பெரும் சுடராய் திகழும் எங்கள் கவிச்சுடர்
செப்டம்பர் 5 ஆசிரியர் தின விழா
நான் பெரிதும் நேசிக்கும் ஆசிரியர்
சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சமூக இயல் ஆசிரியர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள்
பொருள் ஈட்டுவதும் புகழ் தேடி அழுவதும் படைப்பாளரின் நோக்கம் கிடையாது . சமூகத்தின் மீது தீராத அக்கறை கொண்டவர்கள் படைப்பாளிகள் . சமூகத்திற்கு எது தேவையோ அதை உணர்ந்து எழுதக் கூடியவர்களாக இருக்க வேண்டும் . ஆதலால் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட படைப்பாளிகள் அனைவருமே ஆசிரியர்கள்தான் . இச்சமுகம் சீர்பட வாழ்வதில் படைப்பாளிகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்பதை மறுக்க இயலாது. தாழ்ந்து கிடக்கும் சமூகத்தை சிகரத்தின் உச்சிக்கு கொண்டு செல்வதும் மேடு பள்ளம் நிறைந்த சமூகத்தை சமநிலைப்படுத்துவதும் எழுத்தாளர்களின் தலையாய பணி . தனது எழுத்தால் பேச்சால் இச்சமுகத்தை மாண்பு பெறச் செய்யும் மகத்தான பணியை செய்து வருகின்றார் புதுக்கோட்டை மண்ணின் எழுத்துச் சக்கரவர்த்தி எங்கள் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள்
செல்லும் இடமெல்லாம் தமிழின் மேன்மையையும் திராவிட சித்தாந்தத்தின் மாண்பையும் சொல் திறத்தால் நாவன்மையால் நிலைநாட்டி வருகின்றார் . பரிசுக்காக பாட்டு எழுதுவதும் பார் ஏய்க்க கூட்டு சேர்வதும் நிலம் சுமக்க வீணாக வாழும் இவ்வுலகில் தமிழைத் தன்னுயிராய் கருதி ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டோடு பயணித்து வரும் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள் சந்தப்பாவேந்தர் வெண்ணரசு அவர்களின் வாரிசு ஆவார் .
ஆசிரியர் என்பவர் யார் என்பதற்கு தமிழின் தொன்மையான இலக்கியமான நன்னூல் மிகச்சிறந்த இலக்கணத்தை வகுத்து தந்துள்ளது . அந்த இலக்கணத்திற்கு முழு தகுதி உடையவர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள் என்று சொன்னால் மிகை ஆகாது . உண்மையை உரக்கச் சொல்வது தானே தமிழன்னை நமக்கு கற்றுக் கொடுத்த தலையாய பாடம் .
வீழ்ந்து கிடக்கும் மனிதருக்கும் மனம் தாழ்ந்து கிடக்கும் மனிதருக்கும் ஏற்றமுற கவிதைகளைப் படைத்து எழுச்சி பெற செய்கின்றார் . தொட்டிலில் உறங்கும் குழந்தையும் இவர் கவிதை கேட்டு விட்டால் தானாய் எழுந்து நடைபழகி தமிழ் அமுது சுவைக்கும் . தடுமாறி நிற்போரும் இவர்கவிதை கேட்டு விட்டால் இடம் மாறாது இதயம் துடிக்கும் .
குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குணம் இனியவும் அமைபவன்
நூல் உரை ஆசிரி யன்னே
- நன்னூல்
கவிச்சுடரின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று . இச்சமூகத்திற்கு பாவேந்தர் பாரதிதாசன் வழியில் நீக்கமற கவிதைகளை படைத்து வருகின்றார் . ஒவ்வொரு கவிதையும் உள்ளத்துள் ஊடுருவி உயர்வு பெறச் செய்யும் என்பது திண்ணம் . தமிழ் உலகம் கொண்டாட வேண்டிய கவிச்சுடரோ தேன் கிண்ணம் . முடங்கி கிடப்போரும் வழி தெரியாது மூழ்கி கிடப்போரும் இவரின் கவிதையினை வாசித்தால் முழு நிலவாய் ஒளி வீசுவர் என்பதில் ஒருபோதும் ஐயமில்லை. என்னால் சாதிக்க முடியுமா என்று வாழ்வில் ஏங்குவோரின் தடைகளை உடைக்கும் விதமாக எண்ணற்ற கவிதைகளை எழுதி சரித்திர பொன்னேட்டில் தனக்கான முத்திரையைப் பதித்துக்கொண்டு இருக்கின்றார் . அவரின் கவிதைகள் சிலவற்றை இங்கே சான்றாக வழங்குவதில் பெருமை அடைகிறேன் .
