.
* பண மதிப்பிழப்பு என்கிற பெயரில் ஏழை
நடுத்தர மக்களை வாட்டி வதைக்காமல் வரி என்கிற பெயரில் மோசடி மற்றும் பெரும்
சுரண்டலை தடுத்திருப்பேன்.
* மக்களின் நலனில் அக்கறை செலுத்தி
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்காமல் பொது நிறுவனங்களை
பெருக்கி இருப்பேன்.
* அயல்நாட்டுத் தலைவர்கள் விருந்தினர்களாக வரும்பொழுது குடிசைப்பகுதிகளை திரையிட்டு மறைக்காமல் பூர்வக்குடி மக்களிடம் கலந்துரையாடும் அளவுக்கு அவர்களின் பொருளாதார வாய்ப்பினை ஏற்படுத்தி பெருமை சேர்த்திருப்பேன்.
* கல்விக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்
நீட் போன்ற அபாயகரமான தேர்வுகளை தடை செய்து இருப்பேன்.
* வருமான வரி என்கிற பெயரில் நடுத்தர
மக்களின் வாழ்வாதாரம் பல மடங்கு சுரண்டப்படுவதை தடுத்து இருப்பேன். எதற்கு
எடுத்தாலும் வரி என்கிற கேவலமான நிலையில் இருந்து அவர்களை மீட்டு
ஒவ்வொருவரின் வருமானத்தை இரட்டிப்பாக்க முழுமையாக துணை நின்று இருப்பேன்.
* கடவுளின் பெயரைச் சொல்லி கல்வி அறிவு
அளிக்காமலும் வேலையில்லா திண்டாட்டத்தை உண்டாக்கி தன் நிலத்தில் வாழும் மக்களை
வயிற்று பசிக்காக ஒவ்வொரு நிலமாக ஓடும் அவல நிலையை தடுத்து கல்வி வேலை வாய்ப்பினை
வழங்கி நாடோடி வாழ்க்கையில் இருந்து மீட்டு இருப்பேன்.
* பஞ்சம் பிழைப்பதற்காக கல்வியை விட்டுவிட்டு உறவுகளை விட்டுவிட்டு வட
மாநிலங்களில் இருந்து தென் மாநிலம் நோக்கி இளைஞர்கள் பெரியவர்கள் வேலை
வாய்ப்புக்காக படை எடுப்பதை தடுக்கும் விதமாக அனைத்து மாநிலங்களிலும் சமமான வளர்ச்சியை உருவாக்கி
இருப்பேன்..
* விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்பதை
உணர்ந்து வேளாண் உற்பத்தியை பல மடங்கு பெருக்குவதற்கு வழிவகை செய்து இருப்பேன்.
மேலும் விவசாய பெருங்குடி மக்களை தலைநகரில் அரை நிர்வாணமாய் போராடும் நிலைக்கு
தள்ளப்பட்டு இருக்க மாட்டேன்.
* கற்பு நெறி என்று வந்துவிட்டால் அதை
இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்பதை உணர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் யாராக
இருந்தாலும் உரிய நேரத்தில் விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருப்பேன்.
* நாட்டிற்கு வருமானம் தேடித் தருகிறேன்
என்கிற போலி முகத்தோடு மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு நாடு நாடாக சுற்றாமல்
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேலை வாய்ப்பினை பெருக்கி இருப்பேன்.
* நான் ஏழைத்தாயின் மகன் என்பதை
நிரூபிக்க தேவையற்ற ஆடம்பரங்களை அகற்றி வறுமையை ஒழிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கி
இருப்பேன்.
* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில
அரசின் நிர்வாகத்தில் தேவையில்லாமல் இடைத்தரகர்களை கொண்டு குறுக்கீடு செய்திருக்க மாட்டேன்.
* இந்தப் பதவி என்பது மக்களுக்கு சேவை
செய்வதற்கான ஒரு வாய்ப்பு எனக் கருதி அவர்களின் தேவையை உணர்ந்து ஆக்கப்பூர்வமான
பணிகளில் ஈடுபட்டிருப்பேன்.
* கொரோனா பெருந்தொற்று காலங்களில்
மக்களின் வாழ்வாதாரம் முடங்கி கொண்டிருக்கையில் சில நிறுவனங்கள் மட்டும் பெரும்
வருமானம் ஈட்டுவதை தடுத்து இருப்பேன்.
* நன்கொடை என்கிற பெயரில் தான் சார்ந்த
கட்சி மட்டும் பெரும் தொகை வசூல் செய்வதை தடுத்து இருப்பேன்.
* மக்களின் அடிப்படைத் தேவைகளான பெட்ரோல்
டீசல் சிலிண்டர் விலை உயர்வை ரூபாய் 55 க்கு மேல் உயராமல் கட்டுக்குள்
வைத்திருப்பேன்.
* ஜிஎஸ்டி என்கிற பெயரில் வரியை பெற்றுக் கொண்டு அந்தந்த மாநிலத்திற்கு
உரிய பங்கிடை முறையான காலங்களில் வழங்கி இருப்பேன். மேலும் அனைத்து பொருள்களுக்குமான ஜிஎஸ்டி என்பதை குறைந்தபட்சமாக நிலை
நிறுத்தி இருப்பேன்.
* அனைத்து மொழிகளுக்கும் உரிய அங்கீகாரம்
அளித்து அவற்றின் வளர்ச்சிக்கு துணை நின்று இருப்பேன்.
* மனிதரில் ஏற்றத்தாழ்வு என்பது
மிகப்பெரிய சனாதனம் என்பதை உணர்ந்து சனாதனம் எந்த வடிவிலும் உள் நுழையாமல் தடுத்து
நிறுத்தி இருப்பேன்.
* உணவு என்பது அவர்களின் உரிமை. ஆதலால் உணவு விஷயங்களில் தலையீடு இல்லாமலும் மக்களின்
ஆரோக்கியத்திற்கு எது தேவை என்பதை உணர்ந்து வழிகாட்டியாக செயல்பட்டு இருப்பேன்.
* மாநிலங்களின் சுயாட்சியில் குறுக்கீடு
செய்யாமல் மாநிலங்களின் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி என்பதை உணர்ந்து தேசிய
ஒற்றுமைக்கு வழிவகை செய்திருப்பேன்.
* அனைவருக்கும் இலவச கல்வியை உறுதி செய்து, உயர் பொறுப்புகளுக்கு எல்லோரையும் தகுதி உடையவர்களாக மாற்றியிருப்பேன்.
* கோயில்களை சிலர் மட்டுமே ஆக்கிரமித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதை
தடுத்து நிறுத்தி கோயில்களை பொதுவுடமை ஆக்கி எல்லோரும் விரும்பியபடி வழிபாடு செய்து கொள்வதற்கு துணை நின்று
இருப்பேன்.
* இல்லாத ஒன்றுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்யாமல் பள்ளிகளில்
மாணவர்களின் அறிவியல் வளர்ச்சி மேம்பட துணை நின்று இருப்பேன்.
* சிலைகளுக்கு 3000 கோடி செலவு செய்யாமல் அணைகளுக்கு பல கோடிகள் செலவு
செய்து நதிகளை இணைத்து மண்ணை வளமை அடையச் செய்திருப்பேன்.
* சாமியார்கள்
தனிமையில் தியானத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக காட்டை
அழிக்காமல் காட்டிற்குள் சென்று தியான மேற்கொள்ள வழிவகை செய்திருப்பேன். மேலும் ஆட்சி
அதிகாரத்தில் அவர்கள் தலையீடு இல்லாமலும் மேலும் வாக்களிக்கும் உரிமை இல்லாமலும் சட்டம் நிறைவேற்றி இருப்பேன். ஏனென்றால்
சாமியார்கள் முற்றும் துறந்தவர்கள்.
* நிறைவாக, மக்களை அறிவார்ந்தவர்களாக உருவாக்கிட ஒவ்வொரு வட்டாரத்திலும் மிக உயர்ந்த
நூலகத்தை அமைத்து அறிவு பசியினை போக்கி அறிவுச் சுடரை ஏற்றி இருப்பேன்.
இன்னும்
ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட அறிவார்ந்தவர்களையும் ஆற்றல்
மிக்கவர்களையும் ஆலோசனை குழுவாக உருவாக்கி நாடு, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கான
வாய்ப்பினை உண்டாக்கி இருப்பேன்.
அதிகாரம்
கைகளுக்கு கிடைத்தால் அதை ஆக்கபூர்வமான செயல்களுக்கு ஈடுபடுத்த வேண்டும் என்பதை
தெரிவித்து “வெல்லும் ஜனநாயகம்” என்பதை
நிலைநாட்டிட நாம் யாவரும் ஓரணியில் திரண்டு நிற்போம்.
சுதந்திரம்
சமத்துவம் சகோதரத்துவம் வெல்லட்டும்.
கற்பி ஒன்று சேர்
புரட்சி செய்.
மாற்றம் நம்மிடம் இருந்து
தொடங்கட்டும்
பேரன்பின் வழியில்
சோலச்சி
31.12.2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக