திங்கள், 4 மார்ச், 2024

சோலச்சியின் முட்டிக்குறிச்சி நாவல் அறிமுகம்- கவிஞர் மு.கீதா

 

எழுத்தாளர் சோலச்சி எழுதிய "முட்டிக்குறிச்சிநாவல்

 


 முட்டிக்குறிச்சி நாவல் மனதில் படிமமான நாவலாக, நான் வாசித்த நாவல்களில் சிறப்பான நாவலாகக் கருதுகிறேன் .

 

முட்டிக்குறிச்சி என்பது ஒரு பெயர் காரணம். அதிர்ச்சி அளிக்கக் கூடிய, ஒரு சமூக சீர்கேட்டின் அடையாளச் சின்னம்.

 

 இந்த நாவல் படிக்கும் பொழுது நம்மையும் இயற்கையின் சூழலில் அமரவைத்து ரசிக்க வைக்கின்றது.

 

   தீத்தன் பாலாயியின் மகன் அழகப்பனும் மருமகள் பொன்னழகியும் வயல்நாட்டிலிருந்து இடையாத்தூருக்கு அடர்ந்த காட்டின் வழியாக செல்வதாக நாவல் துவங்குகிறது.

   அப்படிச் செல்லும் போது இருவருக்குமிடையேயான பேரன்பு, காதல், தாம்பத்யம், பொன்னழகியின் மருத்துவ அறிவு,நமக்கு முந்தைய மூன்றாவது தலைமுறை காலத்தில் நிகழும் கதை.

 வழியெங்கும் பறவைகளை, மரங்களை, மூலிகைகளை கதை மாந்தர்கள் மூலம் ஆசிரியர் நமக்கு கடத்துகிறார்.

  சங்க இலக்கியம் கூறும் ஒல்லையூர் பற்றி, தொரட்டிப்பழ வாசனை பற்றி படிக்கும் போது நமக்கும் எச்சில் ஊறவைக்கும் எழுத்து.

  காளைக்கோழி மலை என்ற தேன் மலையின் தேனிற்காக படை திரட்டி வந்த தனஞ்செயவேலனை வெற்றி கொண்ட கார்வேந்தன் படைகள் என வரலாற்று செய்திகளையும் ஆங்காங்கே கூறிச் செல்லும் பாங்கு சிறப்பு.

   ஒடுக்கப்பட்ட மனிதர்களிடையே காணப்படும் மனித நேயம், அவர்களை தீண்டத்தகாதவர்களாக புறந்தள்ளிய கொடுமை. அவர்களது வாழ்வியலை நமக்கு அணுக்கமாக கூறும் நாவல்.

   பசுவின் பிரசவ வேதனை கண்டு தன் தாய் வலி உணரும் அழகப்பன்.

சோலச்சி


   தீராத நோயையும் தீர்த்து வைக்கும் பிச்சாயி... ஆதித் தமிழர் மருத்துவத்தில் சிறந்த அறிவுடையோராக வாழ்ந்திருந்ததை உணர வைக்கிறார்.

  பிழைப்பு தேடி மேகாட்டு பக்கமிருந்து வந்தவர்கள் அங்கு வாழ்ந்த பூர்வீக மக்களை அடிமைப்படுத்திய வஞ்சகம் ஆரிய திராவிட பகையைக் கூறும். மேலக்குடியிருப்பு மக்களுக்கும் கீழக்குடியிருப்பு மக்களுக்கும் இடையே நடக்கும் வாழ்தலுக்கான போராட்டத்தை உணர்த்துகிறது.

   ஊரிலுள்ள பெண்கள் மாதவிடாய் நாட்களில் ஊருக்கு வெளியே முட்டிக்குறிச்சி என்ற சுகாதாரமற்ற குடிசையில் தங்க வேண்டும். அப்போது ஆண்கள் சமைத்து அதை( சிறிய மண்சட்டியில்) முட்டியில் வைத்து சிறுமிகளிடம் கொடுத்து விடுவார்கள். அந்த சோற்றுக்கு முட்டிச்சோறு என்று பெயர். பெண்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை பற்றி பொன்னழகி அங்குள்ள பெண்களிடம் உரையாடுகிறாள். இந்த கொடுமையை ஒழித்தால்தான் பெண்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்று எண்ணிய பொன்னழகி முட்டிக்குறிச்சி பிரச்சினையை எப்படி மாற்றினாள் என்பதை நாவலைப் படிப்பதன் மூலம் உணரலாம்.

 பெண்களை இழிவுப்படுத்துகின்ற கொடுமைக்கு பொன்னழகி எப்படி முடிவுக்கட்டினாள்.. அவளால் முட்டிக்குறிச்சி எப்படி மாறுகிறது என்பதை உணர்த்தும் நாவலாக "முட்டிக்குறிச்சி " உள்ளது.

 

ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 ஆண்டு பெற்றுள்ளது..

  எழுத்தாளர் சோலச்சியின் முதல் நாவல் முத்தான நாவலாக அமைந்துள்ளது.மனம் நிறைந்த வாழ்த்துகள்.

விலை ₹320

எழுத்து பிரசுரம் சென்னை - +91 89250 61999

எழுத்தாளர் சோலச்சி - +91 9788210863

            

கவிஞர் மு.கீதா

   வாழ்த்துகளுடன்

      கவிஞர் மு.கீதா

ஒருங்கிணைப்பாளர்,

வீதி கலை இலக்கியக்களம்

புதுக்கோட்டை

 

1 கருத்து:

சோலச்சி சொன்னது…

எழுத்தாளர் கவிஞர் மு.கீதா அம்மா அவர்களுக்கு பேரன்பு நிறைந்த நன்றி