"மனம் சொல்லும் மகத்தான படைப்பு" - சோலச்சி
"மலைச்சாரலில் மலர்ந்த மலர்கள்" என்னும் கவிதை நூலினை மருத்துவர் ஆ.இந்திராணி அவர்கள் எழுதி ஒளிரும் வளர்மதி பதிப்பகம் மூலமாக வெளியீடு செய்துள்ளார். அன்னை மொழியாம் தமிழுக்கு கவிதைகளால் அணிகலன்கள் செய்து பெருமை சேர்த்துள்ளார். எளிய சொற்களால் எல்லோரும் வாசித்து மகிழும்படியான இனிய நடையில் கவிதை நூலை படைத்திருப்பது சாலச் சிறந்தது. பார்த்தவுடனேயே வாசிக்கும்படியான கவிதைகளை படைத்திருக்கும் கவிஞருக்கு முதலில் மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்து மகிழ்கிறேன்.
கரையில்நின்று கனவுகண்டால்
சிப்பி திறக்காது!.. நீ
கடலில்மூழ்கி எழுந்திடாமல்
முத்து கிடைக்காது!
பெருமுயற்சி, உழைப்பில்லாமல்
வெற்றி பிறக்காது!.. என்றும்
பிறரின்காலில் நிற்பவர்க்கு
வாழ்வு சிறக்காது!
என்பார் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள். இந்தக் கவிதை வரிகளை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு கரையில் நின்று வேடிக்கை பார்க்காமல் தமிழ் கடலில் மூழ்கி கவிதை என்னும் முத்துக்களை படைத்துள்ளார் கவிஞர் ஆ.இந்திராணி அவர்கள்.
தன்னை ஈன்றெடுத்த தெய்வத்தாய் ஜெகதாம்பாள் அவர்களுக்கு இக்கவிதை நூலை சமர்ப்பித்துள்ளார். முப்பாலை தன்னகத்தே கொண்டு உலகப் பொதுமறையாக திகழ்ந்து கொண்டிருக்கும் திருக்குறளுக்கு மென்மேலும் மகுடம் சூட்டும் விதமாக திருக்குறள் பற்றிய கவிதை முதல் படைப்பாக பதிவு செய்துள்ளார். வாழ்க்கையை முறைப்படி நெறிப்படி வாழ்வதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தவர் திருவள்ளுவர் என்று சொன்னால் மிகையாகாது.
உன் ஈற்றடி ஈகையால்
உலகமே
உயர்வு கொண்டது...!
என்று திருக்குறளின் பெருமையை திறம்பட பேசினார் கவிஞர். திருக்குறளை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டால் உலகில் அமைதி திரும்பும்; இனிமை பெருகும்; வளமை கூடும்.
ஒவ்வொரு மனிதனிடத்திலும் மற்றவர்களைப் போல் உயர வேண்டும் என்கிற உயர்வான சிந்தனை மேலோங்க வேண்டும். ஆனால், நடப்பது என்ன..? போட்டி போடுவதற்கு பதிலாக பெரும்பாலும் பொறாமை குணம்தான் மேலோங்கி நிற்கிறது. அதனால்தான் வளர்ச்சி என்பது வீழ்ச்சியாகவே தொடர்கிறது.
பொறாமை
கொள்வது
அறமல்ல..!
பொறாமை தீ
அணைக்கும்
ஆயுதம் அறம்..!
என அறம் பாடுகின்றார் கவிஞர். அறம் எது..? புறம் எது..? என இச்சமூகத்திற்கு நாம் சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம். வளரும் தலைமுறையினர் விஞ்ஞானத்தை கரம் பிடித்து அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அறம் எது புறம் எது என தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து மேன்மையான சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும் இருக்க வேண்டும். இதைத்தான் கவிஞர் திறம்பட செய்து இருக்கின்றார்.
தன் வாரிசு விந்தணுவை
தாயவள் கருவறையில்
வித்தென விதைத்து
விளைபயிரிடும் விவசாயி...!
