சனி, 18 அக்டோபர், 2025

சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி - எழுத்தாளர் பிறைமதி

 சொற்களில் சலனமூட்டும் சோலச்சியின் எழுத்துகள்..

-------------



    எழுத்து என்பது அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் லாவகமாக கை கொடுப்பதில்லை. சிலருக்கு மட்டுமே அது கைக்குள் அடங்கி போகிறது. அது, மாமா சோலச்சி அவர்களின் கவிதைகளுக்குள் அடங்கி நிற்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறேன்.

    கவிஞர் சோலச்சி அவர்களின் அனைத்து புத்தகங்களையும் நான் வாசித்திருக்கிறேன். அந்த வகையில் என்னுடைய கருத்து மிக முக்கியமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நிற்க...

    சமூக மாற்றத்திற்கு குரலாக எழுந்த கவிஞர் சோலச்சி அவர்கள், தனது கவிதைகளில் சாதி, மதம், இனம், நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து பேசுகிறார். “ஆப்பையால ஒரு அடி” எனும் இந்த கவிதைத் தொகுப்பில், ஒரு போராளியின் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். வெறும் அழகு சொல்லாகக் கவிதையை எழுதவில்லை; விழிப்புணர்வுக்கான கருவியாகக் கவிதையை மாற்றியிருக்கிறார்.

    இந்த நூலில் இடம் பெற்ற சில கவிதைகளைப் படித்த போது, ​​மனதை உலுக்கியதோடு மட்டுமல்லாமல் பல கவிதைகள் சிந்திக்கவும் வைத்தன. சில வரிகள் சமூக பிரச்சினைகளை கண் முன்னே கொண்டு வருகின்றன.. ஒவ்வொரு வரியிலும் சிந்தனையும், சமுதாயத்தின் அசிங்கங்களுக்கும் எதிரான சத்தமும் உள்ளது. ஏற்றத் தாழ்வுகள், சாதிவெறி, மதத்தின் பெயரிலான பாகுபாடுகள் போன்றவை இன்று நம் சமூகத்தில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் பரவியிருக்கும் போது, சோலச்சியின் கவிதைகள் காலத்தை தாண்டி பேசுகின்றன.

      சோலச்சி எழுதிய சில வரிகளில் அம்மாவின் பாசமும், அப்பாவின் நேசமும், மாணவர்களின் தூய அன்பும் நம்மை ஈர்க்கும் வகையில் காட்சியளிக்கின்றன. பள்ளி என்பது வெறும் கல்விக் கூடமல்ல, வாழ்க்கை கற்பிக்கும் இடம் என்பதையும் உணர்த்துகிறார். மாணவர்கள், பள்ளி, ஆசிரியர்கள் ஆகிய மூன்றுக்கும் இடையே உள்ள உருக்கமான உறவை மிக நேர்த்தியாக வருணித்திருக்கிறார்.

      இதைவிட முக்கியமானது, சோலச்சி தனது எழுத்துக்களில் நிகழ்கால நிகழ்வுகளையும் பதிவு செய்கிறார். இது இவரை ஒரு கவிஞருக்கு மேலும் சமூக ஆய்வாளராக மாற்றுகிறது. சாதிய பிரிவினை, பாலியல் சித்திரவதைகள், பெண்கள் மீது நிகழும் குற்றங்கள், ஊக்கமளிக்கும் வரிகளை முன்வைத்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வெறும் விமர்சனத்தில் அல்ல, மாற்றத்திற்கான முயற்சியிலும் ஈடுபடுகிறார்.

      இந்த, அவர் எழுத்துக்கள் பாராட்டைப் பெறும் வகையில் மட்டுமல்ல, பரிணாம மாற்றத்திற்கான ஊக்கமாகவும் அமைகின்றன. அவரது வார்த்தைகள் வாசகரின் உள்ளத்தைக் கடக்கின்றன. எதார்த்தங்களை மறைக்காமல், நேர்மையாக, உரக்கச் சொல்லும் எழுத்துகள். இந்த நூலை ஒரு சொல் புரட்சியாக மாற்றுகின்றன.

    நாம் வாழும் இந்த சமூகத்தில், பலரும் அடக்கப்படுகிறார்கள்; வாயடைக்கப் படுகிறார்கள். ஆனால், சோலச்சி மாதிரியானவர்கள், எழுத்துக்களால் அவர்கள் குரலை எழுப்ப முயற்சிக்கிறார்கள். அவருடைய வரிகளை வாசிக்கும்போது, ​​நமது உறைவிடங்களிலும், பள்ளி வளாகங்களிலும், தெருக்களிலும் ஒலிக்கும் குரலாய் உணர்கிறோம்.

     அத்தகைய கவிஞர் இன்னும் அதிகம் எழுத வேண்டும். சமூகத்தின் ஒவ்வொரு மூலையிலும் அவர் கவிதைகளில் ஒளிவிட வேண்டும்.

    “ஆப்பையால ஒரு அடி” போன்ற நூல்கள் மட்டும் இல்லாமல், இன்னும் பல நூல்களும் உருவாக வேண்டும். சமூகத்தின் முகத்தை மாற்றும் உந்துசக்தியாக அவர் எழுத்துக்கள் அமைவது உறுதி.

சோலச்சி ( Solachy Pudukkottai ) – எழுத்துப் புரட்சி கவிஞர் , குரலில்லாத மக்களின் பிரதிநிதி.

எழுத்தாளர் பிறைமதி

வாழ்த்துகள் மாமா...

நிறைய பாசங்களுடன்

பிறைமதி குப்புசாமி

சென்னை

98435 14251

17-10-2025

இரவு 08:02 மணி

நூல் வெளியீடு:

செங்காந்தள் சோழன் பதிப்பகம் 

பேச்சு:  +91 98657 80742

கருத்துகள் இல்லை: