என்னைப் பற்றி

எனது படம்
அகரப்பட்டியைச் சேர்ந்த ''சோலச்சி'' என்னும் நான் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். இயற்பெயர் தீ.திருப்பதி. புதுக்கோட்டை நச்சாந்துபட்டி இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம்வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர் திருமதி எஸ்.சோலச்சி அவர்கள் 1998 இல் எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் உற்ற துணையாக இருந்து எங்கள் வாழ்வில் ஒளியை உண்டாக்கியவர். அதனால் அவரின் பெயரையே புனைப்பெயராக வைத்துக்கொண்டேன்.எனது நூல்கள் :சிறுகதை, 1.முதல் பரிசு2.கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்3.அட்டணக்கால், கவிதை: 1.காட்டு நெறிஞ்சி 2.விரிசல்1.''முதல் பரிசு'' சிறுகதை நூல் 2017 கல்பாக்கம் சாலோம் அறக்கட்டளை விருது மற்றும் 5000/-(ஐயாயிரம் ரூபாய்) பொற்கிழி.2."கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்" சிறுகதை நூல் 13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. 23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி.17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி.குறிப்பு: முதல்பரிசு மற்றும் கருப்புச் சட்டையும் கத்திக்கம்புகளும் இரண்டு சிறுகதை நூல்களும் எம்.பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பேச : 9788210863

வெள்ளி, 13 நவம்பர், 2026

ஊரெல்லாம் பூவாசம் - பொறிஞர் ப. நரசிம்மன்

 

ஊரெல்லாம் பூவாசம்


[ அணிந்துரை எழுதிய நூல் ]


 

ஆசிரியர்: பொறிஞர் ப.நரசிம்மன்

அலைபேசி: ‪+91 94437 71590

நூல்:   ஊரெல்லாம் பூ வாசம்

வகை :  கவிதை நூல்

ஆண்டு: ஏப்ரல் 2025

விலை: 120/-

வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம் திருச்சிராப்பள்ளி

94432 84823

 

 

   “எளிய நடையில் ஏற்ற மிகு கவிதைகள்”

 

      விரிந்து கிடக்கும் உலகத்தில் பரந்து கிடக்கும் தாய் மொழியாம் தமிழ் மொழியின் சிறப்புகள் கணக்கில் அடங்காது. தமிழை வாசித்தவர்கள் விட்டதில்லை. தமிழை நேசித்தவர்கள் வேறு எதையும் தொட்டதில்லை. தமிழை இனிமை என்பார்; தமிழ் எந்தன் உயிர் என்பார் பாவேந்தர் பாரதிதாசன். செந்தமிழை எண்ணி வியந்து பாடுகின்ற பொழுது இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்பார் முண்டாசுக் கவிஞர் பாரதி. தமிழில் சொற்சுவையும் பொருட்சுவையும் நிறைந்து கிடக்கிறது. அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் தமிழ். தமிழிலிருந்துதான் எண்ணற்ற கிளை மொழிகள் தோன்றி இருக்கின்றன. எண்ணற்ற மொழிகளுக்கு மூலமாய் இருக்கும் முத்தமிழை கொண்டாடித்தீர்கின்றனர் இன்றைய படைப்பாளுமைகள்.

    அந்த வகையில் தமிழின் புதிய வரவாய் கவிஞர் நரசிம்மனின் கவிதை நூல் வந்திருப்பது பாராட்டுக்குரியது. தமிழன்னை பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்று கொண்டாடி மகிழ்வாள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. புதிய படைப்புகள் நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன. அவை தமிழின் பெருமையை இந்த உலகமெங்கும் பறைசாற்றிக் கொண்டு இருக்கின்றன. புதிதாய் எழுத வருகின்றவர்களின் கரங்களை இறுக பற்றி அவர்களின் கவிதைகளை கொண்டாடி மகிழ வேண்டும். அப்போதுதான் அவர்கள் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல முடியும். தடுக்கி விழுந்தாலும் தமிழ் நம்மை தூக்கி விடுவாள் என்கிற தன்னம்பிக்கை அவர்களுக்குள் ஊற்றெடுக்கும். மிகுந்த தன்னம்பிக்கையோடு கொண்டு வந்திருக்கும் கவிஞர் நரசிம்மனின் கவிதை நூல் உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டிய நூல் என்றுதான் சொல்வேன். காரணம்,  எளிய நடை. மற்றொன்று சமூகச் சிந்தனை. சமூக சிந்தனை என்பது பொத்தாம் பொதுவாக போகிற போக்கில் சொல்வது கிடையாது. ஊழல் இல்லாத உலகை வலிமையான பூமியை உருவாக்க முயற்சி செய்கின்றார் கவிஞர் நரசிம்மன்.