ஊனை உருக்கி
உரமாய் உழைத்து
உயிராய் வளர்த்து
தலைக்கு மேல் உயர்த்தி
எட்ட உலகை
எடுத்துக் காண்பிப்பவன்...!
என்று தந்தையைப் பற்றி குறிப்பிடுகின்றார். இன்றைய அவசர உலகில் வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையை வயது முதிர்வு காலத்தில் எத்தனை குழந்தைகள் பேணிப் பாதுகாக்கிறார்கள் என்பது கேள்விக்குறிதான்..?
உன்
அஞ்சறைபெட்டியே
என்
அவசரகால
உதவி
வாங்கி...!
என்று தாயின் அருமையை கொண்டாடுகின்றார். உலக வங்கியே நட்டத்தில் ஓடினாலும் தாயின் இந்த வங்கி பாதுகாப்பு பெட்டகத்தைப் போன்றது. எப்போதும் நட்டத்தில் இயங்காத வண்ணம் தாய் பார்த்துக் கொள்வாள். காரணம், அதில்தான் மருத்துவ குணங்கள் நிரம்பிய சீரகம், சோம்பு , வெந்தயம் , மிளகு, மஞ்சள் என அனைத்தும் அடங்கி இருக்கும்.
புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்
உன்னால முடியாது தம்பி
அட.. பாதி புள்ள பொறக்குதப்பா
பசும்பாலா தாய் பாலா நம்பி...!
இது அண்ணாமலை திரைப்படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாடல் வரிகள். குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம். குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால்தான். தாய்ப்பாலில்தான் தேவையான அனைத்து சத்துகளும் நிறைந்த குழந்தைக்கு காணப்படுகிறது. தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு பசும்பால்தான் துணையாக இருக்கிறது.
தாய்மை தரும் காப்பியம்
வெண்மை நிற ஓவியம்
அன்பு குன்றாத
அமுத சுரபி..!
என்கின்றார் கவிஞர். இன்று பணிக்கு செல்லும் பெரும்பாலான தாய்மார்களால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவது சிரமமாக உள்ளது. இதை கவனத்தில் கொண்டு தான் தமிழ்நாடு அரசு தமது பணியாளர்களுக்கு ஒரு வருட காலம் மகப்பேறு விடுப்பு அளித்து தாய்மையை கொண்டாடுகின்றது.
உலகமே கொண்டாடும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களை இந்திய சமூகம் சாதிக்குள் மதத்திற்குள் அடைத்து வைத்துள்ளது என்பது வேதனைக்குரியது. ஒப்பற்ற மேதையை கொண்டாடி மகிழ வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
சமத்துவம் முழங்கி
சாதி மத பேதங்களை
சாட்டை அடித்து விரட்டிய சகாப்தமே....!
என்று அண்ணல் அம்பேத்கர் கவிதையில் முழங்குகின்றார் கவிஞர். அண்ணல் அம்பேத்கர் அவர்களை ஒரு வட்டத்திற்குள் அடைத்து வைத்து பார்க்கும் மனநிலையை இந்திய சமூகத்தின் மாபெரும் சாபக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும்.
காதலின் நறுமணம்
மோதலின் கரிய மேகம்
காதலின் நிசப்தம்
பிரிவின் பனித்துளி
பரிவின் பச்சை இலை
பாசத்தின் புது மொட்டு
அன்பின் வண்ண மலர்
எல்லாம் என் வரிகளில் விரிகிறது
ஆணவத்தின் முள் கூட
சாரலில் நனைந்து மென்மையடைகிறது.....
