ஞாயிறு, 2 மே, 2021

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு - 2மே 2021


முக்கடல் பொங்கி முத்தமிட்டது
இக்கூடல் இனிதென்று அறைகூவல் விடுக்கப்பட்டது

அடடா... சூரியன் எழுந்து நின்றது
அத்தனை பொய்யையும் அடித்துக் கொன்றது

சனி தொலைந்து ஞாயிறு பிறந்தது
இனி எல்லாம் எழுஞாயிறு என்றாகப்போகுது

முப்பால் வேந்தர் குமரியில் சிரிக்கிறார்
முத்தமிழறிஞரோ மெரினாவில் ரசிக்கிறார்

அடடா... இருண்ட பூமி ஒளிருது ஒளிருது பாரீர்
இந்த அதிசயம் நிகழ இத்தனை காலமா கேளிர்

ரத யாத்திரை சுக்கு நூறானது
வேல் யாத்திரை வீணாய் போனது
மதங்களைக் கடந்த பூமி ஒன்றானது
மனசாட்சியே எங்கள் சாமி என்றானது

பயிரை வளர்த்தவன் தலை நிமிர்ந்தான்
மயிரை வளர்த்தவன் தலை கவிழ்ந்தான்

உதிராத இலை என்று எதுவும் உண்டோ
உலகில் அழுகாத பழமென்று இருப்பதுண்டோ

உள்ளடி வேலைகள் இங்கே நடக்காது
உள்ளபடி உலகம் உன்னை ஏற்காது
நல்லபடி வாழ கற்றுக்கொள்
நாளைய தலைமுறை தூற்றும் ஏற்றுக்கொள்

கிழக்கே சூரியன் உதித்தது
மேற்கு வங்கமும் ஜெயித்தது
மலையாள கடற்கரை வாழ்த்து பாடுது
மண்ணில் இந்து மத சாதி பித்து 
தொலைந்து போக ஓடுது

கைகள் உயர்த்தி கொண்டாடு
உதயசூரியன் மலர்ந்தது புதிய தெம்போடு.....
               - சோலச்சி



வெள்ளி, 9 ஏப்ரல், 2021

புரட்சியின் அடையாளம் பாரதி - சோலச்சி

இந்திய எல்லை குமரியில் தொடக்கம்
ஏன் தோழா- இன்னும்
முடக்கம்..!

மத அரசியலை உடைத்து நொறுக்கியவர்
அதற்காகவே
மீசை முறுக்கியவர்...


சேரியை தட்டு
என்றவர் மத்தியில்
பூணூல் போட்டு
பறையடித்தவர்...

அடுப்பங்கரையில் பூட்டியா கிடப்பது
அறியாமையை
எப்போது எரிப்பது...?

வீட்டுக்குள்ளே ஒதுங்கியது போதும்
வெளியில் வா
எல்லோர் பார்வையும்
உன் மீது மோதும்...

அறைகூவல் விடுத்து அழைத்தார்
கவிதை எழுதி
கடினமாய் உழைத்தார்....

பள்ளு பறையனை
கிள்ளுக்கீரையாக
எள்ளி நகையாடயிலே
தோளில் கைபோட்டு
தேர் போல நடந்தார்
பட்டதுயர் கொஞ்சமல்ல
யாவும் கடந்தார்...

குடும்பம் நாளும்
வறுமையில் கிடந்தது
வடித்த தமிழோ
வலிமையாய் இருந்தது....

அஞ்சுவதில்லை
கெஞ்சுவதில்லை
அதனால் இன்றும்
அச்சமில்லை.....!

பெண்ணுக்கு நீதி வைத்தவன்
பேய் மனிதரை
சொல்லால் தைத்தவன்...

காக்கை குருவியையும்
மதித்தவன்
ஒடுக்க நினைப்பவனை
காலில் போட்டு
மிதித்தவன்....

முண்டாசு கவிஞன
உலகு அறியும்
அவன் மூச்சுக்காற்று
எல்லை விரியும்.....

பெற்ற குழந்தைகளை
பட்டினி போட்டாலும்
பைந்தமிழின் பசி அமர்த்தியவர்....

இந்திய தாய் மீது
பற்று கொண்டவர்
பலமொழியும்
கற்றுத் தேர்ந்தவர்...

இப்போதிருந்திருந்தால்
ஆங்கிலேயருக்கும்
பிடித்திருக்கும்
அவர் கவிதை
ஆள்வோர் நெற்றியில்
அடித்திருக்கும்...

பாரதி
கட்டி எழுப்ப வேண்டிய
காவியம்
அவன் காணக் கிடைக்காத
ஓவியம்....

கருப்பு கோட்டணிந்து
கருப்பாடுகளை களைந்தவன்
வான மீன்களை
வீதியில் உலா விட்டு மகிழ்ந்தவன்...

பாரதி
புரட்சியின் அடையாளம்
புதுக்கவிதையின் விளைநிலம்....!!!
                         - சோலச்சி

செவ்வாய், 23 மார்ச், 2021

மண்ணில் சிறந்தது - சோலச்சி

மனிதனும் மண்ணும்
இரண்டற கலந்தது என்பேன் மனிதனைப் பிரிந்து மண்ணும்
மண்ணைப் பிரிந்து மனிதனும்
வாழ்வது எளிதன்றோ..?

மனித நாகரிகத்தின் முதன்மையானது சக்கரம்
வாழ்க்கைச் சக்கரம் தொடர்வதில்
முதன்மையானது பானை...


பானை கண்டறியப்பட்ட பிறகுதான்
மனிதன் நிலைத்து வாழ்ந்தான்
நிலைத்து வாழ்தலின் தொடர்ச்சியால்
உழைத்து வாழ கற்றுக்கொண்டான்
உழைப்பின் வளர்ச்சியால்
உழவை கற்றுக்கொண்டான்....

பானையை சிறியதாய் செய்து
சோத்துப்பானை ஆக்கிக் கொண்டான்

கொஞ்சம் பெரியதாய் செய்து
தண்ணீர் பானை ஆக்கிக்கொண்டான்

மேலும் பெரியதாய் செய்து
குதிராக்கிக் கொண்டான்....

மனிதனின் வளர்ச்சியில்
பானையின் பங்கு அளப்பரியது

பானையில் சமையல் கெட்டுப் போகாது
மனித வளர்ச்சி என்பது
பானையை தொட்டே போவது....

பழைய கஞ்சியானாலும்
சோத்துப்பானைக் கஞ்சி சுகமானது

மனிதனின் தொடக்கத்தில் பனிக்குடம்
மரணத்தின் இறுதியில் பானைக்கடம்....

பகைவரையும் குளிர்விக்கும் பானை
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கட்டும் பானை....

மண்ணில் சிறந்தது களிமண்
மற்ற மண்ணில் தானியங்கள் பயிராகும்

களிமண்ணில் மட்டுமே பானைகள் உருவாகும்...

பானை இரத்தத்தோடு கலந்தது
இரத்தத்திற்கு பானையே உகந்தது

அதனால்தான்
களிமண் என்றே திட்டுகிறோம்

பானை மனிதனின் அடையாளம்
கீழடியில் கண்டதும் பானை
கீழே விழாமல் காப்பதும் பானை...

உரக்கச் சொல்லுங்கள் பானை பாராளும்
பானையால் வாழ்வு நீளும்...
                           

