இரவை இதமாக்கிய
கலைஞன் கவியரசர் கண்ணதாசன்- சோலச்சி
மொழி வாழ்த்து:-
கொதித்தெழுந்த
கண்ணகியின்
காற்சிலம்பில் வெடித்தவளே
கொடுமை கண்டு துறவு பூண்ட
மாதவியின் மடியினிலே துடித்தவளே
கரிகாலன் கட்டி எழுப்பிய
கல்லணையில் பால் வார்த்தவளே
அகத்தியம் தொல்காப்பியத்தில் எழுந்தவளே
அகர முதல என பாடி அதிகாரம் செய்து
அவனி எங்கும் மலர்ந்தவளே
எட்டுத்தொகை பத்துப்பாட்டென அகமும் புறமுமாய்
எட்டாத உயரத்தில் நிற்பவளே
கம்பன் செதுக்கிய காவியத்திலும்
கட்டுக்கடங்காமல் கலைநயமாய் பூத்தவளே
மானே தேனே மயிலே குயிலே என்று
மறுபடியும் மறுபடியும் கொஞ்சி பேசிட
இணையற்ற மொழியாளே என் தமிழே
சென்ற இடமெல்லாம் வென்றவளே
ஒன்றியத்தின் வஞ்சகத்தில் வீழ்ந்திடாமல்
எப்போதும் உயர்ந்தே நிற்பவளே
போற்றுகின்றேன் இதயத்தில் உன்னைத் தாங்கி
வாழ்த்துகின்றேன் வணங்குகின்றேன்...
கவியரங்க தலைமைக்கு:-
கனத்த குரலில் ஒரு வசீகரம்
கருத்து பா வடிக்கும் மேனியோ பொன்னிறம்
சுவை பட பேசுவதில் வல்லவர்
சுடர்விழி காட்டிடும் நல்லவர்
சங்க இலக்கியமோ சரம்சரமாய் கொட்டும்
சங்கீதம் அவர் நாவில் தேன் ஊட்டும்
ஐயா மு
பா ,
முத்துநிலவனின் செல்லப்பிள்ளை
கவிச்சுடரும் , தமிழ்ச்செம்மலும் கொண்டாடி மகிழ்வதால் – இவர்
தமிழ் சமூகத்தின் தங்கப்பிள்ளை
இதமாக பிடித்தேன் இவர் விரலை
இவர் எப்போதும் 20 வயது விடலை
இயல் இசை நாடகத்தில் மகா வேந்தர்
இன்முகத்துடனே காட்சி தரும் எங்கள் மகா சுந்தர்
இரவை இதமாக்கிய கலைஞன் :-
இன்பத்தமிழ் உள்ளவரை வாழ்ந்திடுவார்
இதயங்கள் யாவற்றையும் அளந்திடுவார்
இரவின் மடியினிலே தவழுகின்றார்
இதமான கனவுகளால் கமழுகின்றார்
மயிலிறகால் மைவிழியாள் தொட்டுவிட தொட்டுவிட தொடரும்
குயிலிசையால் குலவிளக்காள் தேன் சொட்டச் சொட்ட படரும்
இறுக்கமான மனதையும் இதமாக கிளரும்
நெருக்கமான அவர் பாட்டால் ஏதேதோ ஒளிரும்
நேரம் செல்லச் செல்ல நிச்சயமாய் குளிரும்
இருளைச் செதுக்கி இளையநிலாவை உருக்கி
என்னுயிர் தமிழைக் காய்ச்சி
பல்லுயிரும் ரசிக்கும் படியான
பாமாலை தொடுத்தவர்
பாமரரின் குரல் ஒளியாய் எளிய நடையினை கையில் எடுத்தவர்
கட்டோடு குழலாட ரசித்தவர்
கட்டுக்கடங்கா ரசமதை உதட்டோடு ருசித்தவர்
மாலை பொழுதின் மயக்கத்திலும்
கனவு காண வைக்கும் பெருங்கவிஞன்
கடல் மேனியிலும் நின்றாடும் பெரும் கலைஞன்
இறுக்கமாய் அமைந்தாலும்
கிரக்கமாய் இருந்தாலும் இவரின்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றலை
காதோரம் போர்த்திக் கொண்டால்
அழகு மிகுந்த ராஜகுமாரியும்
மேகமாக செல்வாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையையும் மூடுவாள்
மன்னவன் எங்கே எனவும் தேடுவாள்
சாமரம் வீசி சிந்துகவி பேசி
மடியில் அமர்ந்து கொஞ்சிடுவாள்
கொடியில் பூத்து குளிர்ந்திட விஞ்சிடுவாள்
அமைதியான நதியினிலே அவர் பாடல் அழைத்துச் சென்றிடும்
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலையும்
திணறடித்து வென்றிடும்
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக
தேன் தமிழின் சொல்லெடுத்து
வான் மழையில்
தான் நினைத்து
வலம் வரும் அவர் பாடல் கேட்டால்
இரவென்ன இரவு பகலும் பனி
போர்த்தி கிடக்கும்
பங்குனி வெயிலுக்கும் குளிரடிக்கும்...
