வியக்கிறேன்.......
அன்றொருநாள் மாலை நேரம் , என் அப்பா எனக்கு வந்த கடிதங்களை மேசையில் வைத்திருப்பதாகச் சொன்னார். வழக்கம் போல் கடிதங்கள் மற்றும் மாத இதழ்களை புரட்டிப் பார்த்தேன். அதிலொன்று திருமண அழைப்பிதழ். அந்த திருமண அழைப்பிதழ் பசை வைத்து ஒட்டப்பட்டிருந்தது. பிரித்துப் பார்த்தால் உள்ளே ஐம்பது ரூபாயில் ஒன்று இருபது ரூபாயில் ஒன்று பத்து ரூபாயில் ஒன்றும் என மொத்தம் எண்பது ரூபாய் இருந்தது. எனக்கு ஒரே வியப்பு ..... திருமணத்திற்கு வரச் சொல்லி பணமும் அனுப்புவார்களா என்று.....! அதில் உள்ள முகவரியைப் பார்த்தால் கோயம்புத்தூர் என்று இருந்தது. அந்த அழைப்பிதழ் எனக்கு பழக்கமானவர்களாக இல்லை. தங்களன்புள்ள என்ற இடத்தில் இருந்த அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் , அவர்களுக்கு யாரென்றே தெரியவில்லை. மேலும் பணமும் அனுப்பவில்லை பத்திரிக்கையும் அனுப்பவில்லை என்றார்கள். யாரோ.... என்று நானும் விட்டுவிட்டேன் ... இரண்டொரு நாள் கழித்து கோயம்புத்தூரில் இருந்து தோழர் அகிலபாரதி (பார்த்தது கிடையாது) என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். எனது முதல் பரிசு நூல் குறித்து நீண்ட நேரம் பேசினார். பேச்சின் இடையில் கோயம்புத்தூரிலிருந்து யாரோ ஒருவர் எனக்கு திருமண அழைப்பிதழில் ரூபாய் எண்பது அனுப்பி இருந்தார்கள் யெரென்று தெரியவில்லை தோழர் என்றேன். உடனே, அவர் நான்தான் தோழர் என் அப்பாவிடம் சொல்லி உங்கள் முதல் பரிசு நூலுக்கு பணம் அனுப்பச் சொன்னேன். அவரோ எங்கள் உறவினரின் திருமண பத்திரிகையில் வைத்து அனுப்பியதாக சொன்னார். நானும் உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன் என்று அந்த அழைப்பிதழின் முகவரியை சொல்ல ஆரம்பித்து விட்டார். அவர் ஒரு மாற்றுதிறனாளி என்பது பிறகுதான் தெரியும். நான் நட்புக்காகத்தானே அனுப்பினேன் என்று சொல்ல, நானும் நட்புக்காகத்தான் என்று பதிலுரைத்தார். இலவசமாக நூலினைப் பெறக்கூடாது என்பது அவரது கொள்கையாம்... இவர்களால்தான் எழுத்தாளர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
11.03.2017 சனிக்கிழமை மாலை எங்கள் அய்யா கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு "சோலச்சி எங்க இருக்கீங்க. திண்டுக்கல்லுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு போனேன். தோழர் வீரகடம்ப கோபு வுக்கு உங்க நூல அனுப்பி இருந்தீங்களாமே.....அவரு என்னப் பாத்து நானுத்தம்பது ரூபா கொடுத்து விட்டுருக்காரு. குடுமியான்மலைக்கிட்ட தானே வீடு, அதுவழியாத்தான் காருல வந்துக்கிட்டு இருக்கேன் வாங்கிக்கிருங்களா... என்றபோது நெகிழ்ந்து போனேன். ஓர் படைப்பாளனை வாழ வைப்பது என்பது அவனது எழுத்துகளை எல்லோரிடமும் கொண்டு செல்வதும் அவன் வீழ்ந்துவிடாமல் தாங்கி பிடிப்பதும்தான். இவர்கள் போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால் நான் இறப்பதற்குள் ஓராயிரம் நூல்கள் எழுதி குவித்துவிடலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. என் எழுத்து பொருளாதர அளவில் இலாபம் பெற வேண்டும் என்பதல்ல. என் எழுத்து பொருளாதாரத்தால் முடங்கி விடக்கூடாது என்பதுதான். பணத்துக்காக படைப்பவன் நானில்லை.
எத்தனையோ எழுத்தாளர்கள் வயது கடந்தும் நூல் வெளியிட முடியாமல் பொருளாதாரத்தால் முடங்கி கிடக்கிறார்கள்.......
எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தும் கரம் பிடித்து தொடரும் தோழர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
களம் காண்போம்
கரம் கொடுப்போம் .....!!!!
- சோலச்சி புதுக்கோட்டை
4 கருத்துகள்:
.,..மிகவும் மகிழ்ச்சி....
வாழ்த்துகள்...
மகிழ்ந்தேன் நண்பரே
மிக்க மகிழ்ச்சி தோழர்
மிக்க மகிழ்ச்சி தோழர்
கருத்துரையிடுக