                                 - சோலச்சி

சனி, 27 பிப்ரவரி, 2021

எழடா தோழா - சோலச்சி

ஏமாற்று வேளைகளில் ஈடுபடும்
எத்தர்களை இன்னுமா அறியவில்லை

பொய்யர்களின் பசப்புக்கு
ஏமாந்த நிகழ்வுகளை
இன்னுமா உணரவில்லை

குற்றவாளிகளுக்கு கோயில் கட்டி
கொண்டாடும் கூட்டம் உண்டு காணீர்
தன்குறை மறந்து தம்பட்டம் அடிப்போரை
தரையில் நசுக்கிட வாரீர்

நாவறண்டு தெருவெங்கும்
நடை தளர்ந்தும் போராடி
பெற்ற கொடுமைகள் மறையவில்லை

கொட்டடியில் கொசு குருதி குடிக்க
குமுறி எழுந்த கோபம் குறையவில்லை 

நனைகின்ற ஆடுகள் நனைந்தே திரிய
அழுகுரல் ஒணாய்கள் இருப்பதையும் உறிய
திட்டங்கள் நாளும் தீட்டுதே தோழா
திசை மாறி போகாது திரும்பி வாடா
கண்ட போர்க்களங்கள் கொஞ்சமா
திரண்ட நம்படை இனி அஞ்சுமா
வியாழனும் நடுங்கி நகரணும் - இனி
விண்கதிர் நமக்காக ஒளிரணும்

ஆளுக்கொரு பாதை ஆள்வோருக்கு சுகம்
அண்டவிடலாமா நம் சுடர்மிகு தேகம்

நீலிக்கண்ணீரில் சங்கமித்துவிடாதே
போலி முகங்களை தங்க வைத்துவிடாதே

நானும் நாற்று நட்டேன் என்பான்
வேம்பும் சுவைக்க இனிக்குது என்பான்

அய்யோ பயிர்கள் அழுகுதே என்பான்
அருகில் நின்று ஆறுதலும் சொல்வான்
நானும் உன் சாதி என்றே நசுக்கிச் சொல்வான்
நால்வர்ணத்தை நன்றாய் தூக்கிச் சுமப்பான்

ஏமாளியாக இனியும் இருக்காதே
எடு உன் ஆயுதம் 
களம் காண மறக்காதே

இழந்தது போதும் எழடா தோழா
இன்னுமா உறக்கம் எரிதழல் கொண்டு வாடா

விளைந்தது புரட்சி அடக்குவோர் வீழ்வது உறுதி...!!!
               - சோலச்சி

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும் நூல் குறித்து பிரபு பாரதி விருத்தாச்சலம்


நெஞ்சம் நிறைந்த நன்றி

கவிஞர் , எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்ட புதுக்கோட்டை.சோலச்சி அவர்கள் எழுதிய "கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்" சிறுகதை தொகுப்பிலிருந்து குருவிக்காடு என்கிற சிறுகதையை படித்தேன்...
 படித்து முடித்த போது ஒரு எதார்த்த வலிகளை நம் நெஞ்சுக்குள் இறக்கிய ஒரு திரைப்படம் பார்த்த நிலை எனக்குள் ஏற்பட்டது.

 அன்றாடம் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியில் அறிந்த போராட்ட செய்தி என்றாலும் கூட....

 மண்ணின் வளத்தை, விவசாயத்தை பாதுகாக்கப் போராடும் டெல்டா பகுதி மக்களின் வலி கலந்த போராட்ட குணம், சாவுக்கு அஞ்சாத வீரம், மண்ணுக்காக விவசாயிகள், பொதுமக்கள் ஒற்றுமையாக ஒன்றுகூடி முடிவெடுத்தல், இயற்கை வர்ணப்பில் அப்பகுதி கிராமத்தின் பசுமை அழகு உள்ளிட்ட காட்சியமைப்பு விதம் என்றே சொல்லத் தோணுது... 

இக்கதையை நாவலாக எழுதியிருந்தால் இன்னும் தஞ்சை டெல்டா மாவட்ட விவசாயிகள், அப்பகுதி உழைக்கும் மக்களின் வாழ்வியல் இன்ப, துன்பங்களை கூடுதலாக அறிந்து கொள்கிற வாய்ப்பு எங்களுக்கு (வாசிப்பவர்களுக்கு) கிடைத்திருக்கும். இக்கதையின் முடிவில் நானும் ரயில் ஏற கிளம்பி விட்டேன்.... ஆனால், என் மனமும் மயான அமைதியாகிவிட்டது.

மிக.. மிக... சிறப்பான சிறிய படம் (சிறுகதை). மென்மேலும் உங்களுடைய இலக்கிய பணி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..!

      T.பிரபுபாரதி - விருத்தாசலம்.
                      83440 50743
                     86100 30889

நூலாசிரியர் சோலச்சி
 9788210863

திங்கள், 1 பிப்ரவரி, 2021

கதையல்ல - சோலச்சி


          கதையல்ல...

    வழக்கம் போல் இரவு உறங்கச் சென்றேன். உறக்கத்தில் விழித்த என் குழந்தைகள் எப்போதும் போல் ஆளுக்கொரு பக்கமாய் என்மீது கால்களை தூக்கிப் போட்டுக்கொண்டு என் முகத்தைப் பார்த்தனர். அந்தப் பார்வையின் அர்த்தம் புரியாதவனா நான். கதை கேட்காமல் ஒருநாளும் உறங்கியதில்லை என்பதை நான் அறிவேன். சில நேரங்களில் நான் உறங்க நள்ளிரவு ஆகிவிடும். கேட்காமல் விட்டுப் போன கதைகளை மறக்காமல் சேர்த்து மறுநாள் இரண்டு கதைகளாக சொல்ல வேண்டும். ஆனால் எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் உண்டு.  நான் இரண்டு கதைகள் சொன்னால் அவர்கள் ஆளுக்கொரு கதை சொல்ல வேண்டும். அவர்கள் சொல்லும் பெரும்பாலான கதைகள் நான் சொன்ன கதைகளாகவே இருக்கும்.  அதில் ஒரு மாற்றம் என்னவென்றால் பெயர்கள் மட்டுமே மாறி இருக்கும். யானை கதை சொன்னால் அவர்கள் பூனை என்று பெயர் மாற்றி சொல்லுவார்கள். நான் கதை சொல்லத் தொடங்கினேன்.


   ''ஒரு பெரிய காடு இருந்துச்சாம். அந்தக் காட்டுல பெரிய யானை இருந்துச்சாம். அது தலையதலைய ஆட்டி நடந்து போகும்போது குட்டி யானை ஒன்னு வந்துச்சாம். அது பின்னாடியே இன்னொரு குட்டி யானை வந்துச்சாம்.....'' இப்படி ஆரம்பித்தேன். இப்படியான கதைகளே அவர்களுக்குப் பிடிக்கும்.  எனக்கு என் அப்பா பத்தாம்வகுப்பு படிக்கும்வரை கதை சொன்னார். ஆனால் அவருக்காக நான் ஒரு கதை கூட சொன்னதில்லை. ஆனால் என் குழந்தைகள் எனக்காக நிறையவே சொல்லியிருக்கிறார்கள்.

   மூத்தவள் தன்யா நான்காம் வகுப்பு படிக்கிறாள். குட்டி குட்டி கதைகளை எழுதி பெட்டி நிறைய வைத்திருக்கிறாள். அந்தக் கதைகளில் சொற்கள் குறைவாக இருக்கும்.  அனைத்தும் படக்கதைகளாகவே இருக்கும். படங்களில் காடுகள் நிறைந்து இருக்கும்.  பறவைகளும் விலங்குகளும் அவளது கதைகளில் மகிழ்ச்சியோடு வாழ்ந்தன. வீட்டைச் சுற்றிலும் பறவைகளுக்காவே நிறைய மரங்களை நட்டு வளர்த்து வந்தாள். அவை அவளை விட பலமடங்கு பெரிதாக இருக்கிறது.  விலங்குகள் வாழ்வதற்கான காடுகளை வளர்க்க முடியாவிட்டாலும் பறவைகளாவது வந்து தங்குகிறதே என்று பேரானந்தம் கொள்வாள். 

   இளையவள் ஓவியா இரண்டாம்வகுப்பு படிக்கிறாள். அவளால் கதைகளை எழுத முடியாது என்றாலும் பொம்மைகளை கையில் வைத்துக்கொண்டு கதை சொல்வதில் கெட்டிக்காரி. அவள் கதை சொல்லத் தொடங்கிவிட்டால் ஒவ்வொரு முறையும் " அடடா அழகுடா.... ரொம்ப அழகுடா... ம் அப்பறம்... சூப்பர்.... சூப்பர் '' என்று இடையிடையே சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.  அது அவள் கதைக்கான அங்கீகாரமாகவே கருதுகிறாள். பெரியவர்களே பாராட்டுக்கு ஏங்கும்போது குழந்தை எதிர்பார்ப்பதில் தவறில்லையே. கதை சொல்லி முடித்ததும் எனது பாராட்டுக்கு பரிசாக எனது கன்னங்களில் முத்தமிட மறந்ததே இல்லை. ஆனால் மூத்தவளுக்கு கதையிடையே "ம்.... ம்....'' உச்சரித்தால் போதும்.  தடையில்லாமல் தனது கதையை சொல்லிக்கொண்டே போவாள். காடுகளையும் யானையையும் பற்றிய எனது கதையை சொல்லி முடிப்பதற்குள் இருவருமே உறங்கிவிட்டனர். ஏனென்றால் உறக்கத்தில் விழித்து கதை கேட்டால் நீண்ட நேரம் விழித்திருக்க வாய்ப்பேது. 

    பகலில் நடந்த நிகழ்வுகளை அசை போட்டேன். சின்னத்தம்பி அண்ணன் என்னிடம் பந்தயம் கட்டியது நினைவுக்கு வந்தது. 


    ''இல்ல தம்பி... வந்தாலும் வரலாம் என்றார். மழையே ஒழுங்கா வராத நம்ம ஊர்ல கஜா புயல் எங்கண்ணே வரப்போகுது. புதுக்கோட்டைனாலே வறட்சி மாவட்டம்னு தானே பேரு'' என்றேன். ''அப்படினா ஐநூறு ரூபாய் பந்தயம்'' என்றார். நான் சிரித்துக்கொண்டே சம்மதம் தெரிவித்தேன். இரவு உறக்கத்திலும் அதை நினைத்து சிரித்துக் கொண்டேன். மணி பன்னிரண்டு முடிந்து அதிகாலை தொடக்கமாயிருந்தது. நினைவுகளை மறந்தவனாய் கண்களை மூடி உறங்க தொடங்கினேன். உறக்கம் என் சொர்க்க வாசலுக்குள் நுழைந்து என்னை ஏந்திக் கொண்டது. 

    படபடவென இறக்கைகள் அடித்துக்கொள்ளும் சத்தமும் கறுக் கறுக் என எதையோ கடிக்கும் சத்தமும் கேட்டது. வீட்டோரத்தில் இருக்கும் கொய்யா மரத்திலிருந்து அந்த சத்தம் வருவதை உணர்ந்தேன். வீட்டின் தெற்குப்பக்கமாகத்தான் தோட்டம் இருக்கிறது.  தென்பக்க சன்னலை மெதுவாக திறந்தேன். நிலவொளியில் மரங்கள்  பளிச்சென தெரிந்தன. 

    ''அப்பா.... வௌவால வெரட்டாதீக. அது தின்னுட்டுப் போவட்டும். அதுவும்தான் என்னோட ப்ரண்டு'' மூத்தவள் தன்யா தூக்கத்திலும் கண்களை விழிக்காமல் என்னிடம் சொன்னாள்.  அவள் உறக்கத்திலும் தோட்டத்தின் நினைப்போடுதான் இருக்கிறாள்.  ''ச்சு....ச்சு...'' உச்சுக்கொட்டி அவளை உறங்க வைத்தேன். 

   இரண்டு கனிதின்னும் வௌவால்கள் கொய்யா மரத்தின் கிளையில் தலைகீழாய் தொங்கியவாறு தனது இறக்கைகளை அடித்துக்கொண்டு கனியை உண்டு மகிழ்ந்தன. அவை உண்ண உண்ண வயிற்றின் மேல்நோக்கிச் சென்றது. பலநேரங்களில் வௌவால்கள் உண்ணுவதைப் பார்த்திருந்தாலும் அன்று ஏதோ புதிதாக பார்ப்பதுபோல் தோன்றியது.  

   கொய்யா காய்களையும் மாங்காய்களையும் நான் ஒருநாள் கூட பறித்தது கிடையாது. ஒருமுறை மாமரத்தில் மாங்காய் பறிப்பதற்காக ஏறுவதற்கு தயாராகினேன்.

     ''அப்பா... கீழ எறங்குங்க. அது என்னோட ப்ரண்டு. நீங்க ஏறுனா அதுக்கு வலிக்கும்ல''

   ''அப்பறம் யாரும்மா பறிக்கிறது''

   '' நான்தான் பறிப்பேன். அது என்னய ஒன்னும் சொல்லாது''

      தன்யாவின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட நான் அன்றுமுதல் மரத்தில் ஏறுவதே இல்லை.  அனைத்து மரங்களிலும் அவள்மட்டுமே ஏறுவாள். கறிவேப்பிலை வேண்டும் என்றாலும் அவளிடம்தான் கேட்பேன். அவள்தான் ஏறி ஒடித்துக் கொடுப்பாள். ஒடித்த இடம் மரத்திற்கு வலிக்கக் கூடாது என்பதற்காக அந்த இடத்தில் முத்தம் கொடுத்துக்கொண்டே மன்னிச்சுக்க.... மன்னிச்சுக்க என்பாள். என் மகளின் இளகிய குணத்தையும் மரங்கள் பறவைகள் மீது கொண்ட பாசத்தையும் எண்ணி மகிழ்ந்து போவேன். 

   எங்கள் ஊரில் மொத்தமே பதினைந்து வீடுகள்தான் இருக்கிறது.  அதில் எங்கள் வீடு மட்டுமே எப்போதும் பசுமையாக இருக்கும். பக்கத்தில் இருக்கும் அடிகுழாயிலிருந்து குடத்தில் தண்ணீர் கொண்டு வந்துதான் மரங்களுக்கு ஊற்றுவது. என் குழந்தைகளுக்கும் மிகச்சிறிய குடங்களை வாங்கிக் கொடுத்திருந்தேன். அதில் தண்ணீர் கொண்டுவந்து மரங்களுக்கு ஊற்றுவார்கள். 

   ''ஏய்... விடுப்பா. இல்ல... டீச்சர்கிட்ட சொல்லிருவேன். சட்டைய விடு... விடு....'' வாய் உளறிக் கொண்டு இருந்தாள் ஓவியா. வகுப்பில் நடந்தது ஏதோ நினைவுக்கு வர அவள் அவ்வாறு உளறிக்கொண்டிருந்தாள். ''யாருடா அது... விடுறியா அடிப்போடவா'' நான் சத்தமிட்டதும் ''அப்பா.. என்கிட்ட படுப்பா...'' தூங்கிக்கொண்டே பேசுகிறாள்.

   மெதுவாக சன்னலை சாத்த முயற்சித்தேன். ஆனாலும் டப்பென சத்தம் கேட்டு வௌவால்கள் பறந்தன. அவைகள் பறக்கும் சத்தம் கேட்டு மரத்தில் இருந்த பறவைகளும் பறந்தன. பறவைகள் பறக்கும்போது எழுந்த காற்றில் மரங்கள் அசைந்து பெருங்காற்றை உருவாக்குன. அந்தப் பெருங்காற்று சன்னலில் மோதி திரும்பிச் சென்றது.

   மனிதர்களுக்கு பெயர் வைப்பது போல் மரங்களுக்கும் பெயர் வைத்து அழகு பார்த்தாள் தன்யா. அதனால்தான் மரங்களை தன் நண்பர்களாகவே பாவித்தாள். அவள் மரங்களோடும் பறவைகளோடும் பேசும்போதெல்லாம் எனக்குள்ளும் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும். ''அப்பா எதுக்குத் தெரியுமா காய்களை கொஞ்சமா புடுங்குறது. பாவந்தானே பறவையெல்லாம். அதுகளுக்கு தங்குறதுக்கு ஒழுங்கான வீடுகளே இல்ல. சாப்பாடும் இல்ல. நம்ம தோட்டத்துல இருக்கதால அதுக வந்து வயிறு முட்ட சாப்புடுதுங்க'' அவளின் குழந்தை மொழி தேனினும் இனியதாகவே இருந்தது. 

   மீண்டும் சன்னல் கதவை மெதுவாகக் திறக்கிறேன். ஒன்றிரண்டு பறவைகள் மேலே பறப்பதும் மரங்கள் அசைவதுமாக இருந்தன. இளங்காற்று என் முகத்தில் மோதி முத்தமழை பொழிந்தன. விழிகளை திறந்தும் மூடியும் அந்த உணர்தலை ரசிக்கின்றேன். சன்னலை மூடிவிட்டு என் குழந்தைகளின் நடுவே உறங்கினேன். 

   மரங்கள் அசைவதும் பறவைகளின் பாட்டுக் கச்சேரியையும் என் செவிகளுக்கு எப்போதும்போல் விருந்தளித்தன. காற்றின் தாலாட்டில் என்னை முழுவதுமாய் அர்ப்பணித்துக் கொண்டேன். அமைதியாக உறங்கும் பாறையைப் போல் எந்தச் சலனமும் இல்லாமல் உறங்கினாலும் மனசுக்குள் நாளை புயல் வருவதாக வானிலை ஆய்வாளர்களும் அரசும் சொன்னார்களே என்ற நினைப்பும் இருந்தது.

   ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சூறைக்காற்று சுழன்று வீசியது. மணி இரண்டு இருக்கும்.  ஆழிப்பேரலை பொங்கியது. ம்ம்ம்ம்ம்......என அழுத்தமாக வீசிய புழுதியை வாரி இறைத்தது. அந்தப் பெருங்கடல், காற்றுக்கு வேகத்தைச் செலுத்தியது. வேகத்தைக் கூட்டுவதற்காக அலைகளை சுழல விட்டன. சுழன்று எழுந்த அலைகள் பல கிலோமீட்டர் வேகம் கொண்ட பெருங்காற்றை வீடுகளுக்குள் செலுத்தியது.  அந்தக் காற்று மரங்களுக்குள்ளும் புகுந்து பல கிலோமீட்டர் வரை சென்றது. காப்பாத்துங்க.... காப்பாத்துங்க... என்று மரங்கள் கத்தின. வீட்டின் கூரைகள் காற்றைத் தடுக்க முடியாமல் அலறி அடித்துக்கொண்டு பறந்தன. புயலின் நினைப்போடு உறங்கியதால் இவை கனவு என்றிருந்தேன். சிறிது நேரத்தில் என் மீது இலைகளும் மண் துகள்களும் விழுந்தன. ஆகா... கனவு இல்லை நிசம் என்று உணர்ந்து விழித்தேன். என் வீட்டின் ஓடுகள் பறந்து கீழே விழுந்தன. வான வெளிச்சம் வீட்டுக்குள் புகுந்தது. 

   புகை மண்டலமாய் வானவெளி காட்சியளித்தது.  என் குழந்தைகளை தூக்க முயற்சித்தேன். இரண்டு ஓடுகள் பறந்து எங்கள் அருகில் விழுந்தது.  குழந்தைகளை விருட்டென என் பக்கமாக இழுத்துக் கொண்டேன். சடச்சடவென மழைத்தூறல் விழுந்ததும் ''அப்பா .... அப்பா.... '' என்றவாறே என் குழந்தைகள் எழுந்து விட்டனர். அதற்குள் பத்துப்பதினைந்து ஓடுகள் காற்றில் பறந்து சிதறின. துணிகள் மழையில் நனைந்தன. பாயை மட்டும் எடுத்துக்கொண்டு குழந்தைகளோடு பக்கத்து அறைக்குள்  சென்று மின் விளக்குப் பொத்தானை அழுத்தினேன். மின் இணைப்பு காற்று வரும்போதே மின்வாரிய ஊழியர்களால் ஏற்கனவே துண்டிக்கப்பட்டிருந்தன. எமர்சன்சி விளக்கினை தேடினேன். வீசிய சுழல் காற்றில் அலமாரியில் இருந்த அவ்விளக்கு கீழே விழுந்து நொறுங்கிக் கிடந்தது. தீப்பெட்டி நனைந்து போயிருந்தது. விளக்கேற்றுவதற்கும் வழியில்லை. என் குழந்தைகள் என்னை இறுக அணைத்துக்கொண்டனர். இந்த அறையில் இருக்கும் ஓடுகள் சரிந்துவிடக் கூடாதென்று நினைத்துக் கொண்டேன். 

   இந்த அறையில்தான் பீரோவும் புத்தகங்களும் இருக்கின்றது. ஓவியா என் மார்போடு ஒட்டிக்கொண்டு ஒரு குரங்குக் குட்டியைப்போல் காட்சியளித்தாள். ''அப்பா.. கடவுள் இல்லதானப்பா. ஆமடா தங்கம். பொய்யிப்பா கடவுள் இருக்காரு'' தன்யா சொன்னதைக் கேட்டு அந்தப் புயலிலும் ஆச்சரியமாக இருந்தது.  அவள் மேலும் தொடர்ந்தாள். ''நீங்கதானப்பா எங்கள காப்பாத்துறீங்க. அப்ப நீங்கதான் கடவுள்'' அவளின் இந்தப் பேச்சால் நான் ஒரு நொடி உறைந்து போனேன். இந்த வயதில் எவ்வளவு அறிவார்ந்தப் பேச்சு. இது புரியாமல் கடவுள் பேர் சொல்லி பிழைப்பு நடத்துவதும் கலவரம் செய்வதும் கீழ்த்தரமான செயல் இல்லையா இந்தச் சமூகத்தைப் பார்த்து நானே கேட்டுக்கொண்டேன்.