கரையில்நின்று கனவுகண்டால்
சிப்பி திறக்காது!.. நீ
கடலில்மூழ்கி எழுந்திடாமல்
முத்து கிடைக்காது!
பெருமுயற்சி, உழைப்பில்லாமல்
வெற்றி பிறக்காது!.. என்றும்
பிறரின்காலில் நிற்பவர்க்கு
வாழ்வு சிறக்காது! .
இந்த கவிதையை வாசிக்கின்ற பொழுதே அதன் தனித்துவத்தை உணரலாம் . இக்கவிதையை விளக்குவதற்கு பிறரின் விளக்க உரைகளோ தெளிவுரைகளோ தேவையில்லை . சொந்தக் காலில் நிற்பதற்கும் சுயமாய் சிந்திப்பதற்கும் வழியமைத்துக் கொடுக்கின்றார் கவிஞர் கவிச்சுடர் அவர்கள். உழைக்காமல் பிறரின் தயவால் உச்சம் தொட வேண்டும் என நினைப்போரின் இதயத்தில் உள்ளிறங்கி உழைக்க வேண்டும் என உற்சாகமூட்டும் கவிதை இதுவன்றோ .!
தமிழ் சமூகம் மட்டுமல்லாது உலகமே கொண்டாடி மகிழ வேண்டிய கவிஞர்தான் கவிச்சுடர் என்பதில் ஐயமில்லை . ஏனென்றால் எல்லோருக்குமான கவிதையை படைத்திடும் வல்லவர் இவர் . படைப்பாளர் தன் மொழியின் மீது அதீத பற்று உள்ளவராகவும் மக்கள் சமூகத்தின் மீது நேயம் மிக்கவராகவும் இருக்க வேண்டும். அவர்தான் உண்மையாக படைப்புலகத்தின் ஆளுமை மிக்கவர் ஆவார் . மற்றொரு கவிதை ஒன்றை உங்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கின்றேன் .
சோம்பலுக்குள் மூழ்கிவிட்டால்
மீளமுடி யாது!.. வெறும்
தூக்கம்ஒன்றே நோக்கம்என்றால்
நாளைவிடி யாது!
சாம்பலுக்குள் மீண்டெழும்தீ
எளிதில்அணை யாது!.. உன்
சாதனைக்குப் பூமிப்பந்தில்
ஈடு இணை ஏது?
வீறுகொண்டு நீ முயன்றால்
தோல்விநெருங் காது!.. சிறு
வேதனைக்கும் நீ துவண்டால்
வாழ்வுதுலங் காது!
சீறும்கடல்! மோதும்அலை!
பாறைஉடை யாது!.. மனத்
திண்மைகொண்டால் உன்னைவெல்ல
யாரும்கிடை யாது!
இந்த கவிதையை உலகம் மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்பு செய்யும் வகையில் ஈடு இணையற்றதாக திகழ்கிறது . துவண்டு கிடக்கும் ஒரு மனிதனை தூக்கி விடும் ஊன்றுகோலாக நிமிர்ந்து நிற்கிறது இவர் கவிதை. உலக நாடுகளில் வாழும் அறிஞர்கள் இவர் கவிதையை மொழி பெயர்த்து கொண்டாடி மகிழ வேண்டியது காலத்தின் கட்டாயம் . இது வெறும் புகழ்ச்சி அல்ல . உணர்ச்சியின் வெளிப்பாடு என்பதை உலகுக்கு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டு இருக்கின்றேன் .
வளரும் குழந்தைகளுக்கு கவிச்சுடரின் கவிதைகளை வாசிக்க கொடுத்தால் தமிழின் மீது தனிப் பற்று கொண்டு கொண்டாடி மகிழ்வர் . தமிழ் கற்று வளர வேண்டும் என்று ஆர்வம் கொள்வர். தமிழ் மொழியின் மூதாட்டி ஔவையாரின் வாழ்த்து மொழி மிக முக்கியமானது . “ வரப்புயர்க ” என்று வாழ்த்துவார் . வரப்பு உயர்ந்தால் அதன் பயன் என்பது அழகான செய்யுளால் விளக்கி இருப்பார் ஔவை மூதாட்டி. இது ஔவையாரின் தனித்துவம். அதுபோல்தான் கவிச்சுடர் அவர்களும் தனித்துவமாக வாழ்த்துவதில் வல்லவர் .
உடைத்துத் தடைகள் தூளாக
உதிக்கும் அழகு நாளாக
எடுக்கும் முயற்சி மேலாக
இனிக்கும் வாழ்க்கை தேனாக!
அடைக்கும் கதவும் தானாக
அகலத் திறக்கும் வானாக!
கிடைக்கும் வெற்றி! உனக்காகக்
கிழக்கு வெளுக்கும்! நீவாழ்க!
