சனி, 15 டிசம்பர், 2018

குழந்தைகள் இனிது - சோலச்சி



                               இனிது....இனிது...இனிது - சோலச்சி


           சனி, ஞாயிறு விடுமுறை என்றால் போதும் எல்லோருடைய வீடுகளிலும், தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் வகுப்பாசிரியர்கள்தான் நினைவில் வந்து செல்வார்கள். எதுக்குத்தான் லீவு விட்டாங்களோ.... பள்ளிக்கூடம் வச்சு தொலஞ்சா என்ன.... ஆத்தாடி இதுகள எப்படி கட்டி மேய்க்கப் போறோமோ.. ஆ...ஊ...னா வாத்தியாருகளுக்கு லீவு விட்டர்ராக.... என்பதாகத்தான் இருக்கும். 




           அந்த ஊரில் மிக ஆடம்பரமாக அந்தத் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தை பார்த்த உற்றார் உறவினர்கள் அனைவரும் வாயடைத்துப் போய் இருந்தார்கள். ஏனென்றால் அந்தத் திருமண விழாவிற்கு பொருட்செலவு அதிகம் செய்திருந்தார்கள். மணமகனையும் மணமகளையும் பார்த்து ஊர் மக்களும் வியந்து போனார்கள். இதுவல்லவோ பொருத்தம் என்று மெச்சினார்கள். நாட்கள் கடந்து மாதங்கள் ஆகின. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர்  புகழ்ந்து மகிழ்ந்தார்கள். இந்த உலகத்தில் மிக மிக இனியது நீ தான் என்றான் கணவன். இல்லை இல்லை இந்த உலகத்தில் மிக மிக மிக இனியது நீங்கள் ஒருவர்தான் என்றாள் மனைவி. இப்படியே ஒருவரை ஒருவர் மாறி மாறி புகழ்ந்தும் வியந்தும் வந்தார்கள். வருடங்கள் கடந்தது. இருவருக்கும் அழகான குழந்தை ஒன்று பிறந்தது. இப்போது இருவரும் சொன்னார்கள்...... இந்த உலகத்தில் மிக இனியது நம் குழந்தை தான்.

           ஆம், தோழர்களே.... குழந்தைகள் இல்லாத வீடு வெறிச்சோடிக் கிடக்கும் என்பது உண்மைதான்.  இதைத்தான் திருவள்ளுவர் அவர்கள் " குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்" என்கிறார்.





          இந்தக் குழந்தைகளுக்காக தானே பலர் கோயில் கோயிலாக அலைந்து தவம் கிடக்கிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் குழந்தைகள் பிறந்ததும் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஏனென்றால் நான் ஆண்மையுள்ளவன் என்று கணவனும் நான் மலடி இல்லை என மனைவியும் இந்த உலகத்திற்கு நிரூபணம் செய்து இருக்கிறார்களாம். அவர்கள் மகிழ்ச்சி காலமானது அந்தக் குழந்தை  நடக்க ஆரம்பிக்கும் வரைதான்.  பிறகு அந்தக் குழந்தையை இன்றைய காலகட்டத்தில்  பெரும்பாலனவர்கள் காப்பகங்களிலும்  பள்ளிகளிலும் விட்டுவிட்டு இவர்கள் மற்ற பணிகளை கவனிக்க சென்று விடுகிறார்கள்.  கேட்டால் குழந்தைக்காகத்தானே சம்பாதிக்கிறோம் என்று சப்பைக் காரணத்தை அடுக்குகிறார்கள். குழந்தையை வளர்க்கும் மாண்புகளை தற்போது காற்றில் பறக்க விட்டுவிட்டோம். இதைத்தான் பலர் நவீனம் என்று பிதற்றுகிறார்கள்.

        இறகு முத்தினால் பறவை தானாகா பறந்துவிடும். இது பறவையின் குணம் என்றாலும் அது பறக்கும் வரை அந்த தாய் பறவை படும்பாடு சொல்லி மாளாது. சின்னக் குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவதே தனி அழகுதான். என்றாவது அதை பார்த்து ரசித்திருக்கின்றோமா. தற்போது தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று பிரபலமாகி வருகிறது.  அது இரு சக்கர வண்டிக்கான விளம்பரம்.  அதில் ஆண்கள் இருவர் அவரவர் குழந்தைகளுக்கு புட்டிப்பால் ஊட்டுவதாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ஒருவர் அந்த வண்டியின் பெயரைச் சொல்லி இவன் அந்த வண்டி மாதிரி. எப்படி சொல்ற என்று மற்றொருவர் கேட்கிறார். அதற்கு இவரோ கொஞ்சமா குடிக்கிறான் என்று சொல்லி மகிழ்ச்சி அடைவார். இதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் குழந்தையும் வண்டியும் ஒன்று என்கிறார்களா அல்லது குழந்தை கொஞ்சமகவே பால் குடிக்க வேண்டும் என்கிறார்களா. எதற்கும் எதற்கும் முடிச்சு போடுவதென்றே தெரியவில்லை.

          ''யாரைச் சொல்லி நோவது காலம் செய்த கோலம்.....'' என்று நம்மை நாமே நொந்து போக வேண்டியதுதான். தற்போது உள்ள இளம் பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைகள் இளம் வயதில் செய்த நிகழ்வுகளை கேட்டால் வாயடைத்துப் போய்விடுவார்கள்.  காரணம் அவர்கள் குழந்தைகளுடன் இருப்பதே கிடையாது.  முன்னர் குழந்தைகள் தன் சக குழந்தைகளுடன் விளையாடினார்கள். மண்ணை பிசைந்து தன் முகத்தில் பூசிக் கொள்வதையும் கஞ்சி காச்சி குழம்பு வச்சு விளையாடியும் மகிழ்ந்தார்கள்.  ஆனால் அதற்கெல்லாம் தற்போது வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.  காய்ச்சல் என்று குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவரிடம் சென்றால் ஏதோ மிகப்பெரிய பாவத்தை நாம் செய்தது போல் குழந்தையை மண்ணில் விளையாட விடாதீர்கள். அதில் கிருமிகளே உற்பத்தியாகிறது என்று அவரின் பயமுறுத்தலில் பல பெற்றோர்கள் தன் குழந்தைகளிடம் சர்வாதிகாரியாக மாறி விடுகிறார்கள். நகரத்து குழந்தைகள் மண்ணை காலில் தொடுவதே அதிசயம்தான். ஏனென்றால் கிருமிகளாம். அவ்வளவு பாதுகாப்பாக கைகளுக்கு உறை, கால்களுக்கு உறை உடம்புக்கும் உறை. கிராமத்து குழந்தைகள் ஓரளவுக்கு தற்போதும் அதிர்ஷ்டகாரர்களே. இவர்கள் இப்போதும் மண்ணில் உருண்டு புரண்டு விளையாடுகிறார்கள்.




        நாம் குழந்தைகளாக இருந்த போது நம் அப்பா அவரது தோளில் தூக்கி வைத்துக்கொண்டு நடந்திருக்கிறார். நம்மோடு விளையாடி இருக்கிறார். நாம் சிரிக்க வேண்டும் என்பதற்காக பலமுறை கோமாளியாக மாறி இருக்கிறார். நாம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எத்தனையோ முறை அவர் தோற்று இருக்கிறார். வேலைக்கு சென்று களைத்து வந்தாலும் அவர் ஒருபோதும் நம்மோடு உறவாடவோ விளையாடவோ மறந்ததில்லை. குப்புறப் படுத்துக்கொண்டு தன் குழந்தைகளின் கால்களால் தன் முதுகை மிதிக்கச் சொல்லி உடல் களைப்பை போக்கி மகிழ்ச்சி காண்பார். 

         நம் அம்மா, நிலாவை காட்டி சோறு ஊட்டி இருக்கிறார். நடை வண்டி பழக்கி நடப்பதை பார்த்து ஊரையே அழைத்து பெருமைபட்டுக் கொள்வார். அவர் சோறு ஊட்டுவதற்குள் அவர் படும்பாடு அவருக்குத்தான் தெரியும்.  ஆனால் இன்று அனைத்தையும் தலை கீழாக மாற்றிவிட்டு, காலம் மாறிவிட்டது என்று சொல்லி நம்மைநாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

            இது அவசர உலகம் என்றும் இயந்திர உலகம் என்று கதை விட கற்றுக் கொண்டு விட்டோம்.  குழந்தைகளோடு ஐந்து வயது வரையாவது நாம் இருக்க வேண்டும்.  அப்போதுதான் அவர்களின் வளர்ச்சியை சேட்டைகளைப் பார்த்து ரசிக்க முடியும். நம்முடைய ரசனை எல்லாம் வேறுவிதமாக மாற்றி விட்டோம். நம்முடைய பாட்டியிடம் கேளுங்கள் நாம் சிறுவயதில் செய்த சேட்டைகளை ஒன்று விடாமல் சொல்லுவார். தாத்தா பாட்டி என்கிற அனைத்து உறவுகளையும் உதறித் தள்ளிவிட்டு நாம் மட்டுமே வாழக் கற்றுக் கொண்டோம். நம்முடைய குழந்தைகளை வளர்க்கிறோம் என்ற போர்வையில் அவர்களது உரிமையில் தலையிட்டு அவர்களின் மேலான சுதந்திரத்தை பறிக்கிறோம். எந்தக் குழந்தையும் கேள்விகள் கேட்பதில்லை.  காரணம், அவர்களுக்கு வெளி உலகம் தெரிவதில்லை.  வீட்டுக்குள்ளேயே அடைத்து பிராய்லர் கோழிகளைப் போல் வளர்க்கத் தொடங்கிவிட்டோம். 


        தாலாட்டு பாடிய காலத்தை தரையில் புதைத்துவிட்டோம். தரையில் விளையாடிய விளையாட்டுக்கு பூட்டு போட்டுவிட்டோம். குழந்தைகளின் கைகளில் அலைபேசியையோ அல்லது பொம்மைகளையோ கொடுத்து தனிமைபடுத்தி விடுகிறோம்.  யாருக்காக சம்பாதிக்கிறோம் அந்தக் குழந்தைக்காகத்தானே. ஓடி ஓடி சம்பாதித்து என்ன செய்யப் போகிறோம்.  சேர்த்து வைக்கும் பணத்தை எல்லாம் அந்தக் குழந்தை பெரியவனாக மாறியதும் எடுத்து தான்தோன்றிதனமாக செலவு செய்வதும் ஊதாரிதனமாய் சுத்துவதும் பல இடங்களில் அரங்கேறத் தொடங்கிவிட்டது.

       ஒரு வீட்டில் கணவர் வேலைக்குச் செல்கிறார் என்றால் மனைவிக்கு என்ன வேலை.  கேட்டால் வீட்டில் உள்ள வேலைகளை பார்க்க வேண்டும் என்பார்கள். அய்யய்யோ குழந்தை வீட்டில் இருந்தால் ஒரு வேலையும் பார்க்க முடியாது என்று கொண்டு போய் மழலைர் பள்ளிகளில் விட்டு விடுகிறார்கள்.  இதை விடக் கொடுமை என்னவென்றால் முன்னர் குழந்தை முதன்முதலில்  பேசிவிட்டால் போதும் அவர்கள் அந்தக் குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சி மகிழ்ந்தார்கள். 

       தற்போது என்னங்க...... புள்ள பேச ஆரம்பிச்சுருச்சு.... ஸ்கூல்ல சேத்துருங்க.... என்று மாற்றிவிட்டோம். குழந்தை பேசுவது என்ன தேசியக் குற்றமா. பேசாவிட்டாலும் மருத்துவமனைக்கு தூக்கி சென்று செலவு செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். இதில் பல மருத்துவர்கள் காசு பார்க்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.

      குழந்தைகளோடு பேச வேண்டும்;  ஆட வேண்டும்; அப்போதான் அவர்கள் நல்லவற்றை பேசவும் தீர்க்கமான முடிவு எடுக்கவும் கற்றுக் கொள்வார்கள்.  நாம் அவர்களோடு பேசுவதே இல்லையே. காசுக்கு வேலை பார்க்கும் ஆயம்மா மட்டுமே குழந்தைகளோடு ஒப்புக்கு சிரித்து மகிழ்கிறார். குழந்தை வரம் வேண்டி அலைந்து திரிந்தவர்கள். அந்தக் குழந்தையோடு இருக்காமல் எரிச்சலடைந்து பேசுகிறார்கள். சரி, பள்ளிக்குச் செல்லலாம் என்றால் அந்தக் குழந்தையை பேசாதே பேசாதே என்று ஆசிரியர்கள் பலரின் அதட்டலில் பேசுவதற்கே அஞ்சி நடுங்கி,  எப்படி பேசுவது எப்படி வளர்வது என்று தெரியாமலேயே அந்தக் குழந்தை காட்டு மரத்தைப் போல் வளர்கிறது. 



       கதை சொல்லும் பழக்கம் இன்று முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.  பள்ளியில் சிரித்துக் கொண்டே கதை சொல்லும் ஆசிரியர், வீட்டுக்கு வந்ததும் தன் குழந்தைகளிடம் கடிந்து கொள்வதை பார்க்க முடிகிறது.  இன்றைய உலகத்தை நாம் வணிக மயமாக்கிவிட்டோம். வியாபாரம் அனைத்துமே குழந்தைகளை முன்னிலைப்படுத்தியே இயங்குகிறது.  குழந்தைகளிடம் பிறந்தது முதல் வாயில் புட்டிப்பாலை திணித்து அவர்களை செயற்கையான உலகை காட்ட ஆரம்பித்து விடுகிறோம். அவர்களால் இயற்கையை உணர்ந்து கொள்ள முடியாமல் இயந்திரமாகவே வாழ தொடங்கி விடுகிறார்கள். பிறகு, நமக்கு இயலாத காலத்தில் ஈவு இரக்கம் பார்ப்பதற்குகூட அவர்களுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது.

         நம்முடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் அவர்களுக்குள் திணிக்க முயற்சித்து அவர்களை தான் யார் என்பதை உணர வைக்க மறுக்கிறோம்.  என் குழந்தைக்கு எல்லாமும் வாங்கித் தருகிறேன் என்று கூறிவிட்டு அவர்களை விட்டு தூரமாக சென்று விடுகிறோம். பிறகு எப்படி அவர்களால் மனித உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். 

        ஒருநாளைக்கு இருபத்துபத்து நான்கு மணிநேரம் என்றால் நம் குழந்தைகளோடு எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம். இதையெல்லாம் நாம் யோசிப்பதேயில்லை. நாம்தாம் அந்த பள்ளியில் படிக்க முடியவில்லை. நம் குழந்தையாவது படிக்கட்டும் என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து படிக்க வைக்கிறோம். அவர்கள் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்ததும் இலவு வீடுபோல் ஆக்கி விடுகிறோம். வரட்டு கௌரவத்தால் பல நேரங்களில் நாம் நம்மையே இழந்துவிடுகிறோம்.

         தங்கம் சூடுபட்டால்தான் நினைத்தபடி அழகான ஆபரணமாக செய்ய முடியும். சுடர் விட வேண்டுமென்றால் சூடுபட்டுத்தான் ஆக வேண்டும்.  அதற்காக குழந்தைகளை காயப்படுத்தலாமா என்றால் தவறு. காயப்படுத்துதல் என்பது உடலில் புண்களை ஏற்படுத்துதல் மட்டும் அல்ல. சுடும் சொல்லால் தாக்குவதும் காயப்படுத்துதலுக்கு சமமே. 

       வீட்டிலிருந்து மாணவர்கள், ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் பள்ளிக்கு வருகிறார்கள்.  அவர்களிடம் அன்பினை பரிமாற வேண்டுமே தவிர, அவர்களை.....
சனியன்களா.....
நாய்களா.......
பிசாசுகளா......
பேய்களா......
கழுதைகளா........
                 -என்று திட்டுவது எந்த விதத்தில் நியாயம்.  அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் சிறு தவறுகள் மட்டுமே பெரிய அளவில் பரபரப்பாக்கப்படுகிறது. அந்த நிலை உணர்ந்து ஆசிரியர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. 



          வீட்டில் பெற்றோர்களுடன் இருக்க குழந்தைகளுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது. அப்படியானால் ஆசிரியருடன் தான் அதிக நேரம் இருக்க முடியும்.  குழந்தைகளோடு விளையாடுங்கள். அவர்களுக்குள் மகிழ்ச்சி எங்கு இருக்கிறது என்பதை கண்டறிந்து அதன்படி கற்றலை ஆரம்பியுங்கள்.

  இன்றைய அரசுகளும் ஆசிரியர்களுக்கு சாதகமாக இருக்கிறதா என்றால் அதுவும்
 கேள்விக்குறிதான். அப்படி இருக்க,  அரசு எவ்வளவுதான் திட்டங்களை தீட்டினாலும் அதை செயல்படுத்தும் இடத்தில் இருப்பவர்களே ஆசிரியர்கள். கள ஆய்வு ஆசிரியர்களுக்குத்தான் தெரியும். அதிகாரத் திமிர் அழிவைக் கொடுக்கும் என்பார்கள். அதை உணர்ந்து அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் செயல்பட வேண்டியது ஆரோக்கியமான ஒன்றாகும்.