ஒரு பொழுதா மலராக கொடியில் இருந்தார்
ஒரு தடவையா தேன் கொடுத்து மடியில் விழுந்தார்
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட காணலாம்
அவன் பேச நினைப்பதை அவள் பேச தோணலாம்
இணையருடன்
இவர் பாட்டொலி கேட்டுவிட்டால்
இரவுக்கு நல் விருந்து தான்
கட்டிலும் தாளம் போடும் உறங்காமல் இருந்துதான்
இவருக்கு எப்போதும் இயற்கை இளைய கன்னி
அதனால் தான் ஏங்க வைக்கின்றார் இப்போதும் துணைய எண்ணி
சோகத்தையும் சுகமாக ரசிக்க வைத்தவர்
மேகத்தையும்
மேன்மையுற தைத்தவர்
கவின்மிகு காதலையும் திறன் மிகு தத்துவத்தையும்
கரைத்துக் குடித்தவர்
கண்ணே கலைமானே என கலந்தும் கொடுத்தவர்
இவரின் பாடலோடுதான் வாழ்வு தொடங்கும்
இவரின்றி எப்படி வாழ்வும்
அடங்கும்
ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன
வீடுவரை உறவை வைத்து கடைசிவரை
அவர் பாட்டை வைத்த
மகா கலைஞனின் பாடல்கள்
சிலவற்றை
இழவு பாடல்களாய் முத்திரை குத்திய போதும்
உரிமை கீதம் பாடியவர்
அதோ அந்த பறவை போல வாழ
வேண்டும் என்று
உணர்வோடு நம்மை நாடியவர்
அடி என்னடி ராக்கம்மா என்னென்ன
நினைப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி
மூக்குத்தி மாணிக்க சிவப்பு
இரவில் இப்போது
கேட்டாலும் கிளுகிளுப்பு....
மண்ணை கூறுபோட்டு
விற்பவருக்கும்
மண்ணில் கூறுகெட்டு நிற்பவருக்கும்
ஆடி அடங்கும்
வாழ்க்கையில்
ஆறடி நிலமே சொந்தம் என்று உரைத்தார்
ஆனாலும் இப்போது அதற்கும் வழியில்லை
அரைப் படி சாம்பலுக்குள் கரைத்தார்
இனிய காற்றுக்கென்றே கட்டியதுதான் சாளரம்
இரவுக்கென்றே இவர் எழுதிய பாடல்கள் ஏராளம்
சிப்பியும் இருந்தது முத்தம் இருந்தது
திறந்து பார்க்க நேரமில்லாமல் ஏங்கிய பேரரசர்
சிந்தை இருந்தது சந்தம் இருந்தது
கவிதை பாட நேரமில்லாதபோதும்
பெருங்கவி படைத்த கவியரசர்
சொற்களைத் தேடி இவர் அலைந்ததில்லை
சொல்லும்படி இவருக்கு நிகர் யாருமில்லை
போகிற போக்கில் எழுதித் தள்ளியவர்
போகிறேன் என புலம்புவோரின் மனதையும்
அள்ளியவர்
மயக்கமா கலக்கமா எனக்கேட்டு வாலிக்கும் வாழ்வு கொடுத்தவர்
மனம் கவரும்படி திரைத்துறையில் போர் தொடுத்தவர்
நித்திரையில் முத்திரை பதிக்கும் பத்திரமாத்து தங்கம்
சித்திரைப் பெண்ணும் இவர்
மடிக்காக எப்போதும் ஏங்கும்
சிறுகூடல்பட்டியில் பிறந்த முத்து ஐயா
சிறகடித்து பறக்குது உன் வித்து ஐயா
****