என்ற நூலின் நிறைவு கவிதையான மலைச்சாரலில் மலர்ந்த மலர்களில் தனது ஓட்டத்தை இவ்வாறாகப் பதிவு செய்கிறார் கவிஞர் ஆ. இந்திராணி அவர்கள். நூலில் வாசித்து மகிழ்வதற்கும் பார்த்து ரசிக்கும் எண்ணற்ற கவிதைகளை ஓவியமாக தீட்டியுள்ளார். ஒவ்வொரு கவிதையும் உங்களுக்குள் ஏதோ ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்தும். அலங்காரத்திற்காக சொற்களை செதுக்காமல் தமிழ்ச் சமூகம் அங்கீகரிக்கும் சொற்களை செதுக்கி புனைந்துள்ளார். தமிழுக்கு புதிய வரவாக கிடைத்திருக்கும் மழைச்சரலில் மலர்ந்த மலர்களை நாம் கொண்டாடி மகிழ்வோம்
இந்நூலில் தந்தையைக் கொண்டாடுகின்றார்; தாயைக்கொண்டாடுகின்றார்; பெண்களை கொண்டாடி மகிழ்கிறார்; புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரை பாடுபொருளாகக் கொண்டு பாடி மகிழ்கின்றார். அறிவைப் புகட்டிய ஆசிரியர் பெருமக்களைப் போற்றி மகிழ்கின்றார். தேசிய தலைவர்களான ஜவர்கலால் நேரு, பெருந்தலைவர் காமராஜர், காந்தியடிகள் என எல்லோரையும் பாரபட்சம் பாராமல் பாடி மகிழ்கிறார். மீனவர்களின் நலனில் அக்கறை கொள்கிறார். குழந்தைகள் விளையாடுவதற்கு சொல்லிக் கொடுக்கிறார். தான் ஒரு மருத்துவர் என்பதால் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டு நோயில்லாமல் வாழ்வதற்கான நெடும்பட்டியலையும் தருகின்றார். யோகா செய்யுங்கள்.. காரணம், நோய் நொடி இல்லாமல் வாழலாம் என்ற வழிமுறைகளையும் தருகின்றார்.
தமிழ்ச்சமூகம் மருத்துவர் ஆ.இந்திராணி அவர்களை போற்றிப் பாதுகாக்க வேண்டும். எனவே, அறிவியலை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கான எளிய வழிமுறைகளை எல்லோருக்கும் புரியும்படியான சொற்கள் பயன்படுத்தி நமக்கு கவிதை நூலாகப் படைத்திருக்கும் கவிஞர் அவர்களைநாம் கொண்டாடாமல் வேறு யார் கொண்டாடுவது....? அதனால்தான், கவிஞரைப் போற்றி பாதுகாக்க வேண்டும் என்று கூறுகின்றேன்.
இந்நூலுக்கு புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள், தமிழ்ச்செம்மல் ரமா இராமநாதன் அவர்கள், தமிழ் ஓலைச்சுவடிப் படியெடுப்பாளர் கவிஞர் அ.இரம்யா அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளனர். மேலும், கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள் கவிதையால் வாழ்த்து மடல் வரைந்துள்ளார்கள்.
இன்னும் நிறைய கவிதைகளைப் புனைந்து தமிழ் மொழிக்கு அணிகலனாய் சூட்டி மகிழ வேண்டும் என்று மனசார வாழ்த்தி மகிழ்கின்றேன். ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டிய நூல். தமிழ் சான்றோர் போற்றும் இந்நூல் அனைத்து இல்லங்களிலும் உள்ளங்களிலும் குடியேறட்டும்.
பேரன்பின் வழியில்
சோலச்சி
நூல் வெளியீடு: ஒளிரும் வளர்மதி பதிப்பகம்
பதிப்பகத்தார் அலைபேசி: +91 70940 00253
ஆண்டு: 2025
பக்கங்கள்: 114
விலை ரூ 120/-
பின் குறிப்பு:
நான் உடல்நலம் குன்றி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ( 9 சூலை 2025 ) அனுமதிக்கப்பட்டிருந்த காலக்கட்டத்தில் போற்றுதலுக்குரிய கவிஞர் ஐயா கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று கவிஞர் மருத்துவர் ஆ. இந்திராணி அவர்கள் தாயுள்ளத்தோடு என்னைக் கவனித்துக் கொண்டார்கள் என்றும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். என்னை மட்டுமல்ல, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவப் பயனாளிகள் அனைவரையும் தாயுள்ளத்தோடு கவனித்துக் கொண்டதை கண்கூடாக பார்த்தேன். அவர்களின் மருத்துவப் பணியும் இலக்கியப் பணியும் சிறக்க மனசார வாழ்த்துகின்றேன்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக