இன்று (10.09.2017) ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை ஆவடி முத்தமிழ் மன்றத்தில் கவிஞர் புதுகை தீ.இர அவர்களின் " வியர்வையின் முகவரி " கவிதை நூல் வெளியிடப்பட்டது. நிகழ்வில் முனைவர் எழில் சோம.பொன்னுசாமி அவர்கள் தலைமையில் முனைவர் சு.மகாதேவன் அவர்களும், முனைவர் திரிபுரசூடாமணி அவர்களும் வெளியிட இயக்கி தொழிலகத்தின் உயர் அலுவலர் கே.சுப்பிரமணி IOFS அவர்களும், பாவையர் மலர் ஆசிரியர் ம.வான்மதி அவர்களும் பெற்றுக் கொண்டனர். விழாவில் தமிழர் எழுச்சிக்குரல் ஆசிரியர் பத்மநாபன், கவிஞர் கிளாக்காடி முனுசாமி, புலவர் முரளி, கவிஞர் ஜார்ஜ் மணியண்ணன், புலவர் சாமி சுரேஷ், புலவர் வள்ளுவன், கவிஞர் ஞானமூர்த்தி, கவிஞர் தங்க.ஆரோக்கியதாசன் மற்றும் முத்தமிழ் மன்ற நிர்வாகிகளும் இலக்கிய ஆர்வலர்களும் சோலச்சியாகிய நானும் கலந்து கொண்ட நிகழ்வு மிகச் சிறப்பாக அமைந்தது. விழாவில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.
கவிஞர் ஞானமூர்த்தி அவர்களும் முனைவர் திரிபுரசூடாமணி அவர்களும் கவிஞர் ம.வான்மதி பாவையர் மலர் இதழாசிரியர் அவர்களும் நூல் குறித்து விமர்சனம் செய்தனர்.
சில கவிதைகள் குறித்து ம.வான்மதி அவர்கள் பேசும் போதே கண் கலங்கினார்.
"அஞ்சுக்கும் பத்துக்கும்
நீ அலஞ்ச - அந்த
ஐம்பது ரூபா கடனுக்கு
ஓடி ஒளிஞ்ச...."
-என்ற மலக்கொழுந்து என்ற தலைப்பில் உள்ள கவிதைதான் அவரை கண்கலங்கச் செய்தது.
கவிஞர் புதுகை தீ.இர அவர்கள் தனது ஏற்புரையில் தனக்கு உதவிய தோழர்கள் பலரையும் நினைவு கூர்ந்து நன்றி பாராட்டிய விதம் அனைவரையும் நெகிழச் செய்தது.
நூல் வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து "ஆசிரியரும் ஆதவனும் " என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெற்றது. கவியரங்கில் இருபது கவிஞர்கள் கவிதை பாடினார்கள்.
நிறைவாக புலவர் எழிழ்.சோம.பொன்னுசாமி அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
1 கருத்து:
மகிழ்ந்தேன் நண்பரே
கருத்துரையிடுக