     இந்த அறையின் ஓடுகளும் பறந்தால் வேறு எங்கு செல்வது என்ற நினைப்பில் அந்த அறைக்குள் இருக்கும் இரண்டு பெரிய அலமாரியிலும் இருந்த சில்லறை சாமான்களை ஒரே அலமாரியில் அடுக்கினேன். ஒரு அலமாரியை துணியால் துடைத்து சுத்தம் செய்தேன். என் குழந்தைகளை அந்த அலமாரிக்குள் உட்கார வைத்தேன். மீண்டுமொரு காற்று பெரும் இரைச்சலுடன் வருகை புரிந்தது. அப்போது வானம் விடியத் தொடங்கும் நேரமாக இருந்தது. பறவைகள படபடவென பறந்து சென்றன. தூறல் மழையாக பெய்யத் தொடங்கியது.

   ஏழெட்டு ஓடுகள் உடைந்து வெளியேயும் உள்ளேயும் விழுந்தன. அப்பா.... உள்ள வந்துரு என்று என் குழந்தைகள் கத்துகிறார்கள். அலமாரிக்குள் நான் எப்படிச் செல்வது. என் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே என்னுள் இருந்தது.  மழையில் நனைந்தவாறே வேட்டி ஒன்றை எடுத்து சாரல் அடிக்காமல் அலமாரியில் போத்தினேன். அதையும் விலக்கிக் கொண்டு அவர்கள் கத்திக் கொண்டு இருந்தார்கள்.  ஒன்னுல்லம்மா... தைரியமா இருங்க... சொல்லிக்கொண்டே  இரண்டு பாய்களை எடுத்து புத்தகங்கள் இருக்கும் இரும்பு அலமாரியை மூடினேன். மழை நீர் பாயில் விழுந்து வீட்டுக்குள் கெண்டைக்கால் அளவுக்கு நிரம்பியது.  அறையிலிருந்து நீர் வெளியேறும் ஓட்டை வழியாக கைகளால் தண்ணீரைத் தள்ளினேன். அவை சுழனறு
 வீசும் பெருங்காற்றால் வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே வந்தது.  கரப்பான் பூச்சிகளும் பாச்சைகளும் நீரில் நீந்தி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள என் மேல் ஏறின. அவைகளை தட்டி விட்டேன். அவை மீண்டும் மீண்டும் என் மீது ஏறின. மீண்டும் தட்டிவிட மனமில்லை. அவை நீந்தி அலமாரிக்குச் சென்றுவிட்டால் என் குழந்தைகள் நிலை என்னவாது எண்ணிக்கொண்டேன்.   அப்போது வாசலில் தொப்பென்று ஏதோ விழுந்தது.  மெதுவாக கதைவைத் திறந்தேன். அப்பா....தெறக்காதீக காத்து ரொம்ப அடிக்குது என்று இருவருமே கத்தினர். தலையில் வழியும் நீரை துடைத்துக்கொண்டே வாசலைப் பார்த்தேன்.

   நான்கு வீடு தள்ளி இருக்கும் வேப்ப மரத்தின் பெரிய கிளையொன்று முறந்து வந்து வாசலில் கிடந்தது.  நான்கு வீடுகளைக் கடந்து எப்படி வந்து விழுந்திருக்கும்.  வெளியில் யாரும் நிற்பதாக தெரியவில்லை.  வெளியில் நான் வந்திருந்தால் என்னவாயிருக்கும் நினைத்தாலே பயமாக இருந்தது.  வீதியில் சென்ற மின்சார கம்பியில் கருவைமரம் சாய்ந்து அறுந்து கிடந்தது.  மின்சார வாரிய ஊழிர்கள் என் கண்முன்னே வந்து சென்றனர். இரு கரங்களால் அவர்களை வணங்கினேன். கதவைச் சாத்திவிட்டு மழையில் நனைந்தவாறே தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டேன். மரங்கள் சுழன்று சுழன்று வீசின. மரங்களின் கூக்குரல் கேட்டுத்தான் காப்பாற்ற முடியாமல் வானம் அழுவதாக எண்ணினேன். தலையிலிருந்து முகத்தில் வழிந்த நீரை கைகளால் துடைத்துக் கொண்டேன். என் குழந்தைகள் சாரல் விழாமல் பொத்தியிருந்த வேட்டியை விலக்கிக்கொண்டு என்னைப் பார்த்தவாறு தேமித்தேமி அழுது கொண்டிருந்தனர். அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள் பாதி சாரலில் நனைந்தன. அவற்றை முழுவதுமாக மூடுவதற்கு என்னிடம் எதுவுமே இல்லை. இப்படி ஒரு புயல் வருமென்று யாரும் எதிர்பார்த்ததே இல்லை.  

   பொழுது விடிந்தது. மழை விட்டது.  ஆனால் காற்றின் கோரப்பசி நிற்கவில்லை. அப்பா சோட்டாபீம் கீழ படுத்து கெஞ்சுதுப்பா. அதக் கொல்ல வேண்டாமுனு காத்துக்கிட்ட சொல்லுப்பா என்று தன்யா கதறுகிறாள். மாமரத்தைதான் அவள் சோட்டா பீம் என்கிறாள். அவள் கண்முன்னே மாமரம் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது. அப்பா... என் ப்ரண்டு பாவம்ப்பா. நான் பொறந்தப்போ வச்சதுனு சொன்னியே. அதுல இருந்த குட்டி மாங்காய் எல்லாம் விழுந்துருச்சே. அந்த எலைக எல்லாம் துடிக்குதே என்று கத்தினாள். என்னை அறியாமல் அழுகை வந்தது.  அப்பா ரத்தம் வருது என்று ஓவியா கத்தினாள். பதறிப்போய் எதுலயும் இடிச்சுக்கிட்டியாம்மா அவளைத் தூக்கினேன். அப்பா ஓம்மொகத்துலப்பா என்று என் முகத்தை துடைத்தாள். அவளின் இரண்டு கைகளிலும் இரத்தம் வழிந்தது. மேலிருந்து விழந்த ஓடுதான் சதி செய்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். புயலுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.  ஏனென்றால் என்மீது விழுந்ததால் வலி தெரியாதவனாய் இருந்தேன். என் குழந்தைகள் மீது விழுந்திருந்தால் அர்த்த ராத்திரியில் என்னால் என்ன செய்ய முடியும். 
   
   பெருங்காற்றில் வேரோடு சாய்ந்த பலா மரம் ஒன்று தனது இலைகளை தரையில் அடித்துக்கொண்டு எங்களை விட்டுரு என்று கதறியது. கோபம் தீராத காற்று, சுழன்று வீசி அந்த மரத்தை பக்கத்து வீட்டு வாசலில் தூக்கிச் சென்று போட்டது. அவர்கள் கதவைத் திறந்தாலும் வெளியில் வரமுடியாது.  வெளியில் இருப்பவர்கள் அந்த மரத்தை அப்புறப்படுத்தினால்தான் அவர்களால் வெளியில் வர முடியும்.

     எங்கள் ஊருக்கு காவலாய் இருந்த பனை மரங்கள் சுழன்று வீசிய பெருங்காற்றினை தடுக்க எவ்வளவோ முயற்சித்தும் பனைமரங்களிடம் சாக்கு போக்கு காட்டிவிட்டு மற்ற மரங்களையும் கூரை வீடு, ஓட்டு வீடு, ஆஸ்பெட்டாஸ் வீடுகளின் கூரைகளை புடுங்கி எறிந்தன. அய்ந்தாறு மருத மரங்கள் ''திரும்பிப் போ. எல்லோரையும் விட்டுவிடு'' என்று தரையில் வீழ்ந்து கெஞ்சின. அந்தப் பெருங்காற்று எதையும் காது கொடுத்து கேட்பதாக இல்லை.  மருத மரங்களை விட்டுவிட்டு மற்ற மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து தனது கோபத்தை தீர்த்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறின.

   மிகப்பெரிய படுகொலையை நிகழ்த்திவிட்டு சென்ற புயல் காற்றை '' இனி வராதே... வராதே... " என்று வீழ்ந்து கிடந்த மரங்கள் தனது இலைகளைக் கொண்டு விரட்டிக் கொண்டே தனது உயிரை விட்டன.

   ஒவ்வொரு மரமாக சென்று என் குழந்தைகள் கட்டி அணைத்து கதறுகிறார்கள். ''அப்பா... இனி பறவையெல்லாம் எங்க போயி தங்கும். இனிமே இந்த மரத்தையெல்லாம் பாக்க முடியதா'' அழுது கொண்டே ''ஜாக்கிஜான் எந்திரி... ஜாக்கிஜான் எந்திரி......'' என்று கொய்யா மரத்தின் கிளைகளைப் பிடித்து தூக்குகிறாள் தன்யா. அவளின் கண்ணீரில் நனைந்து போகிறது ஜாக்கிஜான். என் கால்களை இறுகப் பிடித்துக்கொண்டு தேமித்தேமி அழுகிறாள் ஓவியா. கைவிடப்பட்ட அகதியைப் போல் எல்லாவற்றையும் விரக்தியோடு பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.

     என்னிடம் பந்தயம் கட்டிய சின்னத்தம்பி அண்ணனின் கூரை வீட்டின் கீற்றுகள் பறந்து வந்து எங்கள் வாசலில் கிடந்தன. அவரின் வீடு முழுவதும் நாசமாய்ப் போயிருந்தது. அவரின் மனைவி ஒப்பாறி வைத்துக்கொண்டு இருந்தார். நான் அவரைப் பார்க்கிறேன். அவர் என்னைப் பார்க்கிறார். இருவரும் கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றோம்.
                    - சோலச்சி புதுக்கோட்டை
பேச : 9788210963
''அட்டணக்கால்'' சிறுகதை நூலிலிருந்து .......

வியாழன், 5 நவம்பர், 2020

மனுஸ்மிருதி விசிக முகநூல் பகிர்வு செய்தி

 மகளிர் எழுச்சி

மக்கள் மீட்சி


கருத்துப் பரப்பு இயக்கம்! 

~~~~~~~~~~~


திருமாவளவன் பெண்களை இழிவுசெய்ததாக பாஜக'வினர் அவதூறு பரப்புவது ஏன்? 


மனுஸ்மிருதியை தடை செய்யவேண்டுமென விசிக'வினர் கோருவது ஏன்?

----------------------------------------------


' திருமாவளவன் பெண்களைக் கொச்சைப் படுத்திவிட்டார் ' என சமூக வலைத்தளங்களில் திடீரென கடந்த அக்டோபர்-21 முதல் பாஜகவினர், விசிக தலைவர் தொல். திருமாவளவன் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.


தொல்.திருமாவளவன் அவர்கள் அப்படி என்னதான் பேசினார்? எங்கே பேசினார்? இவர்கள் இவ்வாறு பொய் சொல்லுவதற்கு என்ன காரணம்?  உண்மையில்  இதன் பின்னணி என்ன? 


கடந்த செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் " ஐரோப்பிய ஒன்றிய பெரியார்-அம்பேத்கர் தோழர்கள்  கூட்டமைப்பு " சார்பில்,  ’பெரியாரும் இந்திய அரசியலும்’ என்னும் பொருளில் இருநாள் இணையவெளி கருத்தரங்கு ஒருங்கிணைக்கப்பட்டது. 


இரண்டாம் நாள் நிகழ்வில்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் பங்கேற்று 40 நிமிடங்கள் உரையாற்றினார். அதில் மனுநூல் குறித்தும் பேசினார்.


" தந்தை பெரியாரைப் பிராமண எதிர்ப்பாளர் கடவுள் மறுப்பாளர் என்று மட்டுமே பலரும் கூறுகிறார்கள். அவர் பிராமணர்களை எதிர்த்ததற்கும், கடவுளை மறுத்ததற்கும் அவர் மனுஸ்மிருதியைத் தீவிரமாக எதிர்த்ததே காரணமாகும். ஏனென்றால், மனுஸ்மிருதிதான் இந்துக்களில் பெரும்பான்மையினராக உள்ள உழைக்கும் பிற்படுத்தப்பட்டோரை சூத்திரர்கள் எனக் கேவலப்படுத்துகிறது. பெண்களை மிகவும் மோசமாக இழிவுபடுத்துகிறது "  என்று தனது பேச்சில் தொல்.திருமாவளவன் விளக்கினார். 

அதில் சிலநொடிகள் அளவிலான பேச்சை மட்டுமே நறுக்கி எடுத்து, " இதோ பாருங்கள் இந்துப் பெண்களைக் கொச்சைப் படுத்துகிறார்"  என்று உள்நோக்கத்துடன் பரப்புகின்றனர்.


அவர்களின் உண்மை நோக்கம், விசிக இடம்பெற்றுள்ள திமுக கூட்டணிக்கு நெருக்கடி கொடுத்து,  இந்துவிரோத முத்திரைக் குத்தி,  அரசியல் ஆதாயம் தேடுவதே ஆகும். இந்துக்கள் x இந்துஅல்லாதோர் அல்லது  இந்துக்கள்x இந்துவிரோதிகள் என  தமிழ்ச்சமூகத்தைப் பிளவுப்படுத்துவதே அவர்களின் நோக்கம். அதற்கு இவ்வாறு அவதூறு பரப்பி தொல்.திருமாவளவன் அவர்களைப் பலிகடாவாக ஆக்குவதற்கு முயற்சிக்கின்றனர். 


மனுஸ்மிருதி எதிர்ப்பு என்பது புதிய செயற்பாடு அல்ல.  முதன்முறையாக இப்போதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கிறது என்று சொல்லக்கூடிய ஒன்றும் அல்ல.  இதற்கு நீண்டகால வரலாறு உண்டு. 


1927 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழகத்தில் பெருந்தலைவர் எம்.சி. இராஜா அவர்கள் " ஆதி திராவிடர் மாநாட்டில்" மனுஸ்மிரிதியைக் கொளுத்தியுள்ளார். அதே ஆண்டில், டிசம்பர் 4 ஆம் நாள் குடியாத்தத்தில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் மனுஸ்மிருதி எரிக்கப்பட்டது. 


அதே ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், மஹத் என்னுமிடத்தில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்தி அம்மாநாட்டு வாயில் முன்பாக மனுஸ்மிருதியைத் தீயிட்டுக் கொளுத்தினார். பெண்களையும் சூத்திரர்களையும் இழிவுப்படுத்தி ஒடுக்கி வைத்திருப்பதற்கு மனுநூலே காரணம் என்பதால்தான் ஒரு நூறாண்டுக்கு முன்னரே மேற்கண்ட  தலைவர்கள் இவ்வாறு தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


அவர்களின் வழியில்தான் தொல்.திருமாவளவன் அவர்களும் மனுஸ்மிருதியின் மனிதகுல விரோதக் கருத்துகளை விமர்சித்துப் பேசினார். மனுஸ்மிருதியில் கூறியிருப்பதாக அவர் பேசியதை,  அவரே பேசியதாகப் பொய்யாகவும் அவதூறாகவும் பாஜகவினர் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் ஒருசேர பாஜகவின் இந்த தில்லுமுல்லு வேலையைக் கண்டித்த பிறகும்கூட இந்த அவதூறை வைத்து அரசியல் லாபம் தேட பாஜகவினர் முயற்சிக்கின்றனர்.இதன்மூலம் தமிழ்நாட்டில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். அவதூறு பரப்பும் பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்வதற்குப் பதிலாக அவர்களின் பொய்க்குற்றச்சாட்டின் அடிப்படையில் தொல்.திருமாவளவன் அவர்கள்மீது தமிழகக் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.


மனுஸ்மிருதி கூறுவதென்ன?

---------------------------------------

சுமார் இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனுஸ்மிருதி, அனைத்துத் தரப்பு மக்களையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்துகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுகிறது. அவர்களைக் கொலைசெய்வதையும் நியாயப்படுத்துகிறது.


# சூத்திரர்கள் ஆட்சிசெய்யும் நாட்டில் பிராமணர்கள் குடியிருக்கக் கூடாது. ( அத்தியாயம் 4:61)


# தன்னைவிட உயர்ந்த வர்ணத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட சூத்திரனைக் கொன்றுவிடவேண்டும்.  (அத்தியாயம் 8:374) 


# சூத்திரன் நீதிபதியாக இருக்க முடியாது (அத்தியாயம் 8:20)


 # சூத்திரர்கள் கல்வி பயிலக்கூடாது (அத்தியாயம் 3:156 & 4:99) 


# இழிவான பெயர்களை மட்டுமே சூத்திரர்கள் வைத்துக்கொள்ளவேண்டும் ( அத்தியாயம் 2:31)


# பெண்களின் இயல்பே ஆண்களை மயக்குவதுதான் (அத்தியாயம் 2:213)


 # ஒருவன் தனது தாயுடனோ, மகளுடனோ, சகோதரியுடனோ தனிமையில் அமர்ந்திருக்ககூடாது. கல்வி கற்றவரையும்கூட புலன்கள் மயக்கம்கொள்ளச் செய்துவிடும் (அத்தியாயம் 2:215) 


# மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண்தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி அவர்களைப் புணருகிறார்கள். (அத்தியாயம் 9:14)


# ஆண்களின் மீதான இச்சையாலும், நிலைமாறும் புத்தியாலும், ஈவிரக்கமற்ற இயல்பினாலும் பெண்களை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அவர்கள் தன் கணவனுக்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள் ( அத்தியாயம் 9:15) 


# மாதர்களுக்கு  இந்த சுபாவம் பிரம்மன் சிருஷ்டித்தபோதே உண்டானதென்று  அறிந்து  ஆடவர்கள்,  அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்யவேண்டியது(அத்தியாயம் 9:16)


# படுக்கை, ஆசனம், அலங்காரம் காமம், கோபம்- பொய், துரோக சிந்தை இவற்றை மாதர் பொருட்டே மனுவானவனவர் கற்பித்தார்.(அத்தியாயம் 9:17)


# பெண்னுக்குப் படிப்பதற்கு உரிமை இல்லை (அத்தியாயம் 9:18)


# மாதர்கள்பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர்கள் என்று அநேக சுருதிகளிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்கு திருஷ்டாந்திரமாக அந்த விபச்சாரத்துக்கு சுருதிசொல்லிய பிராயச் சித்தத்தைக் கேளுங்கள் ( அத்தியாயம் 9:19)


# பெண், மகன், அடிமை – இம்மூவருக்கும் சொத்துரிமை கிடையாது (அத்தியாயம் 9:416)


இவை மனுஸ்மிருதியில் பிற்படுத்தப்பட்ட இந்து மக்களையும், பெண்களையும் பற்றிக் கூறப்பட்டவற்றில் சில பகுதிகளாகும். 


இப்போது கூறுங்கள் பெண்களை இழிவுபடுத்துவது  மனுஸ்மிருதியா?   அல்லது அதைத் தடை செய்யக் கோருகிற தொல்.திருமாவளவனா? 


இப்போதும் மனுஸ்மிருதி! 

-----------------------------------

இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் 27% திருமணங்கள் குழந்தைத் திருமணங்கள் என யுனிசெஃப் என்ற ஐநா சபையின் அமைப்பு 2019 ஆண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. பெண்களின் திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அவர்களைப் பிஞ்சுப் பருவத்திலேயே திருமணம் செய்துகொடுத்துவிடவேண்டும் என்ற வழக்கம் மனுஸ்மிருதியினால் வந்ததுதான்.


இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என சட்டம் இருக்கிறது. பெண்களுக்கு சொத்துரிமையை மறுக்கும் வழக்கம் இந்தியா முழுமைக்கும் இருப்பதற்குக் காரணம் மனுஸ்மிருதிதான்.


2019 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக 4 லட்சத்து ஐந்தாயிரம் வன்கொடுமைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. 2018 ஆம் ஆண்டைவிட 7.3% அது அதிகரித்துள்ளது. அதற்குக் காரணம் பெண்களை சமமாக நடத்தக்கூடாது என்னும் மனுஸ்மிருதியின் செல்வாக்கு சமூகத்தில் நிலவுவதுதான்.


சாதிக்கொரு குடியிருப்பு; அனைத்துசாதியினரும் அர்ச்சகராக முடியாத நிலை; பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற முடியாது, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு தர முடியாது என்ற பாஜக அரசின் நிலைபாடு – இவை எல்லாவற்றுக்கும் காரணம் மனுஸ்மிருதியின் செல்வாக்குதான்.


அரசியலமைப்புச் சட்டமா? மனுவின் சட்டமா?

-----------------------------------------------

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) அறிமுகப்படுத்தப்பட்டபிறகுதான் மனுஸ்மிருதி இந்த நாட்டின் தண்டனைச் சட்டம் என்ற நிலையை இழந்தது. அதன் பிறகுதான் ஒரு குற்றத்தை எவர் செய்தாலும் ஒரே தண்டனைதான் என்ற நிலை ஏற்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு புரட்சியாளர் அம்பேத்கரின் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்பதை இந்நாட்டின் அடிப்படை நெறியாக ஆக்கியது. ஆனால் மனுஸ்மிருதியால் பயனடைந்த சனாதனிகள் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்கவில்லை. சமூகத் தளத்தில் அதன் மேலாதிக்கத்தைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்தனர்.


இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் அனைவரும் சமம் என்கிறது. ஆனால், மனு ஸ்மிருதியோ அனைவரும் சமம் இல்லை என்கிறது; இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாலின ரீதியாக எந்த பாகுபாடும் காட்டக்கூடாது ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படவேண்டும் என்கிறது; ஆனால் மனு ஸ்மிருதியோ பெண்ணுக்குக் கல்வி உரிமையோ சொத்துரிமையோ இல்லை என்று கூறுகிறது.


தற்போது மத்தியில் ஆளும் பாஜகவினர் இத்தகைய பெண்கள் விரோத மனுஸ்மிருதியை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்தி விட வேண்டும் என்று துடிக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக  ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள். 


திரு வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிவிட்டு புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நீதிபதி வெங்கடாசலய்யா என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த திரு. கே.ஆர்.நாராயணனின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்ட அந்தத் திட்டத்தை இப்பொழுது எப்படியாவது நிறைவேற்றிவிடப் பார்க்கிறார்கள்.


மனுஸ்மிருதிக்கு எதிரான போராட்டம்  அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான  போராட்டமே ஆகும். மனு நூலைத் தடைசெய் என்ற முழக்கத்தின் உண்மையான பொருள் அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்து என்பதேயாகும்.


வெறுப்பின் ஊற்றுக்கண்ணை அடைக்க மனுநூலைத் தடைசெய்க! 

----------------------------------------------

மனுஸ்மிருதி என்ற ஒரு நூல் நாட்டில் இருக்கும் வரை சனாதனிகளின் மனிதகுல விரோத வெறுப்புப் பிரச்சாரத்தை நிறுத்தவே முடியாது. அதனால்தான், வெறுப்புப் பிரச்சாரத்தின் ஊற்றுக்கண்ணாகவும், வன்முறையை ஆதரிப்பதாகவும், பயங்கரவாதத்தைத் தூண்டுவதாகவும் பெண்களை மிக மிகக் கேவலமாக இழிவுபடுத்தும் நூலாகவும் விளங்குகின்ற மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. இந்த சமூகநீதி சமத்துவக் கோரிக்கையை ஆதரித்து அனைத்து சனநாயக சக்திகளும்  அணிதிரள வேண்டுமென அறைகூவல் விடுக்கிறோம்! 


மகளிர் எழுச்சியே

மக்கள் மீட்சி!- ஆளும்

மனுநெறி வீழ்ச்சியே

மகத்தான புரட்சி!  


-------- விசிக-----------

ஞாயிறு, 12 ஜூலை, 2020

சோலச்சியின் "காட்டு நெறிஞ்சி" நூல் குறித்து கவிஞர் ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்



                   சோலச்சியின் "காட்டு நெறிஞ்சி" நூல் குறித்து 
                    கவிஞர் ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்





கவிமதி சோலச்சி அவர்களின்
காட்டு நெறிஞ்சி ஓர் அறிமுகம்…


இனிய நந்தவனம் பதிப்பகம்
பக்கங்கள் 128

முனைவர் எழில் சோம. பொன்னுசாமி அவர்களின் வாழ்த்துரையோடும், கவிஞர் சோலச்சியின் என்னுரையோடும்
புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன்.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில்
அழகு வர்ணனை எதுகை மோனை என்பதை எல்லாம் தாண்டி சமுதாயத்தோடு கலந்து நிற்கும் பிரச்சனைகளை சாட்டையடியாக தன் கவிதைகளில் தந்துள்ளார் கவிஞர். ஆங்காங்கே விரவிக் கிடக்கிறது காதல் கவிதைகள்.

நாம் சந்திக்கும் மனிதர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளை எளிய தமிழில் பல கவிதைகளில் கேள்வியாக நம்மிடம் கேட்பது  கவிஞரின் சமுதாய உணர்வை படம்பிடித்துக் காட்டுகிறது.
அப்படி இத்தொகுப்பில் நான் ரசித்து மகிழ்ந்த கவிதைகளை
தாங்களும் ரசித்து மகிழ இங்கே பதிவிடுகிறேன்.

சுதந்திரமாம் சுதந்திரம் என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள வரிகள்…

"சுதந்திரமாய்
வாழுது
வறுமையும்
வரதட்சணை கொடுமையும்
விண்ணையும்
தாண்டிவிட்டது
விதவிதமாய்
ஊழல்கள்"

இப்படி சமுதாயத்தின் அவலத்தை
பேசிய கவிஞர் இக்கவிதையின் முடிவில்....

அந்தரமா நிற்குது
அப்பாவி வாழ்க்கை
எப்ப மலருமோ
ஏங்கி வெடிக்குது
கண்ணீரே காணிக்கை"

-என்று நம்மை கண்ணீர் வடிக்க வைக்கிறார் கவிஞர்.

விழுதொன்று கண்டேன்
என்ற தலைப்பில் அவர் எழுதிய வரிகள் உணர்வுகளின் உச்சம்.

"திருடுவதற்கு
ஒன்றுமில்லை
காலியாகவே
சனநாயகம்
சுரண்டப்பட்டது
மண்வளம் மட்டுமல்ல
மனிதவளமும் தான்"

மேலும் இதே தலைப்பில்

"கொள்ளையடிக்கப்பட்ட விடுதலையால்
பாரதியும் தாகூரும்
கண்ணீரால் கைகோர்த்தபடி வங்கக்கடலில்"
என்ன ஆழமான வரிகள்.

உயர்வு என்ற தலைப்பில் அவர் எழுதிய உயர்ந்த சிந்தனை.

"நன்றாகவே உயர்ந்திருக்கிறது
இந்தியா
விலைவாசியில்"

நாகரீகம் என்ற தலைப்பில் அவர் எழுதிய வரிகள் உண்மையிலும் உண்மை.

"விலைக்கு வாங்கினேன்
விலையுயர்ந்த வியாதியை
நாகரீகத் தொட்டிலில் நான்"

பாரதி என்ற தலைப்பில் கவிஞர் சோலச்சி எழுதிய எழுச்சி வரிகள்…

"ஓ.. பாரதியே…
சாதிகளை கடந்தாய்
சாஸ்திரங்களை களைந்தாய்
நொறுக்கப்பட்ட
இனத்தின் மீசையும்
முறுக்கி விடப்பட்டது
உன் வரவால் தான்"

கவிஞர், இரங்கல் என்ற தலைப்பில் எழுதிய கவிதை நெஞ்சில் நிலைக்கிறது.

"ஏதோ ஒரு வாகனத்தால் நிகழ்ந்திருக்கக்கூடும்
இந்தப்படுகொலை….
பாராமுகமாய் பலரும்…
ஈக்களும் வண்டுகளுமே
இரங்கல் தெரிவித்தபடி
குடல் கிழிந்து
தலைநசுங்கி கிடந்தது
சாலையின் மையத்தில்
அந்தத்தெருநாய்"

மனதை நெகிழச் செய்த வரிகள்.

இப்படி இந்தப் புத்தகம் முழுவதும்
பொதுவுடைமை வாதியாய் பொங்கி எழுந்த கவிஞர் சோலச்சி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

காட்டு நெறிஞ்சி... இது நம் நாட்டிற்கான நாட்டு விதை!

கவிஞர்கள் காலத்தின் கண்ணாடி.. இன்றைய சூழலை அப்படியே படம் பிடித்து காட்டும் கவிதைகள் இத்தொகுப்பில் ஏராளம். நிச்சயம் நாம் தாராளமாய் படிக்கலாம். வாசித்து மகிழ்வீர்…

விலை 110/-
நூல் தேவைக்கு
இனிய நந்தவனம் பதிப்பகம்
9443284823 

நூலாசிரியர் சோலச்சி 9788210863


நன்றி


ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்

9710513097