       முதல் கவிதையில் தனது ஆதங்கத்தை பதிவு செய்கிறார். உலக நாடுகள் மெச்சுகின்ற அளவுக்கு நம் நாடு ஒலிம்பிக்கில் உயர்வு பெற முடியவில்லையே என வேதனைப்படுகின்றார் கவிஞர். அவரின் ஆதங்கம் நியாயமானதுதான். விளையாட்டு மட்டுமல்ல அனைத்திலும் ஏதோ ஒருவித அரசியல் சாயல் நேரடியாகவோ மறைமுகமாகவோ கலந்து இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. எவ்வளவுதான் திறமை இருந்தாலும் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் அல்லது இனத்தால் மொழியால் ஒடுக்கப்பட்டவர்கள் ஓரங்கட்டப்படுவது வாடிக்கையாகவே இருக்கின்றது. புராணத்தில் ஏகலைவனின் கட்டைவிரல் காவு கொடுக்கப்பட்டதும் இந்த மண்ணில்தான். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த பிரிவில் 100 கிராம் எடை கூடியதற்காக தினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் இதே மண்ணில்தான். விளையாட்டுக்குள் அரசியல் வந்துவிடக் கூடாது. அரசியல் என்பது விளையாட்டாகி விடக்கூடாது. ஆனால் எல்லாம் தலைகீழாக மாறிக் கொண்டிருக்கிறது. இருந்தபோதும் ஒலிம்பிக் போட்டிகளில் நம்மால் பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் பிடிக்க முடியவில்லையே என ஆதங்கப்படும் கவிஞர் நரசிம்மனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

 

ஒலிம்பிக் உள்ளிட்ட

பன்னாட்டு போட்டிகளில்

பதக்கப் பட்டியலில்

முதன்மை இல்லையென

ஆதங்கப்பட்டதுண்டு..... என தனது முதல் கவிதையை இவ்வாறு பதிவு செய்கின்றார். இந்த ஆதங்கம் நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எழ வேண்டிய ஆதங்கம் என்பதில் ஐயமில்லை. அரசியல் சாயம் இல்லாமல் விளையாட்டுகளை நாம் அங்கீகரித்து செயல்பட வேண்டும். மேலும் திறமைகள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அடையாளம் கண்டுபிடித்து பாகுபாடு இல்லாமல் பொதுத்தளத்திற்கு கொண்டு வந்து முன்னிறுத்தி அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால்,  எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு வித திறமைகள் குவிந்து கிடக்கின்றது என்பதை நம்மால் மறுக்க முடியாது. திறமையானவர்களை அங்கீகாரம் செய்ய வேண்டியது நமது ஒன்றிய மாநில அரசுகளின் தலையாய கடமை. விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தகுதியானவர்களை தாமதிக்காமல் உலகப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். முதல் கவிதையிலேயே தான் யார் என்பதை அழகாக படம் பிடித்துக் காட்டுகின்றார் கவிஞர் நரசிம்மன்.

 

நாட்டுக்குள் ஏதாவது ஒரு கலவரம் வந்து விடாதா..? அந்தக் கலவரத்தை மையப்படுத்தி அரசியல் செய்துவிட மாட்டோமா..? என்று அரசியலில் காய் நகர்த்துகின்ற தலைவர்களை பார்த்து இருக்கின்றோம். காடுகளை அழித்து கட்டடங்களை உருவாக்கி அனைத்தையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என பலரும் நினைக்கின்றனர். இயற்கையை அதன் போக்கில் விடாமல் அபகரித்துக் கொள்ள நினைக்கும் போதுதான் பல இயற்கை சீற்றங்களை நாம் சந்திக்கின்றோம் என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். இந்த மண்ணை எவ்வளவு தூரம் நாம் நேசிக்கின்றோமோ அவ்வளவு தூரம் நம்மை அந்த மண் நேசித்து வாழ வைக்கும். மண்ணை வாழ வைப்பதன் மூலம் மனிதன் தன்னுடைய ஆயுளை நிலை நிறுத்திக் கொள்கிறான் என்பதுதான் உண்மை. ஆதலால்,  இயற்கையை ஒவ்வொருவரும் கொண்டாடி மகிழ வேண்டும். இயற்கை நமக்கு வாழ வழி சொல்லிக் கொடுக்கும். அதை உணர்த்தும் விதமாக..,

 

காடு கழனி வளங்களை வளர்ப்போம்

எல்லோரும் ஓரினமெனக் காண்போம்... என்கிறார் கவிஞர் நரசிம்மன். இந்த உயரிய சிந்தனையைத்தான் நாம் கொண்டாடி மகிழ வேண்டும். வானியல் அறிஞர்களும் இயற்கை ஆர்வலர்களும் மண்ணைக் காப்பதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள். நாம் எதையும் காதில் வாங்கிக் கொள்வதே இல்லை. அவ்வப்போது கவிஞர்களாக எழுத்தாளர்களாக அவதாரம் எடுப்பவர்களும் இயற்கையை நேசிப்பதன் அவசியத்தையும் மண்ணின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியே வருகின்றனர். இந்த ஆண்டு நம் கண் முன்னே கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை பார்த்தோம். இயற்கைக்கு மிஞ்சியது எதுவும் இல்லை. ஆதலால் கவிஞரின் கூற்றுக்கு வலு சேர்ப்போம்.

யானையைக்கூட 

அடிக்கடி பார்க்க முடிகிறது 

மாதக்கணக்காயிற்று

மண்புழுவைப் பார்த்து... என்று இயற்கையின் அவசியத்தை அழகாக எழுதியிருப்பார் எழுத்தாளர் வண்ணதாசன். நாம் மட்டுமே இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் அல்ல. எண்ணற்ற உயிர்களுக்கும் இந்த மண்ணின் மீது வாழ உரிமை இருக்கிறது என்பதை நாம் மறந்து விட்டு செய்யக் கூடிய தவறுகளால் எண்ணற்ற உயிர்கள் பலியாகின்றன. இனிமேலாவது இயற்கையின் மீது நம் கண்கள் திரும்பட்டும்.

 

மடையனை மாவீரனாகவும்

திருடனை தியாகியாகவும்

போக்கிரியை போராளியாகவும்

பொறுப்பற்ற பிறவியாய்

வாழ்ந்திட லானோம்..... என்று இன்னொரு கவிதையில் இந்த சமூகத்தில் மனிதர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்பதை அழகாக படம் பிடித்து காட்டி தனது வேதனையை பதிவு செய்து இருக்கின்றார் கவிஞர் நரசிம்மன். படைப்பாளன் என்பவன் நிறை குறைகளை சீர்தூக்கி பார்க்கக் கூடியவராகவும் இந்த மண்ணின் மீது அக்கறை கொண்டவராகவும் இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் வாழ்க கோஷம் போட்டால் இந்த மண்ணில் வெளிச்சம் ஏது...?

 

வளரும் தலைமுறையினருக்கு அறிவுரை கேட்பது என்றால் பிடிக்காத ஒன்று. புள்ளாகி திசையொழி என்பார் முண்டாசுக் கவிஞர் பாரதி. பறவை இனங்கள் தனக்கான ஒரு நாட்டையோ ஒரு இடத்தையோ தேர்ந்தெடுக்காது. அவற்றிற்கு நாடுகளின் சட்டங்கள் பொருந்தாது. சுதந்திரமாய் எங்கு வேணாலும் பறக்கும். எங்கு வேண்டுமானாலும் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். இது பறவை இனங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என்று தான் சொல்ல வேண்டும். எங்கு வாழவேண்டும் எப்படி வாழ வேண்டும் என்பதை பறவையினங்கள் வழி வழியாக கற்றுக்கொண்டு இருக்கின்றன. ஆனால் நாம் நல்லெண்ணவற்றை காது கொடுத்து கேட்கின்றோமா..?  புள்ளாகி திசை ஒழிக்க வேண்டும் என்றால் நல்லனவற்றை நாம் காது கொடுத்து கேட்க வேண்டும்.

 

நல்லன செய்திடப் பழகிடு

நன்றி மறவா நெஞ்சம் கொள்

நன்னெறி தவறாமல் வாழ்ந்திடு

எளியோர் வாழ்வில் நாட்டம் கொள்... என்று வளரும் தலைமுறையினருக்கும் பாடம் நடத்துகின்றார் கவிஞர் நரசிம்மன். இந்தப் பாடம் தேர்வுக்கு வரக்கூடிய பாடம் அல்ல. ஆனால் வாழ்க்கைக்கு நாம் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு பாடம். வறுமை இல்லாத தேசத்தை கட்டமைப்போம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சி அமைத்தவர்கள் எளியோரை எள்ளி நகையாடுவதை கண்ணால் காண முடிகிறது. இந்த நிலையில் எளியோர் மீதும் நாட்டம் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றார் கவிஞர் நரசிம்மன். அடித்தட்டு மக்கள்தான் இந்த நிலத்தின் பூர்வீக குடிகள். அதனால் அவர்கள் இன்னும் எளியோராய் வறியோராய் வாழ்ந்து கிடப்பது எந்த விதத்தில் நியாயம்..?

 

இந்த நிலைக்கு கவிஞர் நரசிம்மனே தீர்வு சொல்கிறார்.

அகத்தூய்மை

புறத்தூய்மை

அமையப்பெற்றால்

அனைத்தும் பிடிக்கும்... என மக்களிடம் தனது நிலையை காட்சிப்படுத்தும் விதம் பாராட்டுக்குரியது.

வடக்கு வாழ்கிறது

தெற்கு தேய்கிறது.... என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முழங்கினாலும் இன்று வடக்கிலிருந்து கூலித் தொழிலாளியாக தமிழ்நாட்டு பக்கம் வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் கல்வி விழிப்புணர்வு இல்லாததும் வேலை வாய்ப்புகளை உருவாக்காததும்தான். முறையான கல்வி இல்லாததால் தன்னுடைய வறுமை நிலைக்கு அஞ்சி குடி பெயர்ந்து வாழும் அவல நிலையை நாம் காண்கின்றோம்.

 

செல்வம் ஆயிரம்

கொட்டி கிடக்க

அழியா செல்வமாம்

கல்வியை நாமும்

கற்றுத்தேறும்

நாளும் எந்நாளோ...? என்று கல்விக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார் கவிஞர் நரசிம்மன். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் கண்ட கனவை நனவாக்க தனது கவிதை நூலின் மூலமாக முயற்சி செய்கின்றார் கவிஞர் நரசிம்மன் .

 

பக்கங்கள் முழுவதும் சமூக சிந்தனையே மேலோங்கி நிற்கும் கவிதை தொகுப்பாக வலம் வந்தாலும் ஆங்காங்கே பொதுவுடமை சித்தாந்தம் காதலையும் தொட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

 

நாம் இருவர் சந்தித்த பொழுதினிலே

நம்மை நாம் அறியாமலே

நம் இருவர் கண்களாகவே

கொஞ்சிக் குலாவி பேசியதை

நம் இருவர் வாய்களுமே

வாய் திறந்து வியந்தனவே...! என்று நினைவே ஒரு சங்கீதம் என ஒரு நெடுங் கவிதையே புனைந்து இருக்கின்றார் கவிஞர் நரசிம்மன்.

 

கவிதை நூலில் ஆங்காங்கே பக்தி பரவசத்தையும் மணம் கமல வைத்திருக்கின்றார் கவிஞர். நாராயணன் திருமால் ஆண்டாள் என பலரையும் கவிதை நூலுக்குள் கொண்டு வந்து தனது பக்தியையும் நிலைநாட்டுகிறார் கவிஞர் நரசிம்மன்.

 

கவிதை என்பது எளிய நடையில் சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொல்லி விட வேண்டும். இந்த இலக்கணம் மாறாமல் கவிதையை நேர்த்தியாக புனைந்திருக்கும் கவிஞர் நரசிம்மன் அவர்களை மனதார வாழ்த்துகின்றேன்.

தேடிச் சோறு நிதம் தின்று

பல சின்னஞ் சிறுகதைகள் பேசி

வாடி துன்பம் மிக உழன்று

பிறர் வாட பல செயல்கள் செய்து.... என்று நேர்த்தியாக தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக எழுதி இருப்பார் மகாகவி பாரதியார். இதுபோல் தன்னுடைய கவிதைகளிலும் வீரம் செறிந்த சொற்களும் கருத்தும் நிறைந்து இருக்க வேண்டும் என முயற்சி செய்து இருக்கிறார். கவிஞரின் முயற்சியை அடுத்தடுத்த நூல்களில் மிகப்பெரிய வளர்ச்சியாக காண முடியும் என நம்புகின்றேன். உச்சம் தொட்ட கவிஞராக வரவேண்டும் என்று கவிஞர் நரசிம்மனை உச்சி முகர்ந்து பாராட்டி இலக்கிய உலகத்திற்கு வாருங்கள் என வரவேற்று மகிழ்கிறேன். தமிழ் யாரையும் கைவிட்டதில்லை. தொடர்ந்து எழுதுங்கள் உச்சம் தொடுங்கள். இனி ஊரெல்லாம் பூ வாசம் ஓங்கட்டும். நன்றி.

பேரன்பின் வழியில்

சோலச்சி

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்.

பேச: 9788210863

solachysolachy@gmail.com

 

கருத்துகள் இல்லை: