செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

எழுத்தாளர் சி. அன்னக்கொடி அவர்களின் வாரண்ட் தோப்புக்காரன்

 

    எழுத்தாளர் சி.அன்னக்கொடி அவர்களின்

        

    “வாரண்ட் தோப்புக்காரன்

 


  சிறுகதைகள் வாழ்க்கை துணைக்கு வரக்கூடியவை.  ஒரு நூலை நாம் வாசிக்கின்ற பொழுது நமக்குள் ஏதாவது ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்தும். அந்த அதிர்வலைகள் நம் வாழ்க்கை பயணத்தை புரட்டிப் போடும். அந்த நூலின் மொழி நடை நம்மை வசீகரப்படுத்தும். அந்த நூலில் வரக்கூடிய கதை மாந்தர்கள் நம்மோடு பேசுவார்கள். அந்த கதை மாந்தர்களை நம் வாழ்வில் ஏதோ ஒரு இடத்தில் சந்தித்து இருப்போம் அல்லது சந்திக்க கூடிய வாய்ப்பு ஏற்படும். கவிதை நூலாக இருந்தாலும் அல்லது சிறுகதைகள் நூலாக இருந்தாலும் நாவலாக இருந்தாலும்  அந்த நூல் நம்மோடு பேசும்படியாக இருக்க வேண்டும். அவ்வாறு பேசும்படியான நூலை உருவாக்குதல் ஓர் எழுத்தாளனின் ஆகச்சிறந்த படைப்பு ஆகும்.

    சமகாலத்தில் சிறுகதை உலகில் தொடர்ந்து பயணித்து வரக்கூடியவர் எழுத்தாளர் சி.அன்னக்கொடி அவர்கள். அவர் தனது கதைகளை தேடி ஊர் ஊராக சுற்றவில்லை. தனது ஊரில் வசிப்பவர்களை தம்மோடு பயணிப்பவர்களை கதை மாந்தர்களாக ஏற்றுக்கொண்டு நேர்த்தியாக சிறுகதைகளை படைப்பதில் வல்லவர்.

   அவருடைய வாரண்ட் தோப்புக்காரன் என்கிற சிறுகதை தொகுப்பு மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. நூலை வாசித்துவிட்டு நகர்ந்தால் கதை மாந்தர்கள் நம்மோடு வந்து கொண்டே இருக்கிறார்கள். நீண்ட நாட்கள் பழகிய அனுபவத்தோடு நம் அருகில் நம்மையறியாமல் வந்து பேசுகிறார்கள். கதைக்களத்தில் பின்னிப்பிணைந்து வாழ்ந்த வாழ்கின்ற ஒருவரால் மட்டுமே இவ்வாறான படைப்புகளை வழங்க முடியும். கற்பனைக்கு எட்டாத தூரத்திற்கு செல்லாமல் கற்பனையை மட்டுமே எழுதாமல் வாழ்க்கையை படம்பிடித்துக் காண்பிக்கிறார் எழுத்தாளர் சி.அன்னக்கொடி அவர்கள்.

       இந்நூல் மொத்தம் 22 கதைகளைக் கொண்டது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவிதமான வாழ்வியல் அனுபவத்தை நமக்கு வழங்குகிறது. முதல் கதை  செல்வராசு”. ஏதோ செல்வராசு என்பவரைப் பற்றிய கதையாக இருக்குமோ என்ற நினைப்போடுதான் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால், நெனப்புதான் பொழப்பக் கெடுத்துச்சாம் என்கிற பழமொழிக்கேற்ப செல்வராசு என்பது பேருந்தின் பெயர். இது பேருந்தைப் பற்றிய கதை. அந்தப் பேருந்துக்கும் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் அதில் நாள்தோறும் பயணித்த பொதுமக்களின் வாழ்வியலை மிக உருக்கமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்தக் கதையின் கதாநாயகன் நடத்துநர் ஒச்சு. ஒச்சுவுக்கும் பேருந்துக்கும் உள்ள உறவினையும் பயணம் செய்யும் பொதுமக்கள் ஒச்சுவை எந்த அளவுக்கு கொண்டாடினார்கள் என்பதையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். வாசிக்கும்போதே ஒச்சுவும் செல்வராசு பேருந்தும் கண்முன்னே வந்து போகிறார்கள். மக்களின் மொழிநடையை எவ்வித மெனக்கெடலும் இல்லாமல் இயல்பாகவே பதிவு செய்கிறார் எழுத்தாளர்.

        ஒரு கட்டத்தில் செல்வராசு பேருந்தை அதன் முதலாளி வேறொரு நபருக்கு இரவோடு இரவாக விற்றுவிடுகிறார். இது தெரியாமல் வழக்கம்போல் மறுநாள் அதிகாலையில் வேலைக்குச் செல்கிறார் ஒச்சு. இந்த வண்டியையும் வழித்தடத்தையும் வேறொரு நபருக்கு விற்றுவிட்டதால் உனக்கு இனிமேல் இங்கு வேலை இல்லை என்கிறார் மேனேஜர். இதைக் கேள்விப்பட்ட ஒச்சு மனம் உடைந்து போகிறார். இத்தனை வருசம் தாயாப்பிள்ளையா வாழ்ந்து வந்த வண்டியை விட்டு எப்படி வாழப் போறேனோ.... என்ற கவலையோடு வீட்டுக்கு வருகிறார் ஒச்சு. வீட்டில் ஒரே கூட்டம். “நிறைமாசக்காரியை விட்டுட்டு எங்கடா போன..? ஆம்பளைப் பிள்ளை பெத்துருக்கா.. சுகப்பிரசவம்தான் போய்ப்பாருஎன்கிறாள் ஒருத்தி.

    வேலை போச்சே என்கிற சோகத்தோடு வந்தவனுக்கு மகிழ்ச்சி திரும்புகிறது. அப்ப அங்கே கூடியிருந்த கூட்டம் ஒன் பிள்ளைக்கு என்னப் பேரு வைக்கப் போற எனக் கேட்டதற்கு அழுதுகொண்டே செல்வராசுஎன்கிறான் என்பதாக கதையை நிறைவு செய்து வாசிப்பாளரை இறுக கட்டிப்போட்டுவிடுகிறார் எழுத்தாளர்.

       எல்லோருக்குள்ளும் ஏதோ ஒருவித தாக்கம் இருக்கத்தான் செய்யும். அந்தத் தாக்கத்தை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்து ஆறுதலைத் தேடுவோம். அந்த வகையில் செல்வராசு என்கிற கதையை வாசிக்கின்றபோது நாம் பயணித்த நம்மால் மறக்கமுடியாத பேருந்து நினைவுகள் நம்முள் அசைபோடும் என்பதை மறுக்க முடியாது.

    மதிப்பனூர், மேட்டுப்பட்டி, நாகையாபுரம், பூசலப்புரம், அலட்டிப்பட்டி, கோட்டையூர், தைலாபுரம், மீனாட்சிபுரம், கொண்டையம்பட்டி,  காளப்பன்பட்டி, பெருங்காயம்நல்லூர், உசிலம்பட்டி, சுரைக்காய்ப்பட்டி, ஆயதர்மம் விலக்கு என ஊர்கள் பலவற்றுக்கும் செல்வராசு வண்டி மூலமாக நம்மை அழைத்துச் செல்லும் பாங்கு அருமையிலும் அருமை.

        ஏம்பா ஒச்சு.. வல்லரசை நான் கேட்டதாச் சொல்லு என்று ஒருவர் சொல்ல, அது யாருன்னு நம்ம ஒச்சு திரும்பிக்கேட்க, அவன்தாப்பா உங்க ஊரு எம்.எல்.. னு சொல்ல, எம்.எல். பதவி அவ்வளவு சீப்பால போச்சுனு நக்கலடிக்கிற விதம் மிகவும் ரசிக்க வைக்கிறது.

      நல்ல நாளிலே நாழி பெய்யாது. இந்தக் குருட்டு மோடத்துக்கு மழையா பேஞ்சுறப்போகுதுபோன்ற சொலவடைகள் நம்மை அசைபோட வைக்கின்றன. மொத்தத்தில் செல்வராசு உணர்வுகளைக் கடத்தி நம்மோடு உறவாட வைக்கிறது.