இந்த கவிதையை வாசிக்கும் அனைவரும் இனிமேல் தங்கள் குழந்தைகளை இவ்வாறு தான் வாழ்த்துவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் ; தலைமுறைகள் தலை நிமிர்ந்து வாழ்ந்திட வேண்டும் என்பதில் பெரும் பணி செய்து வருகின்றார் கவிச்சுடர் அவர்கள் .
வணக்கம் என்று சொல்வார்கள் வணங்க மாட்டார்கள். வணக்கம் என்பது வார்த்தையோடு நின்று விடும் ஒரு சடங்காக மாறிவிட்டது . எதற்காக ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது வணக்கம் சொல்ல வேண்டும் என்று எப்போதாவது சிந்தித்தது உண்டா .? வணக்கம் என்பது ஒரு உயிர்ச்சொல். உயிர் பெறச் செய்யும் உன்னதமான சொல். சோர்வுற்றுக் கிடக்கும் மனிதருக்குள்ளும் வணக்கம் என்ற சொல் ஊடுருவி புத்துணர்வு பெறச் செய்யும் . உள்ளத்துள் மண்டி கிடக்கும் அடர் இருளை கிழித்து எடுக்கும் வல்லமை பெற்றது வணக்கம் என்ற சொல் . வணக்கம் என்பது வெறும் சொல் அல்ல. அது கிளர்ந்து எழும் ஆதவனின் வெளிச்சம். ஒவ்வொருவரும் சந்திக்கும்பொழுது மறக்காமல் வணக்கம் சொல்வதை வழக்கமாகக் கொள்வோம் . ஏனெனில் , வணக்கம் என்பது பல வெற்றிகளைத் தேடித் தரும் மந்திரச் சொல் .
அடர்இருள் கிழிக்கும்
ஆதவன் வெளிச்சம்!
படர்கிளை யெங்கும்
பறவைகள் முழக்கம்!
தொடடா இலக்கெனத்
தோள்கள் சிலிர்க்கும்!
விடிகாலை வணக்கம்!
வெற்றியின் தொடக்கம்!
இது வெறும் கவிதை மட்டுமல்ல . உணர்வின் உயிரின் வெளிப்பாடு உள்ளத்தில் கலந்த தமிழரின் பண்பாடு . சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு பின்வரும் கவிதையைச் சொன்னால் சாலப்பொருந்தும் . இளையோர் யாவரும் இதயத்தில் தாங்கி நிறுத்த வேண்டிய படைப்பு இது .
முட்டுக்கட்டை எத்தனை,உன்
பாதம் தடுக்கும்?
இங்கு
முளும்சதி எத்தனை உன்
வேகம் கெடுக்கும்?
விட்டுத்தள்ளு! தன்னம்பிக்கை
தோள்கள் கொடுக்கும்!
உன்
வெற்றிக்கிந்த எட்டுத்திக்கும்
மாலை தொடுக்கும்!
கவிச்சுடரின் காலத்தில் நாம் வாழ்கின்றோம் என்பதே நமக்கெல்லாம் பெருமை . கவிச்சுடரை ஒரு வட்டத்திற்குள் அடக்கி வைக்க முடியாது . பூமிப்பந்தை புரட்டிப்போடும் கவிதைகளை படைத்துக் கொண்டிருப்பவர் கவிச்சுடர் .
எத்தனைநாள் ஒடுங்கிநிற்பாய்?
அடிமை மாதிரி!.. சிலர்
இதயங்களின் பொறாமையிலும்
இறகு சேகரி!
சித்தமெல்லாம் வெற்றிக்கென்றே
உரிய நாள்குறி!..அந்தச்
சிகரம்தாண்டி உயரம் தொடச்
சிறகு நீவிரி!
ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு புறந்தள்ளப்பட்டு கிடக்கும் மனிதருக்குள்ளும் பெரும் தீப்பிழம்பாய் வெடித்து சிதறும் கவிதைகளை ஏராளம் படைத்தவர் கவிச்சுடர். கொண்டாடி மகிழ வேண்டிய கவிதைகளைப் படைத்துக் கொண்டிருக்கின்றார் கவிச்சுடர் அவர்கள் . பெரியார் , பேரறிஞர் அண்ணா , பாவேந்தர் பாரதிதாசன் , முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீது தீராத பற்று கொண்டவர் .
