"பொதிந்து கிடந்த புன்னகை "
- கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்களின் நூல் குறித்து.... சோலச்சி
இன்றைய தமிழ் உலகில் எண்ணற்ற நூல்கள் புதிது புதிதாய் உதயமாகிக்கொண்டு இருக்கின்றன. அவற்றில் கவிதை நூல்களே முதலிடத்தில் உள்ளன. ஆனால், ஏனோ கவிஞர்களை நாம் கொண்டாட தயங்குகிறோம். கவிதைகளை கொண்டாட மறுக்கிறோம். காலத்தை எடுத்துச் சொல்வதிலும் மொழியை முன்னெடுத்துச் செல்வதிலும் கவிஞர்களும் கவிதைகளும் முக்கிய பங்காற்றுகின்றன. எளிய நடை, எளிய பதம் என்பது முண்டாசு கவிஞர் பாரதியின் இலக்கணம். அந்த வகையில் அமையப் பெற்ற அற்புதமான நூல்களில் கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்களின் "பொதிந்தி கிடந்த புன்னகை " யும் ஒன்று.
இந்நூலில் காதல் மரம் படந்து வளர்ந்து இருக்கிறது. அதில் காய்களை விட கனிகள் நிறைந்து கிடக்கின்றன. வாழ்வின் இலக்கணம் ஆங்காங்கே குவிந்து இருக்கிறது. பொதுவுடமை பேசும் மார்க்ஸ் அழகாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். விதைகள் கொட்டி அவை வேகமாய் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. நடப்பு அரசியலை துவைத்து பல இடங்களில் காயப் போட்டிருக்கிறார். விவசாயத்தை செழிக்க வைக்க போராடுகிறார். அவர்களுக்காக கண்ணீர் சிந்துகிறார். இந்தக் காட்சிகளை எல்லாம் பொதிந்து கிடந்த புன்னகைக்குள் நிரப்பி வைத்திருக்கிறார் கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்கள்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் புதுக்கோட்டை நகர் மன்றத்தில் 202 கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம் கவிஞர் மு.மேத்தா முன்னிலையில் நடைபெற்றது. அதில் விலை வாசி உயர்வைப் பற்றிய கவிதை ஒன்று....
"சூடாக டீ கேட்க
சுட்டது விலை ....?"
இந்தக் கவிதையை எழுதியவர் கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்கள்தான். முத்திரைக் கவிதைகளை படைக்க வேண்டும் என்பதைவிட புறம்போக்குகளின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அந்தக் கவியரங்கத்தில் நானும் கவிதை பாடினேன் என்பது வரலாறு.
முதல் கவிதை இவ்வாறு நிறைவு பெறுகிறது....
"எனக்குள் எனக்காய்
நீ
எப்போது மாறிடுவாய்....?
ஒரு காதலனோ அல்லது காதலியோ தனது காதலில் உருகுவதை நம் கண் முன்னால் காட்சிபடுத்தி நம்மை அக்காதல் தேசத்திற்குள் அழைத்துச் செல்கிறார்.
எதார்த்த உலகில் மதத்தை சாதியை எவ்வாறு கணிக்கிறார்கள் என்பதை இப்படி சொல்கிறார்...
"பெயர்
தெரிந்த நொடியில்
முடிவாகிப் போகிறது
மதம் எதுவென...."
அப்துல்லா என்றால் இசுலாமியர், அலெக்ஸ் என்றால் கிறித்துவர், அடைக்கலம் என்றால் இந்து... பிறகு ஊர் தெரு பெயர் கேட்டால் எல்லாம் தெரிந்து விடும். மதமும் சாதியும் மனிதனை கட்டிக்கொள்ளவில்லை. மனிதன்தான் கட்டிக் கொண்டு அலைகிறான்.
விதை என்ற தலைப்பில் ஒரு அழகான கவிதை ...
"இது
வேரின் வீரியம் அல்ல
விதையின் வீரியம்....!
விதைகள்
உறங்குவதில்லை
உயித்தெழும்...."
என்று நம்மை தட்டி எழுப்புகிறார். வாய்ப்புகள் கிடைக்கவில்லை, சாதிக்க வழி தெரியவில்லை என்பவர்களுக்கு கவிஞரின் விதை என்ற கவிதை ஒரு பாடமாக அமைகிறது. பொதிந்து கிடந்த புன்னகை என்ற தலைப்பில் உள்ள கவிதை கவிஞருக்கும் பூவுக்குமான உரையாடல். கவிஞர் பூக்களிடமும் பேசும் வல்லமை பெற்றவர் என்பதை நம்மால் உணர முடிகிறது.
துண்டு என்கிற கவிதையில் இத்தேசத்தில் துண்டாடப்பட்டு நசுக்கப்பட்டு கிடக்கும் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கிறது....
"காலம் கடந்து
தோளில் ஏற்றிய
துண்டை சுமந்து
கௌரவ மிடுக்காய்
சுகமாய் நட...
சுத்தமாகட்டும் வீதிகள்...!"
என்று அந்த மக்களுக்காக குரல் கொடுப்பதிலிருந்து தாம் ஒரு சமூகப் போராளி என்பதை நிலை நிறுத்துகிறார். நம் சக தோழர்களான திருநங்கைகள் பற்றி கூறும்போது ....
"பேச்சிலும்
எழுத்திலும்
பிழைகள் இருக்கலாம்
பிறப்பிலுமா....????
என்று கண்ணீர் வடிக்கிறார் கவிஞர். பிள்ளைகளின் பெரும் கடமை பெற்றோர்களை கவனித்துக் கொள்வதுதான். நவீனம் என்று பிதற்றித் திரியும் இந்த உலகில் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் தள்ளிவிடுவதையே தலையாய நோக்கமாக கருதுகிறார்கள். முதியோர் இல்லமும் இல்லையென்றால் அவர்கள் பாடு பெரும்பாடுதான். அதனால்தான் முதியோர் இல்லங்கள் வாழ்க என்று கவிஞர் ஒருவர் பாடினார்.
"என் இல்லத்தில்
எவரெவருக்கோ
இலை போட்டு
உணவளித்து மகிழ்ந்த
இந்த கை....
கை நீட்டுகிறது
ஆதரவற்றவளாய்
முதியோர் இல்லத்தில்...."
என்று "இந்த கை " என்ற தலைப்பில் ஒரு தாய் சொல்வது போல் படைத்திருக்கிறார். ஒருநிமிடம் இறந்து போன என் தாய்க்காக அழுதுவிட்டுத்தான் அடுத்த கவிதையே வாசிக்கச் சென்றேன் கனத்த இதயத்தோடு.....
நான் சாகும் போது
பக்கத்தில் இரு.... என்கிற கவிதைகளிலெல்லாம் நம்மை ஏதோ இனம்புரியாத தாக்கத்தை நிகழ்த்திவிட்டுச் செல்கிறார் கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்கள். ஒவ்வொரு பக்கமும் நம் பக்கம் அமர்ந்து உறவாடும்படியான அற்புதமான கவிதைகளை படைத்து இத்தேசத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கிட முயலும் கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்களை மனசார வாழ்த்துகிறேன்.
நூலினை மேன்மை பதிப்பகம் மணி அவர்கள் மிகச் சிறப்பாக கையாண்டு வடிவமைத்திருக்கிறார். பதிப்பகத்தாருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூலுக்கு தீக்கதிர் ஆசிரியர் தோழர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள், தமிழ் இந்து நாளிதழ் முதன்மை இணையாசிரியர் தோழர் மு.முருகேஷ், சிந்தனைக் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள், தோழர் மு.அன்பரசு அவர்கள் என மிகப்பெரிய ஆளுமைகள் அணிந்துரை வழங்கி அழகு சேர்த்திருக்கிறார்கள். கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்கள் இன்னும் நூல்கள் பல வெளியிட்டு தமிழ்த்தாயின் செல்லப் பிள்ளையாக வலம் வர வாழ்த்தி மகிழ்கின்றென்.
விலை ரூபாய் 80/-
பதிப்பாசிரியர் : 044 - 28472058
நூலாசிரியர் : 9443531981
வாழ்த்துகளுடன்
அன்பு பண்பு பாசம்
நட்பின் வழியில்
சோலச்சி புதுக்கோட்டை