       

எழுத்தாளர் சி.அன்னக்கொடி

           நகைச் சுவையோடு எழுதுவதென்பது பலருக்கும் சாத்தியமில்லை. ஆனால், தனது கதைகளில் நகைச்சுவையை வற்றாத ஆறாக பாயவிட்டு வாசிப்பாளரை தன்வயப்படுத்துகிறார் எழுத்தாளர். அந்த வகையில் குழாய் டவுசருகதையை வாசித்துவிட்டு கலகலவென சிரித்து மகிழ்ந்தேன். இந்தக் கதையைக் குறும்படமாக எடுத்தால் மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெறும். திரைப்பட இயக்குநர்கள் இதுபோன்ற கதைகளை நூலாசிரியரின் அனுமதியோடு தங்களது திரைப்படங்களில் பயன்படுத்த முன்வரலாம்.

    குழார் டவுசரு கதையில் அய்யனாருதான் கதை நாயகன் என்றாலும் கதையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்துவது வெள்ளைம்மாள் வளர்க்கும் கழுதைதான். நெல்லை அடித்து அம்பாரத்தில் குவித்து வைத்திருக்கிறார் அய்யனாரு. வைக்கோல் உதறாமல் அப்படியே கிடக்கிறது. இரவு நேரம் என்பதால் ஆடு மாடு கழுதைகள் தின்றுவிடாமல் அங்கேயே தங்கி காவல் காக்கிறார். ஏதாவது வாயை வைத்தால் போதும் செமத்தியாக அடிஅடியென அடித்து நொறுக்கிவிடுவார். அந்தளவுக்கு கோபக்காரர். அவர் பொண்டாட்டியோ பலமடங்கு கோபக்காரி.

     அந்த ஆளு பொண்டாட்டி நாலு ஆம்பளைக்குச் சமம். அந்த ஆளாவது உலக்கையைத் தூக்குவாரு. அவளோ உரலையே தூக்குவா.. யாராவது வாயக்கொடுத்தா அம்புட்டுத்தான்.

    வாயில்லா ஜீவனை இப்படி போட்டு சாவுறளவுக்கு அடிச்சிருக்கானே. இவன் நல்லா சாவு சாவ மாட்டானு மொணங்கிக்கிட்டேதான் பலரும் போவாங்க.

      இப்ப ராத்திரி நேரம் அய்யானாரு நல்லா குறட்டைவிட்டு தூங்குறாரு. அந்த நேரம்பாத்து வெள்ளையம்மாளோட கழுதை வந்து அய்யானாரோட காலைக் கடிச்சு தரதரனு இழுத்துக்கிட்டுப் போகுது. அய்யனாரு மேல கழுதைக்கு எத்தனைநாள் கோபமோ தெரியவில்லை. வலியில் கத்துனா அசிங்கமா போயிருமோனு வலியைப் பொறுத்துக்கிட்டாலும் முடியல. வலி பொறுக்க முடியாம கத்துன அய்யானாரு வானத்தப் பாக்குறாரு. விண்மீனு எல்லாம் பளிச்சினு இருக்கவும்,  அதுக நம்மலப் பாத்துதான் நக்கல் பண்ணுதுகனு நாலஞ்சு கல்ல எடுத்து எறியுறாரு. அந்தக் கல்லுக பக்கத்து வீட்டு கூரையில பட்டு, கோழிக கத்தவும் வீட்டுக்காரங்க எந்திரிச்சு என்னமோ ஏதோனு ஒடியாராங்க.

    அய்யனார கழுத கடிச்சு இழுத்துக்கிட்டுப் போகுது. ஊரே ஓடிவந்து பாக்குது. வெள்ளைம்மாளப் பாத்ததும் கழுதை கடியை விட்டுருது. அய்யனாருக்கு அந்த வருசம் நல்ல விளைச்சலா இருந்தாலும் காலுல பட்ட காயத்துக்கும் விளைச்சலுக்கும் சரியாப் போச்சு. இப்படி கதை ஓடி... ரசிக்க வைக்கும். அதோடு நிற்காமல் காயத்தால் ஏற்பட்ட தழும்ப மறைக்கிறதுக்கு குழாய் டவுசர மாட்டிக்கிட்டு திண்ணையில உட்கார்ந்து இருக்க அய்யனார்கிட்ட வெள்ளையம்மா மகளோ.. சிய்யா... எங்க கழுதை இங்கிட்டு வந்துச்சானு கேட்க, அய்யனாருக்கு வந்துச்சே கோபம்.....

     பத்து வருசமாச் சீந்தாமக் கெடந்து மூணோட நாலா இருந்துட்டு போட்டுமுன்னு பத்தி வந்த கழுதை நீ வந்து பேசுறீயாக்கும்..

     நீ பொட்டிக்குள்ளேயே பொறந்து உன்னைய பொத்தி பொத்தி வளத்தாகளுக்கும் சீரழிஞ்சு செங்கச் சொமந்து ஊரெல்லாம் சுத்தி எம் பேரு முத்தினுநவந்த கழுதை நீ பேசுறீயாக்கும்... போன்ற சொலவடைகள் மண்ணின் வட்டார வழக்குகளை நிலை நிறுத்துகிறது.

      இந்தக் கதையப் படிச்சிட்டு நெனச்சுநெனச்சு பாக்குறேன்.. ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை இருக்கும்ங்கிறது சரியாத்தான் பொருந்துது.

     நூலின் தலைப்பு வாரண்ட் தோப்புக்காரன். இந்தக் கதை கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. சித்தப்பாவுக்கும் அண்ணன் மகனுக்குமான உறவு, கிராமத்து குலசாமி கோயில்களில் நடைபெறும் கறிக்கஞ்சி, காடு மலை என அனைத்தையும் கண்முன்னே காட்டுகிறது.

      அழகுவின் அப்பா குடிகாரன். அழகுவின் ஆத்தாளோ அவனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாமல் சித்தப்பாவுடன் மாடுமேய்க்க விடுகிறாள். அழகு படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறான்.

      ஏழு கழுதை வயசாச்சு இனிமே படிச்சு நிலாவுல போய் கால் வச்சுறப் போறீயாக்கும் என நக்கல் பண்ணுகிறார் சித்தப்பு. சித்தப்புவுக்கோ கன்னிமார்கோயிலில் தயாராகும் கறிக்கஞ்சி மீது தீராத ஆசை. அழகுக்கோ கல்வி மீது தீராத ஆசை. பள்ளிக்கூடத்திற்கு படிக்க வரச் சொல்லி வாத்தியார் பலமுறை அழைத்தும் அழகுவின் ஆத்தாள் அவனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப மறுக்கிறாள்.

      இனிமே படிச்சு கலெக்டர் வேலைக்கு போய் இந்த வீட்டை நட்டம நிறுத்துனது போதும். உன் அப்பன் வேற பாட்டிலும் கையுமா திரியுறான். இந்த லட்சணத்துல நீ பள்ளிக்கூடத்துக்கு போயிட்டேனா இந்த வாயில்லா ஜீவனை என்னடா செய்யறது என்று அழகுவின் ஆத்தா தட்டிக்கழித்தே வருகிறாள்.

      நாட்கள் இவ்வாறு செல்கிறது. படிப்பதற்காக அழகு ஒரு திட்டம் தீட்டுகிறான். ஒருநாள் மாடு மேய்க்கப்போனவன்  சாயந்தரம் வரும்போது அழுது அடம்பிடிக்கிறான். தேமித்தேமி அழுகிறான். அழகுவின் ஆத்தாளுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன ஏதுனு கேட்டாலும் அழகு ஏதும் சொல்லாமல் அழுகிறான்.

     ஒரு கட்டத்தில் எதுக்குடா அழுகுற சொல்லித்தொலைடா என்று அதட்டியவுன், ஏற்கனவே வாத்தியார் இவனிடம் சொல்லி வைத்திருந்ததை மெல்ல அவிழ்த்து விடுகிறான... “வாரண்ட் தோப்புக்காரன் துப்பாக்கியை வச்சுக்கிட்டு விரட்டிட்டான். கொஞ்சம் அவனை அடையாளம் பாக்குறதுக்கு திரும்பியிருந்தேன்னா என்னை சுட்டுத் தள்ளிருப்பான்னு அழகு சொன்னதக் கேட்டு ஓ..வென ஒப்பாரி வைக்கிறாள் அழகுவின் ஆத்தாள்.

    ஒப்பாரி கேட்டு வந்த அக்கம்பக்கத்துக்காரர்கள், வாரண்டுக்காரன் அங்கிட்டு எங்கிட்டாவது கொலை செஞ்சுட்டு வாரதும் இல்லாம இங்கே யாராவது பாத்தாங்கன்னா காமிச்சுக் கொடுத்துருவாங்கனு பாத்த இடத்துலயே கொன்னுருவானு ஊருல உள்ளவங்க முகத்துல எப்பவும் பயம்.