பாவேந்தர் பாரதிதாசனின் பாட்டின் திறத்தை பண்பாட்டு வளத்தை கொண்டாடி மகிழ்கின்றார் கவிச்சுடர். கொண்டாட வேண்டும் என்று நினைத்து விட்டால் விரிகோணமாய் விழிகளை திறந்து தமிழ் சொல்லெடுத்து பாராட்டி மகிழ்வதில் கவிச்சுடருக்கு நிகர் கவிச்சுடர்தான் . தமிழ் இனத்தின் தன்னிகரற்ற பெரும் வேந்தராக விளங்கியவர் பாவேந்தர் பாரதிதாசன் எனில் மிகையாகாது . அவரின் தமிழ் தொண்டு தமிழ் இனத்தின் குடும்ப விளக்காய் ஒளிர்கின்றது . பாவேந்தரைப் பற்றி கவிச்சுடர் இவ்வாறு பாட்டிசைக்கின்றார் . பாவேந்தர் குறித்த கவிதையை வாசிக்கின்ற பொழுது நமக்குள் நாடி நரம்புகள் துள்ளி எழுகின்றன .
கழுத்துப் பிடரி சிலிர்க்க நிமிர்ந்தான்
கண்களில் அனல்தேக்கி! - இங்கு
கால்வைத் திடுமோ இந்தி?என் றெழுந்தான்
களத்தில் பகைநோக்கி!
எழுத்து வடிவில் நெருப்பை உமிழ்ந்தான்
எரிமலை உண்டாக்கி! - அவன்
எடுத்துப் பிடித்தது எழுதுகோல் அல்ல!
எந்திரத் துப்பாக்கி!
சந்தப் பாக்களை சரம்சரமாய் எழுதுபவர். விருத்தம் அவரிடம் ஊற்றெடுக்கும். ஆயிரம் ஆயிரம் கவிதைகள் அவர் உள்ளத்தில் குவிந்து கிடக்கின்றது. அவர் கவிதை மட்டுமல்லாது மற்றோரின் கவிதைகளையும் கொண்டாடி மகிழ்பவர். பலரும் குறிப்பு எடுத்துக் கொண்டு தான் பேசுவார்கள். ஆனால் கவிச்சுடரோ குறிப்பேதும் இல்லாமல் பேசும் பேரழகைக் கண்டு தமிழன்னை குறிப்பு எடுத்துக் கொள்வாள்.
கவிச்சுடரின் கவிதைகள் குறித்து நிறைய பேசலாம். உலக அரங்கிற்கு நிறைவாக அவர் கவிதை ஒன்றைத் தருகின்றேன். வாழ்நாளில் ஒரே ஒரு கவிதை மட்டும் வாசித்தால் போதும் என்று நினைப்பவர்களுக்காக இந்த கவிதை. சோர்ந்து கிடக்கும் பொழுதெல்லாம் இந்த ஒரு கவிதையை சொல்லிப் பார்த்துக் கொண்டால் தம்முள் மூழ்கும் பெரும் துயரும் விலகிப் போகும்.
ஆயிரம் தடைகள்
மலைபோல் நெருங்கும்!
அறிவைத் துணைகொள்!
நுரைபோல் நொறுங்கும்!
தீயென நீஎழு!
சிறுமை பொசுங்கும்!
திமிர்ந்துநில்! நிமிர்ந்து செல்!
திசைகள் வணங்கும்!
ஆம் . இவர் பள்ளிக்கூடத்து ஆசிரியர் அல்ல . ஆனால் , சமூகம் என்னும் பள்ளிக்கூடத்தில் குவிந்து கிடக்கும் சிக்கலைக் கேடுகளைத் துடைத்து எறியும் சமூக ஆசிரியர். தமிழ் சமூகம் தமிழ் உள்ளவரை கொண்டாடி மகிழும் . 2010 ஆம் ஆண்டு கவிச்சுடர் கவிதைகள் என்னும் நூலினை வெளியிட்ட கவிச்சுடர் அவர்கள் மரபு வழியில் பெரும் கவிதை நூலினை மீண்டும் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம் .
சமூகத்தை நெறிபட நடத்திட துணை நிற்கும் படைப்பாளர்களும் ஆசிரியரே. அந்த வகையில் ஆசிரியர் தின விழாவில் எங்கள் கவிச்சுடரை கொண்டாடி மகிழ்வதில் பெருமை கொள்கின்றேன். அவரின் கவிதைகள் உலக அரங்கில் கொண்டாடப்பட வேண்டும். நான் அறிமுகப்படுத்தி இருக்கும் கடுகளவு கவிதைகளே இவ்வளவு வீரியமிக்கதாய் இருக்கிறது என்றால் அவர் எழுதி வைத்திருக்கும் பெருமளவு கவிதைகள் எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் .
மகா சக்கரவர்த்தியை போற்றுதலுக்குரிய எங்கள் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களின் வைர வரிகளில் இவ்வையகம் தலை நிமிரட்டும் .
அறிவைப் புகட்டி சுதந்திர சமத்துவ சகோதரத்துவத்தை வளர்க்கும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன் .
அன்பு பண்பு பாசம்
நட்பின் வழியில்
சோலச்சி
9788210863