  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் காரையூரில் பழனியாயி என்ற ஓய்வு பெற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியர் இருக்கிறார். அவர் பணியாற்றிய ஊர்களில் அவரிடம் படித்த குழந்தைகளுக்கு இன்றும் அவர்தான் கடவுளாக காட்சியளிக்கிறார்.  காரணம், அவர் நடந்து கொண்ட விதம் அப்படி. அவரைப் போல் வெளி உலகிற்கு தெரியாமல் பணியாற்றும் ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த ஆசிரியர் பாடுவார், ஆடுவார்,   கலைபொருட்கள் செய்வார். குழந்தைகளோடு சேர்ந்து விளையாடுவார். இன்றும் அவரிடம் படித்த மாணவர்கள் வீட்டில் ஏதும் சுப நிகழ்ச்சிகள் என்றால் அவருக்குத்தான் முதல்மரியாதை. அந்த ஆசிரியர் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் இல்லை.

  ''ஆறுகரையில் அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம், நல்ல நெறி கண்டு பிள்ளை வளர்ந்திடில் நாடும் நலம் பெறலாம்.... இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவினில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்....'' என்று நீதிக்கு தலைவணங்கு படத்தில் வரும் பாடல் உணர்த்துவதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். நெல் அறுக்கின்ற நேரத்தில் அறுக்காமல் அப்போதுதான் விதைக்கச் சென்றால் காலம் நம்மைப் பார்த்து சிரித்துவிடும். 


  ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு அதிகமாகவே இருக்கிறது.  அவர்களோடு குதிரை ஏறி விளையாடலாம், கண்ணாமூச்சி விளையாடலாம். நொண்டி விளையாடலாம். கதை சொல்லலாம்.  கபடி விளையாடலாம். அவர்களை மகிழ்விக்க இன்னும் என்னென்ன முடியுமோ அவ்வளவும் செய்யலாம். கடையில் பொருள் வாங்கி கொடுத்து மகிழ்ச்சி உண்டாக்குவதை விட ஒரு கதையை சொல்லி மகிழ்வித்து விடலாம். குழந்தைகளை தண்டிப்பதையும் கடும் சொற்களால் சித்தரவதை செய்வதையும் விடுத்து குழந்தைகளை குழந்தைகளாக பாருங்கள்.  குழந்தைகள் ஏதும் அறியாத உறவுகள். அவர்களுக்கு இனிய உலகை படைத்து தர வேண்டியதும், இனிய உலகை அடையாளம் காட்ட வேண்டியதும் நம் கைகளில்தான் இருக்கிறது.

  மனக்கவலையிலிருந்து மீளமுடியாதவர்களையும் மாற்றும் உன்னத சக்தி குழந்தைகளுக்கு உண்டு. இனிது எதுவென்று கேட்டால் அது குழந்தைதான். நேற்று நாம் குழந்தைகள் ; இன்று அவர்கள் குழந்தைகள்.  நாம் செய்த தவறுகளை அவர்கள் செய்யவிடாமல் இந்த உலகில் சுற்றி திரிய அனுமதிப்போம். அவர்கள் கூண்டு பறவைகள் அல்ல. இந்த உலகில் மகிழ்ச்சி நதியை வற்றாமல் ஓட விட பிறந்தவர்கள்.  அவர்கள் மிருதுவானவர்கள்; ஒருபோதும் அவர்களை காயப்படுத்த வேண்டாம்.  இனியது எது என்றால் இனிது இனிது இனிது குழந்தைகள் இனிது என்பேன்.

                   நட்பின் வழியில்
             சோலச்சி புதுக்கோட்டை
             பேச : 9788210863

4 கருத்துகள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உண்மைதான். குழந்தை இனிது. நீங்கள் ரசனையாக எழுதிய விதம் அருமை.

Unknown சொன்னது…

Very Nice....

Unknown சொன்னது…

Very Nice....

Geetha சொன்னது…

அருமை... வாழ்த்துகள்...எது மகிழ்ச்சி என்பதை உணர்த்தும் கட்டுரை சிறப்பு