     ஆத்தாளுக்கோ மகன் மேல பாசம். உசுரு போனா வருமா. மறுநாள் காலையில அழகோட ஆத்தா போட்டபோட்டுல அவனோட அப்பா மாடுகள பத்திக்கிட்டு மேய்க்கப் போனாரு. அழகோ பள்ளிக்கூடத்துக்குப் போறான். படிப்புக்கு கைகொடுத்த வாரண்ட் தோப்புக்காரனை நினைத்து சிரித்துக் கொள்வான் அழகு. ஆசிரியரின் அறிவுக்கூர்மையால் அழகு கல்வியின் பயனை அனுபவிக்கிறான் என்பதை வாரண்ட் தோப்புக்காரன் மூலம் மிக நேர்த்தியாக கதையை நகர்த்தியிருக்கிறார் எழுத்தாளர்.

        கும்மப் பனை, இரத்தத்திலகம், மும்தாஜ், பேய்த்தாத்தா, கள்ளுமுட்டி, காத்தம்மா, கருப்புச் சோறு, தண்டட்டிக்காரி, கடுக்கண், குஞ்சு கொத்துச்சு, ஏர் மாடு, விக்குனதுமில்லை விரைச்சதுமில்லை, கொளம்பு கொதிக்குது, மாடுகளின் கண்ணீர், பவிசுக்காரி, வண்ணக்கிளி, எஸ், ஆட்டுத்தலை, கட்டையன் கூட்டம் இப்படி ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொருவிதமான வாழ்வியலை நமக்குச் சொல்லித் தருகிறது.

 கட்டையன் கூட்டம் கதையைப் படித்துவிட்டு இப்படியெல்லாம் மனிதர்களால் வாழ முடியுமா..? என்று மனசுக்குள் தோன்றியது. மாடுகளின் கண்ணீரும் அதே உணர்வைத் தந்தது. வாழ்வின் வலிகளை மக்களின் உன்னதமான வாழ்வியலை அச்சுப் பிசகாமல் வட்டார மொழியோடு வாரிவழங்கி நம் நெஞ்சுக்கு நெருக்கமாகிறார் எழுத்தாளர் சி.அன்னக்கொடி.

     ஒவ்வொரு கதைகளையும் வாசித்துவிட்டு நீண்டதொரு பக்கங்கள் கொண்ட விமர்சன நூலையே எழுதிவிடலாம். ஒவ்வொரு கதையிலும் வரும் கதைமாந்தர்கள், இடத்தின் பெயர், சொலவடைகள் என அனைத்தையும் வாசிக்கின்றபொழுது விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் சுரைக்காய்ப்பட்டி மக்களோடு மக்களாக பயணிக்கின்ற புதியதொரு அனுபவம் கிடைக்கிறது. இவரது எழுத்துகளில் திராவிட சித்தாந்தம் மேலோங்குகிறது. எழுதுவதற்கு தயக்கம் காட்டாமல் நினைத்ததை எழுதி முடித்திருக்கிறார்.

     திராவிட அரசியலையும் தன் நெஞ்சுக்கு இனிதானவர்களையும் கதையாக உருவாக்கி அழகு சேர்த்திருக்கும் இந்த வாரண்ட் தோப்புக்காரன் என்னும் 200 பக்கம் கொண்ட இந்நூலை ஆதிரா பதிப்பகம் வெளியீடு செய்திருக்கிறது. தமிழுக்கு கிடைத்த அருட்கொடை என்றுதான் சொல்ல வேண்டும். நூலை வாசித்தவர்கள் ஒருநாளும் இவரது எழுத்துகளை விட்டு விலகியதில்லை. குறை காண முடியாத அளவுக்கு நிறைவான படைப்பினை வழங்கி தமிழின் மாண்புக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டி மகிழும் எழுத்தாளர் சி.அன்னக்கொடி அவர்களை மனசார பாராட்டி மகிழ்கின்றேன்.

   முதல் பதிப்பு: 2023

   நூலின் விலை : ரூபாய் 190/-

   நூலினை வாங்கி வாசிக்க

   நூலாசிரியர் அலைபேசி எண்: 8072198705

         பேரன்பின் வாழ்த்துகளுடன்

                        சோலச்சி

கருத்துகள் இல்லை: