எனது பார்வையில் ......
தாயின் நூல் குறித்து மகன்....
"மனம் சுடும் தோட்டாக்கள் "
கவிஞர்கள், அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் இன்றைய சூழலில் தனக்கான முத்திரையை பதித்து வருகிறார் புதுக்கோட்டையை சேர்ந்த எழுச்சிக்கவிஞர் மு.கீதா அவர்கள். எதையாவது எழுதி குவித்து விட வேண்டும் என்று எண்ணாமல் எதை எழுதுவது என்று தீர்மானம் செய்து அது இச்சமூகத்திற்கு பயன்படுமா என்று மனதுக்குள் முடிவு செய்து அதையே "மனம் சுடும் தோட்டாக்களாக " படுத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
பெண்களுக்கான போராளியாகவே வாழ்ந்து வருகிறார் தனது கவிதையிலும். சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றிருக்கும் இன்றைய சூழலில் இவர் காலத்தின் ஒளி விளக்கு. இவரது கவிதை நிச்சயமாக இவ்வுலகிற்கு மிகப்பெரிய வெளிச்சத்தை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. பெண்ணியம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமூகத்தையும் அலசி ஆராய்ந்திருக்கிறார்.
அமெரிக்காவில் வசித்துவரும் சகோதரி வி.கிரேஸ் பிரதிபா அவர்கள் மிகச் சரியான முன்னுரையை எழுதியிருக்குறார். காகிதம் பதிப்பகம் அமரர் மனோபாரதி மிக அழகாக நூலினை தயார்செய்து இருக்கிறார்.
"நட்டநடு இரவு
பன்னிரெண்டு மணி
உடல் நிறைய நகைகளுடன்
ஒற்றைப் பெண் ஊர்வலமாய்......,,,,"
- என்று மாரியம்மன் மூலம் ஆணாதிக்க வர்க்கத்திற்கு சவுக்கடி கொடுத்திருக்கும் இவரது துணிச்சலை மிகவும் ரசித்து மனசார பாராட்டி மகிழ்கின்றேன்.
விழி தூவிய விதைகள், ஒரு கோப்பை மனிதம் இவரது முந்தைய நூல்கள் என்றாலும் இந்த நூலில் மாறுபட்டு காட்சியளிக்கிறார். இவரது கவிதையின் வளர்ச்சியை உணர முடிகிறது. பள்ளிக்கூடத்து ஆசிரியராக எத்தனையோ பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் யாவரும் புரட்சியாளராக போராளியாக சமூக சிந்தனை உடையவர்களாக இருக்கின்றார்களா.....? இல்லையே... ஆனால் இவர் தனித்துவமானவர். அதனால்தான் அனைத்துமுகமாகவும் இயங்கிக் கொண்டு இருக்கிறார்.
"மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா...." என்ற வரிகளுக்கு பொருள் நிறைந்தவராய் இருக்கும் கவிஞரை மேலும் மனசார பாராட்டி மகிழ்கின்றேன்.
"யானையை மிரட்டுபவள்
கொசுவிற்கு பயந்தலறுவதை
ரசிக்கும் படுக்கையறை......"
என்று சின்னக் கண்ணம்மாவை எதிரே தோன்ற வைத்து பெண் குழந்தைகளுக்கு மகுடம் சூட்டி மகிழ்கிறார். வக்கிரப்புத்தி உடைய ஆண்களையும் மனம் மாற்றம் செய்ய முயற்சிக்கிறார். ஒரு படைப்பு வெளி வருகிறது என்று சொன்னால் அது ஏதாவது ஒரு மாற்றத்தை உண்டுபண்ண வேண்டும். இவரின் இந்த நூல் நிச்சயமாக அவர் எதிர்பார்க்கும் ஒருமாற்றத்திற்கான வழியைச் செய்யும்.
காலந்தொட்டு டீக்கடைகளில்தான் அரசியல் பேச்சுகள் ஊர்க் கதைகள் எல்லாம் அரங்கேறும். இந்த நிகழ்வினை நயமாக நக்கலடித்து இவ்வாறு பேசுகிறார் கவிஞர் ....
" உலகைச் சுற்றி பார்க்க ஆசையா
வா
டீக்கடை வைக்கலாம் ......."
என்கிறார்.
அரசியல், சாதி, பெண்ணியம், குழந்தைகள் என கவிதைக் களஞ்சியம் இதில் குவிந்து கிடக்கின்றன. வாசிக்கும் பழக்கம் உள்ள ஒவ்வொருவரது இல்லத்திலும் இருக்க வேண்டிய இந்த தோட்டாக்களை வாங்கி வைத்து இலக்கிய இன்பம் பெற வேண்டிய அற்புதமான நூல்....
76 பக்கங்கள் கொண்ட மனம் சுடும் தோட்டாக்கள் நிச்சயமாக மனதைச் சுடும்...
தொடர்புக்கு:
கவிஞர் மு.கீதா
(தேவதா தமிழ்)
பேச : 9659247363
மகிழ்ச்சியுடன்
அன்பு பண்பு பாசம்
நட்பின் வழியில்
சோலச்சி புதுக்கோட்டை
2 கருத்துகள்:
தங்களின் பதிவினைப் படிக்கப் படிக்க உடனே,சகோதரியின் நூலினைப் படிக்கவேண்டும் என்ற ஆவல் கூடுகிறது நண்பரே
நன்றி
வாவ் மிக்க நன்றி பா
கருத்துரையிடுக